19 - பெரியமுதலியார்
19 - பெரியமுதலியார்
காவிரி நதியின் வடகரையிலே, சோழ வளநாட்டின் மிக உன்னதமான கலைக்கோவில்களும், அடர்ந்த தென்னஞ்சோலைகளும், கமுகுத் தோட்டங்களும் சூழ்ந்த எழில்மிகு நகரமாகத் திகழ்ந்தது திருக்குடந்தை என்னும் கும்பகோணம்.
திருவரங்கத்திலிருந்து கால்நடையாகவே கிளம்பிய புண்டரீகாக்ஷனும், குருகைக் காவலப்பனும் எம்பெருமானின் கல்யாண குணங்களைப் பேசி அநுபவித்தவாறே நடந்து, அத்திருக்குடந்தைப் பெருநகரிற்குள் நுழைந்தனர். வான்முட்டி நிற்கும் கோபுரங்களும், வேத கோஷங்களும், காவிரி ஆற்றின் தண்ணென் காற்றும் அவர்களின் நடைப்பயணக் களைப்பை முற்றிலும் போக்கியது.
அவர்கள் நேராக, வைணவத் திவ்யதேசங்களுள் உன்னதமானதும், தேர் வடிவக் கருவறையைக் கொண்டதுமான ஸ்ரீசாரங்கபாணி என்னும் ஆராவமுதன் திருக்கோவிலுக்குள் சென்றனர். அங்கே எம்பெருமானின் உத்தான சயனக் திருக்கோல எழில்மிகு சேவையைக் கண்டு மெய்மறந்து நின்றனர்.
அவர்கள் ஆராவமுதன் சந்நிதியில் பெருமாளைச் சேவிக்கும்போது, அக்கோவில் அர்ச்சகர், “திராவிட ஸ்ருதி தர்சகாய நம:” என்று திருக்குடந்தை ஆராவமுதனை 'திராவிட வேதம் காட்டிய பெருமாள்' என்று நாமாவளியில் போற்றி வழிபட்டார். அப்போது, “நாங்கள் அந்தத் திராவிட வேதத்தைத் தேடிக்கொடுத்த நாதமுனிகளைத்தான் தேடிச் செல்கிறோம்!” என்று இருவரும் ஆராவமுதனை மெய்மறந்து வணங்கினார்கள்.
அப்போது அவர்களின் பின்புறத்திலிருந்து ஒரு கம்பீரமான, அதே சமயம் பக்தி ததும்பும் குரல் கேட்டது:
“மதிப்பிட முடியாத பெருமையுடையவர்களே! குணவான்களே! புண்ணியத்தின் கொழுந்தைப் போன்று பூமியில் தோன்றிய ஒப்பற்ற நாதமுனிகளை நாடித்தான் அடியேனும் செல்கிறேன். அவர் என் தாய்மாமன்!”
திரும்பிப் பார்த்தபோது, அங்கே பட்டு வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் துறந்து, எளிய ஸ்ரீவைஷ்ணவத் திருக்கோலத்துடன் நின்றுகொண்டிருந்தார் திருக்கண்ணமங்கை ஆண்டான்!
ஒருவரையொருவர் குசலம் விசாரித்து, பக்திப் பரவசத்துடன் அளவளாவிக்கொண்டே மூவரும் காவிரி பாயும் சோழ வளநாட்டின் பசுமைச் சோலைகள் வழியே நடந்து, இறுதியாக வீரநாராயணபுரமான காட்டுமன்னார்குடியை அடைந்தனர். அங்கே அவர்கள் கண்ட காட்சி, அவர்களைப் பெருவியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது!
நாதமுனிகளின் இல்லத்து வாசலில், சோழப் பேரரசின் மாமன்னன் நாதமுனிகளை வணங்கி விடைபெற்று வெளியே வந்து, தன் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரம் திரும்பத் தயாரானான். அவனது கம்பீரமான பட்டத்து சவரிக் குதிரை அங்கே தயாராக நின்றது. அதன் கழுத்தில் இருந்த வெள்ளி மணிகள் ஜல்ஜல் என்று ஒலியெழுப்பின. மன்னன் குதிரை ஏற முற்பட்ட சமயம், அவனது குதிரைச் சேவகன் சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தான். அதை மன்னர் கவனிக்கவில்லை. இதைக் கண்ட நாதமுனிகள், சட்டென்று தன் தோளைக் கொடுத்து மன்னனைக் குதிரையின் மீது ஏற்றிவிட்டார். ஏறிய பிறகு குனிந்து பார்த்த மன்னன், அதிர்ச்சியில் அப்படியே அலறிக்கொண்டு கீழே குதித்தான்!
