20 - தனியன் அமுது

 20 - தனியன் அமுது



மாலை நேரத்துச் செங்கதிர் வீச்சானது வீரநாராயணபுரத்து ஏரியின் அலைகளில் பட்டுத் தங்கத் துகள்களாய்ச் சிதறிப் பளபளத்துக்கொண்டிருந்தது. அந்திப் பொழுதின் மெல்லிய தென்றல் காற்று, சுற்றியிருந்த நனைந்த மண்ணின் நறுமணத்தோடும் துளசி நறுமணத்தோடும் நாதமுனிகளின் திருமாளிகையை வந்தடைந்தது.

அமைதி சூழ்ந்த அத்திருமாளிகையின் வெளிமுற்றத்தில், திருக்கண்ணமங்கை ஆண்டான் ‘பொலிக பொலிக’ என்ற பாசுரத்தின் ஆழமான உட்பொருளைப் பற்றிக் கேட்டவுடன், நாதமுனிகள் தன் கண்களை மூடிக்கொண்டு சற்று நேரம் ஆழ்ந்திருந்தார்.

தெய்வீகப் பேரொளி வீசும் அவருடைய முகத்தையே நோக்கி, திருக்கண்ணமங்கை ஆண்டான், புண்டரீகாக்ஷர், குருகைக் காவலப்பன் மற்றும் ஈஸ்வரமுனிகள் ஆகிய நால்வரும் அவர் திருவாக்கிலிருந்து பிறக்கப்போகும் அமுத மொழிகளுக்காக ஆவலோடு காத்துக்கொண்டிருந்தார்கள்.

நாதமுனிகள் தன் கண்களை மெதுவாகத் திறந்து, அவர்களைத் தன் அருகில் அழைத்து, பேரன்போடு உரைக்கத் தொடங்கினார்:

"அன்பான சீடர்களே! கலியுகத்தின் கொடுமைகளை விரட்டியடித்து, இவ்வுலகத்து ஆன்மாக்கள் யாவும் உய்யும் பொருட்டு, 'ஜகதாசாரியர்' ஒருவர் இப்புவியில் தோன்றப் போகிறார் என்று சொப்பனத்திலே நம்மாழ்வார் அடியேனுக்குக் காட்டியருளினார்!" என்று உரைத்தார்.

அப்போது அவர்தம் நெஞ்சில், நம்மாழ்வார் தமக்குத் திருவுள்ளம் உவந்து பிரசாதித்த ‘பவிஷ்யதாசாரிய திவ்யமங்கள விக்ரகம்’ தன்னிடம் இருக்கும் அந்த உன்னத ரகசியத்தை மட்டும் யாரிடமும் உரைக்காமல், தன் இதயத்துள் ரகசியமாகத் வைத்துக்கொண்டார்.

”அப்படியா!” என்று அளவற்ற வியப்புடன், அவரே முழுமுதற் பரம்பொருளோ என்று தோன்றும் வண்ணம் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த சீடர்கள் யாவரும், நெஞ்சம் உருகி நாதமுனிகளின் ஸ்ரீபாதங்களைப் பற்றிக்கொண்டனர்.

"ஒப்பற்ற தத்துவ ஞானியே! குருகூர் சடகோபனைச் சாக்ஷாத்தாகத் தரிசித்து அருள்பெற்ற தங்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம். முற்பிறவிகளில் அடியேங்கள் செய்த தவப்பயனாலேயே தங்களின் தெய்வீகச் சம்பந்தம் எங்களுக்குக் கிட்டியது!" என்று கூறி அவர்தம் திருவடிகளில் விழுந்து பணிந்தனர்.

அப்போது நாதமுனிகளின் திருக்குமாரரான ஈஸ்வரமுனிகள் எழுந்து, “தந்தையே! உங்களின் அனுமதியுடன்... உமக்குக் காட்சியளித்து, அரும்பெரும் பாசுரங்களையும் அவற்றின் சீரிய உட்பொருள்களையும் உம்மூலமாக நமக்கும் இந்த வையகத்திற்கும் வாரி வழங்கிய நம்மாழ்வாரைப் பற்றிச் சில நல் வார்த்தைகளை அடியேன் விண்ணப்பிக்க விரும்புகிறேன்” என்று பணிவுடன் கேட்டார்.

