28 - நம் சடகோபன்!

28 - நம் சடகோபன்!




ஆசாரியர் ஸ்ரீமந் நாதமுனிகளின் பிரபாவத்தையும், திருவாய்மொழி மற்றும் திருமொழித் திருநாட்களிலே அரையர்கள் எம்பெருமான் திருமுன்னே நிகழ்த்தும் அற்புத அரையர் சேவையின் மாண்புகளையும் பற்றி எத்தனை முறை கேட்டாலும், அது செவிகளுக்கு வற்றாத அமுதமாய் இனிமை பயக்கும் அல்லவா! நாதமுனிகளின் அபிமானச் சீடரான ஸ்ரீ உய்யக்கொண்டார் விவரிக்க, அதனை அணுக்கச் சீடரான மணக்கால் நம்பியும் ஏனையோரும் நேரில் கேட்ட அந்தப் பரவச அநுபவம் எப்படி இருந்திருக்கும் என்பதை வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிடுவோம்!

மறுநாள் விடிந்தது. மணக்கால் நம்பியும் ஏனைய சீடர்களும் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் இராமாயண அரங்கேற்ற நிகழ்வைக் கேட்க ஆவலோடு, திருக்கோவில் வெளி மண்டபத்திலே ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள்.

உய்யக்கொண்டார் வந்து ஆசனத்தில் அமர்ந்தபோது, அவர்தம் திருவடிகளிலே விழுந்து வணங்கிய சீடர்களில் ஒருவர் விநயத்துடன் எழுந்து, “ஆசாரியரே! நம்மாழ்வாரின் திவ்ய பாசுரங்களைக் கொண்டாடும் பொருட்டுத் திருமங்கை மன்னன் ‘திருவாய்மொழித் திருநாள்’ என்ற மாபெரும் உற்சவத்தை ஏற்படுத்தினார்; அது இன்றும் திருவரங்கத்தில் மகா வைபவமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படி இருக்க, நம் ஆசாரியரான ஸ்ரீமந் நாதமுனிகள் அதற்கு முன்னதாக ‘திருமொழித் திருநாள்’ என்ற மற்றொரு உற்சவத்தை ஏற்படுத்தியதற்கு ஏதாவது விசேஷமான காரணம் இருக்கிறதா?” என்று பவ்யமாகக் கேட்டார்.

உய்யக்கொண்டார் உளம் கனிந்து, “நன்று கேட்டாய் சீடனே! நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு அங்கமாக (உறுப்பாக) விளங்குபவை திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த பிரபந்தங்கள் ஆகும். அவற்றுக்கும் தகுந்த ஏற்றமும் பெருமையும் அளிக்க வேண்டும் என்ற உன்னதமான காரணத்திற்காகவே, நம் ஆசாரியர் ஸ்ரீமந் நாதமுனிகள் ‘திருமொழித் திருநாள்’ என்ற இந்த அற்புத உற்சவத்தைத் தோற்றுவித்தார்” என்றார்.

அப்போது மற்றொரு சீடர் எழுந்து வணங்கி, “ஆசாரியரே! நேற்று தாங்கள் அரையர் சேவையின் உன்னதத்தைப் பற்றி மிக விரிவாகவும் அழகாகவும் எடுத்துரைத்தீர்கள். எளியோனாகிய அடியேனுக்கு ஒரு சிறு சந்தேகம். எம்பெருமானின் திவ்ய நாமங்களை நாம் ஏன் இவ்வாறு தன்னை மறந்து ஆடியும் பாடியும் துதிக்க வேண்டும்?” என்று வினவினார்.

உய்யக்கொண்டார் கனிவான புன்னகையுடன் உரைக்கத் தொடங்கினார்:

“நம் மதுரகவியாழ்வார், நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியின் உன்னதப் பெருமையை ‘அமுது ஊறும் என் நாவுக்கே’ என்று அதன் சுவையைத் தன் நாவில் அநுபவித்து உணர்ந்தவர். அதனால்தான் அவர், ‘பாவின் இன்னிசை பாடித் திரிவனே’ என்று தன் ஆசாரியனின் பாசுரங்களை உலகெங்கும் பாடிக்கொண்டே திரிந்தார்.