“ஐயா! தவ முனிவரே! தாங்கள் இந்தக் காரியம் செய்யலாமா? உங்கள் தூய்மையான ஆசாரியத் தோள் மீது என் கால்கள் பட்டு, என் பெயருக்கும் சோழக் குலத்திற்கும் பேரழிவும் களங்கமும் அல்லவா ஏற்பட்டுவிட்டது!” என்று நெஞ்சுருகி கண்களில் நீர் ததும்ப நாதமுனிகளின் பாதங்களில் விழுந்தான்.
ஆனால் நாதமுனிகளோ, “அப்பா! நீ சோழ மன்னனா? உன்னைப் பார்த்தபோது எனக்குச் சக்கரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமபிரான் காட்டிற்குப் புறப்படக் குதிரை ஏறுகிறான் என்று தோன்றிற்று! அதனால் என்னை அவனது விசுவாசமிக்க குதிரைச் சாரதியான சுமந்திரன் என்ற எண்ணத்தில் தோள் கொடுத்தேன்!” என்றார் மெய்மறந்த நிலையில்.
மன்னன் கண்களில் நீர் முட்ட, “நாதமுனிகளே! சற்றுமுன் தாங்கள் கூறிய குலசேகராழ்வாரின் வைபவத்தில், இராமாயணக் கதையைக் கேட்டு அதில் மூழ்கி, இராமபிரானுக்கு உதவி செய்யத் தன் பெரும்படையையே அனுப்ப உத்தரவிட்ட ஆழ்வாரைப் போலவே நீங்களும் தெய்வப் பக்தியில் திளைக்கிறீர்கள். உமது பேரருளும் ஆசிகளும் எமக்கு வேண்டும்!” என்று மீண்டும் விழுந்து வணங்கிவிட்டுப் புறப்பட்டான் சோழ மன்னன்.
இந்த உன்னதக் காட்சியைக் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த புண்டரீகாக்ஷரும் மற்றவர்களும் நாதமுனிகளின் திவ்யமான பாதங்களில் விழுந்து, “ஆசாரியரே! உங்களை நெஞ்சார வாரிப் பருக வந்திருக்கிறோம். அடியேங்களை உங்களது சீடர்களாக ஏற்றுக்கொண்டு உய்விக்க வேண்டும்!” என்று வேண்டி நின்றார்கள்.
நாதமுனிகள் மிக மகிழ்ந்து அவர்களைத் தூக்கியெடுத்து, அவர்களுக்குப் பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து வைத்துச் சீடர்களாக ஆட்கொண்டார். ஆசாரியரான நாதமுனிகளிடம் புண்டரீகாக்ஷர், குருகைக் காவலப்பன், திருக்கண்ணமங்கை ஆண்டான் மற்றும் நாதமுனிகளின் திருக்குமாரரான ஈஸ்வரமுனிகள் ஆகிய நால்வரும் திருமந்திரம், மந்திரார்த்தம், ஆழ்வார்களின் அருளிச்செயல்கள், அவற்றின் ஆழமான உட்பொருள்கள் முதலியவற்றை உபதேசமாகப் பெற்றுவந்தனர்.
ஒரு நாள் நாதமுனிகளைச் சந்திக்க ஒருவர் வந்தார். வந்தவர் நாதமுனிகளை வணங்கி, “ஐயா! வங்கீபுரத்து ஆச்சியின் குமாரத்தியான அரவிந்தப்பாவையை உங்கள் அனுமதியுடன் அவர்தம் பிறந்த வீட்டிற்கு அழைத்து வரும்படி என்னை அனுப்பிவைத்தார்” என்றார்.
நாதமுனிகளும் அவரிடம் நலம் விசாரித்துவிட்டு, தமது முதன்மைச் சீடரான புண்டரீகாக்ஷருடன் தமது தேவியாரான அரவிந்தப்பாவையைத் தன் பிறந்த வீட்டிற்கு அனுப்பிவைத்தார். புண்டரீகாக்ஷரும் அரவிந்தப்பாவையை வங்கீபுரத்து ஆச்சியின் இல்லத்தில் பத்திரமாக விட்டுவிட்டுத் திரும்ப வீரநாராயணபுரம் செல்ல விடைபெற்றார்.
ஆச்சி அவரிடம், “தீர்த்தமும் பிரசாதமும் அருந்திவிட்டுப் போகலாமே?” என்று உபசரிக்க, “உங்கள் நியமனப்படிச் செய்கிறேன்” என்றார் புண்டரீகாக்ஷர்.
ஆனால், ஆச்சியின் இல்லத்தில் இருந்த சில குறும்பர்கள், “இவருக்கு இல்லத்தினுள் வைத்துப் போஜனமிடுவது உசிதமில்லை” என்றும், “இவருக்கு இட்ட அன்னத்தின் எஞ்சிய பகுதியை நாம் புசிப்பது தகாது” என்றும் தவறாகப் பேசினர்.
