41 - உய்ய செய்பவனை தேடு!

41 - உய்ய செய்பவனை தேடு! (சென்ற பகுதியில்… ஆளவந்தாரும் அவருடைய சீடர்களும் குருகை காவலப்பன் கூறிய அவசியமான தகவல்களை கவனமாக ஓலையில் எழுதிக்கொண்டு, மீண்டும் திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார்கள். …]


வானம் மப்பும் மந்தாரமுமாக மங்கிக் கிடந்தது. கதிரவன் மேகக் கூட்டங்களுக்குப் பின்னே ஒளிந்துகொள்ள, அந்திப் பொழுதின் நிழல்கள் மெல்லப் படரத் தொடங்கின. மரங்களின் இலைகள்கூட அசைவின்றி உறைந்து நிற்க, சுற்றிலும் ஒருவித விசித்திரமான நிசப்தம் நிலவியது. அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு எங்கோ ஒரு பறவையின் சோகக் குரல் மட்டுமே ஒலித்து அடங்கியது.

திருவரங்க மாநகரை நோக்கி யாத்திரை செய்து கொண்டிருந்த ஆளவந்தாரின் மனம் ஏனோ சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது. அதற்கான காரணம் என்னவென்று அறிய முடியாமல் தவித்த அவருடைய நெஞ்சம், திருவரங்கத்தில் வீற்றிருக்கும் தம் ஆசாரியரான மணக்கால் நம்பியின் நினைவிலேயே லயித்திருந்தது. "என் உள்ளத்தின் வேகத்திற்கு இந்த உடலும் கால்களும் ஈடுகொடுக்க முடியவில்லையே!" என்று வருந்தியவாறே, நடையின் வேகத்தை அதிகரித்துத் தம் சீடர்களை நோக்கி, "சற்று விரைவாக நடக்கலாம்!" என்றார்.

ஆளவந்தாரும் அவருடைய சீடர்களும் கம்பீரமாக நடந்து சென்ற காட்சி, உயர்வகைக் குதிரைகள் அணிவகுத்துச் செல்வது போலக் காட்சியளித்தது.

மாலைப் பொழுதில், யசோதைப் பிராட்டி 'காப்பிட வாராய்' என்று வாஞ்சையோடு பாடி அழைத்த எம்பெருமான் உகந்து எழுந்தருளியிருக்கும் திருவெள்ளறைத் திவ்யதேசத்தை வந்தடைந்தார்கள். வீதிகளெங்கும் கமழும் குருக்கத்தி மலர்களின் நறுமணம் தென்றல் காற்றோடு கலந்து திசைகளையெல்லாம் நிறைத்திருந்தது. உத்தமர்கள் வாழும் திருவெள்ளறையில், அன்றைய இரவைக் கழிப்பதற்காக அங்கிருந்த ஒரு மண்டபத்தில் தங்கினார்கள்.

அவர்கள் அங்கே துயில்கொண்ட அதே நேரத்தில், சற்றுத் தொலைவிலிருந்த திருவரங்கத்தில் மணக்கால் நம்பி ஆளவந்தாரின் வரவிற்காக ஏங்கித் தவித்துக்கொண்டிருந்தார். அவருடைய திருமேனியின் தளர்ச்சியும் மூப்பின் பாரமும் கண்களிலேயே வெளிப்பட்டன.

"அரங்கா! என் ஆளவந்தார் வந்து சேரும் வரை இந்த அடியேனின் உயிரைத் திருவரங்கத்திலேயே நிலைநிறுத்தியருள்!" என்று பிரணவாகார விமானத்தை நோக்கித் தொழுது, அழகியமணவாளனை மனக்கண்ணில் தியானித்தவாறே நித்திரைக்குச் சென்றார்.

நள்ளிரவு கடந்து, அருணோதயத்திற்குச் சில நாழிகைகளே இருந்த வேளையில், ஆளவந்தாரும் அவருடைய சீடர்களும் காரிருளையும் பொருட்படுத்தாமல் திருவரங்கம் நோக்கி விரைந்து நடக்கத் தொடங்கினார்கள். அன்று கண்ணனைத் தன் சிரசில் தாங்கிக்கொண்டு சென்ற வசுதேவருக்கு யமுனை வழிவிட்டது போல, இன்று மணக்கால் நம்பியைத் தன் உள்ளத்தில் தாங்கிய ஆளவந்தாருக்குக் கரைபுரண்டு ஓடிவரும் காவிரி இவர்களின் அதிவேக நடையைக் கண்டு திகைத்து வழிவிட்டதோ என்னும்படியாக அவர்களுடைய பயணம் அமைந்திருந்தது.

