48 - ஆகாசகங்கை

48 - ஆகாசகங்கை



காவிரியும் கொள்ளிடமும் இரு கரங்களை நீட்டித் தழுவிக்கொண்டிருக்கும் திருவரங்கத்தின் மடியில், ஆளவந்தார் மீண்டும் காலடி எடுத்து வைத்த நாள் அது. தென்னாட்டுத் திருப்பதிகளையெல்லாம் சேவித்து, வழிநெடுகிலும் ஆழ்வார் பாசுரங்களால் அரங்கனை அனுபவித்தவாறு வந்தாலும், 'பவிஷ்யதாசாரியரை இன்னும் காணவில்லையே' என்ற ஏக்கத்தையும், நாதமுனிகளின் யோக ரகசியத்தையும் பெற முடியவில்லையே என்ற குறையையும் நெஞ்சின் ஆழத்தில் புதைத்துக்கொண்டுதான் அவர் திரும்பியிருந்தார். அந்த ஏக்கங்களை அரங்கனின் திருவடிகளில் இறக்கி வைத்துவிட்டு, பெரிய பெருமாளின் சந்நிதி, தாயின் மடியைப் போல அவரை அணைத்துக்கொண்டது.


அவர் திருவரங்கம் திரும்பிய சில நாட்களிலேயே, குருகைக் காவலப்பனைக் காணச் சென்றிருந்த சில சீடர்கள் ஆளவந்தார் மடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களின் முகத்தில் களை இல்லை. "ஸ்வாமி! நாங்கள் சென்று சேர்ந்தபோது, உங்களை வரச் சொன்ன அதே நாளில் குருகைக் காவலப்பன் நாதமுனிகளின் திருவடிகளை அடைந்துவிட்டார்!" என்று நா தழுதழுக்கச் சொன்னார்கள். இதைக் கேட்டதும் ஆளவந்தாரின் நெஞ்சம் கனத்தது. அந்தத் துயரை வெல்வதற்காகவே, அவர் தம்மை அரங்கனின் கைங்கர்யத்திலும், ஆழ்வார் பாசுரங்களின் காலக்ஷேபத்திலும் முழுமையாக தன்னை ஆழ்த்திக்கொண்டார்.


அவருடைய நாட்கள் இவ்வாறு கழிந்தன. விடியலுக்கு முன்பே காவிரியில் நீராடி, திருப்பள்ளியெழுச்சியைச் சேவித்து, திருவாராதனத்தில் ஈடுபட்டு, பகல் முழுவதும் கோயில் பணிகளில் கண்ணும் கருத்துமாக இருப்பார். அந்தி மயங்கும் வேளையில் அழகியமணவாளனின் புறப்பாட்டைச் சேவித்துவிட்டு, இரவில் மடத்தில் முதலிகள் சூழ ஆழ்வார் பாசுரங்களின் அர்த்த விசேஷங்களைப் பொழிவார். 'தொண்டு செய்வதே பேறு' என்று வாழ்ந்த நாதமுனிகளின் பேரன் அல்லவா! அரங்கனை நினைத்து அவர் அருளிச்செய்த ஸ்தோத்ர ரத்னமும், சதுஸ்ஸ்லோகீயும் தேவர்களும் மகிழ்ந்து கேட்கும் இசைப் பாமாலைகளாக அந்நாட்களில் பெருகின.


தாமரை மலர்ந்துவிட்டால், வண்டுகளுக்குத் தூது அனுப்ப வேண்டுமா என்ன? மணத்தைத் தேடி வண்டுகள் தாமே வந்து சேரும். அதுபோல, ஆளவந்தாரின் புகழ் ஊர் ஊராகப் பரவியது. வடக்கே தொண்டை மண்டலத்திலிருந்தும், மேற்கே சேர நாட்டிலிருந்தும், தெற்கே பாண்டிய நாட்டிலிருந்தும் வித்வான்களும், துறவிகளும், இல்லறத்தாரும் ஞானத் தேனைப் பருகத் திருவரங்கத்தை நோக்கி வரத் தொடங்கினார்கள். இதனால் காவிரியின் படித்துறைகளில் நாள்தோறும் புதிய முகங்கள் தென்பட்டன. ஆனால் அந்தக் கூட்டத்தில் ஓர் இளைஞர் மட்டும் புதியவர் அல்லர். திருவரங்கத்தின் வீதிகளில் ஆளவந்தாரின் மடத்தின் அருகிலேயே வளர்ந்தவர் அவர்; நாள்தோறும் ஆளவந்தாரின் திருவடியில் அமர்ந்து, அவர் சொல்லும் விஷயங்களை ஆர்வமாகக் கேட்பவர். ராமாயணத்தை விரும்பிக் கேட்பதோடு மட்டுமல்லாமல், அதில் தனக்குத் தோன்றிய சந்தேகங்களை எல்லாம் அவ்வப்போது ஆளவந்தாரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வார். அவரை நம் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது நம் கடமையாகும். வாருங்கள்.


* - *


திருவரங்கத்தின் அதிகாலை. காவிரியின் ஓசை மெல்லக் கேட்டுக்கொண்டிருக்க, காலைப் பனி கோயில் கோபுரங்களைத் தழுவிக்கொண்டிருந்த நேரம். ஆளவந்தாரின் திருமாளிகை முற்றத்தில், ஈரம் காயாத உடலோடு ஓர் இளைஞர், அன்று திருவாராதனத்துக்கு வேண்டிய பூக்களையும், துளசியையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். அவர் உதடுகள் ஓயாது பல்லாண்டும், திருப்பாவையும் முணுமுணுத்துக்கொண்டிருந்தன; அவருடைய பெயர் ஸ்ரீசைலபூர்ணர்! ஆளவந்தாரின் திருக்குமாரர் தெய்வத்துக்கரசு நம்பியின் புதல்வர்; ஆளவந்தாருக்குப் பேரன்![1] முன்பு சில இடங்களில் நாம் இவரைப் 'பெரிய திருமலை நம்பி' என்று குறிப்பிட்டிருக்கிறோம். ஆனால் அது இவருக்குப் பிற்காலத்தில் அமைந்த திருநாமம். அதுவரை நாம் இவரை ஸ்ரீசைலபூர்ணர் என்றே அழைப்போம்.


