22 - திருவடி யாத்திரை

22 -  திருவடி யாத்திரை



ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் திருக்கோவிலில், எழில் கொஞ்சும் காட்டுமன்னாரின் சந்நிதியில் அமர்ந்து நாதமுனிகள் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்களை எம்பெருமானின் திருமுன்னே தாளமிட்டு, பக்திப் பெருக்குடன்,

"உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்"

என்று உருகி இசைத்தபோது, அங்கிருந்த சீடர்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

பாசுரத்தின் அநுபவத்தில் திளைத்த உய்யக்கொண்டார் தன் ஆசாரியரான நாதமுனிகளை நோக்கி, “ஆசாரியரே! ஆழ்வாரின் திவ்யப் பாசுரங்களைக் கற்றுணர்ந்தால்... இவ்வுலகில் எந்தெந்தப் பொருள்கள் நம்மை எம்பெருமானை மறக்கடிக்கச் செய்யுமோ, அந்தந்தப் பொருள்களே மீண்டும் அந்தப் பரம்பொருளை நமக்கு நினைவுபடுத்திப் பிரேமையைப் பெருக்கும் உன்னத நிலையை நமக்கு அளித்துவிடுகிறது அல்லவா!" என்று வியந்து போற்றினார்.

”நீர் உரைப்பது முற்றிலும் மெய் உய்யக்கொண்டாரே! நம்மாழ்வாருக்கு உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் கூடக் கண்ணனேதான்! அடியேனுக்கும் அந்த உன்னதமான மெய்யுணர்வு முழுமையாகக் கூடும் நாள் எந்நாளோ!” என்று நாதமுனிகள் பெருமூச்சுடன் உரைத்த அச்சமயத்தில், திருக்கோவிலுக்குள் மூச்சிரைக்க நுழைந்த ஒருவர் நாதமுனிகளை அணுகி, “ஐயா! தாங்கள் இங்கேயா எழுந்தருளியிருக்கிறீர்கள்? சற்றுமுன் உங்களைத் தேடிக்கொண்டு சிலர் உங்களது திருமாளிகைக்கு வந்திருந்தார்கள்!” என்று செய்தி சொன்னார்.

“ஓ! அப்படியா?” என்று நாதமுனிகள் வியப்புடன் திடுக்கிட்டு எழுந்திருக்க, கூடவே அவர்தம் சீடர்களும் எழுந்திருக்க முற்பட்டனர்.

அப்போது நாதமுனிகள், அவர்கள் அமரும்படித் தன் கரங்களால் சைகை காட்டி, “நீங்களும் என்னுடன் வந்துவிட்டால்... இங்கே ஆழ்வாரின் திவ்யப் பாசுரங்களைக் கேட்கப் பெறாமல், நம் காட்டுமன்னாரின் திருமுகம் வாடிவிடாதா? ஆதலால், நீங்கள் அனைவரும் மேலும் சற்று நேரம் ஆழ்வாரின் பாசுரங்களை மன்னாரின் திருமுன்னே சேவித்துக்கொண்டிருங்கள்” என்று அன்புக்கட்டளையிட்டார்.

பின்னர், 'நம்மைத் தேடித் திருமாளிகைக்கு வந்தவர்கள் யாராக இருக்கும்?' என்ற ஆழ்ந்த சிந்தனையோடு நாதமுனிகள் தன் திருமாளிகை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார்.

தன் திருமாளிகையின் வாயிலை அவர் அடைந்தபோது, அங்கே நின்றுகொண்டிருந்த அவர்தம் திருக்குமாரத்திகள் ஓடிவந்து, ”தந்தையே! நமது திருமாளிகைக்கு இப்போழுதுதான் உங்களைத் தேடிக்கொண்டு சிலர் வந்திருந்தார்கள். ஆச்சரியமாக, அவர்களுடன் ஒரு வானரமும் வந்திருந்தது!” என்றார்கள்.

அதனைக் கேட்டு நாதமுனிகளின் நெஞ்சம் படபடத்தது; “அப்படியா! அவர்கள் தோற்றத்தில் எப்படி இருந்தார்கள்? எந்தத் திசை நோக்கிச் சென்றார்கள்?” என்று தவிப்புடன் வினவினார்.

“அவர்கள் வேட்டைக்குப் புறப்பட்ட சோழ அரசர்களைப் போல, கைகளில் கம்பீரமான வில்களுடன் இரண்டு வீரர்கள் வந்திருந்தார்கள். அவர்களோடு, அன்னம் போன்ற மென்மையான நடையழகும், நறுமணம் வீசும் மலர்களைச் சூடிய செழுங்குழலும் கொண்ட பேரழகு வாய்ந்த ஒரு மாதுவும் வந்திருந்தாள். கூடவே வந்த அந்த வானரமும் நமது திருமாளிகையின் வாசல் திண்ணையிலே நின்றுகொண்டிருந்தது. அந்த அழகிய மங்கை நின்ற என்னை உற்று நோக்கி, ‘குழந்தாய்! நாதமுனிகள் எங்கே எழுந்தருளியிருக்கிறார்?’ என்று கேட்டார்கள். தந்தையார் வெளியே சென்றுள்ளார் என்று நான் கூற, அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள்” என்றாள்.

