42 - ஸ்தோத்ர ரத்னம்
42 - ஸ்தோத்ர ரத்னம்
திருவரங்க மாநகரில் ஆளவந்தாரின் ஆசிரமத்தில், நாள்தோறும் சிஷ்யர்களும் அடியார்களுமாகப் பெருந்திரளான கூட்டம் புடைசூழ, அந்த இடமே ஒரு மாபெரும் திருவிழா போலக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.
அந்தத் திரளான கூட்டத்திற்கு ஒரு விசேஷமான காரணமும் இல்லாமலில்லை! பெற்ற கன்றுக்குத் தாய் பசுவானது ஆசையும் அன்பும் பெருகப் பாலைச் சுரந்து அளிப்பது போல, ஆளவந்தார் பிறருக்குத் தாம் செய்வது ஓர் உபகாரம் என்று எண்ணாமல், தன் வாழ்நாளின் பாக்கியமாகவே நினைத்து, ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவைப் பாசுரங்களின் உன்னதமான அமுத ரசத்தைப் பருகக் கொடுத்துக் கொண்டிருந்தார்!
பேரார்வத்தோடு அங்கே என்ன நடைபெறுகிறது என்று காண, நேயர்களை அன்போடு அழைக்கிறோம்!
ஆளவந்தாரின் கணீரென்ற குரல் ஆசிரமத்தின் மண்டபம் முழுவதும் எதிரொலித்தது:
“...நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானிடம் உள்ளே செல்வதற்கு அனுமதி வேண்டி ஆயர்பாடிச் சிறுமிகள் நின்றனர். இவர்களுக்குக் கண்ணபிரான் ஒருவனே நாயகனேயன்றி, கோயில் காப்பவனோ அல்லது நந்தகோபனோ நாயகன் அல்லவே! அப்படியிருக்க, இவர்களை 'நாயகன்' என்று ஆயர் சிறுமிகள் அழைத்தது எதனால்?
சாத்திரங்கள் உரைக்கும் கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் போன்ற எவையுமே அந்தத் திருவரங்கனை அடைவதற்கு நேரடிச் சாதனங்கள் இல்லை! எம்பெருமானை அடைவதற்கு ஒரே சாதனம், அவனுடைய அடியார்களை முன்னிட்டுக்கொண்டு (புருஷகாரமாக வைத்து), அவனையே உபாயமாகப் பற்றிச் சரணடைவதே ஆகும்! (1)
உள்ளே சயனத்தில் இருப்பவன் சாதாரணமானவனா? (2) வேதங்களாலும் அளவிட முடியாமல் அறியப்படாத ஆயிரம் திருவடிகளையும், சிவந்த பொன்மயமான அழகிய கிரீடங்களைத் தரித்த ஆயிரம் திருமுடிகளையும், வனமாலை துலங்கும் ஆயிரம் திருத்தோள்களையும், கருணை பொழியும் ஆயிரம் திருக்கண்களையும் தன்னிடத்தே கொண்ட சுடராழியான அவன், தன் அடியவர்கள் தன்னைக் கண்டு களிப்பதற்காகவே திருவரங்கக் கோயிலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ளான்! இன்றைக்கும் நாம் அந்த அழகியமணவாளனைக் கண்டு களிக்க முடிகிறதே! 'பத்துடை அடியவர்க்கு எளியவன், பிறர்களுக்கு அரிய வித்தகன்' அன்றோ நம் அரங்கன்!”
- என்றவர், மெய்சிலிர்த்துத் தம் கண்களை மூடிக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்தார்.
குழுமியிருந்த சிஷ்யர்களும் அடியார்களும் அசைவற்ற சிலை போல மௌனமாக ஆளவந்தாரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து, ஆளவந்தார் மெதுவாகத் தம் கண்களைத் திறந்து மெல்லிய புன்னகையுடன் தொடர்ந்தார்..
“மிகவும் விலைமதிப்பற்ற ரத்தினக் கல் ஒன்றை ஒருவர் நமக்கு அன்பளிப்பாகக் கொடுத்தால், அந்த ரத்தினத்தின் மதிப்பைப் புரிந்து கொள்ளக் கொள்ள, அதன் மீதுள்ள ஈடுபாட்டைக் காட்டிலும்... 'இவ்வளவு உயர்ந்த ரத்தினத்தை நமக்கு அளித்தாரே!' என்று அதனை நமக்கு அளித்தவர் மீது அன்றோ அன்பும் மதிப்பும் பெருகும்! (3)
அதுபோல, அடியேனுக்குத் 'திருவரங்கன்' எனும் விலைமதிப்பற்ற உன்னத ரத்தினத்தை என் பாட்டனாரான நாதமுனிகள், உய்யக்கொண்டார் மற்றும் மணக்கால் நம்பி மூலமாக அளித்துள்ளார்!
