37 — பாதாள அறை
37 — பாதாள அறை
ஆளவந்தாரிடம் விடைபெற்றுக்கொண்ட மணக்கால் நம்பி, வீரநாராயணபுரம் திருக்கோவிலை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார்...
வீரநாராயண ஏரியிலிருந்து வீசிய குளிர்ந்த காற்று மணக்கால் நம்பியின் திருமேனியை இதமாக வருடிச் சென்றது. கோயிலுக்குள் வந்த நம்பி, காட்டுமன்னார் சந்நிதியின் முன்பு கைகூப்பி, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக உருகி நின்றார்.
தன் ஆசாரியர்களின் நெடுங்கால ஆசையும் நாதமுனிகளின் கட்டளையும் நிறைவேறும் காலம் கூடிவந்துவிட்டது என்று அவருடைய உள்ளம் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தது. எல்லையற்ற நன்றி உணர்வோடு ’காட்டும்’ மன்னாரைக் கண்ட நம்பியின் திருவாக்கிலிருந்து, கலியன் உருகிப் பாடிய ‘திருநெடுந்தாண்டக’ப் பாசுரச் சொற்கள் உதிர்ந்து, எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் அர்ச்சனைப் பூக்களைப் போல் வந்து விழுந்தது.
"உலகம் ஏத்தும் தென் ஆனாய்!
வட ஆனாய்! குட பால் ஆனாய்!
குணபால மத யானாய்!
இமையோர்க்கு என்றும் முன் ஆனாய்!
பின் ஆனார் வணங்கும் சோதி!
திருமூழிக்களத்து ஆனாய்!
முதல் ஆனாயே!" (1)
அந்தப் பாசுரம் திருக்கோவிலின் அமைதியான பிரகாரங்களில் எதிரொலித்து அடங்கியது.
பொதுவாக ஞானத்தை நாடிச் சீடன் தான் குருவைத் தேடிச் சரணடைய வேண்டும் என்பது காலங்காலமாக இருந்து வரும் நியதி. ஆனால், இந்த அகிலமே நல்வாழ்வு பெற்று உய்ய வேண்டும் என்ற அளவற்ற கருணையினால் அந்த நியதியையே உடைத்து, சீடனைத் தேடி குருவே நேரில் செல்லும் உன்னத வைபவத்தை மணக்கால் நம்பி உலகிற்கு நிருபித்துக் காட்டினார்.
நாள்தோறும், சோழ மாளிகையின் காவலர்கள் எவ்விதத் தடையுமின்றித் தலைவணங்கி வழிவிட, மணக்கால் நம்பி அரண்மனையில் கம்பீரமாக நுழைந்தார். ஆடம்பர இராஜபோகங்களை ஒதுக்கிவிட்டு, இளவரசர் ஆளவந்தார் பவ்யமாகத் தரைப்பீடத்தில் அமர, ஆசாரியர் மணக்கால் நம்பி அவருக்கு முதலில் வேதங்களின் சாரமாக விளங்கும் ‘ஸ்ரீ புருஷ ஸூக்தத்தை’ உபதேசித்தார். அதன்பின்னர், மனித வாழ்வின் தர்ம நெறிகளை வகுத்துக் காட்டும் ஸ்மிருதிகளில் உயர்ந்த ‘மனுஸ்மிருதியையும்’, புராணங்களின் ரத்தினமாகப் போற்றப்படும் ‘ஸ்ரீ விஷ்ணு புராணத்தையும்’ மிக நேர்த்தியாக அருளிச்செய்து, உலகியல் இன்பங்களில் திளைத்திருந்த இளவரசர் ஆளவந்தாரின் திருவுள்ளத்தைப் பக்தி வயலாக உழுது பண்படுத்தினார்.
உபதேசத்தின் உச்சகட்டத் தருணமாக, கீதையின் ஜீவநாதமுமான சரம ஸ்லோகத்தை “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச” என்ற பகுதியை மணக்கால் நம்பி ஆளவந்தாருக்கு விளக்கத் தொடங்கினார்.