அன்று மாலை, ஆளவந்தாரின் திருமாளிகை மண்டபத்தில் முதலிகள் கூடியிருந்தனர். ஸ்ரீசைலபூர்ணர் விரைந்து சென்றார்; அந்தி மயங்கியிருந்தது. மண்டபத்தின் வாசலை அடைவதற்கு முன்பே, உள்ளிருந்து ஓர் இனிய குரலில் வடமொழிச் செய்யுள் ஒன்று ஒலித்தது — 'ஆபாத சூடம் அநுபூய ஹரிம் சயாநம்…'[2] அது ஆளவந்தாரின் முதன்மைச் சீடரான பெரிய நம்பியின் குரல். தனியன் முடிந்ததும், ஆளவந்தாரின் கம்பீரமான குரலில் பாசுரம் தொடங்கியது.


அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த

விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்

நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்

திருக்கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே


ஸ்ரீசைலபூர்ணர் அந்தக் குரலுக்கு அடிமையாகி, அவர் மனம் கால்களை முந்திக்கொண்டு மடத்தின் உள்ளே சென்றது. அவர் மெல்ல நுழைந்து, கூட்டத்தின் கடைசியில் ஒரு தூணுக்குப் பின்னால் அமைதியாக அமர்ந்தார்.


உள்ளே, எளிய பலகையில் அமர்ந்திருந்தார் ஆளவந்தார். அவரைச் சுற்றிப் பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, மாறனேரி நம்பி, தெய்வத்துக்கரசு நம்பி முதலான முதலிகள். பாசுரத்தைச் சொல்லி முடித்ததும், ஆளவந்தார் அதன் பொருளை விரிக்கலானார்.


"முதல் சொல்லையே பாருங்கள்!" என்றார் ஆளவந்தார். "'அமலன்' என்றால் குற்றமற்றவன். 'ஆதிபிரான்' என்றால் எல்லாவற்றுக்கும் முந்தியவன், எல்லாவற்றுக்கும் தலைவன். இத்தனை பெரியவன் தானே நேரில் வந்து என்னை ஆட்கொண்டானா? இல்லை! 'அடியார்க்கு என்னை ஆட்படுத்த' — தன் அடியார்களுக்கு என்னை அடிமையாக்கி வைத்தான்! நாம் முயன்று பெருமாளை அடைவதில்லை; அவன் தன் அடியார்கள் வழியாகவே நம்மை ஆட்கொள்கிறான். இதுவே பாணர் காட்டும் வழி."


சற்றே நிறுத்தி, தொடர்ந்தார்: "இன்னொன்றையும் கவனியுங்கள். பாணர் பாடுவது அரங்கனை. ஆனால் அவர் பாடலில் வேங்கடவனும் வருகிறான்! விண்ணவர்க்குத் தலைவன், மணம் வீசும் சோலைகள் சூழ்ந்த வேங்கடமலையில் நிற்பவன் — அவனே நீண்ட மதில் சூழ்ந்த அரங்கத்தில் கிடக்கும் அம்மான் என்று ஒரே மூச்சில் சேர்த்துப் பாடுகிறார். அவருக்கு நின்றவனும் கிடந்தவனும் ஒருவனே! அந்தத் திருவடித் தாமரை எங்கிருந்தோ வந்து, ஒரு கணத்தில் என் கண்ணுக்குள் புகுந்து, அது அங்கே எப்போதுமே இருந்தது போலப் பொருந்திவிட்டதாம்."


ஆளவந்தார் 'வேங்கடவன்' என்று சொல்லும்போது அவர் குரலில் ஒரு சோகம் குடிகொண்டதை ஸ்ரீசைலபூர்ணர் மட்டும் கவனித்தார்.


பத்தாம் பாசுரத்தை எட்டியபோது ஆளவந்தாரின் குரல் கம்மியது; அவர் கண்களை மூடிக்கொண்டு,[3]


கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை

அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்

கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே


என்று பாடி முடித்தார். பிறகு மெல்லக் கண்களைத் திறந்து, "அமுதினைக் கண்ட கண்கள் வேறொன்றைக் காணாவாம்! அரங்கனைக் கண்டவன் கண்களுக்கு, இவ்வுலகில் காண வேறு காட்சியே இல்லை" என்று சொல்லி, ஆளவந்தார் தம் கண்களை மூடிக்கொண்டார். லோகசாரங்க முனிவரின் தோளில் ஏறி, தனியே கருவறைக்குள் புகுந்த அந்தப் பாணரின் பேற்றை நினைத்து, மண்டபமே அசைவற்று நின்றது.