நம்மாழ்வாரும் கூட, எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களிலே மூழ்கி, தலை கீழே தட்ட, கால்கள் தலையைத் தட்டும்படித் தன்னை முற்றிலும் மறந்து, பக்திப் பரவசத்தில் ஆடிப் பாட வேண்டும் என்றே அருளிச்செய்கிறார்.(1)

நாம் இவ்வாறு எம்பெருமானுக்காகத் தெருக்களிலே ஆடிக்கொண்டு பாடிச் செல்லும்போது, நம்மைக் கண்டு உலகியல் மாந்தர்கள் எவரேனும் கைகொட்டிச் சிரித்தால், அதற்காக நாம் சற்றும் தயங்கவோ வெட்கப்படவோ வேண்டியதில்லை! மாறாக, அவர்கள் கைகொட்டும் அந்த ஓசையையே நமக்குரிய தாளமாகக் கொண்டு, அதற்கு ஏற்றாற்போல உங்களின் ஆட்டத்தை இன்னும் எழிலாக மாற்றி ஆடுங்கள்! அப்போது, உங்களின் அந்தத் தூய பக்தியைக் கண்டு கைகொட்டிச் சிரித்த அவர்களும் மெய்ம்மறந்து உங்களுடனேயே சேர்ந்து எம்பெருமானின் திருநாமங்களைச் சொல்லிக்கொண்டு ஆடத் தொடங்குவார்கள்.

பகவானின் திவ்விய நாமங்களை நாம் படுத்துக்கொண்டு உச்சரித்தால், அந்த எம்பெருமான் பேரன்போடு உங்கள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கேட்கிறான்! நாம் உட்கார்ந்துகொண்டு உச்சரித்தால், அவன் வியப்புடன் உங்கள் அருகில் நின்றுகொண்டு கேட்கிறான்! நாம் நின்றுகொண்டு உச்சரித்தால், அவன் பக்திப் பெருக்கால் ஆடிக்கொண்டு அநுபவிக்கிறான்! நாம் அவனுக்காகத் தன்னை மறந்து ஆடிக்கொண்டு உச்சரித்தால்... அவனோ தன் பக்தனுக்கு நேரிலே தோன்றித் திவ்ய தரிசனம் கொடுத்தருளுகிறான்!(2) நம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் நமது ஆசாரியரான நாதமுனிகள் ஆகியோருக்கு எம்பெருமான் அவ்வாறுதானே காட்சி கொடுத்தருளினான்!” என்றார்.

சீடர்கள் யாவரும் இந்த உன்னத உபதேசத்தைக் கேட்டு மெய்ம்மறந்து அமர்ந்திருக்க, உய்யக்கொண்டார் கம்ப இராமாயணம் அரங்கேற்ற நிகழ்வைக் கூறத் தொடங்கினார். நம் நேயர்களையும் அவர்களோடு சேர்ந்து அதனைக் கேட்டு அனுபவிக்க அழைக்கிறோம்..

“சீடர்களே! கம்பர் சோழ நாட்டின் திருவழுந்தூரிலே (தேரெழுந்தூர்), ஆதித்தன் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இளமையிலேயே தன் தந்தையை இழந்த அவர், தன் தாயாருடன் திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலைச் சரணடைந்தார். அவரால் அன்போடு ஆதரிக்கப் பெற்ற கம்பர், பரம வைணவராக விளங்கினார்.

