32 - கிழிந்த ஓலை!

32 - கிழிந்த ஓலை!



ஒப்பற்ற பெருமை பொருந்திய நமது நாதமுனிகளின் திருக்குமாரரான ஈஸ்வர முனிகளின் புதல்வனான யமுனைத்துறைவனைக் காண வேண்டும் என்ற பேராவலோடு, மணக்கால் நம்பி காட்டுமன்னார்கோவில் நோக்கிப் புறப்பட்ட அதே சமயம்... வீரநாராயணபுரத்து ஏரிக்கரையோரம், எழில் கொஞ்சும் நந்தவனத்தின் நடுவே அமைந்திருந்த ஒரு பன்னசாலைக் குடிசையின் திண்ணையிலே, மஹாபாஷ்ய பட்டர் அமர்ந்திருந்தார். அவர் அங்கு வீற்றிருந்த மரப்பீடத்தின் மீதமர்ந்து, தன் மாணவர்களுக்கு விசேஷமான சாஸ்திர பாடங்களை உபதேசித்துக் கொண்டிருக்க, அவற்றை எல்லாம் மிகுந்த உன்னிப்போடு கேட்டுக்கொண்டிருந்த மாணவர்கள், தம் குருநாதர் சொல்லச் சொல்ல, கைகளிலிருந்த எழுத்தாணிகளைக் கொண்டு பனை ஓலைகளில் மிக வேகமாக எழுதிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், அக்கூட்டத்திலிருந்த ஒரு மாணவன் மட்டும் கையில் எழுத்தாணியை எடுக்காமல், எதையும் எழுதாமல், குருவின் திருவாக்குகளைத் தன் செவிகளாலும் நெஞ்சினாலும் மட்டுமே பருகியவாறு அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அந்தத் தனித்துவமிக்க மாணவன் வேறு யாருமல்லர்; நாதமுனிகளின் பேரனாரான யமுனைத்துறைவனேதான்!

ஒரு கட்டத்தில், பட்டர் பாடம் சொல்வதை நடுவே நிறுத்திவிட்டு, மிகக் கடினமான சாஸ்திரக் கேள்வி ஒன்றைக் கேட்டார். அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் விடை தெரியாமல் திகைத்து, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு விழிக்கத் தொடங்கினர். ஆனால், யமுனைத்துறைவனோ சற்றும் தயங்காமல், மின்னல் வேகத்தில் அக்கேள்விக்கு உன்னதமானதொரு விடையைக் கூறினான்!

அதைக் கேட்டு மஹாபாஷ்ய பட்டரின் உள்ளம் மட்டற்ற மகிழ்ச்சியில் பூரித்தது. “யமுனைத்துறைவா! உனது இந்த அற்புதப் பதில்களைக் கேட்கும்போது, நீ ஒரு தனிப் பிரகிருதி என்ற எண்ணமே எனக்குத் தோன்றுகிறது! இன்று உனது பாட்டனாரான நாதமுனிகளும், உனது தந்தையான ஈஸ்வர முனிகளும் உயிரோடு இருந்து உனது இந்த அறிவுக் கூர்மையைக் கண்டிருந்தால், எவ்வளவு பேரானந்தம் அடைந்திருப்பார்கள்!” என்று அவர் தன் பாராட்டை முடிப்பதற்குள்... அங்கே ஒரு குதிரை வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து அரண்மனைச் சேவகன் ஒருவன் பாய்ந்து இறங்கினான். அவனது ஒரு கையில் கூர்மையான ஈட்டியும், இடுப்புக் கச்சையிலே ஓர் ஓலைச் சீட்டும் சொருகப்பட்டிருந்தன.

அந்தச் சேவகன் பவ்யமாகப் பட்டரை வணங்கிவிட்டு, “பண்டிதரே! நான் சோழ மன்னனின் தூதுவனாக வந்துள்ளேன். அரச குருவானவர் தங்களிடம் ஒப்படைக்கச் சொன்ன ஓலைச் சீட்டு இது!” என்று கூறி, தன் இடுப்பிலிருந்த ஓலையை எடுத்து அவரிடம் கொடுத்தான்.

