34 - ஆளவந்தார்
34 - ஆளவந்தார்
யமுனைத்துறைவர் புன்னகையோடு, “நிச்சயமாக முடியும் அரசே! லௌகீமாகவும், தர்ம சாஸ்திர விதிகளின்படி அடியேன் அந்த மூன்று வாக்கியங்களையும் மறுத்துக் காட்டுகிறேன், கேட்பீராக!” என்று தொடர்ந்தார்.
“முதலாவது வாக்கியம்: வாழையானது தன் வாழ்நாளில் ஒரேயொரு குலையை மட்டும் ஈன்றுவிட்டு மடிவது போல, இந்த வித்துவானின் தாயும் இவரொருவரை மட்டுமே பெற்றெடுத்துள்ளார். உலக வழக்கிலே, 'ஒரு பிள்ளையானது பிள்ளையல்ல, ஒரு மரமும் தோப்பல்ல' என்று சொல்லுவது உண்டு அல்லவா? அப்படி ஒரேயொரு வாரிசைப் பெற்றெடுத்த தாயை, உலக வழக்கிலே ‘வாழை மலடு’ என்றே வேடிக்கையாகக் குறிப்பிடும் மரபு உண்டு. அதனால் ஒரேயொரு புதல்வனைப் பெற்ற தாயை உலக வழக்கின்படி மலடி என்று மறுத்து உரைக்கலாம்!
அதுமட்டுமல்லாமல், ‘அபுத்ரஸ்ய கதிர்நாஸ்தி’ (புத்திரன் இல்லாதவனுக்கு நற்கதி இல்லை) என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. உலகத்தில் தாய் தந்தையர் தங்களுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்றே தவமிருந்து பிள்ளையைப் பெற்றெடுக்கிறார்கள். அப்படியிருக்க, மகனாகப் பிறந்தவன் பெற்றோருக்கு நற்கதியளிக்கும் நற்குணங்கள் இல்லாதவனாய் வீணே வாழ்வைக் கழித்தால், அவர்களுடைய எண்ணம் ஈடேறுவதில்லை. பெற்றோரின் நற்கதிக்கு உதவாமல், வீண் ஆணவத்தோடும் தருக்கச் செருக்கோடும் அலைந்து சான்றோர்களைத் துன்புறுத்தும் ஒரேயொரு மகனைப் பெற்றவள், சாஸ்திரப்படி புத்திரப் பேறு அற்றவளாகவே கருதப்படுகிறாள்! நீரும் பத்து மாதம் உமது தாயின் வயிற்றில் கிடந்து அவளுக்குப் பெருந்துன்பத்தைத் தந்து(1), இன்று நல்லோர்களுக்குப் பெருஞ்சுமையாய் விளங்குகிறீர்! எனவே, உமது தாய் நற்பேறு பெற்ற அன்னையருடன் சேர மாட்டாள் என்பதால், அவளும் மலடியே!” என்றார்.
சபையில் உள்ள அனைவரும் இந்தச் சிறுவனின் லௌகிக, சாஸ்திர ஞானத்தைக் கண்டு வியக்க, யாமுனன் கம்பீரக் குரலில், “இரண்டாவது வாக்கியம்: ‘அறநெறி வழுவாமல் இந்தச் சோழ நாட்டை ஆளும் நம் சக்கரவர்த்தி தர்மவான்’ அல்ல! எப்படி என்றால், நமது தர்ம சாஸ்திரங்களில் உள்ள உன்னத நீதி வாசகம் ஒன்று கூறுவதைக் கேளும்: மக்கள் செய்யும் பாவங்கள் அரசனுக்கும், அரசன் செய்யும் பாவம் அரச புரோகிதனுக்கும் செல்கிறது! அரசன் தன் தேசத்து மக்கள் பாபக் காரியங்களைச் செய்யாமல் காக்கக் கடமைப்பட்டவன். அதில் அவன் தவறி, பாவங்கள் பெருக அனுமதிப்பானாகில், அவனும் பாபத்தில் பங்கு பெறுகிறான். அப்படிப் பாவத்திற்கு ஆளாகும் அரசனுக்குக் காலமறிந்து, சுட்டிக்காட்ட வேண்டியது அரச புரோகிதனின் கடமை. அப்படிச் செய்யவில்லை என்றால், அது அந்த பாபம் புரோகிதனின் தலையில் வந்து விழுந்துவிடும். உம்மைப் புரோகிதனாக வைத்துக்கொண்டு உமது அறிவுரையக் கேட்டு அதன்படி நடக்கும் அரசன் எப்படி தர்மவானாக இருக்க முடியும்! அதுமட்டுமல்ல, நம் சோழ நாட்டு அரசன் சர்வ தேசத்தையும் ஆளும் சக்கரவர்த்தி இல்லை! பக்கத்து நாட்டு அரசன் படையெடுத்து வருவதைப் பார்க்கிறோம். அதனால் நம் அரசன் சக்கரவர்த்தியும் இல்லை! தர்மவானும் இல்லை!” என்றார்.