சிறுவயது முதலே தேரெழுந்தூரில் எழுந்தருளியிருக்கும் செங்கமலவல்லி தாயார் சமேத ஆமருவியப்பனைத் தினமும் சேவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கம்பர். அதுமட்டுமன்றி, ஆமருவியப்பனின் வலதுபுறத்தில் வீற்றிருக்கும் பக்தப் பிரகலாதனின் திவ்ய விக்ரகத்தையும் தினமும் நெஞ்சுருக வணங்கி வந்ததால், கம்பரின் உள்ளத்தில் பிரகலாதனின் பக்தி நெறி ஆழமாகப் பதிந்திருந்தது.

கம்பர் ஆழ்வார்களின் திவ்யப் பாசுரங்களிலே ஆழங்கால் பட்டுத் திளைத்தவர். அதனால்தான், ஆழ்வார் பாசுரங்களில் பொதிந்துள்ள அரிய கருத்துக்களையும், உன்னதமான தமிழ்த் தொடர்களையும் தன் காப்பியமான இராமாயணத்தில் ஆங்காங்கே மிக நளினமாகப் பயன்படுத்தியுள்ளார். நம் நம்மாழ்வார், ‘முதல் தனி வித்தேயோ முழு மூவுலகு ஆதிக்கெல்லாம்’ என்று போற்றுவதைப் போல, கம்பரும், ‘மூவர்க்கும் தலைவரான மூர்த்தி, மூலமே இல்லாத முதல்வன்’ என்று எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனே சகல ஜகத்திற்கும் முதல்வன் என்று திடமாக நம்பி வழிபட்டார். 'கற்பார்‌ இராமபிரானையல்லால்‌ மற்றும்‌ கற்பரோ ?' என்ற நம்மாழ்வார்‌ வாய்மொழிக்கு ஏற்ப, ராமனின் மீது தீராத பக்தி கொண்டிருந்தார். தத்துவத்துக்கு‌ நம்மாழ்வாரையும், தமிழுக்கு கலியனையும் கொழு கொம்பாய்ப்‌ பற்றிப்‌ படர்ந்தார்.

நமது குலசேகராழ்வாரைப் போலவே, கம்பருக்கும் திருவரங்கத்து பெருமாள் மீது எல்லையற்ற ஈடுபாடும் பற்றும் இருந்தது. அயோத்தியிலே இராமபிரானால் ஆராதிக்கப்பட்டு, பின்னர் விபீஷணனுக்குப் பரிசாக அளிக்கப்பட்டு, இக்ஷ்வாகு குலத்தின் பெரும் தனமாகத் திகழும் திருவரங்கனோ, நம் ஆழ்வார்களின் அருளிச்செயல்களைக் கேட்பதிலேயே பெரும் விருப்பம் கொண்டு இப்புவியிலே திருவரங்க நகரில் நித்தியவாசம் செய்யத் தொடங்கினான் அல்லவா! அதனால், கம்பருக்குத் திருவரங்கன் மீது அளவற்ற பிரியம் இருந்தது. சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவர் திருவரங்கத்துப் பெருமாளைப் பாடி உருகிப் போவார்.

முற்காலத்திலே வால்மீகி முனிவர் இயற்றிய இராமாயணமானது, சாட்சாத் இராமபிரானின் முன்னிலையிலேயே குச-லவர்களால் அரங்கேற்றப்பட்டது. எனவே, கம்பர் தானும் தான் இயற்றிய இராம காவியத்தை, அன்று இராமபிரானால் ஆராதிக்கப்பட்ட அதே திருவரங்கப் பெருமாள் திருமுன்னே அரங்கேற்றம் செய்யப் பேராவல் கொண்டார்.

அதற்காகத் திருவரங்கத்திலுள்ள சான்றோர்கள் மற்றும் பெரியோர்கள் நிறைந்த அவையிலே தன் காவியத்தை வெளியிட்டு, அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்று அரங்கேற்ற விரும்பினார். ஆனால், அதற்கு முன்னதாகச் சடகோபரான நம்மாழ்வாரின் பரிபூரண அருள் பெற்றவரான நமது ஆசாரியர் நாதமுனிகளின் ஆசியும், அவர்தம் அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவதே மிக முக்கியமானது என்று கம்பர் முடிவு செய்தார். தன் இந்த விருப்பத்தைத் தன் ஆதரவாளரான சடையப்ப வள்ளலிடமும், சோழ நாட்டை ஆண்ட குலோத்துங்க சோழ மன்னனிடமும் தெரிவித்தார். அவர்களும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் அதற்கு இசைந்து அனுமதி தந்தார்கள்.