அப்போது, விண்ணுலகத் தேவர்களும் செவிமடுத்து மகிழும் வண்ணம், திருமழிசைப் பிரானின் ‘நான்முகன் திருவந்தாதி’ பாசுரத்தை உள்ளம் உருகி, கம்பீரமான குரலில் விவரித்துரைத்தார்:
"சேயன், அணியன், சிறியன், மிகப் பெரியன்
ஆயன், துவரைக்கோனாய் நின்ற மாயன் அன்று
ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில்
ஏதிலர் ஆம், மெய்ஞ் ஞானம் இல்."(2)
நம்பி, “மன்னா! அவன் எட்டாத தொலைவில் இருக்கும் பரம்பொருள்; ஆனால், அன்போடு அழைக்கும் அடியார்க்கு மிக எளியவனாய் ஓடிவந்து அருள் செய்யும் சுலபன்! அவன் அணுவிற்கும் அணுவான சிறியவன்; அதே சமயம் அண்ட சராசரங்களையும் கடந்த மிகப் பெரியவன்! துவாரகையின் ஒப்பற்ற அரசனான அந்த ஆயர் குலக் கண்ணன், அன்று பாரதப் போர்க்களத்தின் தேர்த்தட்டிலிருந்து உலகமே உய்ய அருளிச்செய்த ‘சரம ஸ்லோகம்’ என்னும் அந்த உன்னத வாக்கைக் கல்லாதவர்கள், உலகத்தில் மெய்ஞ்ஞானம் இல்லாதவர்களாகவும், எம்பெருமானுக்குப் பகைவர்களாகவுமே கருதப்படுவர்!” என்று பாசுரத்தின் பொருளை நளினமாக எடுத்துரைத்தார்.
அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த ஆளவந்தாரின் நெஞ்சத்தில் நில அதிர்வு ஏற்பட்டது போல உடல் சிலிர்த்தது. அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் அருவியாகப் பெருகி வழிந்தது. மனம் கரைந்த ஆளவந்தார் நம்பியின் திருவடிகளில் விழுந்து வணங்கி, “வைணவ உத்தமரே! அந்த மாயனிடம் நான் கொண்டிருந்த அறியாமை என்னும் பகைமையை முழுமையாகப் போக்கி எனக்கு இன்று நல்வழி காட்டினீர்! அந்த நீலமேக வண்ணனாகிய மாயனைக் கண்ணாரக் காணும் உபாயம் தான் யாது? எளியேன் என்ன செய்ய வேண்டும்?” என்று தழுதழுத்த குரலில் கேட்டார்.
பொங்கி வரும் பக்திப் பிரவாகத்தினால் தவிக்கும் ஆளவந்தாரை மணக்கால் நம்பி மெல்ல அருகில் அழைத்து, ‘மெய்ம்மைப் பெருவார்த்தையான’(3) சரம ஸ்லோகத்தின் முழுமையான உட்பொருளையும்; ‘நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்ற உன்னதத் திருவெட்டெழுத்து மந்திரத்தையும்(4); ‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா’(5) என்று தாயாரும் பெருமாளும் பிரிக்க முடியாதபடி வீற்றிருக்கும் அந்தத் திவ்யமான த்வய மந்திரத்தையும் அவர்தம் உள்ளத்தில் ஆழமாகப் பதியுமாறு உபதேசித்தார்.
இதைக் கேட்ட இளவரசர் ஆளவந்தார், வயல்வெளிகளில் கதிர் முற்றிப் பால் பிடித்துக் கனங்குமா போலே... நெஞ்சில் சரணாகதித் தத்துவம் தேங்கி வழிந்ததால், சம்சார பந்தங்களின் மீதான உலகியல் ருசி முற்றிலும் அற்று, பவ்யமாகத் தலையைக் குனிந்து நம்பியிடம், “குளிர்ச்சி பொருந்திய காளமேக வண்ணனான அந்தக் கண்ணபிரானை, என் ஆத்ம நாதனை இப்பொழுதே காண்பதற்கு ஏதேனும் வழியுண்டா சுவாமி? என் நெஞ்சம் அவனைக் காணாது தவிக்கிறது!” என்றார் உருகிய நெஞ்சினராய்.
ஆளவந்தாரின் மனம் முழுக்கக் கண்ணன் ஆக்கிரமித்து, நெருப்பில் அகப்பட்ட மெழுகு போல அவர்தம் நெஞ்சம் உருகிக் குழைந்திருப்பதை உணர்ந்த மணக்கால் நம்பி, மெல்லப் புன்னகைத்து அவரிடம், "அரசே! உமது பாட்டனார் ஸ்ரீமந் நாதமுனிகள் உம்மிடம் ஒப்படைக்கச் சொல்லி என்னிடம் தந்து சென்ற அந்த ஒப்பற்ற நிதி என்பது ஒரே வடிவிலானது அல்ல; அது இரண்டு வடிவங்களைக் கொண்டது! ஒன்று பிரமாணம்; மற்றொன்று பிரமேயம்!" என்றார்.