தூணுக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஸ்ரீசைலபூர்ணரின் கண்களிலிருந்து நீர் வழியத் தொடங்கியது. அதைத் துடைக்கக்கூட அவர் மறந்துவிட்டார். அந்த மௌனத்தை அவர் குரல் கலைத்தது. அவர் எழுந்து, கைகூப்பிய வண்ணம் இனியக் குரலில் பாடத் தொடங்கினார்:


காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி

தேட்டரும் உதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்

வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிபுகுந்து

பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவினோமே[4]


ஸ்ரீசைலபூர்ணர் பாடியது, பாணரின் பத்துப் பாசுரங்களையும் ஒரு சித்திரம் போல அடக்கிய இனிய செய்யுள். அரங்கன் காட்டிக்கொடுத்தபடியே பாணர் கண்ணாரக் கண்ட திருவடித் தாமரை, பீதாம்பரம், நாபிக் கமலம், பொன் அரைநாண், திருமார்பு, திருக்கழுத்து, சிவந்த வாய், குறைவில்லாத கண்கள், திருமேனி என வரிசையாய் ஒவ்வொன்றாய்ச் சொல்லிவிட்டு, முனிவரின் தோளேறித் தனியாகக் கருவறைக்குள் புகுந்து, பாட்டினாலேயே அவனைக் கண்டு வாழ்ந்த பாணரின் திருவடிகளை வணங்குகிறோம் என்று பாடி முடித்தார்.


ஆளவந்தார் கண்களை மூடிய வண்ணம், "அடடா! இந்தத் தமிழ் அமுதத்தை யார் பாடியது?" என்று கேட்டார்.


ஸ்ரீசைலபூர்ணர் மெதுவாக அவர் முன்னே சென்று, கைகூப்பி நின்றார். ஆளவந்தார் மெல்லக் கண்களைத் திறந்து அவரைப் பார்த்தார்; அவர் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் ஒன்றாய்ப் பூத்தன.


ஸ்ரீசைலபூர்ணர் அப்படியே தரையில் விழுந்து வணங்கினார்.


மண்டபத்தில் எல்லோரும் அந்தப் பாடலின் மயக்கத்திலேயே இருந்தார்கள். "என்ன ஒரு தமிழ்ச் சுவை!" என்றார் ஒருவர். இன்னொருவர், "நம் பெரிய நம்பிகள் முன்பு வடமொழியில் பாடிய தனியனுக்கு நிகராகத் தூய தமிழில் பாணரையே நம் கண்முன் நிறுத்திவிட்டாரே இவர்!" என்றார்.


ஆளவந்தார் அவரை அருகில் அழைத்துத் தழுவிக்கொண்டார். பிறகு, "வடமொழியில் தொடங்கி வைத்த பெரிய நம்பியின் தனியனுக்கு அடுத்து இதைச் சேர்த்துவிடுங்கள்!" என்றார்.[5]

ஸ்ரீசைலபூர்ணர் மீண்டும் ஆளவந்தார் திருவடியில் விழுந்து வணங்கினார்.


* - *


நாட்கள் வாரங்களாக, வாரங்கள் திங்களாக உருண்டோடின. ஸ்ரீசைலபூர்ணர் ஆளவந்தாரின் பேரன் என்பதைவிட, அவருடைய அணுக்கச் சீடராகவே ஆசாரியரின் நிழலில் வாழ்ந்தார்; திருவாராதனத்துக்கு ஆசாரியரின் பின்னே காவிரிக் குடத்தை ஏந்தினார். ஆசாரியர் அள்ளி வழங்கிய ஒவ்வொரு பாசுரப் பொருளையும் காவிரி நீரைப் போல அள்ளி அள்ளிப் பருகிக்கொண்டிருந்தார். தினமும் நண்பகலில் ஆளவந்தாரின் முன் அமர்ந்து ஸ்ரீமத் ராமாயணத்தைப் படித்துக் காண்பிப்பார். அப்போது அதன் விசேஷ அர்த்தங்களை ஆளவந்தார் அவருக்கு உபதேசித்தார். 


ஒரு நாள் காலை, சந்திர புஷ்கரணிக் கரையிலுள்ள புன்னை மரத்தடியில் ஆளவந்தார் திருவாய்மொழியின் 'ஒழிவில் காலமெல்லாம்' என்ற பதிகத்தை எடுத்துக்கொண்டார்:[6]


ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி

வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்

தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து

எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே


"முடிவற்ற காலம் முழுவதும் அவனுடனேயே உடன் இருந்து, குறை ஒன்றும் இல்லாத அடிமையைச் செய்ய வேண்டும் — நாம்! ஆழ்வார் தம் ஒருவருக்காக மட்டும் கேட்கவில்லை; 'நாம்' என்று அடியார் குழாம் முழுவதற்கும் சேர்த்தே கேட்கிறார். எங்கே? முழங்கும் அருவிகள் நிறைந்த திருவேங்கடத்தில் நிற்கும் எழில் மிகுந்த ஜோதிக்கு — தலைமுறை தலைமுறையாய் எங்கள் குலத்துக்கே தலைவனாய் இருக்கும் அவனுக்கு!" என்று ஆளவந்தார் பொருள் சொல்லச் சொல்ல, முதலிகள் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தனர்.


அப்போதும் ஆளவந்தாரின் குரலில் அதே சோகம் இழையோடியதை ஸ்ரீசைலபூர்ணர் மீண்டும் கவனித்தார்.