அதன்பின், கம்பர் நேராகக் காட்டுமன்னார்கோவிலுக்குச் சென்று, நமது ஆசாரியர் நாதமுனிகளை விழுந்து வணங்கித் தன் அரிய காப்பியத்தை அரங்கேற்ற விரும்பும் எண்ணத்தை வெளியிட்டார். நாதமுனிகளும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து, கம்பரின் இராமாயணப் பாடல்களை மிக நயம்பட வாசித்துப் பார்த்து, அவர்தம் கவித்திறனை உகந்து பாராட்டி, அங்கீகாரப் பத்திரத்தை ஓலை நறுக்கில் எழுதிக் கொடுத்தார்.

கம்பர் அந்த அங்கீகார ஓலையினைத் தன் இரு கரங்களால் பக்திப் பூர்வமாகப் பெற்று, தன் தலைமேல் சுமந்து போற்றிக் கொண்டு திருவரங்கம் வந்தடைந்தார். அங்கே திருவரங்கத்துச் சான்றோர்களுக்கும் பெரியோர்களுக்கும் தண்டம் சமர்ப்பித்துத் தன் வருகையின் நோக்கத்தையும், நாதமுனிகளின் அங்கீகாரப் பத்திரத்தையும் அவையினரிடம் சமர்ப்பித்தார்...”

ஆனால், திருவரங்கத்தில் கூடியிருந்த திருவோலக்கத்தார்(8), “கம்பரே! நீர் வந்த காரியமும், உமது காப்பியப் பணியும் மிகவும் சீரியதே! எனினும், நாதமுனிகளிடம் நீர் அபிநந்தனப் பத்திரிகை பெற்று வந்திருந்தாலும், செந்தமிழிலும் வடமொழியிலும் பெரும் தேர்ச்சி பெற்று விளங்கும் 'தில்லைத் திருச்சிற்றக்கூடத்து மூவாயிரவர்'(5) என்ற தில்லை அந்தணர்களிடமிருந்தும் அபிநந்தனப் பத்திரிகை பெற்று வந்தால் மட்டுமே, நாம் இத்திருவரங்கத்திலே உமது இராமாயணத்தை அரங்கேற்ற அனுமதிக்க முடியும்!” என்று கூறிவிட்டார்கள்.

அவர்கள் உரைத்தபடியே, கம்பர் சற்றும் மனம் தளராமல் நேராகத் தில்லைத் திருச்சிற்றக்கூடம் நோக்கிப் புறப்பட்டார். அங்கே தில்லை மூவாயிரவர்களைக் கண்டு வணங்கி, தான் வந்த காரியத்தை விண்ணப்பித்து, தன் காப்பியப் பாடல்களைக் காட்டி ஆசி வேண்டினார். ஆனால் அவர்களோ, “கம்பரே! மூவாயிரவராகிய நாங்கள் அனைவரும் ஒன்றாகக் கூடும் ஒரு நன்னாளில் தான், நீர் புதிதாகப் பாடிய பாசுரங்களைக் கேட்டு ஆராய்ந்து அபிநந்தனப் பத்திரிகை வழங்குவது வழக்கம். நாங்கள் எப்போது ஒன்றாகக் கூடுகிறோமோ, அப்போது தான் உமது காரியம் நிறைவேறும்!” என்று உரைத்துவிட்டனர்.

