36 - தூதுவளை
36 - தூதுவளை கட்டுக்கடங்காமல் கொட்டித் தீர்த்த அந்த அடைமழையின் உக்கிரத்திற்கு அஞ்சி, தன் தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல், முதியவர் ஒருவர் மூச்சிரைக்க ஓடிவந்து வீரநாராயணப் பெருமாள் திருக்கோயிலின் முகப்பு மண்டபத்திற்குள் நுழைந்தார். அவர் அணிந்திருந்த உத்தரீயம் நனைந்து தோளோடு ஒட்டியிருந்தது. மழையின் வேகத்தால் நெற்றித் திருமண் சற்றே கலைந்துகன்னத்தில் வழிந்திருந்தது. அவர் முகத்தில் ஏதோவொரு பிரளயமே நேர்ந்துவிட்டது போன்ற அவசரமும் பயமும் குடிகொண்டிருந்தன. தன் கையில் இருந்த பழைய ஓலைக்கூடையை அவசரமாகப் பலிபீடத்தின் அருகே வைத்துவிட்டு, 'மழை மெல்ல ஓய்ந்துவிட்டதா?' என்று கவலை தோய்ந்த விழிகளோடு வாசலை நோக்கியவாறே, மன்னார் சந்நிதி நோக்கிச் சென்று, தன் நடுங்கும் கரங்களைக் கூப்பினார். மழை சீக்கிரம் நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டது போல இருந்தது. அர்ச்சகர் வழங்கிய திருத்துழாய் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்ட அந்த விநாடியில் மழை சற்றே ஓய்வது போலத் தோன்றியது. அவசரமாய்க் கையில் இருந்த திருத்துழாயை வாயில் போட்டுக்கொண்டு, அதே அவசரத்தில் பதற்றத்துடன் வாசலை நோக்கி போர் குதிரையைப் போல் வேகத்தில் ஓடினார். ம...