அதே சமயத்தில், திருவரங்கத்தில் கண்வளர்ந்திருந்த மணக்கால் நம்பியின் சொப்பனத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் எழுந்தருளினார்! நம்பி கைகூப்பி, "அடியேன் நாதமுனிகளே!" என்று பணிவுடன் தொழுதார்.

அங்கிருந்த மரப்பெட்டியைக் காட்டி, "நம்பியே! அந்தப் பெட்டியில் இருக்கும் திவ்ய விக்கிரகத்தை நீர் ஏன் யமுனைத்துறைவரிடம் இன்னும் ஒப்படைக்கவில்லை?" என்று வினவினார் நாதமுனிகள்.

நம்பியும் உடனே, "நாதமுனிகளே! காலம் இன்னும் கனியவில்லையோ என்று எண்ணியிருந்தேன். ஆனால் தற்போது அடியேனின் உடல் தளர்ந்துவிட்டது. யமுனைத்துறைவரிடம் அதனை ஒப்படைப்பதற்காகவே அவருடைய வரவை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறேன்!" என்றார்.

"நம்பியே! யமுனைத்துறைவரிடம், நாட்டில் உள்ளவர்களை உய்யச் செய்து வழிநடத்தப்போகும் மாமுனிவர் இவர்தான் என்றும், இவரைக் கண்டறிந்து ஆசாரிய பீடத்தை ஒப்படைக்குமாறு நாம் பணித்ததாகக் கூறும்!" என்றார் நாதமுனிகள்.

மேலும் வியப்புடன் நின்ற மணக்கால் நம்பியை நோக்கி, "அனைத்து உலகமும் வாழ அவதரிக்கப்போகும் இந்த மாமுனிவரை அடியேன் யோக நிலையிலே தரிசித்திருக்கிறேன்! அவரைக் கண்கூடாக நேரில் தரிசிக்கும் பாக்கியம் என் பேரனுக்குக் கிடைத்தால், என் நெஞ்சில் தேங்கியிருக்கும் பேரவா நிறைவேறுமன்றோ!" என்று அருளிச்செய்தார்.

நாதமுனிகள் கூறியதன் மாபெரும் உட்பொருளை உணர்ந்த நம்பி, 'நமக்கு எப்பேர்ப்பட்ட பேறு கிடைத்திருக்கிறது!' என்று எண்ணியவாறே சொப்பனத்திலிருந்து விழித்தெழுந்த அந்தக் கணத்தில், கதவு தட்டப்படும் ஓசை கேட்டது!

தள்ளாடும் உடலுடன் மணக்கால் நம்பி சென்று கதவைத் திறக்க, அங்கே சூரியனைப் போல ஒளிரும் ஆளவந்தார் நின்றுகொண்டிருந்தார்! தம் ஆசாரியரைக் கண்ட ஆனந்தத்தில் அவருடைய திருவடிகளில் வீழ்ந்து சாஷ்டாங்கமாக வணங்கினார்.

மணக்கால் நம்பி பேரானந்தத்துடன், "ஆளவந்தாரே! உம் திருப்பாட்டனார் இப்போதுதான் அடியேனின் சொப்பனத்தில் சேவை சாதித்து, உமக்கு ஒரு வார்த்தையை விண்ணப்பம் செய்யுமாறு கட்டளையிட்டார். நான் சொப்பனத்திலிருந்து விழித்த அதே கணத்தில் நீர் கதவைத் தட்டி உள்ளே நுழைகிறீர்!" என்றார்.

'அது என்ன வார்த்தையாக இருக்கும்?' என்று ஆளவந்தார் யோசித்து நிற்க, நம்பி, "நாட்டில் உள்ளவர்களை உய்யச் செய்து வழிநடத்தப்போகும் அந்த மாமுனிவரைத் தேடிக் கண்டடையுமாறு உம் பாட்டனார் உமக்குக் கட்டளையிட்டுள்ளார்!" என்றார்.

ஆளவந்தார் யாரை எப்படித் தேடுவது என்று புரியாமல் திகைத்து நிற்க, மணக்கால் நம்பி மெதுவாக அறைக்குள்ளிருந்த மரப்பெட்டியை நோக்கி நடந்து சென்று அதனைத் திறந்தார். அதிலிருந்து அந்தத் திவ்ய விக்கிரகத்தை வெளியே எடுத்து, அதனைப் போர்த்தியிருந்த பட்டுத் துணியை விலக்கினார்!