ஆளவந்தார் வியப்புடன், "இரண்டு வடிவங்களா? அவை என்ன சுவாமி?" என்று கேட்டார்.
"மன்னா! இதில், முதலாவதான 'பிரமாண நிதி' நம் வீரநாராயணபுரத்திலேயே தான் இருக்கிறது! முதலில் அதனை நீர் தரிசித்து நெஞ்சில் ஏந்த வேண்டும், வாருங்கள்!" என்று கூறி, ஆளவந்தாரை அழைத்துக்கொண்டு காட்டுமன்னார் திருக்கோவிலுக்குள் விரைந்தார்.
கோவிலின் உட்பிரகாரத்து நந்தா விளக்குகளின் நெய் மணமும் கற்பூரப் புகையும் கமழ, சோழப் பேரரசின் உன்னதச் சிற்பக்கலைக்குச் சான்றாக, யாளி முகங்களும் கம்பீரமான சிங்க உருவங்களும் தாங்கி நின்ற கற்சுவர்கள் சூழ்ந்த யோக நரசிம்மர் சந்நிதியின் அருகே அவர்கள் வந்தனர்.(6) அங்கே எவராலும் எளிதில் கண்டறிய முடியாதபடி, மண்படிந்து தரைமட்டமாக மூடப்பட்டிருந்த ஒரு பெரும் கற்பலகையின் மீது படிந்திருந்த மண்ணை விளக்கிக் காட்டி, இது ஒரு ரகசியச் சுரங்கப் பாதையின் வாயில் என்பதை நம்பி சைகையினால் சுட்டிக்காட்டினார். பின்னர், சற்றே தள்ளி அமைந்திருந்த சிறிய மதங்க முனிவரின்(7) இருள் சூழ்ந்த சந்நிதிக்குள் தலையைக் குனிந்துகொண்டு நுழைந்த நம்பி, அங்கே முனிவரை பவ்யமாக வணங்கி, பீடத்தின் அடிப்பாகத்தில் ஒரு குறிப்பிட்ட ரகசியக் கல்லை லாவகமாக நகர்த்தினார்.
அடுத்த கணம், பூமிக்கு அடியில் பல்லாண்டுகளாக உறங்கிக் கிடந்த ஏதோவொரு பழங்காலத்து விசித்திர விசை இயங்கியது போல உராய்வுச் சத்தத்துடன், மண்ணுக்கடியில் புதையுண்டு கிடந்த அந்தப் பெரும் கற்பலகை தானாகவே மெல்ல விலகி, இருண்ட பாதையைக் காட்டி வழிவிட்டது!
"அரசே! இந்தக் குகை போன்ற சுரங்கமானது, சோழர்களின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து இந்தத் திருக்கோவிலின் யோக நரசிம்மர் சந்நிதி வரை பூமிக்கு அடியில் நீண்டு கிடக்கும் ரகசியப் பாதையாகும். சோழ மன்னர்கள் உலகியல் சலசலப்புகள் இன்றி, அமைதியான முறையில் உமது பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளைத் தரிசிப்பதற்காகவும், அவரிடம் ஆலோசனைகள் பெறுவதற்காகவும் அவ்வப்போது இந்தச் சுரங்கப் பாதை வழியாகவே இங்குள்ள இந்தக் குகையறைக்கு வந்து செல்வது வழக்கம்!" என்று அதன் வரலாற்றை விளக்கினார்.(8)
மணக்கால் நம்பி ஒரு திருவிளக்கை ஏந்தி, அதன் மெல்லிய சுடரொளியில் ஆளவந்தாரை அந்த இருண்ட சுரங்கத்திற்குள் மெதுவாக அழைத்துச் சென்றார். பூமிக்கு அடியில் அமைந்திருந்த அந்த அமைதியான குகை அறைக்குள் அவர்கள் நுழைந்தபோது, நம்பி தான் ஏந்தியிருந்த விளக்கை உயர்த்தி அங்கே இருந்த கல் சுவரொன்றின் மீது காட்டினார்.