பிறகு ஏழாம் பாசுரத்துக்கு வந்தபோது:


சுமந்து மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு

அமர்ந்து வானவர் வானவர்-கோனொடும்

நமன்று எழும் திருவேங்கடம்-நங்கட்கு

சமன் கொள் வீடு தரும் தடங் குன்றமே[7]


"நித்தமும் வைகுண்டநாதனைச் சேவிக்கும் தேவர்களுக்குக்கூடத் திருவேங்கடவனைக் காண ஆசை! தங்கள் தலைவன் இந்திரனோடும், சேனைமுதலியாரோடும், மணம் மிகுந்த மலர்களையும், விரஜை நதியின் தீர்த்தத்தையும், தீபத்தையும், தூபத்தையும் சுமந்துகொண்டு வந்து, 'நம' என்று விழுந்து வணங்கும் மலை அது. அந்த மலை, எம்பெருமானுக்குச் சமமான வீடு என்னும் மோட்சத்தை நமக்குத் தரும் மலை" என்று சொல்லி வந்த ஆளவந்தார், சட்டென்று நிறுத்தினார். அவர் குரல் தழுதழுத்தது. ஆசாரியருக்கு என்னவாயிற்று என்று எல்லோரும் கலங்கினர். திருக்கோட்டியூர் நம்பி அருகில் இருந்த தண்ணீர் குவளையை எடுத்து நீட்டினார். 


ஆளவந்தார் வேண்டாம் என்று சைகை காண்பித்துவிட்டு தொடர்ந்தார், "இங்கே பெரிய பெருமாளுக்குத் தினமும் திருமஞ்சனம் செய்யப் பலர் இருக்கிறார்கள். ஆனால் அந்த வேங்கடவனுக்கு யார் இருக்கிறார்கள்? சில காலம் முன் நான் திருவேங்கடவனைத் தரிசிக்கச் சென்றிருந்தபோது, காடும் அருவியும் விலங்குகளும் சூழ்ந்த அந்த மலையில் வீற்றிருக்கும் அவனைப் பெரிய பெருமாளைப் போலக் கவனித்துக்கொள்ள யாருமே இல்லையே என்ற நினைவு வந்தது.[8] திருவரங்கனைப் போலவே திருமலையப்பனுக்கும் திருமஞ்சனம் நடைபெற வேண்டும் என்பது அடியேனுடைய நீண்ட நாள் ஆசை. நித்யசூரிகளும் இந்த மண்ணுலகத்து மனிதர்களும் ஒருசேர வந்து அனுபவிக்கும் ஏற்றம் உடையது அந்தத் திருமலை! அங்கே எம் எந்தைக்கு நாள்தோறும் ஒரு குடம் திருமஞ்சன தீர்த்தம் கொண்டுசென்று கைங்கர்யம் செய்து, அவனை உகப்பிக்கப் போகிறவர் யாரோ! இந்தக் கூட்டத்தில் யாரேனும் இருக்கிறீர்களா?" என்றார்.[9]


மண்டபம் மௌனத்தில் ஆழ்ந்தது. அடுத்த கணம், கடைசி வரிசையிலிருந்து ஒருவர் சடக்கென எழுந்தார். உத்தரீயத்தை இடுப்பில் இறுகச் சேர்த்துக்கொண்டு, "ஸ்வாமி! தேவரீர் உட்பட இவ்வளவு பெரியவர்களும் ஆசைப்படும் அந்தத் திருமலையாழ்வான் மேல் நிற்கும் அப்பனுக்கு, இந்தச் சிறுவன் தொண்டு செய்யும்படி தேவரீர் கடாக்ஷித்தருள வேண்டும்!" என்று கைகூப்பி நின்றார் ஸ்ரீசைலபூர்ணர்!


'ஒழிவில் காலமெல்லாம்… வழுவிலா அடிமை… தெழிகுரல் அருவி… சுமந்து மா மலர் நீர்…' அந்த அருவியின் ஓசை நிஜமாகவே அவர் காதுகளில் ஒலிப்பதுபோல் இருந்தது. ஆசாரியரின் திருவாக்கிலிருந்து எழுந்த இந்தப் பாசுரங்களை எத்தனையோ முறை கேட்டும், தாமே சென்று அந்த முடிவற்ற அடிமையைத் தொடங்காமல் இருந்துவிட்டோமே என்ற ஏக்கம் அவர் கண்களைச் சிவக்கச் செய்திருந்தது.


ஆளவந்தாரின் முகம் மலர்ந்தது. 'இந்த அர்த்தங்களையெல்லாம் நெஞ்சில் கொண்டவருக்கு அல்லவா இத்தனை ஆசை பிறக்கும்!' என்று அவர் உள்ளம் உகந்தது. "செல்லும்" என்றார் புன்னகையுடன். "ஆசாரியனிடம் கற்றதை எம்பெருமானுக்கான கைங்கர்யமாக மாற்றுவதைவிட, சீடன் தரும் பெரிய காணிக்கை வேறு என்ன இருக்க முடியும்? இந்தத் தரிசனம் உம் வழியாகவே தழைக்க வேண்டும் என்பதே பெரிய பெருமாளின் திருவுள்ளம்" என்று சொல்லி, ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தம் கையால் அவருக்கு அளித்தார். சற்றே நிறுத்தி, "ஸ்ரீசைலேசா! திருவேங்கடவனைப் பார்க்கும்போது, நாம் தேடிக்கொண்டிருக்கும் அந்த ஒருவரை எமக்குக் காட்டியருளும்படி வேண்டிக்கொள்ளும்" என்றார்.


ஸ்ரீசைலபூர்ணர் ஆசாரியர் என்ன கேட்கிறார் என்று புரியாமல் கண்ணீருடன் வணங்கினார். "இந்த ஏழை அடியேனால் ஆனதைச் செய்வேன், ஸ்வாமி" என்றார்.