நாதமுனிகள்... நினைக்க முடியாத ஆச்சரியமான எம்பெருமானின் திருவருளால் எளிதாகக் கிடைத்த ஞான, வைராக்கியங்களின் பெருங்குவியல்! பகவானையே எப்போதும் மனனம் செய்து, ஆழ்ந்த பகவத் பக்தி எனும் பெருங்கடலாகவே திகழ்ந்தவர்! என் பாட்டனாரான நாதமுனிகளை எவ்வளவுதான் வீழ்ந்து வணங்கினாலும் என் மனம் திருப்தியடைவதில்லை! ஒவ்வொரு முறையும் இந்த அழகியமணவாள ரத்தினத்தை நினைக்கும் பொழுதும், சேவிக்கும் பொழுதும், என் பாட்டனார் மீது எனக்கு இருக்கும் அன்பும் மதிப்பும் பல மடங்கு பெருகுகின்றது!
ஆயர்பாடி கோபிகைகள் கண்ணபிரானை அடைவதற்கு நந்தகோபரை முன்னிட்டது போல, நாம் எம்பெருமானை அடைய என் பாட்டனார் நாதமுனிகளைப் பற்றுவதுதானே முறை!”
- என்றவர், நெஞ்சில் மடைதிறந்த வெள்ளமெனப் பொங்கி எழுந்த உணர்ச்சியினால்:
"நமோ சிந்த்யாத்புதா க்லிஷ்ட ஜ்ஞான வைராக்ய ராஸயே |
நாதாய முநயே அகாத பகவத் பக்தி ஸிந்தவே ||" (4)
என்ற திவ்யமான வடமொழிச் சுலோகத்தைச் சிலிர்ப்போடு அருளிச்செய்தார்!
ஆசாரியனின் திருவாக்கிலிருந்து வந்த அந்த உன்னதமான சுலோகம் வெளிப்பட்ட மறுகணமே, அருகில் அமர்ந்திருந்த பெரிய நம்பி, தம் இடையில் சொருகியிருந்த ஓலையையும் எழுத்தாணியையும் சட்டென்று எடுத்து, அச்சொற்கள் நழுவிவிடாதபடி கவனமாகச் செதுக்கிச் சேமித்துக்கொண்டார்!
பெரிய பெருமாளின் பேரனுபவத்தில் திளைத்த ஆளவந்தார், அன்றைய காலக்ஷேபத்தை நிறைவு செய்துவிட்டு, தம் சீடர்களுடன் பெரிய பெருமாளைச் சேவிப்பதற்காகக் கோயிலை நோக்கிப் புறப்பட்டார்.
கருட மண்டபத்தைக் கடந்து, நாழிகேட்டான் வாசலை அடைந்து, கொடிமரத்தின் முன்னே சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார். அவ்வாறு சேவித்து எழுந்தபோது, தம் மார்பில் படிந்த திருக்கோயிலின் திவ்யமான புழுதியைத் தட்டிக்கொள்ளாமலேயே, காயத்ரி மண்டபத்தை வந்தடைந்தவர் அப்படியே உறைந்து நின்றுவிட்டார்!(5)
ஆளவந்தார் ஏன் திடீரென்று நின்றுவிட்டார் என்று புரியாமல், பின்னால் வந்த சீடர்களும் அப்படியே ஸ்தம்பித்து நின்றார்கள்.
அங்கே அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் திகைக்க வைத்தது!
ஒரு பெண்மணி, கழுத்தும் கப்படமுமாய்(6), கண்ணும் கம்பலையுமாக, கண்கள் நீ வழிய, நிறையக் கவலையோடு பெரிய பெருமாளைப் பிரதக்ஷிணம் செய்து கொண்டிருந்தாள்! அவளது முகத்தில் ஏதோ பேரழிவு போன்றதொரு கவலை நிழலாடுவதை ஆளவந்தார் கூர்ந்து கவனித்தார். அப்பெண்மணி ஆளவந்தார் நிற்பதைக் கூடக் கவனியாமல், திருவுண்ணாழித் திருச்சுற்றைப் பல முறை சுற்றிச் சுற்றி வந்தாள்.
பல முறை சுற்றி வந்து பெருமாளைச் சேவித்துவிட்டு வெளியே செல்லும் போதுதான், அங்கே நின்று கொண்டிருக்கும் ஆளவந்தாரை அப்பெண்மணி கவனித்தாள். உடனே தன் புடவையின் தலைப்பால் பொங்கி வந்த கண்ணீரை ஒற்றிக்கொண்டு, ஆளவந்தாருக்குக் கைகூப்பி வணங்கிவிட்டு அங்கிருந்து விரைந்து சென்றாள்.
ஆளவந்தார் உடனே பெரிய பெருமாளைச் சேவிப்பதற்காக உள்ளே செல்லவில்லை! காயத்ரி மண்டபத்தின் ஒரு தூணின் அருகில் சற்று நேரம் அமைதியாகக் நின்றுவிட்டார். பின்னர், நிதானமாகப் பெரிய பெருமாளைச் சேவிப்பதற்காகக் கருவறைக்குள் நுழைந்தார். அரங்கனைக் கண்குளிரச் சேவித்துவிட்டு, தீர்த்தம், சடகோபம், திருத்துழாய் பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு பிரகாரத்தின் வழியே வெளியே வந்தார்.