அந்தத் திருவிளக்கின் ஒளியில் அங்கே இருந்த மிக உன்னதமான சோழர் காலத்து மூலிகைகளால் வண்ணம் தீட்டப்பட்ட சுவரோவியங்கள் பசுமை மாறாமல் நேற்று தீட்டிய ஓவியம் போல இருந்தன. அந்த ஓவியத்தில், ஒரு மாபெரும் புளியமரத்தின் அடியில் மெய்ஞ்ஞானப் பேரொளி வீசும் திருமுகத்தோடு, பத்மாசனத்தில் அமர்ந்து யோக நிலையில் வீற்றிருந்தார் நம்மாழ்வார். அவர் அருகில் கைகூப்பிய நிலையில் மதுரகவியாழ்வாரும் இருந்தார்கள்.(12)
நம்பி அந்த விளக்கொளியைச் சற்றே கீழே தாழ்த்திக் காட்டினார். அந்த சுவரோவியத்திற்குக் கீழே, பட்டுத் துணிகளால் சுற்றப்பட்டு நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளின் குவியல்கள் காட்சி அளித்தன. ஏடுகளின் மீது வெண்மையான பாம்புச் சட்டைகள் சில போர்த்தப்பட்டிருந்தன. அந்த நிலவறை அறை முழுவதிலும் வேப்பெண்ணெயும் காடுகளிலிருந்து திரட்டப்பட்ட விசித்திரமான பச்சிலைகளும் கலந்த ஒருவித மூலிகைத் தைலத்தின் காரமான வாசனை சூழ்ந்திருந்தது.
‘பூமிக்கு அடியில் இருக்கும் இந்த ரகசிய அறையில் இப்படி ஒரு மூலிகை வாசனை வீசுவதற்கும், அந்த ஏடுகளின் மேல் பாம்புச் சட்டைகள் போர்த்தப்பட்டிருப்பதற்கும் என்ன காரணம்?’ என்று யோசிப்பதை முகக்குறிப்பால் அறிந்துகொண்ட நம்பி, ”மன்னா! ஓலைகள் காலப்போக்கில் காய்ந்துபோய் உடைந்துவிடாமல் இருக்கவும், கரையான் மற்றும் பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்கவும் வேப்பெண்ணெய் கலந்த மூலிகைத் தைலங்கள் தடவப்பட்டுள்ளன. அந்தத் தைலத்தின் காரமான வாசனையும், அதன் மேல் போர்த்தப்பட்டிருக்கும் இந்தப் பாம்புச் சட்டைகளும்தான் எந்தவொரு நச்சுப் பூச்சியையும், ஏடுகளை அரிக்கும் கரையான்களையும் இந்த ஏடுகளின் அருகே நெருங்கவிடாமல் தடுக்கும் பாதுகாப்பு அரண்களாகும்!” என்று தொடர்ந்தார். (9)
”ஆளவந்தாரே! இதோ இந்த ஓவியத்தில் வீற்றிருக்கும் இந்த நம்மாழ்வார்தான், உமது பாட்டனார் நாதமுனிகளின் தவத்திற்கு இரங்கி, அவருக்கு ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் முழுவதையும் தன் திருவாக்காலேயே உபதேசித்து அருளினார். உமது பாட்டனார் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்டுத் தேடிச் சேகரித்த அந்த உன்னத ஞானக் கிரந்தங்கள் இதோ இந்த ஓவியத்தின் கீழேதான் உள்ளன! இதைத் தவிர கண்ணன் உரைத்த கீதையின் அர்த்தங்களும் இருக்கின்றன! ஞானமே வடிவான இந்த ஓலைச்சுவடிகள்தான் நாம் போற்றித் தொழும் 'ஞானநிதி' என்னும் 'பிரமாண நிதி'! " என்றார். (10)
பாட்டனாரின் பிரமாண நிதி, ஆசாரியரின் உபதேசத்தோடு இணைந்து ஆளவந்தாருக்குள் ஒரு புதிய பக்தி ஒளியை ஏற்றியது.