இவ்வாறாக ஆண்டுகள் குமர் இருந்து போயின(பல வீணே கடந்து போயின). கம்பர் தில்லையிலேயே தங்கித் தவம் கிடந்தார். நான்கு ஆண்டுகள் கழிந்த பின்பும், தில்லை மூவாயிரவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடும் காலம் வாய்க்கவில்லை. கம்பர் மிகவும் மனம் தளர்ந்து போனார். பசி, தாகம் மறந்து பத்து இருபது பட்டினி கொள்ளும்(ஏங்கிய நிலை) உருகிய மனநிலைக்கு ஆளாகி, தில்லைத் திருச்சிற்றக்கூடத்து ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளின் திருவடிகளையே தியானித்தவாறு அலைந்தார். ஒரு நாள் இரவு, பசி மயக்கத்திலும் சோர்விலும் தளர்ந்து, அக்கோவிலின் ஒரு மண்டபத் தூணில் சாய்ந்துகொண்டே நித்திரையில் ஆழ்ந்தார்.

அன்று இரவு, கவிஞரின் துயர் துடைக்கும் திருச்சிற்றக்கூடத்துக் கோவிந்தராஜப் பெருமாள் கம்பரின் கனவில் எழுந்தருளி, “கம்பனே! கவலை கொள்ளாதீர். நாளை விடியற்காலையில் மூவாயிர அந்தணர்களின் தலைவனுடைய மூத்த குமாரன் பாம்பினால் தீண்டப்பட்டு இறப்பான். அந்தத் துயரமான தருணத்தில் மூவாயிரவர்கள் அனைவரும் சடங்குகளுக்காக ஒன்றாகக் கூடுவார்கள். அச்சமயம் நீர் அங்கே சென்று, நீர் பாடிய இராமாயணத்தின் நாகபாசப் படலத்தில் உள்ள, கருடனின் வருகையை (கருட கமனம்) வருணிக்கும் பாடல்களை எடுத்துப் பாடுவீராக!” என்று கூறி மறைந்தார்.

மறுநாள் விடியலில், பெருமாள் உரைத்தபடியே அங்கே பெரும் துயரம் நிகழ்ந்தது. பாம்பு தீண்டித் தலைவனின் மகன் இறந்து கிடக்க, தில்லை மூவாயிரவர்கள் அனைவரும் அளவற்ற சோகத்துடன் அங்கே ஒன்று கூடினர். அப்போது, பெருமாளின் திருவாக்கின்படி அங்கே சென்ற கம்பர், சபையின் நடுவே நின்று, நாகபாசப் படலத்துப் பாடல்களை நெஞ்சுருகப் பாடத் தொடங்கினார். கருடனின் திவ்யமான வருகையை வர்ணிக்கும் அப்பாடலின் அதிர்வுகள் அங்கே பரவியபோது, இறந்த அச்சிறுவன் நீண்ட உறக்கத்திலிருந்து மெல்ல விழிப்பது போல, உயிர்பெற்றுத் துள்ளி எழுந்தான்!

அங்கே கூடியிருந்த தில்லை அந்தணர்கள் அனைவரும் இந்த அற்புதத்தைக் கண்டு, கம்பரின் தெய்வீகக் கவிப்புலமையையும் பக்திப் பெருக்கையும் வியந்து போற்றினர். உடனே, அவர்தம் இராமாயணப் பாடல்கள் சிலவற்றை உகந்து கேட்டு, அவர்தம் நெஞ்சாரப் பாராட்டி, கம்பருக்குத் தங்களின் அபிநந்தனப் பத்திரிகையை வழங்கிச் சிறப்பித்தனர்.