பட்டர் அந்த ஓலையைப் பிரித்து, அதிலிருந்த வரிகளை வாசிக்கத் தொடங்கினார். வாசிக்க வாசிக்க, அவர்தம் முகத்தில் கவலை ரேகைகள் ஆழமாகக் குடிகொண்டன; கண்கள் வாடின. தன் குருநாதரின் முகம் திடீரென சோகத்தில் ஆழ்ந்ததைக் கண்ட மாணவர்கள், ‘அரச ஓலையில் என்ன செய்தி வந்திருக்குமோ?’ என்று பதைபதைப்புடன் நோக்கினர். ஆனால், யாமுனனோ சற்றும் தயங்காமல், தன் குருநாதரின் கரங்களிலிருந்த அந்த ஓலையை மெல்ல வாங்கிப் படித்தார். அதில் எழுதப்பட்டிருந்த வரிகள் இதோ:

“பூமிப் பரப்பினை முழுமையாகத் தாங்கி ஆளும் சோழ சக்கரவர்த்திக்கே குலகுருவாக விளங்கும் என்னை வணங்கி, உலகில் உள்ள ஏனைய பண்டிதர்களும் புலவர்களும் உடனடியாகக் கப்பம் செலுத்த வேண்டும்! இது, வையகம் போற்றும் பேராசானான அரச குரு ஆக்கியாழ்வானின் ஆணை!”

“பண்டிதரே! தங்களிடமிருந்து கப்பப் பணத்தைப் பெற்று வர வேண்டும் என்பதே அரச அவை உத்தரவு. எனவே, தாமதமின்றி உடனடியாகத் தந்துவிடுங்கள்!” என்று கம்பீரமான குரலில் கூறினான் அந்தத் தூதுவன்.

இதனைக் கேட்ட மாத்திரத்தில், மஹாபாஷ்ய பட்டர் தன் மன வலிமையையும் உடல் பலத்தையும் முற்றிலும் இழந்து, அப்படியே தரையில் சோர்ந்து சரிந்தார்! தன் குருநாதர் தரையில் விழுந்து தவிப்பதைக் கண்ட யமுனைத்துறைவன் பதைபதைத்து, அவருக்கு அருகில் இருந்த பானையின் நீரை அருந்தக் கொடுத்து, “ஆசாரியரே! யார் இந்த ஆக்கியாழ்வான்? தங்களுக்கு ஏன் இத்தகைய கப்பம் கட்டும் ஓலை அனுப்பப்பட்டது? ஏழைப் பண்டிதரான தாங்கள் எதற்காக அவனுக்குக் கப்பம் செலுத்த வேண்டும்? தயவுசெய்து அதன் காரணத்தை அடியேனுக்கு உரையுங்கள்!” என்று ஆவலும், கோபமும் சேர்ந்து வினவினான்.

பட்டர் பெருமூச்சுடன் கண்கள் கலங்கி, “யமுனைத்துறைவா! அரச குருவான ஆக்கியாழ்வான், இவ்வுலகில் உள்ள சகல சாஸ்திரங்களையும் கலைகளையும் கற்றுத் தேர்ந்த மகா வித்துவான். அவனது இணையற்ற புலமையின் காரணமாகச் சோழ மன்னனிடம் அவனுக்கு மட்டற்ற செல்வாக்கு உள்ளது. அந்தப் பேராதிக்க செல்வாக்கைப் பயன்படுத்தி, ‘தனக்கு இணையாக யாரும் பேசக் கூடாது; ஏனைய புலவர்களும் பண்டிதர்களும் தனக்கு அடிபணிந்து கப்பம் கட்ட வேண்டும்’ என்று ஆணவத்தோடு ஒரு புதிய விதியை வகுத்துள்ளான். அவனது கொடுங்கோன்மைக்கு அஞ்சி, என்னைப்போன்ற எளிய சாஸ்திர அறிஞர்கள் பலர் பல ஆண்டுகளாக அவனுக்குக் கப்பம் கட்டித் தப்பித்து வருகிறோம். இன்று வந்திருக்கும் இந்த ஓலைச் சீட்டும் அத்தகையதுதான். ஆனால் ஐயோ! இன்றைய தினத்தின் பசி போக்கக்கூட என் குடிசையில் ஒரு பிடி நெல் இல்லை! இப்படிக் கப்பம் கட்டச் சொல்லி நெருக்கினால் அடியேன் என்ன செய்வேன்? எங்கு போவேன்?” என்று சாஸ்திரங்கள் பல உணர்ந்த மஹாபாஷ்ய பட்டர் விம்மி அழுது புலம்பினார்.