மணக்கால் நம்பி ஆளவந்தாரிடம், "மன்னா! இப்போது உமது பாட்டனார் விட்டுச்சென்ற பிரமாண நிதியை நீர் பெற்றுக்கொண்டீர். இனி நாம் அடைய வேண்டிய உன்னத எல்லையான 'பிரமேய நிதி' எங்கே உள்ளது தெரியுமா? அது, இரு பெரும் நதிகளுக்கு இடையில், ஏழு பிரகாரங்களின் நடுவே, ஒரு மாபெரும் பாம்பின் அணைப்பில் பாதுகாப்பாக வீற்றிருக்கிறது!" என்றார் நம்பி புன்னகையுடன்.
இப்போது ஆளவந்தாருக்கு அந்தப் புதிரின் பொருள் மிகத் தெளிவாகப் புரிந்தது. "என் ஆத்ம நாதனான அரங்கப் பெருமான்!" என்று உருகியவர், "சுவாமி! நாம் இனி ஒரு கணமும் தாமதிக்க வேண்டாம்; என் பிரமேய நிதியைத் தேடி இப்பொழுதே திருவரங்கம் நோக்கிப் புறப்படுவோம்! இனி நான் இந்த தேசத்து மன்னன் அல்லேன்; உமது எளிய சீடன்! இனி அடியேன் ஆளவந்தான் அல்லன், நீரே என்னை ஆட்கொண்டீர்! என் பாட்டனார் எனக்குச் சூட்டிய 'யமுனைத் துறைவன்' என்ற திருநாமத்தாலேயே இனி என்னை அழைப்பீராக!" என்று உத்வேகத்துடன் எழுந்து நின்றார்.
மணக்கால் நம்பியின் கண்களில் பேரன்பும் ஆசியும் பொங்கின. அவர், “யமுனைத் துறைவா!” என்று நெஞ்சம் நெகிழ்ந்து, அவனைத் தன் நெஞ்சாரத் தழுவிக்கொண்டார்.
“யமுனைத் துறைவா! உமது பாட்டனார் உமக்குச் சூட்டிய அந்தத் திவ்ய நாமம் அடியேனின் செவிகளில் தேனாய் வழிகிறது! அன்று வாதப் போரில் வென்ற உம்மைக் கண்டு சோழ நாட்டு மகாராணி வியந்து, ‘எம்மை ஆளவந்தாரோ?’ என்று உச்சி முகர்ந்து அழைத்தாள். அன்று நீர் மண்ணாளும் அரச போகங்களை ஆள வந்தீர்! ஆனால் இன்றோ, காட்டுமன்னாரின் பேரருளோடு, இந்தச் சம்சாரப் பெருங்கடலில் தவிக்கும் கோடானுகோடி ஆன்மாக்களை உய்வித்து, நம் நாதமுனிகள் தந்து சென்ற வைணவப் பேரரசை ஆள வந்துவிட்டீர்! சோழச் செங்கோலைக் கைவிட்ட நீர், இப்போது உபய வேதாந்த சாம்ராஜ்யத்தை ஆள வந்த ‘ஆளவந்தார்’! ஆகவே, நீர் மண்ணாளும் அரசர் அல்லீர்; மனிதர்களின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டு, விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை ஆள வந்த ‘ஆளவந்தார்’!” என்றார் நெகிழ்ச்சியுடன். (11)
சொல்லும் அதற்கான பொருளும் பிரிக்க முடியாதபடி எப்போதும் ஒன்றாகவே இயங்குவது போல, மணக்கால் நம்பியும் ஆளவந்தாரும் ஒருமித்த உள்ளத்தோடு திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார்கள்...
./சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்...
அடிக்குறிப்புகள்:
(1) நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம் 21-ஆம் பாசுரம். இதில் எம்பெருமான் தென்திசைக்குத் திருமாலிருஞ்சோலை அழகராகவும், வடதிசைக்குத் திருவேங்கடமுடையானாகவும், மேற்குத் திசைக்குத் திருவரங்கனாகவும், கீழ்த்திசைக்குத் (குணதிசை) திருக்கண்ணபுரத்துச் சௌரிராஜனாகவும் உருவகிக்கப்படுகிறார். ஆயினும், "குணபால மதயானாய்" என்ற அடைமொழிக்குக் கிழக்குத் திசையில் அமைந்த காட்டுமன்னார்கோயில் சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் (காட்டுமன்னார்) பரமான சிறப்பு வியாக்கியானமும் பூர்வாசாரியர்களால் அருளப்பட்டுள்ளது. எனவே, காட்டுமன்னாரைக் கண்டவுடன் மணக்கால் நம்பியின் நினைவில் இப்பாசுரம் பொங்கி எழுந்தது என்று அமைத்திருக்கிறேன்.
