29 - அரங்கேற்றம்
29 - அரங்கேற்றம்
கம்பரின் கம்பீரமான குரலில் இராமாயணக் கதையமுதத்தை மக்கள் சுவைத்துக்கொண்டிருந்த வேளையிலே, ஒரு நாள் அவர் ‘இரணிய வதைப் படலத்தை’ப் பாடத் தொடங்கினார். அப்போது திருவோலக்கத்திலிருந்த சான்றோர்களில் சிலர் எழுந்து குறுக்கிட்டனர். “கம்பனே! நீர் பாடிய இந்த இரணிய வதை வர்ணனைகள் பக்திச் சுவையோடு மிக அழகாக இருந்தாலும், இது வால்மீகியின் மூல இராமாயணத்தில் இல்லாத பகுதியாயிற்றே! வால்மீகி முனிவர் எழுதாத ஒன்றை உமது இராமாயணத்தில் புகுத்துவது குற்றமல்லவா? இதனை நாம் எப்படி அரங்கேற்றத்தில் ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று ஆட்சேபம் தெரிவித்தார்கள்.
இதனைக் கேட்ட கம்பர் பணிவோடு கைகூப்பி, “பெரியோர்களே! அடியேன் இதனைத் திட்டமிட்டுப் பாடவில்லை. மூலத்தில் இல்லாவிட்டாலும், பிரகலாதனை விட அந்த நாராயண நாமத்தை வேறு யார் முழுமையாக அறிந்திருக்க முடியும்? ‘குலந்தரும் செல்வம் தந்திடும்... நலந்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று பாடிய நம் திருமங்கை ஆழ்வாரை விட, அந்த நாராயண நாமத்தின் உன்னதப் பெருமையைத் தமிழால் வேறு யார் இப்புவியில் பாடியிருக்க முடியும்? மற்ற ஆழ்வார்களைக் காட்டிலும் திருமங்கை மன்னன் நரசிம்மவதாரம் பற்றி அதிகம் பாடியவர், அவருடைய பாசுரங்கள் என் நெஞ்சில் அழுந்தி எதிரொலித்தது! நான் தினமும் நெஞ்சுருகி வணங்கும் அந்தப் பக்தப் பிரகலாதனின் தூய பக்திக்கும், நான் நெஞ்சாரக் காதலித்த கலியனின் ஈரத் தமிழின் பெருமைக்கும் மகுடம் சூட்டவே... எம்பெருமானின் திருவருளால் அடியேனின் நெஞ்சில் இக்கதை தானாகவே தோன்றி என் எழுத்தாணி மூலம் தமிழ் வடிவம் பெற்றது!” என்றார்.
ஆனால், திருவோலக்கத்தினர் அதனை ஏற்க மறுத்தனர். “நீர் சொல்வது உண்மையாகவே இருந்தாலும், முறையான வரலாற்று ஆதாரமில்லாத ஒன்றை எங்களால் காவியத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது!” என்று அவர்கள் பிடிவாதமாகக் கூற, அரங்கேற்றம் அப்படியே பாதியில் தடைப்பட்டு நின்றது.
கம்பர் செய்வதறியாது திகைத்தார். மனம் வருந்தித் நாதமுனிகளைப் நோக்கினார். நாதமுனிகள், ”கம்பனே கலங்க வேண்டாம்! ’தென் அழுந்தையில் மன்னி நின்ற அஞ்சனக் குன்றம் தன்னை அடியேன் கண்டுகொண்டேனே’ என்று திருமங்கை மன்னன் பாடிய உங்கள் ஊர் பெருமாளையும், உன் குருவான குருகூர் சடகோபனை தியனம் செய்!” என்றார்.
உடனே கம்பரும், இவர்களை மனதாரத் தியானித்து, நம்மாழ்வாரின் உன்னதமான,
“ஆடி ஆடி அகம் கரைந்து, இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும்
நாடி நாடி ‘நரசிங்கா’ என்று
வாடி வாடும் இவ்வாள்நுதலே!”
என்ற திருவாய்மொழிப் பாசுரத்தைத் தன் நெஞ்சில் இருத்தி வேண்டினார்.