தன் உயர்வான குரு உரைத்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில், யமுனைத்துறைவனின் உள்ளத்தில் கோபம் காட்டுத் தீயைப் போலக் கொழுந்துவிட்டு எரிந்தது! அவனது புருவங்கள் நெரிந்தன. சிங்கக் குட்டியின் வேகம் அவனிடம் பிறந்தது. சற்றும் தயங்காமல், மன உறுதியுடன், அந்த ஆக்கியாழ்வான் அனுப்பிய அரச ஓலையைச் சபையின் நடுவே கிழித்துப் போட்டுத் துகள்களாக்கினார்!

பின்னர், தன் இடுப்புக் கச்சையிலிருந்த ஒரு சிறு புதிய ஓலை நறுக்கை எடுத்தார். தன் எழுத்தாணியால் அதில் கம்பீரமாக ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை வரைந்தார். அதனை அந்த அரசத் தூதுவனின் கைகளில் கொடுத்து, “அப்பனே! உமது ஆக்கியாழ்வானுக்கு நாங்கள் தரும் கப்பம் இதோ இந்த ஓலைச் சீட்டுதான்! இதனை, தன்னை ‘அரச குரு’ என்றும் ‘உலக மகா வித்துவான்’ என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அந்த ஆக்கியாழ்வானிடம் உடனடியாகக் கொண்டு போய் சேர்ப்பீராக!” என்று கம்பீரமான புன்னகையுடன் உரைத்தார்.

அந்தப் பன்னிரண்டு வயதுப் பாலகனின் அசாத்திய துணிச்சலையும், அவனது கண்களில் தெறித்த அந்த அறிவுச் செருக்கையும் கண்ட தூதுவன் செய்வதறியாது திகைத்து நின்றான். அந்த ஓலையைப் பெற்றுக்கொண்டு, தன் குதிரையின் மீதேறி, புழுதிப் படலத்தைக் கிளப்பிக்கொண்டு சோழ அரண்மனை நோக்கி மின்னல் வேகத்தில் புறப்பட்டான்.

அந்த ஓலையில் யமுனைத்துறைவர் தன் அசாத்திய சமஸ்கிருதக் கவித்திறனால் எழுதியிருந்த உன்னத ஸ்லோகத்தின் கருத்தை அறிய வாசகர்களாகிய நீங்கள் ஆர்வமாக இருப்பது தெரிகிறது. குதிரை அரண்மனனை அடையும் வரை அதை இங்கே படித்துக்கொள்ளலாம்.

“வித்துவானே! நாம் வெறும் கவிஞர்கள் மட்டுமல்லர்; சகல சாஸ்திர நெறிமுறைகளையும் முறையாகக் கற்றுத் தேர்ந்த ஞானிகள்! உங்களைப் போல ஆணவத்தோடு வாதம் புரிய வரும் மதம் பிடித்த யானைகளின் மத்தகத்தை நறுக்கென்று பிளந்து வீழ்த்தும் வல்லமை கொண்ட சிங்கக் குட்டிகள் நாங்கள் என்பதை உமது சிற்றறிவால் உணர்ந்து கொள்வீராக! இப்படிக்கு, மஹாபாஷ்ய பட்டரின் சீடன், யமுனைத்துறைவன்.”

இந்த ஓலை அரண்மனையை அடைய, அரசத் தூதுவனிடமிருந்து அந்த ஓலைச் சீட்டை வாங்கிப் படித்த ஆக்கியாழ்வான், உள்ளூர பெரும் நடுக்கமுற்றான். 'யார் இந்தப் பாலகன்? இப்புவியிலே இத்தகையதொரு வீரமும் கவித்துவமும் மிக்க புலவன் ஒருவன் இருக்கிறானா?' என்று அவனது நெஞ்சில் ஆழமானதொரு திகிலும் மனக்கலக்கமும் ஏற்பட்டது. எனினும், அதனைத் தன் முகத்திலும் பேச்சிலும் சற்றும் வெளியே காட்டிக்கொள்ளாமல், சோழ மன்னனை நேரில் சந்தித்துத் நடந்தவற்றை முழுவதும் விவரித்தான்.