(2) திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதி.
(3) ஆண்டாளின் - நாச்சியார் திருமொழி - 11.10 -
செம்மை உடைய * திருவரங்கர் தாம் பணித்த *
மெய்ம்மைப் பெரு வார்த்தை * விட்டுசித்தர் கேட்டிருப்பர் **
தம்மை உகப்பாரைத் * தாம் உகப்பர் என்னும் சொல் *
தம்மிடையே பொய்யானால் * சாதிப்பார் ஆர் இனியே?
[செம்மைக் குணம் சீர்மையாக உள்ள திருவரங்கர் தம் வாயாலே அருளிச்செய்த சத்தியமானதும் பெருமை மிக்கதுமான சரம சுலோகத்தை பெரியாழ்வார் குருமுகமாகக் கேட்டபடி இருப்பார் என்றபடி.]
(4) திருமங்கை ஆழ்வார் - பெரிய திருமொழி 11.9 -
குலம் தரும் செல்வம் தந்திடும் * அடியார் படு துயர் ஆயின எல்லாம் *
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும் * அருளொடு பெரு நிலம் அளிக்கும் **
வலம் தரும் மற்றும் தந்திடும் * பெற்ற தாயினும் ஆயின செய்யும் *
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் * நாராயணா என்னும் நாமம்
(5) - நம்மாழ்வார் - திருவாய்மொழி - 6.10.10
அகலகில்லேன் இறையும் என்று *
அலர்மேல் மங்கை உறை மார்பா *
நிகர் இல் புகழாய் உலகம் மூன்று
உடையாய் * என்னை ஆள்வானே **
நிகர் இல் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் * திருவேங்கடத்தானே *
புகல் ஒன்று இல்லா அடியேன் * உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
(6,7) இன்றும் யோக நரசிம்மர், மதங்க முனிவர் சந்நிதிகள் இருக்கின்றன.
(8) இந்தக் குறிப்பு ஆளவந்தார் வைபவம் என்ற நூலில் ( ஶ்ரீ உ.வே ஏ.வி.ஆர் ஸ்வாமி) ஒரு குறிப்பு இருக்கிறது. அதில் இவ்விஷயத்தை (பாதாள அறை விஷயத்தை) மேல்கோட்டை, திருநாராயணபுரம், ஸ்ரீ உ.வே. அரையர் ஸ்ரீராமசர்மா ஸ்வாமிகளிடமிருந்து ஸ்வீகரித்துக் கொண்டபடி இங்கே விண்ணப்பிக்கிறோம்.
பல மஹநீயர்களிடமிருந்து ஸ்வாமி திருச்செவி சாற்றிய அத்விதீயமான விஷயங்கள் காட்டுமன்னார்குடி ஸ்தானீகம், தீர்த்தகாரர், கச்சிக்கிடாம்பி, ஸ்ரீ உ.வே.Dr.M.S.வேங்கடாசாரியார் ஸ்வாமிகள் இந்த விஷயத்தை பெரியோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன் என்று சாதித்தார். அவ்விடத்தில் சுரங்கப்பாதை இருந்ததாகவும் 200 வருடங்களுக்கு முன்புதான் அதை மூடிவிட்டு இருக்கிறார்கள் என்றார்.
இதைக் கொண்டு கொஞ்சம் கற்பனை கலந்து எழுதியிருக்கிறேன்.
(9) மேல்கோட்டையில் இப்படி ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அதைக் கொண்டு எழுதியது.
(10) இதில் கிடைத்த ஓலைச்சுவடிகளைக் கொண்டுதான் பரம்பரையாக வந்த கீதாபாஷ்யம், கீதார்த்த சங்கரஹம் போன்றவற்றை ஆளவந்தாருக்கு மணக்கால் நம்பி உபதேசித்தார் என்ற குறிப்பு உள்ளது.
(11) வைணவ உரை போன்றவற்றில் ஆளவந்தார் என்றே அழைப்பதால், இந்தப் பகுதியைச் சேர்த்துள்ளேன். (இது கற்பனை).
(12) - இன்றும் நம்மாழ்வார் மதுரகவியாழ்வார் சந்நிதி இருக்கிறது.

Comments
Post a Comment