அடுத்து என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் எல்லோரும் காத்துக்கொண்டிருக்க, யாமுனன், “மூன்றாவது வாக்கியம்: ‘அரசியார் பதிவிரதை அல்லள்’!” என்று கூறி, தன் விளக்கத்தைக் கூற ஆரம்பித்தார்.
“திருமணத்தின் போது அக்னி சாட்சியாகத் தாரை வார்த்துக் கொடுக்கும் வரை, ஒரு பெண்ணானவள் கர்ம காண்ட விதிகளின்படி முதலில் சந்திரனுக்கும், பின்னர் கந்தர்வனுக்கும், அதன் பிறகு அக்னிக்கும் சமர்ப்பிக்கப்படுகிறாள். பின்னரே அவள் தன் கணவனுக்குரியவளாகிறாள். அதனால் மிக நுட்பமான சாஸ்திர விதிகளின்படி, அவளுக்குப் பதிவிரதா தர்மத்தில் சற்றே பங்கம் ஏற்படுகிறது என்றோம்!
அதுமட்டுமன்றி, கணவன் உரைக்கும் வார்த்தைகளுக்கு மறுவார்த்தை கூறாமல் உடன்படுவதே பத்தினி தர்மத்தின் இலக்கணம். ஆனால், இன்று இந்த மகா சபையிலே, ‘யாமுனன் வெல்வான்’ என்று அரசனின் வார்த்தைகளுக்கு மாறாக பந்தயம் கட்டி வாதாடியதன் மூலம், நமது பேரரசி கற்பின் இலக்கணத்திலிருந்து சற்றே மாறுபட்டு நின்றுள்ளார் என்று மறுத்துரைக்கலாம் அல்லவா?” என்று கூறினார்.
இதனைக் கேட்ட சோழ மன்னன், யாமுனனின் அசாத்திய சாஸ்திரப் புலமையையும் மதிநுட்பத்தையும் கண்டு அப்படியே ஸ்தம்பித்து நின்றான்! இத்தகைய அருமையான கேள்விகளையும், அவற்றுக்கான விடைகளையும், தாமுரைத்த வாக்கியங்களைத் தாமே மறுத்து நிறுவும் அபாரச் சக்தியையும் இந்தப் பாலகன் எங்ஙனம் பெற்றார் என்று சபையில் உள்ளவர்கள் வியந்தார்கள்.
திரைக்குப் பின்னே இருந்த அரசியார், ஆக்கியாழ்வான் தன் பெற்ற தாய்க்கு ஒரேயொரு பிள்ளை என்ற ரகசியத்தை, அவனது ஜாதகத்தைக் கூடப் பார்க்காமல் யாமுனன் எவ்வாறு துல்லியமாகக் கண்டறிந்தார் என்று எண்ணி ஆச்சரிய வெள்ளத்தில் மூழ்கினாள்! அதே சமயம் அரசன், அந்தப்புரத்தில் நடந்த விஷயம் இந்தப் பாலகனுக்கு எப்படி தெரிந்தது என்று வியந்துகொண்டு இருந்தார்.
மகா நடுக்கத்தில் ஆழ்ந்திருந்த ஆக்கியாழ்வான், தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, தலையிரக்கங் கொண்டு நிலத்தைத் தன் கால் விரல்களால் கீறிக் கொண்டிருந்தான்.