சோழ மன்னனும் இதற்கு முன் எப்போதும் கேட்டிராத புதுமையான இந்தச் சம்பவத்தைக் கேட்டு வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தான். உடனே அவன் ஆக்கியாழ்வானை நோக்கி, "கணக்கற்ற கலைகளையும் சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த எமது அரச குருவே! இப்படியொரு சவால் வந்துள்ளதே! இனி இதற்கு யாது செய்ய உத்தேசித்துள்ளீர்கள்?" என்று வினவினான்.

ஆக்கியாழ்வான் தன் கோபத்தை மறைத்துக்கொண்டு, "அரசே! மதிப்புமிக்க எனது ஓலையைத் துணிச்சலுடன் கிழித்தெறிந்த அந்தப் பாலகன், தான் ஏதோ சாமானியனல்ல என்று எண்ணித் தலைக்கனம் கொண்டு என்னை மகா சபையின் நடுவே இழிவுபடுத்தியுள்ளான்! அரச குருவாகிய என்னை இழிவுபடுத்துவது என்பது, இந்த நாட்டின் சக்கரவர்த்தியான உங்களையே இழிவுபடுத்துவதற்குச் சமமாகும்! எனவே, அவனை உடனடியாக நமது அரசவைக்கு வரவழைத்து, மற்ற புலவர்கள் யாவரும் காணும்படிச் சொற்போருக்கு (வாதப் போருக்கு) அழைக்க வேண்டும். அங்கே என் வாதத்திறமையால் அவனைத் துகள்துகளாக வென்று வீழ்த்தினால், அது பிற்காலத்தில் என்னை எதிர்க்கத் துணியும் மற்றவர்களுக்கும் ஒரு மாபெரும் பாடமாக அமையும்!" என்றான்.

"நன்று சொன்னீர் அரச குருவே! உமது எண்ணப்படியே செய்வோம்!" என்று உடன்பட்ட சோழ மன்னன், "பெருமைமிக்க யமுனைத்துறைவரே! நீர் உடனடியாக எமது சோழ அரசவைக்கு வந்து வாதப் போரில் பங்கேற்க வேண்டும்" என்று ஒரு அரச முத்திரையுடன் கூடிய அழைப்பு ஓலையைத் தன் தலைமைச் சேவகனிடம் கொடுத்து அனுப்பினான்.

அரசத் தூதுவனும் குதிரையேறி விரைவாகக் காட்டுமன்னார்கோவில் வந்து சேர்ந்து, யமுனைத்துறைவரிடம் அந்த ஓலையை ஒப்படைத்தான். "பாலகனே! சோழ மன்னர் உமக்கு அனுப்பி வைத்த அரச கட்டளை ஓலை இது! தாமதிக்காமல் உடனே எங்களுடன் புறப்பட்டு வாரும்!" என்று அதிகாரக் குரலில் கூறினான். யமுனைத்துறைவர் அந்த ஓலையை வாங்கி, அதன் வரிகளை அமைதியாகப் படித்துப் பார்த்தார். பின்னர், இதழ்களில் மெல்லிய புன்னகையோடு, "மிகவும் நல்லது!" என்று கூறி, அந்த அரச ஓலையையும் சற்றும் அஞ்சாமல் சபையின் நடுவே இரண்டாகக் கிழித்தெறிந்தார்! "அப்பனே! இதுதான் எமது பதில்! இந்தக் கிழிந்த ஓலைச் சீட்டையே சோழ மன்னனிடம் கொண்டு போய் ஒப்படைப்பீராக!" என்று கம்பீரமாக உரைத்தார்.