ஆச்சியும் அவர்களின் அறியாமையான பேச்சைக் கேட்டு, புண்டரீகாக்ஷரை வெளி முற்றத்தில் உட்காரவைத்து, முதல் நாள் தண்ணீரில் சேர்த்து வைத்திருந்த பழைய அன்னத்தைக் (நீராகார அமுது) கொடுத்தார்.
புண்டரீகாக்ஷர் எவ்வித வருத்தமுமின்றி, மாறாகத் தன் ஆசாரியாரின் திருமாளிகையோடு தொடர்புடைய விசேஷப் பிரசாதம் என்ற உகப்புடன் அந்த அன்னத்தை மிகவும் உகந்து அருந்தினார். அவர்களிடம் விடைபெற்று வீரநாராயணபுரம் வந்து, நாதமுனிகளின் திருவடிகளை வணங்கி நின்றார்.
நாதமுனிகள் புண்டரீகாக்ஷரின் திருமுகத்தில் பொங்கிய பேரொளியைக் கண்டு, “புண்டரீகாக்ஷரே! உமது பெயருக்கு ஏற்றாற்போல் உமது கண்களில் தெரியும் இந்தத் தெய்வீகச் சந்தோஷத்திற்குக் காரணமென்ன? சென்ற இடத்தில் நன்கு விசாரித்தார்களா? மரியாதையுடன் உபசரித்தார்களா?” என்று வினவினார்.
“ஆச்சியின் திருமாளிகை வெளிமுற்றத்தில், தண்ணீரில் சேர்த்த நல்லதோர் பழைய சோற்றை நான் மிக்க சந்தோஷத்துடன் அமுது செய்தேன். புண்ணியத்தின் தவப்பயனை அடியேன் அங்கே பெற்றேன். 'போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே!' என்று தொண்டரடிபொடியாழ்வார் அருளியபடி, பாகவதர்கள் உண்டு மீதமிருந்த பாவனமான அன்னத்தை உண்பது நமக்கு நற்கதியடையச் செய்யும் என்று தாங்கள் அடியேனுக்கு உபதேசித்தீர்கள் அல்லவா? அங்கே அதைப் பெறும் பாக்கியம் பெற்றேன்!” என்று புண்டரீகாக்ஷர் பதிலளித்தார்.
இதைக் கேட்ட நாதமுனிகள் மகிழ்ச்சியடைந்து, ஆனந்தக் கண்ணீருடன் அவரைக் கட்டித்தழுவிக்கொண்டார்.
இந்த விபரங்களை வங்கீபுரத்து ஆச்சி கேள்விப்பட்டு மிகவும் வருந்தினார். தன் இல்லத்திலுள்ளவர்களின் அறியாமையான செயலை நொந்துகொண்டு, உடனடியாக வீரநாராயணபுரத்திற்கு ஓடிவந்தார். நாதமுனிகளிடமும் புண்டரீகாக்ஷரிடமும் தன் குற்றத்தை மன்னித்து, அபராதத்தைப் பொறுத்தருளும்படி வேண்டினார். நாதமுனிகளும் அவரைத் தேற்றி விடை கொடுத்தார்.
நாதமுனிகள் தம் சீடர்களுக்கு ஆழ்வார்களின் திவ்யப் பாசுரங்களை திவ்யதேச வரிசையில் உபதேசித்துக்கொண்டிருந்த ஒரு நாளில், நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் வரும் ‘பொலிக பொலிக’ என்ற பாசுரம் வந்தது.
அப்போது திருக்கண்ணமங்கை ஆண்டான் எழுந்து நின்று, “ஆசாரியரே! ‘பொலிக பொலிக’ என்ற இப்பாசுரத்தின் உன்னதமான உட்பொருள் யாது?” என்று பணிவுடன் வினவினார்.
./சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்....
அடிக்குறிப்புகள்:
1. திராவிட ஸ்ருதி தர்சகர்: திருக்குடந்தை ஆராவமுதப் பெருமாள், நாதமுனிகளுக்கு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைக் கண்டடைவதற்கான வழிகாட்டியாக (திராவிட வேதம் காட்டிய பெருமாள்) விளங்கியதால் "திராவிட ஸ்ருதி தர்சகாய நம:" என்ற நாமாவளி இன்றும் இத்தலத்தில் அர்ச்சனையின் போது சேவிக்கப்படுகிறது.
2. பெரியமுதலியார் - நாதமுனிகள்(பெரிய தலைவர்)
3. திருவெள்ளறையில் அவதரித்த இப்புண்டரீகாக்ஷனே பிற்காலத்தில் நாதமுனிகளின் முதன்மைச் சீடராக விளங்கி, 'ஸ்ரீஉய்யக்கொண்டார்' என்று போற்றப்பட்டவர்.
Comments
Post a Comment