அங்கே நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்மணி, பெரிய பெருமாளின் திவ்ய தரிசனத்திற்கு முன்னே தம் ஆசாரியனைச் சற்று நேரம் காக்க வைத்துவிட்டாளே என்று தெய்வவாரியாண்டானுக்குச் சற்று வருத்தம் ஏற்பட்டது!
அவர் தயங்கியவாறே கேட்டுவிட்டார் - “ஆசாரியரே! திருக்கோயிலுக்குத் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவராகச் சேவித்து முடித்துச் சென்ற பிறகுதான் நாம் சேவிக்க வேண்டும் என்றால், அது மிகவும் கடினமானது அல்லவா? அப்பெண்மணி சேவித்துவிட்டுச் செல்லும் வரை தாங்கள் ஏன் காத்துக்கொண்டு இருந்தீர்கள் என்பதே அடியேனின் மனதில் எழும் வினா!” என்றார்.
ஆளவந்தார் மென்முறுவலுடன், “ஆண்டானே! அந்த அம்மையாருக்கு மனதில் ஏதோ தீராத கவலை! அவளது கண்கள் பொழிந்த கண்ணீரே அதனை நமக்கு உணர்த்தியது அல்லவா? தன் மனக்குறையைப் பெரிய பெருமாளிடம் முறையிட்டு நிறைவேற்றித் தரும்படி, அவள் பல முறை பிரதக்ஷிணம் செய்து உருகிப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது இடையில் நாம் சென்றால்... அவளைப் போல அடியேனுக்கும் பெருமாளிடம் ஏதேனும் கேட்கும் சுயநலக் குணம் வந்துவிட்டால் என்ன செய்வது? அதனால்தான் சற்று ஒதுங்கி நின்றேன்!” என்றார்.
“அப்படி என்றால், அவள் சேவித்துவிட்டுச் சென்ற பிறகும் உடனே செல்லாமல், மேலும் சற்று நேரம் அந்தத் தூணின் அருகில் காத்துக்கொண்டு நின்றீர்களே... அதற்கான காரணம் என்னவென்று அடியேன் தெரிந்துகொள்ளலாமா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் ஆண்டான்.
“அந்த அம்மையார் பிரார்தித்துவிட்டுச் சென்ற மறுகணமே நாம் பெருமாளின் முன்னே சென்று நின்றால்... 'ஓஹோ! இவர்களும் ஏதோ தனக்காக வேண்டிய கேட்கத்தானே வந்திருக்கிறார்கள்!' என்று பெரிய பெருமாள் நினைத்துவிட்டால் என்ன செய்வது? அதனால்தான் சற்றுத் தாமதித்தேன்!” என்றார் ஆளவந்தார்.
தெய்வவாரியாண்டான் அதிசயித்து, “உண்மைதான் ஸ்வாமி! உத்தம வைஷ்ணவர்கள் எப்போதுமே எம்பெருமானிடம் தனக்கென எதையும் வேண்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், இன்றைக்கு தாங்கள் பெரிய பெருமாளின் முன் நின்று மிகவும் மனம் உருகி வேண்டிக் கொண்டீர்களே?” என்று மற்றொரு கேள்வியைக் கேட்டார்.
ஆளவந்தார் ஆசாரியக் கருணையோடு, “அந்த அம்மையாரின் மனக்குறையைத் தீர்த்து வைக்க வேண்டும் பெரிய பெருமாளே! என்றுதானே நாம் வேண்டிக்கொண்டோம்! வேறு ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா ஆண்டானே?” என்று புன்னகையுடன் வினவியவாறே, ஆசிரமத்தை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார்.
அகில உலகத்தையும் தன் அறிவாலும் கருணையாலும் ஆளவந்தவர், விரைவில் திருவனந்தபுரம் நோக்கி இதே போலத் தளர்விலாத அதிவேக நடை பயணத்தை மேற்கொள்ளப் போகிறார் என்று அப்போது அவரோ, அவருடைய சீடர்களோ அறிந்திருக்கவில்லை!
./சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்...
அடிக்குறிப்புகள்:
(1) திருப்பாவை ஐதீகம்.
(2) பிள்ளை பெருமாள் ஐயங்காரின் திருவரங்கத்து மாலை.
(3) திருப்பாவை ஐதீகம்.
(4) ஆளவந்தார் அருளிய ஸ்தோத்திர ரத்தினம் முதல் ஸ்லோகம். அது உருவான விதம் கற்பனை.
(5) வார்த்தா மாலை 394 வார்த்தையில் விவரிக்கப்பட்ட சம்பவம். ஆண்டான் கேள்விகள் கற்பனை.
(6) கழுத்தும் கப்படமுமாய் என்றால் சேலையைக் கழுத்தைச் சுற்றி அடக்கமாக அணிந்து கொண்டு இருக்கும் நிலை.
Comments
Post a Comment