இதனைக் கண்ட தூதுவன் மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் அடைந்தான். 'இருமுறை அனுப்பிய அரச ஓலைகளையும் கிழித்துப் போட்ட இந்தத் துணிச்சல் மிக்க பாலகனைப் பற்றி அரசரிடம் எப்படிச் சொல்வது?' என்று குழம்பிய மனதுடன், அந்தக் கிழிந்த ஓலைத் துண்டுகளை எடுத்துக்கொண்டு தன் குதிரையிலே ஏறிப் புறப்பட்டான். அரண்மனையை வந்தடைந்து சோழ மன்னனிடம் நடந்தவற்றை அப்படியே தெரிவித்தான்.

சோழ மன்னன் தன் ஓலை கிழிபட்டதைக் கேட்டு எல்லையற்ற சினம்கொண்டு முகம் சிவக்க நின்றான். அப்போது, அவனது அருகே அமர்ந்திருந்த அறிவுக் கூர்மை மிக்க சோழ பேரரசி, "மன்னவரே! சினம்கொள்ள வேண்டாம். நீர் இந்தத் தேசத்துக்கே மாபெரும் சக்கரவர்த்தியாக விளங்குவதால், எப்போதும் வெறும் தரையில் நடக்காமல் உன்னதமான பல்லக்கிலேயே பிரயாணம் செய்கிறீர் அல்லவா? அதைப்போலவே, அந்தக் காட்டுமன்னார்கோவில் பாலகனும் மெய்ஞ்ஞானத்திலே இந்த உலகத்து அறிஞர்கள் எல்லோருக்கும் மேம்பட்டவனாக விளங்குகிறான் என்று தோன்றுகிறது! அப்படிப்பட்ட மெய்ஞ்ஞானச் செல்வன் வெறும் தரையில் நடந்து வர எப்படிச் சம்மதிப்பான்? அவனது அசைக்க முடியாத மன உறுதியையும் பாண்டித்தியத்தையும் பார்த்தால், அவன் நிச்சயமாக நமது அரச குருவான ஆக்கியாழ்வானின் கர்வத்தைத் தவிடுபொடியாக்கி, அவரது தலையிலேயே ஏறி மிதிக்க வல்லவனாக இருப்பான் என்று தோன்றுகிறது! எனவே, அவனது தகுதிக்கு ஏற்ப, அவரிடம் அரச மரியாதையுடன் கூடிய ஓர் அழகிய பல்லக்கைக் கொடுத்து அனுப்புங்கள்!" என்று அறிவுரை கூறினாள்.

அரசியின் மதிநுட்பமான வார்த்தைகளைக் கேட்டுத் தெளிவடைந்த மன்னனும் அவ்வாறே கட்டளையிட்டான். அரச முத்திரையோடு கூடிய பட்டுத் திரையிட்ட அழகிய ராஜ பல்லக்கு யமுனைத்துறைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. யாமுனனும் அந்தப் பல்லக்கில் ஏறி அமர்ந்து சோழ அரச சபையை வந்தடைந்தார். ஆனால், சபையின் வாயிலை அடைந்த யமுனைத்துறைவர், பல்லக்கிலிருந்து கீழே இறங்காமல், தன் கைப்பட எழுதிய மற்றொரு புதிய ஓலைச் சீட்டை அங்கே இருந்த சேவர்கள் மூலம் அரசவைக்குள் கொடுத்தனுப்பினார்.

அரசவையில் இருந்த ஆக்கியாழ்வான் அந்த ஓலையை வாங்கிப் படித்து, கோபாவேசத்தால் அவனது உடல் நடுங்கத் தொடங்கியது. கண்கள் சிவக்க, "இப்படியொரு ஆணவ வரிகளா! இப்படி எழுதி அனுப்பிய அந்தப் பாலகனை இன்று வாதப் போரில் வென்று, அவனது தலை மீது ஏறி மிதித்துக் கிழித்தெறியப் போகறேன்!" என்று கத்தியவாறு, அந்த ஓலைச் சீட்டை மன்னனிடம் கொடுத்தான்.

அரசன் அந்த ஓலையைத் தன் கைகளில் வாங்கி, சபையிலிருந்த அனைவரும் கேட்கும்படியாக உரத்த குரலில் வாசிக்க ஆரம்பித்தான்…

./சுஜாதா தேசிகன்
26.8.2026

Comments

Popular posts from this blog

1 - வீரநாராயணபுரம்

24 - காலச் சுழற்சி

23 - வெட்டிவேர்