தெய்வத்துக்கரசு நம்பி மகனை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். அவனுடைய ஆசாரிய பக்தியைக் கண்டு பூரிப்படைந்தார். "நீ தனியாக அந்த அடர்ந்த காட்டு மலையில் எப்படி இருப்பாய்? நீராடிப் படைக்க, மலர் தொடுக்க, உணவு சமைக்க யார் இருப்பார்கள்? நானும் வருகிறேன்" என்றார். "நாங்களும் வருவோம் அண்ணா!" என்று காந்திமதி(என்ற பூதேவி), த்யுதிமதி(என்ற ஶ்ரீதேவி) என்ற இரு சிறு தங்கைகளும் அண்ணனின் உத்தரீயத்தை விடாமல் பிடித்துக்கொண்டனர்.


மறுநாள் காலை அரங்கனிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்படும் வேளை. வாசலில் ஆளவந்தார் நின்றார். தம் மகனின் தலையிலும், பேரனின் தலையிலும், பேத்திகள் இருவரின் தலையிலும் தம் கையை வைத்து ஆசீர்வதித்தார். இளையவள் அவர் வேட்டியின் நுனியை விடாமல் பிடித்துக்கொண்டு, "தாத்தா! நீங்களும் வாருங்கள்!" என்றாள். ஆளவந்தார் அவள் தலையை வருடியபடி, "அரங்கன் என்னை விடமாட்டானே! நான் இங்கிருந்தே உங்கள் எல்லோரையும், அந்த மலையப்பனையும் நினைத்துக்கொண்டிருப்பேன்" என்றார்.


* - *


ஸ்ரீசைலபூர்ணர் தம் தாயார் கமலவல்லியோடும்[10] தந்தையோடும் இரு தங்கைகளோடும் மலையேறி வேங்கடவனின் சந்நிதியை அடைந்ததும், மலையப்பன் திருவடிகளில் விழுந்து, "அப்பனே! ஆசாரியரின் நியமனத்தால் உன் திருமஞ்சனத்துக்கு நித்தம் ஒரு குடம் தீர்த்தம் கொண்டுவர வந்திருக்கிறேன். அடியேனுக்கு அருள்புரிய வேண்டும். என் ஆசாரியர் யாரையோ தேடிக்கொண்டிருக்கிறார்; அவருக்கு அந்த ஒருவரைக் விரைவில் காட்டியருள வேண்டும்" என்று விண்ணப்பித்தார். அன்றிலிருந்து, சந்நிதிக்கு அப்பால் சுமார் இரண்டு குரோசம் தொலைவிலுள்ள பாபவிநாசனத்துக்கு நாள்தோறும் இறங்கி, குடம் நிறையத் தீர்த்தம் சுமந்து, மலையேறி வந்தார். மழையோ, வெயிலோ, குளிரோ — ஒருநாளும் தவறியதில்லை.


மலையின் அடிவாரத்தில் ஒரு சிறு குடிலை அமைத்தார்கள். தெய்வத்துக்கரசு நம்பி ஒரு பூந்தோட்டத்தை உருவாக்கினார்; தங்கைகள் இருவரும் தம் சிறு கைகளால் துளசியும் செண்பகமும் மல்லிகையும் கொய்து, மாலை தொடுக்கக் கற்றனர். மலையில் வேங்கடவனுக்குத் தொண்டு செய்வதே அந்தக் குடும்பத்தின் வாழ்வாயிற்று.


ஆண்டுகள் பல உருண்டன. தினமும் அவர் சுமந்து வந்த குடத்தின் வழியே, அவர்மீது வேங்கடவன் வைத்திருந்த அன்பு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருந்தது. ஒரு நாள் அந்த அன்பு விளையாட்டாக வெளிப்பட்டது.


அந்நாளில் திருமலைக் காடுகள் இன்றுபோல் அல்ல. ஒரு காலத்தில் இம்மலைப் பகுதியில் கள்ளரும் மறவரும் வேடரும் வாழ்ந்தனர். வில்லும் அம்பும் தீப்பந்தமுமாய்ப் பயணிகளை மிரட்டித் திரிந்தவர்கள் அவர்களே; வேங்கடவனை வழிபட்டவர்களும் அவர்களே. அவர்களோடு கள்ளனாகவும் வேடனாகவும் கலந்து திருவிளையாடல் புரிந்தவன் இந்த மலையப்பன் என்று பழம்பாடல்கள் சொல்கின்றன.[11] அத்தகைய காட்டுப்பாதையில்தான் ஸ்ரீசைலபூர்ணர் தினமும் ஏறி இறங்கிக்கொண்டிருந்தார்.


ஒரு நாள் வழக்கம்போல், பாபவிநாசனத்திலிருந்து குடத்தைத் தோளில் சுமந்து மலைப்பாதையில் மெல்ல ஏறிக்கொண்டிருந்தார் ஸ்ரீசைலபூர்ணர். சற்றுத் தொலைவில், புதர்களுக்கிடையே ஓர் உருவம் தென்பட்டது — கையில் வில்லேந்திய ஒரு வேடுவச் சிறுவன். அவன் அங்கும் இங்கும் உலவிக்கொண்டிருந்தான். அவனுடைய உடல் அமைப்பும், முகத்தின் ஒளியும், கம்பீரமும் கருணையும் குரும்பு கலந்த பார்வையும், ஒய்யாரமான நடையும் அந்தச் சிறுவன் சாதாரண வேடுவன் அல்ல என்று சொல்லாமல் சொல்லின. 'இந்தக் காட்டிலே இத்தனை தேஜஸ்ஸோடு ஒரு பிள்ளையா! இந்த முகஜாடையை எங்கோ பார்த்திருக்கிறேனே!' என்று வியந்தபடியே அவர் மலையேறினார்.