"பந்தய விதிகளின்படி, வெற்றி பெற்ற யாமுனன் தோற்றுப் போன ஆக்கியாழ்வானது தலையின் மீது ஏறி மிதித்துத் தன் வெற்றியைப் பிரகடனப்படுத்த வேண்டும்" என்று நடுவர்கள் உரைத்தபோது... யமுனைத்துறைவர் எல்லையற்ற கருணையோடு எழுந்து நின்று, “சான்றோர்களே! பண்டிதர்களே! ஒரு மாபெரும் சோழ அரசனால் ராஜ புரோகிதர் என்று அபிமானிக்கப்பட்டு, வயோதிகராகவும் வித்துவானாகவும் விளங்கும் ஆக்கியாழ்வானின் மாண்பினைக் காக்க வேண்டியது நமது எல்லோருடையக் கடமையாகும். சிறியார் பெரியார் என்கிற வரம்பினைக் கடந்து அடியேன் அவர் தலையிலே ஏறி மிதிப்பது தர்ம நெறியாகாது. எனவே, தாடநம் செய்ய மாட்டோம்!” என்று கனிவோடு உரைத்தார். யாமுனரின் இந்த குணத்தையும் பக்குவத்தையும் கண்ட ஆக்கியாழ்வான் வெட்கித் தலைகுனிந்து, யாமுனனின் கால்களில் விழுந்து வணங்கினான்.
சோழ மன்னனும் பெருமிதம் பொங்க, “ஆளவந்தாரே! உமது இணையற்ற புலமையின் பயனாக, நாம் அரசிக்கு உரைத்தபடியே சோழ தேசத்தின் சரிபாதி ராஜ்யத்தை உமக்கு இன்றே பரிசாகத் தந்தோம்!” என்று கூறிச் செங்கோலை அசைத்துப் பிரகடனம் செய்தான்! மந்திரிகள் அரசன் உரைத்த சாசனத்தைச் செப்பேட்டில் எழுதிச் சமர்ப்பித்து, நல்ல சுப முகூர்த்தத்திலே ஆளவந்தாரை அரியாசனத்தில் அமர்த்தி மகுடாபிஷேகம் செய்து வைத்தார்கள்.
இவ்வாறாகப் பாதிச் சோழ தேசத்திற்கு அரசராக முடிசூட்டப் பெற்ற இளவரசர் ஆளவந்தாரை வரவேற்று உபசரிக்க, அந்தப் பெருநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
அச்சமயம், நம் வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நம் உய்யக்கொண்டார் தமக்கு இட்ட ஆணைப்படி, நாதமுனிகளின் பேரனான யமுனைத்துறைவனைக் கண்டடைய வேண்டும் என்ற மாபெரும் இலட்சியத்தோடு மணக்கால் நம்பி கங்கைகொண்ட சோழபுரத்து வீதிகளுக்குள் வந்து சேர்ந்தார்.
அங்கு வந்த மணக்கால் நம்பி, அந்தப் பெருநகரமே அல்லோலகல்லோலப்பட்டு அலாதியானதொரு மகிழ்ச்சிக்கடலில் திளைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். எங்கு நோக்கினும் மங்கள ஓசைகளும், இல்லங்களின் வாயில்களில் மாவிலைத் தோரணங்களும், எழில்மிகு வண்ணக் கோலங்களும், வாழைக் குலைகளும் கட்டி அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். வாயிலில் தோரணம் கட்டிக்கொண்டிருந்த ஒருவரிடம், எதற்காக இந்த மாபெரும் விழாக்கோலம் என்று புரியாமல் மணக்கால் நம்பி மெல்ல வினவினார். “ஐயா! இன்று இந்த ஊரில் என்ன இத்தனை விசேஷம்? ஏன் மக்கள் அனைவரும் இத்தனை உவகையோடு இருக்கிறார்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதர் வியப்போடு, “என்ன ஐயா! உமக்கு விஷயம் தெரியாதா? நமது காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த ஒரு பன்னிரண்டு வயது அந்தணச் சிறுவன், மகா ஆணவத்தோடு விளங்கிய அரச குரு ஆக்கியாழ்வானைத் தன் வாதப் போரிலே தோற்கடித்து வென்றுவிட்டான்! அதனால் உளம் மகிழ்ந்த நமது சோழ மன்னர், அவனுக்குத் தன் நாட்டின் சரிபாதி ராஜ்யத்தையே பரிசாக அளித்து அரசனாக்கியுள்ளார்! அந்தப் பாலகனுக்கு 'ஆளவந்தார்' என்ற உன்னதப் பெயரையும் நம் அரசியார் சூட்டியுள்ளார்! இதோ, நமது புதிய இளவரசர் ஆளவந்தார் இப்போதுதான் தன் பரிவாரங்களுடன் அரண்மனை நோக்கி ஊர்வலமாகத் திரும்பிக் கொண்டிருக்கிறார்!” என்றார்.