“ஆழ்வாரே! இரணியன் தூணைத் தட்டியபோது பிரகலாதன் எங்கும் அலையவில்லை, தேடித் திரியவில்லை, வருந்தவும் இல்லை; அவனுடைய அசைக்க முடியாத நம்பிக்கையால் அந்தத் தூணிலிருந்து எம்பெருமான் நரசிம்மர் உடனே தோன்றித் தன் திவ்ய தரிசனத்தை நல்கினார் அல்லவா? அதுபோல, இன்று தவித்துக் கொண்டிருக்கும் அடியேனுக்கு நீ அருள் புரிய வேண்டும்!” என்று கண்ணீர் மல்கப் பிரார்த்தித்து, ’..திசை பிளந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்!’ என்ற வரிகளை அவர் பாடிய அந்த நொடியில், சபையிலிருந்த அனைவரும் நடுங்கும்படியாக, மேலே எழுந்தருளியிருக்கும் மேட்டழகிய சீரிய சிங்கம் (நரசிம்ம மூர்த்தி) அறிவுற்றுத் தீ விழித்து வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டது போல, சந்நிதியிலிருந்து எழும்பிய பிரம்மாண்டமான 'ஹாஹா!' என்ற பெரும் சிரிப்பொலி, பிரகாரங்கள் எங்கும் எதிரொலித்துச் சிங்கத்தின் கர்ஜனையாகக் கேட்டது!
அந்தத் தெய்வீகக் கர்ஜனையைக் கேட்ட திருவோலக்கத்தார் அனைவரும் பயபக்தியுடன் நடுநடுங்கி நின்றனர். “ஆகா! மேட்டழகிய சிங்கப் பெருமாளே கம்பரின் காவியத்தை உகந்து தன் ஒப்புதலைத் தந்துவிட்டார்! இது அந்தப் பரம்பொருளின் திருவுள்ளத்திற்கு உகந்த மகா காவியம்!” என்று ஒருசேர ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள்.
கம்பரும் நாதமுனிகளின் உன்னதமான அனுமதியைப் பெற்று, இரணிய வதைப் படலத்தை மிக விரிவாக உரைத்துப் பிரசங்கித்தார். நாதமுனிகளும் கம்பரின் ஒப்பற்ற தமிழ்ப்புலமையைக் கண்டு மகிழ்ந்து, அவரை அன்போடு குளிரக் கடாட்சித்து, வைணவ உலகம் போற்றும்வண்ணம் ’கம்பநாட்டாழ்வார்’ என்ற உன்னதப் பட்டத்தை அதே சபையில் சூட்டி அருளினார்!
அதன் பின்னர், நாதமுனிகள் கம்பரின் தமிழ்ப் பாக்களின் சிறப்பை உணர்ந்து, திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த 'திருவேழுக்கூற்றிருக்கை'யின் இறுதியிலும், 'சிறிய திருமடல்' மற்றும் 'பெரிய திருமடல்' ஆகியவற்றின் இறுதியிலும் கம்பநாட்டாழ்வாரின் உன்னதமான சில தனிப்பாடல்களைச் சேர்த்துப் பாடும்படியாக வகுத்தருளினார். மேலும், பங்குனி உத்திரத் திருநாளிலும், ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாருக்குத் திருமஞ்சனம் நடைபெறும் உன்னதச் சமயங்களிலும் கம்பரின் ‘சடகோபர் அந்தாதி’ பாசுரங்களை ஓதிப் போற்ற வேண்டும் என்றும் நாதமுனிகள் நியமித்தார்.
பழமையான கிணற்றைத் தோண்டித் தோண்டி, அதனுள்ளே புதைந்திருக்கும் நீர் ஊற்றைக் கண்டுபிடித்து, அதனைச் செப்பனிட்டு, தாகத்தால் தவிக்கும் மாந்தர்களுக்கு நன்னீராகத் தருவது போல... கால ஓட்டத்தில் மண்ணுக்குள் மறைந்து கிடந்த ஆழ்வார்களின் திவ்ய அருளிச்செயல்களை நாதமுனிகள் மீட்டெடுத்து, இந்த உலகிற்குப் பக்தித் தாகத்தைத் தீர்க்கும் அமுதத் தண்ணீராக வாரி வழங்கியது மட்டுமல்லாது, கம்பநாட்டாழ்வாரின் இராமாயணக் காவியத்திற்கு ஒரு பெரும் ஆலமரமாக, நிழல் தரும் கற்பக விருட்சமாக இருந்து, திருவரங்கப் பெருநகரில் அதற்கு மாபெரும் ஏற்றத்தை நாதமுனிகள் பெற்றுத் தந்தார்” என்று உய்யக்கொண்டார் கூறி முடிக்க, அதனைக் கேட்டுக்கொண்டிருந்த மணக்கால் நம்பியும் பிற சீடர்களும் பக்திப் பேரானந்த வெள்ளத்தில் திளைத்தனர்.