அந்தச் சிறுவன் ஓடிவந்து அவரை எதிர்கொண்டு, "தாத!" என்றான். "ரொம்பத் தாகமா இருக்குது தாத! உன் குடத்துல இருக்கிற தண்ணியில ஒரு சிறாங்கை ஊத்து, குடிச்சுக்கறேன்!" என்று இரண்டு கைகளையும் குவித்து கெஞ்சினான்.[12]


ஸ்ரீசைலபூர்ணர் புன்னகையோடு, "பிள்ளாய்! இது மலைமேலே இருக்கும் வேங்கடவனின் திருமஞ்சனத்துக்காகத் திரட்டிக்கொண்டு வரும் தீர்த்தமாயிற்றே! இதிலிருந்து எப்படி உனக்குத் தர முடியும்?" என்றார்.


"எனக்குக் குடுத்தா அவனுக்கு ரொம்பப் பிரியமா இருக்குமே, தாத!"


"பிள்ளாய்! என் ஆசாரியர் இட்ட கட்டளையில் உனக்குத் தீர்த்தம் கொடுக்க வேண்டும் என்று இல்லையே, பிள்ளாய்!" என்று சொல்லிக்கொண்டே அவர் நடக்கலானார். அவனும் அவர் பின்னாலேயே தொடர்ந்தான். அவர் கவனிக்காத ஒரு கணத்தில், தன் கையிலிருந்த ஊசி போன்ற அம்பைச் செலுத்தி, குடத்தில் ஒரு துவாரம் இட்டான். குடத்தில் இருந்த தீர்த்தம் அந்தத் துவாரத்தின் வழியே பீச்சிக்கொண்டு வந்தது; சிறுவன் அதை இரண்டு கைகளாலும் ஏந்திப் பருகினான்.


குடத்தின் கனம் குறைவது அவருக்குத் தெரிந்தது. தோளிலிருந்து குடத்தை இறக்கிப் பார்த்தார். காலிக்குடம்; ஒரு துளையும்! அருகில் நின்ற வில்லாளனைப் பார்த்தார். அந்தச் சிறுவன் உடல் முழுவதும் நனைந்து காணப்பட்டான். "எனக்கு ஒன்றும் தெரியாது" என்று சிரித்தான். ஸ்ரீசைலபூர்ணர் வருத்தத்தோடு, "குடத்தைத் துளைத்து, தீர்த்தத்தை ஒழுகவிட்டுப் பரிகாசம் வேறு செய்கிறாயா? பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்ய வேண்டிய தீர்த்தத்தால் உனக்கு இன்று திருமஞ்சனம் ஆகிவிட்டதே! அடுக்காத காரியத்தைச் செய்தாயே! இனி நான் மீண்டும் வேறு குடத்தைத் தேடி, தீர்த்தம் திரட்டிக்கொண்டு வருவதற்குள் அப்பனுக்குத் திருமஞ்சன வேளை தவறிவிடுமே! நான் என் செய்வேன்! புதிய குடத்துக்கு நான் எங்கு செல்வேன்!" என்று புலம்பியபடியே மீண்டும் தீர்த்தத்துக்காக மலையிறங்கத் தொடங்கினார்.


சிறுவன் சிரித்துக்கொண்டே பின்தொடர்ந்தான். "கவலைப்படாதே தாத! இங்கே பக்கத்துல ஒரு குயவன் இருக்கான்; உனக்குப் புதுக் குடம் குடுப்பான். அவங்க, இந்த மலையப்பனுக்கே மண்ணுல பூ செஞ்சு குடுத்த குரவ நம்பியோட வழியில வந்தவங்க![13] எத்தனையோ வருஷமா தெனம் இவ்வளவு தூரம் இறங்கறதும் ஏறுறதுமா, குடத்தைச் சுமந்து நீ படற சிரமத்தைப் பாத்துக்கிட்டேதான் இருந்தேன். 'என் அம்பு பட்டு, பக்கத்துலயே ஒரு தீர்த்தம் உண்டாகி, இந்தச் சிரமம் தீரட்டும்'னு நெனச்சுத்தான் இப்படிச் செஞ்சேன்" என்றான். அடுத்த கணமே, காதுவரை வில்லை வளைத்து, அம்பைப் பூட்டி, ஒரு மலைக்கூம்பின் உச்சியில் நின்ற பாறையின் நடுவை இலக்காக்கி எய்தான். இராமனின் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் போல அது சீறிப் பாய்ந்தது.


பாறை படீரென்று பிளந்தது. திரிவிக்கிரமனாக உலகளந்தபோது, அவன் திருவடியைப் பிரம்மதேவன் தன் கமண்டல நீரால் கழுவினான்; அந்த நீரே ஆகாசகங்கையாக ஓடி வந்தது. அந்த ஆகாசகங்கையைப் போலவே, பிளந்த பாறையிலிருந்து தீர்த்தப் பெருக்கு பொங்கி வழிந்தது.


இந்த அதிசயத்தைக் கண்ட ஸ்ரீசைலபூர்ணர் உறைந்து நின்றார். 'இவன் வேடுவச் சிறுவன் அல்லன்; என் பிரிய ராமனே வில்லேந்தி நேரில் வந்திருக்கிறான். மேலே உள்ள அந்த மலையப்பன் இவனே!' என்ற அச்சம் கலந்த திகைப்பு அவரைச் சூழ்ந்தது. எம்பெருமானின் இத்தகைய திருவிளையாடல்களைப் பாடிய ஆண்டாளும் பெரியாழ்வாரும் அவர் நினைவில் எழுந்தனர். சிறுவனின் உருவம் மேலே இருக்கும் மலையப்பனைப் போலவே காட்சி கொடுத்தது. தம்மையே மறந்து அவர் அசைவற்று நின்றார்.