கம்பர் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் அந்த ஓலை நறுக்கைப் பெற்றுக்கொண்டு, மீண்டும் திருவரங்கத்திற்குப் புறப்பட்டார். அங்கே நாதமுனிகளைக் கண்டு, தில்லை மூவாயிரவர்கள் வழங்கிய அபிநந்தனப் பத்திரிகையை அவரிடம் சமர்ப்பித்தார். அதைப் படித்த நாதமுனிகள் கம்பரை மெச்சிப் பாராட்டி, இராமாயணத்தை அரங்கேற்றுவதற்குரிய நல்ல சுபமுகூர்த்த நாளைத் தேர்ந்தெடுத்தார். அரங்கேற்றம் நிகழப்போகும் அந்தச் சுபச் செய்தியும் பத்திரிகையும் திருவரங்கத்துச் சான்றோர்களுக்கும், அடியவர்களுக்கும், முக்கியமான மேலோர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அரங்கேற்றத்திற்காகத் திருவரங்கத்து மேட்டழகிய சிங்கர் சந்நிதிக்கு முன்புறமுள்ள மண்டபத்தில் எழிலார்ந்த மேடை ஒன்று அமைக்கப்பட்டது. வாழை மரங்கள், மாவிலைத் தோரணங்கள், கமுகு தோரணங்கள் என்று அரங்கேற்றத் திண்ணை விழாக்கோலமாகக் காட்சியளித்தது. அரங்கேற்றத் தினத்திற்கு முந்தைய நாள் மாலை, கம்பர் பக்திப் பூர்வமாகத் திருவரங்கத்துப் பெரிய பெருமாளின் சந்நிதிக்குச் சென்று, தான் எழுதிய இராமாயண ஓலைச்சுவடிகளை அரங்கனின் திருவடிகளில் சமர்ப்பித்து, “அரங்கனே! இந்த அரங்கேற்றம் எவ்விதத் தடையுமின்றி நல்லபடியாக நிறைவேறத் திருவருள் புரிய வேண்டும்!” என்று உருகிப் பிரார்த்தித்தார்.

அந்தச் சமயம், அர்ச்சகரின் மூலமாகத் திருவரங்கப் பெருமாள், “கம்பனே! நீர் இராம காவியம் பாடினீர், சரி. ஆனால், நம் சடகோபனைப் பாடினையோ?” என்று வினவினார்.

அதைக் கேட்ட கம்பநாட்டாழ்வார் தன் பிழையை உணர்ந்து நடுங்கினார். உடனே காரிமாறனான நம்மாழ்வாரின் திருவடிகளைத் தன் நெஞ்சில் தொழுது வணங்கி, “வேதங்கள் நான்கையும் திராவிடத் தமிழ் வேதாந்தமாக அருளிச்செய்த சடகோபரே! அடியேனின் சிற்றறிவில் எழுந்தருளி அருள் புரிவீராக!” என்று வேண்டிக் கொண்டார்.

பின்னர், தன் நெஞ்சில் பிரவாகமாய் உதித்த சடகோபர் அந்தாதியின் அந்த முதல் பாசுரத்தை, கண்கள் பனிக்க, நாத்தழுதழுக்கப் பாடினார்:

வேதத்தின் முன் செல்க மெய் உணர்ந்தோர் விரிஞ்சன் முதலோர்
கோதற்ற ஞானக் கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக் கடல் எங்கள் தென் குருகூர்ப் புனிதன் கவி ஓர்
பாதத்தின் முன் செல்லுமே தொல்லை மூலப் பரஞ்சுடரே

ஆதி மூலமான அந்தப் பரஞ்சுடர் எம்பெருமான் நாராயணன், வேதங்களைக் கடந்து அவற்றுக்கு அப்பால் முன்னே செல்லட்டும்! சிறந்த தத்துவங்களை உணர்ந்த முனிவர்களும், பிரம்மன் முதலான தேவர்களுமாகிய எல்லோருடைய குற்றமற்ற ஞானக் கொழுந்தை விடவும் அவன் கடந்து முன்னே செல்லட்டும்! ஆனால், குணங்களைக் கடந்த எல்லையற்ற ஞானக் கடலாக விளங்கும் எங்கள் தென் குருகூர் நம்பியான நம்மாழ்வாரின் புனிதமான பாசுரத்தின் ஓர் அடியைக் கடந்து அவனால் முன்னே செல்ல முடியுமோ? முடியாது! அந்தப் பரம்பொருளே ஆழ்வாரின் தமிழ்ப் பாசுரத்திற்குத்தான் கட்டுப்பட்டு நிற்கிறான்!” என்று கம்பர் இந்தப் பாசுரத்தின் உன்னதப் பொருளை பாடி உருகி நின்றார்.
பிறகு அதை தொடர்ந்து அந்தாதியாய் நூறு திவ்யமான பாடல்களைப் பாடி முடித்தார்.