“ஈஸ்வரமுனியே! அதைக் கேட்க என் காதுகள் பேராவலோடு காத்துக்கொண்டிருக்கின்றன!” என்றார் நாதமுனிகள் உவகையுடன்.

உடனே ஈஸ்வரமுனிகள் தன் இரு கரங்களையும் கூப்பி, கண்களை மூடிக்கொண்டு நம்மாழ்வாரின் திருவடிப் பெருமைகளைத் தியானித்து உருகிப் பாடத் தொடங்கினார்:

"திருவழுதி நாடு என்றும் தென்குருகூர் என்றும்
மருவினிய வண்பொருநல் என்றும் - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே தெளிந்து"

என்று பக்திப் பெருக்குடன் பாடினார்.

நாதமுனிகள் மட்டற்ற மகிழ்ச்சியோடும் பேரானந்தப் பூரிப்போடும், “மிக அருமை ஈஸ்வரமுனி! 'திருவழுதி நாடே என்றும், அழகிய திருக்குருகூர் என்றும், நீராடுவதற்கு இனியதாய் விளங்கும் அழகிய தாமிரபரணி (வண்பொருநல்) நதி என்றும், அரிய வேதங்களின் சாரத்தையே அந்தாதித் தொடையால் திருவாய்மொழியாக அருளிசெய்த நம்மாழ்வாருடைய இரண்டு திருவடித் தாமரைகளையே எப்பொழுதும் தெளிந்த ஞானத்துடன் நினைப்பாயாக என் நெஞ்சமே!' என்று மிக உன்னதமாகப் பாடினாய்! இதனை இப்போதே ஓலைப்படுத்தி, ஆழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்களுக்கு முன்னால் 'தனியன் பாசுரமாகச்' சேர்த்துவிடுங்கள்” என்று கட்டளையிட்டார்.

பின்னர், தன் திருக்குமாரனை வாரி அணைத்து, “அப்பனே! உனக்கு விரைவில் ஒரு தெய்வீகத் திருக்குமாரன் அவதரிப்பான். அவனுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை நாச்சியார் வடமதுரை மைந்தனான கண்ணபிரானை அன்போடு அழைத்த அந்த ’யமுனைத்துறைவன்’என்னும் திருநாமத்தைச் சூட்டுவாயாக!” என்று தீர்க்கதரிசனத்தோடு ஆசீர்வதித்தார்.

இதைக் கேட்ட திருக்கண்ணமங்கை ஆண்டான் நாதமுனிகளை வணங்கி, ”ஆசாரியரே! நாச்சியார் திருமொழிக்கு அடியேன் ஒரு தனியன் பாசுரத்தை என் மனக்கோவிலில் வடித்திருக்கிறேன். தங்களின் அனுமதி கிடைத்தால் அதனைச் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

“ஆண்டானே! கோதை ஆண்டாளின் தமிழ் மாண்பைக் கேட்க என் ஆத்மா ஏங்குகிறது, பாடுங்கள்!” என்று நாதமுனிகள் கூற, ஆண்டான் பக்திப் பரவசத்துடன் பாடத் தொடங்கினார்:

"அல்லிநாள் தாமரைமேல் ஆரணங்கின் இன்துணைவி
மல்லிநாடு ஆண்ட மடமயில் - மெல்லியலாள்
ஆயர்குல வேந்தன் ஆகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு

கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் தென் திருமல்லி நாடி செழுங்குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய
சோலைக் கிளி அவள் தூய நற்பாதம் துணை நமக்கே"

என்று உருகிப் பாடினார்.

நாதமுனிகள் நெஞ்சம் குளிர்ந்து, “பாண்டிய மன்னன் தன் செங்கோல் அதிகாரத்தினால் நாட்டை ஆண்டான்; ஆனால், பக்திப் பிரவாகத்தின் சொல்வாக்கினால் மல்லிநாடு என்னும் ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆண்ட மடமயில் நம் கோதை! அவளுக்கு 'ஆண்டாள்' என்ற திருநாமமே அணுவளவும் பிசகாமல் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது! கண்ணபிரானுக்குத் தகுந்த நாயகியாகவும், பெரியாழ்வார் என்னும் வேயர் பெற்றெடுத்த ஞான விளக்ககாகவும் அவள் திகழ்கிறாள்!