"நம்பீ!" என்று அந்தச் சிறுவன் அழைத்தான்.

அவர் காதில் எதுவும் விழவில்லை.

"நம்பீ! திருமலை நம்பீ!" என்று சத்தமாக அழைத்தான். அந்தச் சத்தத்தைக் கேட்டு, அருகிலிருந்த மரத்தில் இருந்த பட்சிகள் எல்லாம் பறந்தன.

நம்பி அந்தச் சிறுவனைக் கைகூப்பி வணங்கினார்.

சிறுவன் சிரித்துக்கொண்டு, "திருமலை நம்பியே! இன்று தொட்டு இந்தத் தீர்த்தமே நமக்கு உகந்து காணும்!" என்று திருவாய் மலர்ந்தருளி, மறைந்தான்.


அன்று முதல் அவரைத் 'தாததேசிகர்' என்றும் 'தாதாசார்யர்' என்றும் அழைக்கலாயினர்; அந்தத் தீர்த்தத்துக்கு 'ஆகாசகங்கை' என்ற திருநாமம் அமைந்தது.


* - *


ஆண்டுகள் மேலும் கடந்தன. மலைக் குடிலில் பூவும் தீர்த்தமுமாய்ப் பூசைக்கு உதவிக்கொண்டே வளர்ந்த தங்கைகள் இருவரில், மூத்தவளான காந்திமதிக்குத் திருமண வயதும் வந்தது.


அந்நாளில் ஒரு நாள், சிலர் திருமலைக்கு யாத்திரையாக வந்திருந்தனர். அவர்களுள் காஞ்சிக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ஆஸூரி குலத்தவரான கேசவ சோமயாஜியும், அவர் தந்தையும் இருந்தனர்; கேசவ சோமயாஜி ஐவகை யாகங்களிலும் தேர்ந்தவராதலால் 'சர்வக்ரது' என்றும் வழங்கப்பட்டவர். இருவரும் வேங்கடவனைச் சேவித்துவிட்டு, ஸ்ரீசைலபூர்ணரின் குடிலில் தங்கினர். சோமயாஜியின் அடக்கத்தையும் வேதச் செல்வத்தையும் கண்டு மகிழ்ந்த திருமலை நம்பியிடம், சோமயாஜியின் தந்தை மெல்லக் கேட்டார்: "என் பிள்ளைக்கு உம் தங்கையைக் கொடுக்கலாமே?"


திருமலை நம்பி தம் தந்தையைப் பார்த்தார்; தெய்வத்துக்கரசு நம்பி மகிழ்ச்சியோடு தலையசைத்தார். மலையடிவாரத்தில் சுற்றத்தார் சூழ, வேங்கடவனின் திருவருளோடு திருமணம் இனிது நடந்தது.[14] புகுந்த வீடு செல்லும் காந்திமதி பெற்றோரின் கால்களிலும் அண்ணனின் கால்களிலும் விழுந்து வணங்கினாள்; தங்கையை வழியனுப்பிவிட்டுத் திரும்பிய திருமலை நம்பியின் கண்களில் நீர் பளபளத்தது. ஸ்ரீபெரும்புதூர் திசையில் மணமக்கள் புறப்பட்டுச் சென்றனர். தாயும் தந்தையும் இளைய தங்கையும் அண்ணனோடு மலையிலேயே தங்கினர்.


./சுஜாதா தேசிகன்

பயணம் தொடரும்... 


அடிக்குறிப்புகள்:


[1] ஸ்ரீசைலபூர்ணர் — பிற்காலத்தில் 'பெரிய திருமலை நம்பி' என்று புகழ்பெற்றவர்; ஆளவந்தாரின் முக்கிய சிஷ்யர்களில் ஒருவர்; இராமாநுசரின் தாய்மாமன்; தந்தை தெய்வத்துக்கரசு நம்பி (3000 படி குருபரம்பரா ப்ரபாவம், பறவாக்கோட்டை ஸ்ரீமதாண்டவன் ஆச்ரமம், 2021, §2.13, பக். 90; வைணவச் செல்வம், டாக்டர் ந. சுப்புரெட்டியார், தொகுதி 2, பக். 29; அல்கொண்டவில்லி கோவிந்தாசாரியரின் 'The Life of Ramanujacharya', பக். 25 அடிக்குறிப்பு). 'A History of the Holy Shrine of Sri Venkatesa at Tirupati', தொகுதி 1, இவரை ஆளவந்தாரின் பேரன் என்றும், இல்லறத்தில் இருந்தவர் என்றும் குறிக்கிறது; தந்தையோடும் இரு இளம் திருமணமாகாத தங்கைகளோடும் இவர் திருமலை சென்று குடியேறினார் என்றும் கூறுகிறது. திருப்பதித் தல நூலான வெங்கடாசல இதிஹாசமாலையின் கூற்றாக, இவர் 'தம் பாட்டனாரும் ஆசாரியருமான ஆளவந்தாரின் விருப்பப்படி' இவ்வாறு குடியேறினார் என்றும் குறிக்கிறது. 'திருமலை நம்பி' என்பது பெயரைவிடப் பட்டமாக இருக்கலாம் என்றும், நாதமுனிகள், ஆளவந்தார் போல் இவரும் சதமர்ஷண கோத்ரம் என்றும் அது கூறுகிறது.

6000 படி குருபரம்பரா ப்ரபாவத்தில், இவர் நித்யசூரிகளில் ஒருவரான 'சுமுகரின்' அம்சமாகத் திருமலையில் அவதரித்தவர் என்றும், ஆளவந்தாரின் சீடர் என்றும் மட்டுமே உள்ளது.

