48 - ஆகாசகங்கை
48 - ஆகாசகங்கை காவிரியும் கொள்ளிடமும் இரு கரங்களை நீட்டித் தழுவிக்கொண்டிருக்கும் திருவரங்கத்தின் மடியில், ஆளவந்தார் மீண்டும் காலடி எடுத்து வைத்த நாள் அது. தென்னாட்டுத் திருப்பதிகளையெல்லாம் சேவித்து, வழிநெடுகிலும் ஆழ்வார் பாசுரங்களால் அரங்கனை அனுபவித்தவாறு வந்தாலும், 'பவிஷ்யதாசாரியரை இன்னும் காணவில்லையே' என்ற ஏக்கத்தையும், நாதமுனிகளின் யோக ரகசியத்தையும் பெற முடியவில்லையே என்ற குறையையும் நெஞ்சின் ஆழத்தில் புதைத்துக்கொண்டுதான் அவர் திரும்பியிருந்தார். அந்த ஏக்கங்களை அரங்கனின் திருவடிகளில் இறக்கி வைத்துவிட்டு, பெரிய பெருமாளின் சந்நிதி, தாயின் மடியைப் போல அவரை அணைத்துக்கொண்டது. அவர் திருவரங்கம் திரும்பிய சில நாட்களிலேயே, குருகைக் காவலப்பனைக் காணச் சென்றிருந்த சில சீடர்கள் ஆளவந்தார் மடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களின் முகத்தில் களை இல்லை. "ஸ்வாமி! நாங்கள் சென்று சேர்ந்தபோது, உங்களை வரச் சொன்ன அதே நாளில் குருகைக் காவலப்பன் நாதமுனிகளின் திருவடிகளை அடைந்துவிட்டார்!" என்று நா தழுதழுக்கச் சொன்னார்கள். இதைக் கேட்டதும் ஆளவந்தாரின் நெஞ்சம் கனத்தது. அந்தத் துயரை வெல்வதற்காகவே,...