அழகிய சுருண்ட சங்கான பாஞ்சஜன்யத்திடம், கண்ணனின் சிவந்த திருவாயின் சுவையைப் பற்றிக் கேட்டுப் பாடியவள்; தான் சூடிக்களைந்த மாலையைத் தென்னரங்கனுக்குச் சமர்ப்பித்த இத்தகைய மேன்மை உலகத்தில் கோதையைத் தவிர யாருக்கு வரும்? பெரியாழ்வாருடைய நந்தவனத்துச் சோலைக்கிளியான அந்த ஆண்டாள் நாச்சியாரின் தூய்மையும் இனிமையும் நிறைந்த திருவடிகளே நமக்கு என்றும் புகலிடம்! உன்னதமான இந்த இரு தனியன் பாசுரங்களையும் ஓலைப்படுத்தி, நாச்சியார் திருமொழிக்கு முன்னால் சாற்றிவிடுங்கள்!” என்று பேரானந்தத்துடன் நியமித்தார்.

பின்னர் நாதமுனிகள், ஆண்டானை உற்று நோக்கி, “ஆண்டானே! உமது திருக்கண்ணமங்கை திவ்யதேசக் திருக்கோவிலில் அழகிய மகிழ மரம் ஒன்று இருக்கிறது அல்லவா?” என்று வினவினார்.

“ஆம், இருக்கிறது!” என்று வியப்புடன் கூறினார் திருக்கண்ணமங்கை ஆண்டான்.

“நம்மாழ்வாருக்கு உகந்த மகிழ மரத்தின் தண்மையான நிழலிலே, ஆண்டாள் நாச்சியார் ‘தையொரு திங்களும் தரைவிளக்கித் தண்மண்டலமிட்டு மாசிமுன்னாள்’ என்று உரைப்பது போல... அங்கே எம்பெருமானே உமக்கு உபாயமாகத் திகழ, வேறு எவ்விதப் பயனும் கருதாமல், திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாளுக்குத் துளசி மற்றும் புஷ்பக் கைங்கரியங்களை எப்போதும் உகப்புடன் செய்துவருவீராக!” என்றார் நாதமுனிகள்.

நாதமுனிகள் குருகைக் காவலப்பனை நோக்கி, “ஆண்டான் பெரியாழ்வாரின் குலவிளக்கான கோதையைப் போற்றினார். உமது நெஞ்சக் கோவிலில் என்ன தனியன் பழுத்திருக்கிறது?” என்று கேட்க, குருகைக் காவலப்பன் நாதமுனிகளை வணங்கி, “அடியேன் நெஞ்சத்தில் அன்பும் ஆர்வமும் கொண்டு ஞானவிளக்கேற்றி, ‘திருக்கண்டேன்’ என எம்பெருமானைச் சாக்ஷாத்தாகத் தரிசனம் செய்த பேயாழ்வாரைப் பற்றி விண்ணப்பம் செய்யத் தங்களின் அனுமதி வேண்டும்” என்று வேண்டி நின்றார்.

நாதமுனிகள், “ஆவலோடு செவிமடுக்கக் காத்திருக்கிறேன்!” என்று கூற, குருகைக் காவலப்பன் பக்திப் பரவசத்துடன் பாடத் தொடங்கினார்:

"சீராரும் மாடத் திருக்கோவலூர் அதனுள்
காரார் கருமுகிலைக் காணப்புக்கு - ஓராத்
’திருக்கண்டேன்’ என்று உரைத்த சீரான் கழலே
உரைக்கண்டாய் நெஞ்சே! உகந்து"

என்று பாடி முடித்தார்.

நாதமுனிகள் மெய்சிலிர்த்து, “ஆஹா! அழகு பொருந்திய மாடங்களையுடைய திருக்கோவலூர் திவ்யதேசத்து இடைகழியிலே, கார்காலத்துக் கரிய மேகம் போன்ற உலகளந்த பெருமாளைச் சேவிப்பதற்காக, நெஞ்சாகிய உட்கண்ணாலே அநுபவித்துத் 'திருக்கண்டேன்' என்று திருவாய் மலர்ந்தருளிய சீர்மை பொருந்திய பேயாழ்வாரின் திருவடித் தாமரைகளை மகிழ்ந்து உரைத்த உமது உன்னதமான இந்தத் தனியன் பாசுரத்தை, மூன்றாம் திருவந்தாதியின் தொடக்கத்திலே சாற்றிவிடுங்கள்!” என்று நியமித்தார்.