அவதரித்த ஆண்டு: பழைய குருபரம்பரை நூல்கள் எதிலும் ஆண்டு குறிக்கப்படவில்லை. மரபுக் கணிப்பின்படி இவர் கி.பி. 974-ல், பவ ஆண்டில் அவதரித்தவர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2023 ஆகஸ்ட் 24 அன்று 1050-வது அவதார மஹோத்ஸவம் கொண்டாடியதும், 974-ஐ முதல் ஆண்டாகக் கொள்ளும் எண்ணிக்கையோடு பொருந்துகிறது. (https://www.deccanchronicle.com/southern-states/andhra-pradesh/tirumala-nambis-avatarotsavam-celebrated-1822408 )


[2] "ஆபாத சூடம் அநுபூய ஹரிம் சயாநம்…" — அமலனாதிபிரானுக்குப் பெரிய நம்பி அருளிய வடமொழித் தனியன்.

[3] இன்றும் இந்தப் பாசுரத்தை கண்களை மூடிக்கொண்டு சேவிப்பது வழக்கத்தில் உள்ளது.

[4,5] இத்தமிழ்த் தனியன் அமலனாதிபிரானுக்கு 'திருமலை நம்பி அருளிச்செய்தது'.

[6,7] திருவாய்மொழி 3.3.1 ('ஒழிவில் காலமெல்லாம்…') — திருவேங்கடமுடையானைப் பற்றிய பதிகம். (முதல் பாசுரம்: 3.3.1; 3000 படி குருபரம்பரா ப்ரபாவம், அடுத்து விளக்கிய "சுமந்து மா மலர்…" பாசுரம்: 3.3.7. 6000 படி குருபரம்பரா ப்ரபாவம் இரண்டையும் சேர்த்து எழுதியுள்ளேன்).

[8] ஆளவந்தார் திருமலைக்குச் சென்று வழிபட்டதையும், அங்கே நிலையான மலர்க் கைங்கர்யமும் தீர்த்தக் கைங்கர்யமும் இல்லாத குறையை உணர்ந்து, அதைச் செய்ய ஒரு சீடர் வேண்டுமென விரும்பியதையும் 'A History of the Holy Shrine of Sri Venkatesa at Tirupati' (S. கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார், திருமலை–திருப்பதி தேவஸ்தானம், 1939), தொகுதி 1-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

[9] குருபரம்பரா ப்ரபாவம் (ஆறாயிரப்படி, பன்னீராயிரப்படி), பக். 392–393: ஆளவந்தார் திருவாய்மொழி 3-3-7 ("சுமந்து மாமலர் நீர்சுடர் தூபங் கொண்டு…") அர்த்தம் அருளும்போது, "திருவேங்கடத்து எந்தைக்கு நித்யமும் ஒருகுடம் திருமஞ்சன தீர்த்த கைங்கர்யம் செய்து, அவனை உகப்பிக்கக் கடவதாகப் போவார் இத்திரளில் ஆராவது உண்டோ?" என்று கேட்டருள, பெரிய திருமலை நம்பி சடக்கென எழுந்து, உத்தரீயத்தை அரையில் சேர்த்து, அஞ்சலி ஹஸ்தராய் நின்று, "இவ்வேழையை உதவக் கடாக்ஷித்தருள வேண்டும்" என்று பிரார்த்தித்ததாகக் குறிக்கப்படுகிறது.

[10] ஸ்ரீசைலபூர்ணரின் தாயார், அதாவது தெய்வத்துக்கரசு நம்பியின் மனைவி, பெயர் எந்த நூலிலும் இல்லை. 'கமலவல்லி' என்ற பெயர் இக்கதைக்காக அமைத்துக்கொண்ட கற்பனை.

[11] 'ஏழுமலை ஆண்டவன்' (1977) புத்தகக் குறிப்பு.

[12] 'தாத' — வடமொழியில் 'தந்தையே' என்று பொருள்.

[13] திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்: 'மண்பூவை இட்டேனோ குரவ நம்பியைப் போலே' (41-ஆவது வார்த்தை). திருமலைக்கு அருகிலுள்ள குரவபுரத்தில் வாழ்ந்த குயவ பக்தர் குரவ நம்பி, தொண்டைமான் மன்னன் காலத்தில் மண்ணால் மலர் செய்து பெருமாளுக்குச் சாத்தினார்; பெருமாளும் அந்த மண்பூவையே விரும்பி ஏற்றார் என்று அக்கதை கூறுகிறது. குரவ நம்பி வழியினரான ஒரு குயவர் புதுக்குடம் தருவார் என்று சிறுவன் சொல்வது கற்பனை.

[14] குருபரம்பரா ப்ரபாவம்: பெரிய திருமலை நம்பி திருமலையில் வேங்கடமுடையானை அடிக்கீழ் அமர்ந்து சேவித்துக்கொண்டிருக்கும் காலத்தில், அவர் தங்கைகளான காந்திமதி, த்யுதிமதி இருவரில், மூத்தவளான காந்திமதியை ஸ்ரீபெரும்புதூரில் ஆஸூரி வம்சத்தவரான சர்வக்ரது தீக்ஷிதர் கேசவ சோமயாஜியும், இளையவளான த்யுதிமதியை மழலைமங்கலத்தில் மணிக்குலத்தவரான கமலநயன பட்டரும் மணந்தனர் என்று கூறுகிறது. கேசவ சோமயாஜியும் அவர் தந்தையும் திருமலைக்கு யாத்திரையாக வந்ததும், தந்தை நேரில் பெண் கேட்டதும் கதைக்காக அமைத்துக்கொண்டவை.


Comments