கூடவே இருந்த அவர்தம் சீடர்கள், கம்ப பாடப் பாட அவற்றை உடனுக்குடன் ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொண்டனர். கம்பர் அந்த உன்னத நூலுக்கு ‘சடகோபர் அந்தாதி’ என்று திருநாமமிட்டு, அந்த ஓலைச்சுவடிகளைத் திருவரங்க நாதனின் திருவடிகளிலே சமர்ப்பித்து வணங்கினார். திருவரங்கனும் மிகவும் உகந்து, கம்பருக்குத் தீர்த்தப் பிரசாதம், மாலை முதலிய மரியாதைகளுடன் அனுப்பிவைத்தார்.

கம்பர் மனம் குளிர்ந்து, தான் பாடிய சடகோபர் அந்தாதி ஓலைச்சுவடிகளைத் தன் இராமாயண ஓலைச்சுவடுகளின் மீது வைத்து, அழகிய பட்டுத் துணியால் பத்திரமாகச் சுற்றி, அதனைத் தன் தலைமீது சுமந்துக்கொண்டு, பக்திப் பெருக்குடன் திருவரங்கக் கோவிலை வலம் வந்து வணங்கினார்.

மறுநாள் விடிந்தது. அரங்கேற்ற மண்டபத்தில் நாதமுனிகளும், திருவரங்கத்து மற்ற சான்றோர்களும், சாஸ்திர சம்பன்னர்களும் கம்பீரமாக வீற்றிருந்தார்கள். கம்பர் மகா சபைக்குள் பிரவேசித்து, முதலில் ஸ்ரீரங்கநாச்சியாரான ரங்கநாயகித் தாயாரை வணங்கி, பின்னர் அங்கு கூடியிருந்த பெரியோர்களையும் அடியார்களையும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி நின்றார்.

குறித்த நல்ல நேரம் வந்தவுடன், நாதமுனிகள் கம்பனை அன்போடு அழைத்து, “செந்தமிழ்ச் செல்வரே கம்பனே! நீர் உமது இராமாயண அரங்கேற்றத்தைத் தொடங்கலாம்!” என்று தொடங்கி வைத்தார்.

கம்பரும் தான் எழுதிய திவ்யமான ஓலைச்சுவடிகளைப் பொற்பீடத்தில் வைத்து, நம்மாழ்வாரையும் நாதமுனிகளையும் தன் நெஞ்சாரத் தியானித்து, இராமாயணப் பாடல்களைக் கம்பீரமாகப் பாடத் தொடங்கினார். பாடல்களுக்குரிய செம்பொருளையும், ஆழமான குறிப்புப் பொருள்களையும் நயம்பட விளக்கி, அவர் தொடர்ந்து பல நாட்கள் மகா சபையிலே பிரசங்கித்தார்.

அவ்வாறு கம்பரின் கம்பீரமான குரலில் இராமாயணக் கதையமுதத்தை மக்கள் சுவைத்துக்கொண்டிருந்த வேளையிலே, ஒரு நாள் அவர் ‘இரணிய வதைப் படலத்தை’ப் பாடத் தொடங்கினார். அப்போது கம்பருக்கு வேரொரு புதிய பிரச்சனை வந்தது..

./சுஜாதா தேசிகன்
23.8.2026
பயணம் தொடரும்..

Comments

Popular posts from this blog

1 - வீரநாராயணபுரம்

24 - காலச் சுழற்சி

23 - வெட்டிவேர்