காவலப்பன் அவரை வணங்கி நின்றபோது நாதமுனிகள், “மிகவும் பிரகாசமான யோக சாஸ்திரத்தின் உன்னத ரகசியங்களை, அடியேனின் பேரனான யமுனைத்துறைவனுக்கு நீ உபதேசம் செய்ய வேண்டும்!” என்று கட்டளையிட்டார்.

அச்சமயம், நாதமுனிகளின் இந்தத் தீர்க்கதரிசன உரைக்குச் சான்று பகர்வது போல, இயற்கையிலும் ஒரு பேரதிசயம் நிகழ்ந்தது. விண் நீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்கள் திரண்டு ஆகாசம் எங்கும் நீல நிறமாக மாறிக் கண்ணனை நினைவுபடுத்தியது. பலத்த மழை பெய்யப் போவதற்கான அறிகுறிகள் எங்கும் தென்பட்டன.

அந்தச் சமயத்தில், தூரத்திலே சோழ மன்னன் தன் அரசிகளுடன் மகிழ்ச்சியோடு பேசிச் சிரித்தபடி, மழை வருவதற்கு முன்னால் கங்கைகொண்ட சோழபுரம் நோக்கித் தன் குதிரையில் மிக வேகமாகச் சென்றுகொண்டிருந்தான்.

நாதமுனிகள் திடீரென்று எழுந்து, கைகளை உயர்த்திச் சோழ அரசனைத் துரத்திக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடத் தொடங்கினார்! அவர் ஓடிய அதே வேகத்தில் விண்ணைப் பிளந்து பலத்த மழை பெய்யத் தொடங்கியது.

./சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்..

அடிக்குறிப்புகள்:
(1)”திருவழுதி நாடு என்றும்..” நாதமுனிகளின் திருக்குமாரரான ஈஸ்வரமுனிகள், நம்மாழ்வாரின் பெருமைகளைப் போற்றிப் பாடி அருளிய திவ்யப் பிரபந்தத்தின் உன்னதமான முதல் தனியன் பாசுரமிது.

(2) ”அல்லிநாள் தாமரைமேல்” - திருக்கண்ணமங்கை ஆண்டான், ஆண்டாள் நாச்சியாரின் மாண்பையும், அவர்தம் சூடிக்கொடுத்த பெருமையையும் போற்றி நாச்சியார் திருமொழி பிரபந்தத்திற்கு அருளிசெய்த உன்னதமான தனியன் பாசுரங்கள் இவையாகும்.

(3) ”சீராரும் மாடத் திருக்கோவலூர்” - திருக்கோவலூர் இடைகழியில் பேயாழ்வார் எம்பெருமானை ஞானக்கண்ணால் தரிசித்து அருளிய "திருக்கண்டேன்" பெருமைகளைப் போற்றி குருகைக் காவலப்பன் அருளிய தனியன் பாசுரமிது

(4) மல்லி எனும் சிற்றூர் ஸ்ரீவில்லிபுத்தூரின் அருகில் உள்ளதே. வடபெருங்கோயிலுடையான் தற்போதுள்ள இடம் அடர்ந்த காடாய் இருந்த பகுதியாகும். மல்லியை இருப்பிடமாய்க்கொண்டு வில்லி, கண்டன் ஆண்டு வந்தனர். இவர்களின் தாயின் பெயர் மல்லி என்பாரும் உளர். தற்போதும் மல்லியில் ஒரு கிருஷ்ணன் கோயில் சிறப்பாய் உள்ளது. ஆடி மாதம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு திருத்தங்கால் அப்பன் வரும்போதும், திரும்புகாலிலும் இந்த திருக்கோயிலுக்கு எழுந்தருளுகிறார்

Comments

Popular posts from this blog

1 - வீரநாராயணபுரம்

24 - காலச் சுழற்சி

23 - வெட்டிவேர்