அச்சமயம், “ஆளவந்தார் வாழ்க! நம்மை ஆளவந்த அரசர் வாழ்க!” என்ற கோஷங்கள் திசையெங்கும் முழங்கின. அது யானைகளின் பிளிறல் சத்தமோ என்று தெருக்களிலே கூடியிருந்த மக்கள் அனைவரும் பரபரப்போடு சாலையின் ஓரங்களுக்கு நகர்ந்து வழிவிட்டார்கள். தூரத்தில், மங்கள வாத்தியங்கள் முழங்க, பட்டத்து யானையின் மீது சகல ராஜ மரியாதைகளுடனும், வெண்கொற்றக் குடையும் சாமரங்களும் வீசப்பட, கம்பீரமாக மேலே வீற்றிருந்தார் அந்தப் பாலகன். அவர்தம் இல்லத்தரசியான குலமகளும், சுற்றமும் உடன் வர, புதிய இளவரசராகக் காட்சியளித்தார் அவர்.
சாலையோரம் நின்றிருந்த ஒரு பெருமரத்தின் அடியில் நின்றவாறே மணக்கால் நம்பி, அந்த எழிலார்ந்த அற்புதக் காட்சியைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். கருணை பொழியும் தெய்வீகத் திருமுகம், மார்பிலே மின்னுகின்ற முப்புரிநூல் (பூணூல்), கண்களிலே மெய்ஞ்ஞானப் பேரொளி துலங்க, கம்பீரமாக அரியாசன யானையின் மீது வீற்றிருந்த அந்த அந்தணச் சிறுவன்தான்... தான் தேடி வந்த பெருமை பொருந்திய நாதமுனிகளின் பேரனான யமுனைத்துறைவர் என்பதை உணர்ந்துகொள்ள மணக்கால் நம்பிக்குச் சற்று நேரமானது!
அதே வேளையில், தன் ஆசாரியர் உய்யக்கொண்டார் தமக்குத் தன் அந்திமக் காலத்தில் உரைத்த இறுதி வார்த்தைகள் அவர்தம் நினைவலைகளில் மோதின: 'நம்பியே! யமுனைத்துறைவனுக்குச் சரியான பருவம் வந்த பிறகு, எப்படியாவது அவரை நமது சீடராக்கி, சகல ரகசியங்களையும் உபதேசித்து, பவிஷ்யதாசாரியர் விக்ரகத்தையும் அவரிடம் ஒப்படைப்பீராக!' என்ற அந்த ஆணை அவர்தம் நெஞ்சில் எழுந்தது.
'என் ஆசாரியனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டிய காலம் கூடி வந்துவிட்டது! ஆனால், இப்போது பாதி ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக, சகல அரச போகங்களிலும் செல்வச் செருக்கிலும் மூழ்கி வாழப்போகும் இந்த இளவரசனை அடியேன் எவ்வாறு அணுகுவேன்? அவர் எவ்வாறு உலகியலைத் துறந்து நம் வைணவ பக்தி நெறிக்குத் திரும்புவார்?' என்று மணக்கால் நம்பியின் நெஞ்சம் தவித்தது.
ஆயினும், தன் ஆசாரியனின் ஆசீர்வாதத்தின் மீதும், திருவரங்கப் பெருமானின் திருவருள் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மணக்கால் நம்பி, ஒரு தீர்க்கமான முடிவுடன், ஊர்வலம் சென்று கொண்டிருந்த திசைக்கு நேர் எதிர்த்திசையில் அமைந்துள்ள காட்டுமன்னார்கோவிலின் வீரநாராயணப் பெருமாள் திருக்கோவிலை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார்.
./சுஜாதா தேசிகன்
28.8.2026
பயணம் தொடரும்…
அடிக்குறிப்புகள்:
பெரியாழ்வார் திருமொழி (4.4.2) பெற்றதாய் வயிற்றினைப் பெருநோய் செய்வான் பிறந்தானே’
பயன்பட்ட நூல்: ஆளவந்தார் வைபவம், ஶ்ரீஉ.வே ஆரங்காசாரி, திருச்சித்திரக்கூடம், குருபரம்பரை.
Comments
Post a Comment