அதைக் கேட்ட நாதமுனிகள் நெஞ்சில் இடி விழுந்தது போலத் திகைத்து நின்றார். கண்கள் பனித்து உருக, “ஐயோ! கைவில்களுடன் இரண்டு வீரர்கள் என்றால்... அவர்கள் சக்கரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமபிரானும், இளையபெருமாளான லட்சுமணனுமே அன்றி வேறு யார்! மணம்மிக்க மலரைச் சூடிய கூந்தலை உடையவள் ஜனகராஜன் திருமகளான சாட்சாத் சீதாபிராட்டியே ஆவாள்! பக்கத்தில் நின்ற அந்த வானரமோ... ஆதி ஆசாரியரான சூரிய பகவானிடத்தில் சகல வேதங்களையும் கற்றுத் தேர்ந்து, இராமபிரானுக்கு அணுக்கத் தொண்டு புரிந்த சிறிய திருவடியான மாருதி அல்லவா! ஒப்பற்ற தெய்வீகத் தன்மை படைத்த அவர்கள் அடியேனைத் தேடி நமது வாசலுக்கே வந்துள்ளார்களா? அவர்கள் இப்போது எங்கே போனார்கள்?” என்று கதறியவாறு கேட்க, திருக்குமாரத்திகள் அவர்கள் சென்ற திசையைக் கைகாட்டி விளக்கினர்.

“ஆகா! இது பிரணவம் நடந்து சென்ற திசையன்றோ! எம்பெருமானைச் சாக்ஷாத்தாகத் தரிசிக்கும் அந்தப் மகா பாக்கியத்தை இந்த அடியேன் இழந்துவிட்டேனே!” என்று நிலத்தில் விழுந்து கதறியவாறு, அவர்கள் சென்ற திசையை நோக்கித் தன் கரங்களைக் கூப்பி வணங்கி, அதே திசையில் பித்துப்பிடித்தவரைப் போல ஓட ஆரம்பித்தார் நாதமுனிகள். சுற்றியிருந்த ஊர் மக்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தனர்.

வழியிலே ஓட்டமும் நடையுமாக அழுதுகொண்டே சென்ற நாதமுனிகள், தரையில் கிடந்த அழகிய மலர்ச் சரம் ஒன்றைக் கண்டார்.

மண்ணில் கிடந்த அம்மலரைக் கண்டதும் திடுக்கிட்டு நின்றவர், “ஆகா! இது என் சீதாபிராட்டி தன் திருக்குழலில் சூட்டிக்கொண்ட மலர்ச் சரமல்லவா?” என்று நெஞ்சுருகிக் கூறி, அந்தப் பூச்சரத்தை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு, கண்ணீர் மல்க மீண்டும் ஓடத் தொடங்கினார்.

சற்றுமுன் பெய்த பெருமழையினால் வழியெல்லாம் சேறும் சகதியுமாகக் காட்சியளித்தது. மரக்கிளைகளின் இலை நுனிகளில் தேங்கியிருந்த மழைநீர்த் துளிகள் முத்துக்களாய்ச் சொட்டிக்கொண்டிருந்தன. வானம் மப்பும் மந்தாரமுமாக இருண்டு கிடந்ததால், பறவைகள் யாவும் சூரியன் அஸ்தமித்துவிட்டதோ என்று அஞ்சி, வழக்கத்திற்கு மாறாக அன்று மிகச் சீக்கிரமாகவே தங்களின் கூடுகளை நோக்கிப் பறந்து சென்றுகொண்டிருந்தன. மீண்டும் பெருமழை தொடங்குவதற்குள் தங்களின் இருப்பிடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற தவிப்பில், ஊர் மக்கள் வேகமாகத் தத்தம் குடிசைகளை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள்.

எதிரே மழையிலிருந்து தப்பிக்க ஓடிக்கொண்டிருந்த சிலரை வழிமறித்து, நாதமுனிகள் கைகூப்பி, “ஐயன்மீர்! கரங்களிலே பந்து ஏந்திய ஒரு மெல்லிய பெண்மணியும், மந்தர மலையைப் போன்று வலிய வில்லை ஏந்திய இரு வீரர்களும் இவ்வழியே செல்வதைப் பார்த்ததுண்டா?” என்று வினவினார்.

அவர்கள், “ஆம் ஐயா! கண்டோம்! கண்டோம்! தெய்வீகக் கம்பீரமும் பேரொளியும் ஒருங்கே கொண்ட அவர்கள் இந்த வழியேதான் சென்றார்கள். அவர்களுடன் ஒரு வானரமும் சென்றது!” என்று கூறினார்கள்.

அதைக் கேட்டு நாதமுனிகள் கைகூப்பியவாறே அவர்கள் காட்டிய திசை நோக்கி அதிவேகமாக ஓடினார்.