இவ்வாறாகச் சில காலம் கடந்து சென்றது.
ஒரு நாள், உய்யக்கொண்டார் தன் சீடர்களுக்குப் பெரியாழ்வாரின் உன்னதப் பாசுரங்களை அன்போடு காலக்ஷேபம் சாதித்துக்கொண்டிருந்தார்.
அப்போது,
”பறவையேறு பரம்புருடா! நீ என்னைக் கைக்கொண்டபின்
பிறவி என்னும் கடலும் வற்றிப் பெரும்படமாகின்றதால்!”
என்ற பாசுரப் பகுதியை விவரிக்கும்போது, அவர் அதனையே இருமுறை பக்திப் பெருக்குடன் கூறி நிறுத்தினார். அவர்தம் தாமரைக் கண்கள் பேரொளியோடு மலர்ந்தன. எம்பெருமான் தனக்கு விடுத்த அழைப்பினை உணர்ந்த அவர், தனக்குத் 'திருநாட்டுக்குச்' (பரமபதத்திற்குச்) செல்லும் காலம் நெருங்கிவிட்டது என்பதை அறிந்துகொண்டார்.
சில நாட்களிலேயே அவருடைய திருமேனி பெரும் சோர்வடைந்தது. ஒரு நாள் அவர் தன் அணுக்கச் சீடரான மணக்கால் நம்பியைத் தன் அருகில் அழைத்து, “மணக்கால் நம்பியே! அடியேனுக்குப் பரமபதத்தின் திவ்யமான படிக்கட்டுகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன!” என்று அமைதியாக உரைத்தார்.
அதனைக் கேட்ட மணக்கால் நம்பி பேரதிர்ச்சியும் அளவற்ற சோகமும் அடைந்தார். தன் ஆசாரியனை இழக்கப் போகிறோமே என்ற மிகவும் விசனப்பட்டு, கண்கள் பனிக்க நெஞ்சு உருகி, எதுவும் செய்யமுடியாமல் தவித்தார்.
அடிக்குறிப்புகள்:
(1) கம்பன் வழிபட்ட பெருமாள் ஆமருவியப்பன்தான். அந்தக் கோயிலில் கம்பனுக்கும் அவர் மனைவிக்கும் கற்சிலைகள் உள்ளன.
அச்சிலைகளுக்கு அர்ச்சகர் ஆராதனமும் உண்டு.
(2) ஆமருவியப்பன் பெருமாள் சந்நிதியில் வலது பக்கம் பிரகலாதனும் காட்சி அளிப்பதைக் காணலாம்.
(3)அபிநந்தனப் பத்திரிக்கை - பாராட்டுக் கடிதம்
(4) திருவோலக்கம் - அடியார்கள் மற்றும் சான்றோர்களுடன் கூடியிருக்கும் சபை.
(5)மும்மையாயிரவர் - தில்லை வாழ்ந்த அந்தணர்கள். இவர்களைத் தில்லை மூவாயிரவர் என்பர். ’தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணி மணி ஆசனத்து இருந்த அம்மான் தானே’ என்று பாடியிருக்கிறார்.
(6) கம்பர் தன் இராம காவியத்தில் பல இடங்களில் ஆழ்வார்களின் பாசுரக் கருத்துக்களையும், சொற்பிரயோகங்களையும் கையாண்டுள்ளார் என்பது இலக்கிய உண்மையாகும். (கம்பனில் ஆழ்வார்கள் சாயல் பி.ஸ்ரீ; கம்பனும் ஆழ்வார்களும், ம.பெ.சீனிவாசன்)
Comments
Post a Comment