சிறிது தூரம் சென்றபின், சேற்றிலே அந்த வானரத்தின் கால்தடமும், அதனருகே மலரினும் மெல்லிய இரு ஜோடித் திருவடிகளின் தடையங்களும் பதிந்திருப்பதைக் கண்டார்.

“ஐயோ! நடந்த கால்கள் நொந்தவோ! எனக்காகவா... எளியோனான என்னைத் தேடிக்கொண்டா தாமரை போன்ற அவர்தம் மெல்லிய திருவடிகள் சிவக்க, இந்தச் சேற்றிலும் சகதியிலும் நடந்து சென்றார்கள்?” என்று கண்களிலிருந்து அருவியாகக் கண்ணீருடன் கதறினார். உடனே, அவர்தம் திருவடிகள் பட்ட அந்தச் சேற்றினை அப்படியே அள்ளித் தன் நெற்றியில் பரம பவித்திரமான திருமண்ணாகப் பூசிக்கொண்டு மீண்டும் ஓடத் தொடங்கினார். அன்று பரதாழ்வான் சித்திரகூடக் காட்டுக்குள் இராமபிரானின் திருவடிகளைத் தேடி ஓடியதைப் போலக் காட்சியளித்தது நாதமுனிகளின் ஓட்டம்!

மேலும் சிறிது தூரம் சென்றபோது, மீண்டும் சிலர் எதிரே வர, அவர்களிடம், “ஐயா! அடியேன் கேட்கும் இந்த அழகிய இரண்டு வில்ல வீரர்களையும், ஒரு வானரத்தையும், வளையலணிந்த கரங்களையுடைய அந்த உன்னதப் பெண்மணியையும் நீவிர் பார்த்ததுண்டா? சொல்வீர்களாக!” என்று கேட்டார்.

அவர்களோ, “அந்தணரே! நாங்கள் அத்தகையோரை எங்கும் கண்டிலோம்!” என்று கூறிச் சென்றனர்.

“ஐயோ! சிற்றன்னையான கைகேயியின் ஆணையைக் காக்கக் கானகம் சென்ற இராமனின் திருவடிகளைக் கண்டு வணங்கும் பேற்றை அடியேன் இழந்துவிட்டேனே!” என்று கதறி, அன்று சக்கரவர்த்தி தசரதன் தன் அருமைத் திருமகனைப் பிரிந்த ஏக்கத்தில் உயிர் துறந்தது போல, நாதமுனிகள் தேம்பி அழுது, தரையில் விழுந்து புரண்டார். அளவற்ற பக்தித் தவிப்பினால் அவர்தம் மூச்சு நின்று, அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். (1)

சுற்றிலும் மரங்கள் அசைவற்று நின்றன; பறவைகள் தங்களின் ஓசையை நிறுத்தின; எங்கும் அமைதி குடிகொண்டது. நாதமுனிகளின் திருமேனிக்கு மேலே, வானத்தில் திருவடியான கருடன் ஒன்று மட்டும் வட்டமிட்டுக் காத்துக்கொண்டிருந்தது.

நேயர்களே! நாதமுனிகளை இந்தத் துயரமான நிலையில் அங்கே விட்டுவிட்டு, நாம் ஒரு கணப்பொழுது மீண்டும் காட்டுமன்னார் திருக்கோவிலுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதற்காக நேயர்களிடம் அடியேன் பொறுத்தருளுமாறு வேண்டுகிறேன்.....

./சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்..

அடிக்குறிப்புகள்
(1) நாதமுனிகள் இராமபிரானைத் தேடிக்கொண்டு சென்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் இன்றும் இருக்கின்றன. அவருக்குச் சீதாபிராட்டியின் மலர்ச் சரம் கிடைத்த இடம் 'பூவிழுந்த நல்லூர்' என்றும்; திருவடியான அனுமனின் கால்தடம் சேற்றில் பதிந்திருந்த இடம் 'குரங்கடி' (இப்பெயர் காலப்போக்கில் 'குறுங்குடி' என்று மருவியது) என்றும்; வழியில் எதிர்ப்பட்டவர்களிடம் 'வில்லேந்திய வீரர்களைக் கண்டீர்களா?' என்று நாதமுனிகள் வினவ, அதற்கு அவர்கள் 'கண்டோம் கண்டோம்' என்று பதிலளித்த இடம் 'கண்டமங்கலம்' என்றும் அழைக்கப்படுகின்றன. இறுதியில், பக்திப் பரவசத்தால் நாதமுனிகள் மயங்கி வீழ்ந்து பள்ளிப்படுத்தப்பட்ட புனிதமான இடம் இன்றும் 'சொர்க்கப்பள்ளம்' என்று போற்றப்படுகிறது. இதை கூகுள் மேக் கொண்டு சில ஆண்டுகள் முன் தேடி அவர்கள் வழித்தடங்களை குறித்தேன். பார்க்க படம்.

Comments

Popular posts from this blog

1 - வீரநாராயணபுரம்

24 - காலச் சுழற்சி

23 - வெட்டிவேர்