அந்த விக்கிரகத்தின் தெய்விகத் திருமுக மண்டலத்தையும், கரம் கூப்பிய அஞ்சலி முத்திரையையும், புன்னகை தவழும் திவ்ய உருவத்தையும் கண்ட ஆளவந்தார், பேரதிசயத்திலும் பிரமிப்பிலும் உறைந்து நின்றார்!

"யமுனைத்துறைவரே! உம் திருப்பாட்டனார் நாதமுனிகள் நெஞ்சார விரும்பிய பேரருள் கருவூலம் இது! ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாரே 'இவரே எதிர்கால ஆசாரியன்' என்று உரைத்து, இத்திவ்ய விக்கிரகத்தை உம் பாட்டனாருக்குப் பிரசாதித்தார்! இவரே 'பவிஷ்யதாசாரியன்'!

இவரை நம்மாழ்வாரும் உம் பாட்டனாரும் முன்னரே கண்டனர்; ஆனால், நீர் இவரைக் கண்கூடாக நேரில் தரிசிக்கப் போகிறீர்! என் ஆசாரியரான உய்யக்கொண்டாரும் அடியேனும் இவரை நேரில் பார்க்கும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டவில்லை. ஸ்ரீராமாயணத்தில் திரிஜடை தான் கண்ட சுப சொப்பனத்தைச் சீதாபிராட்டிக்குச் சொல்லி மனநிறைவு அடைந்தது போல, நாதமுனிகள் சொல்லக் கேட்டு நாங்களும் மனநிறைவு அடைந்தோம்!" என்றார் மணக்கால் நம்பி.

ஆளவந்தார் அந்தப் பவிஷ்யதாசாரிய திவ்ய விக்கிரகத்தைத் தன் இரு கரங்களாலும் பேரன்போடு பெற்றுக்கொண்டார்.

அப்போது நம்பி: "இந்த மாமுனிவரை நீர் நேரில் தரிசிக்கப் போகிறீர்! இவராலே நம் வைணவத் தரிசனம் திசையெங்கும் நிலைபெற்று விளங்கப் போகிறது! உம் திருப்பாட்டனார் இந்த விக்கிரகத்தைத் தஞ்சமாகப் பற்றி நிற்குமாறு நியமித்துள்ளார். நீரும் இந்த அவதார ரகசியத்தைப் பேணிப் பாதுகாப்பீராக!" என்றார்.

"உங்களின் அருளாசியுடன், அகில உலகத்தையும் உய்யச் செய்து வழிநடத்தப்போகும் அந்த மாமுனிவரை இப்போதே தேடத் தொடங்குகிறேன்!" என்று மணக்கால் நம்பியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார் ஆளவந்தார்.

"உன் திருப்பாட்டனாரின் ஆசியும் நம் திருவரங்கநாதனும் உனக்குத் துணையாக இருப்பார்கள்! இனி எனக்கு எவ்விதக் கவலையுமில்லை; என் கடன் முடிந்தது, மனம் நிறைவடைந்தது!" என்று வாழ்த்தி ஆசீர்வதித்தார் நம்பி.

சில தினங்களிலேயே மணக்கால் நம்பி தம் ஆசாரியனின் திருவடிகளை அடைந்து திருநாடலங்கரித்தார்.

மணக்கால் நம்பியின் பூரண அருளைப் பெற்ற ஆளவந்தார், வைணவ நெறியை உலகெங்கும் பரப்பும் மாபெரும் ஆசாரியராக, ஞானத்தில் முதிர்ந்த அடியார்கள் கூட்டம் சூழத் திருவரங்கத்தில் அழகுற வீற்றிருந்தார். ஆயினும், அவருடைய சிந்தனை முழுவதும்: 'அந்த மகானுபாவன் எங்கே அவதரித்திருக்கிறார்? அவரை நாம் எவ்வாறு, எங்கே கண்டடைவது?' என்ற ஏகசிந்தனையிலேயே லயித்திருந்தது!

நம் ஆசாரியர்களுடம் பயணிக்கும் நம் வாசகர்களுக்குச் சில குறிப்புகளைக் கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

ஆசாரியர்கள் அவதாரம் செய்த ஆண்டு, பரமபதம் எய்திய ஆண்டு போன்றவற்றுக்குப் பூர்வாசாரியர்கள் காலக் கணக்கீட்டு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்தத் தொடரில் நாம் எங்கே பயணிக்கிறோம் என்பதை வாசகர்கள் தெளிவுற அறிந்துகொள்வதற்காக ஓர் அட்டவணை குறிப்பு தரப்படுகிறது.

நம்மாழ்வார் அளித்த பவிஷ்யதாசாரியர் விக்கிரகம் நாதமுனிகளிடமிருந்து தொடங்கி, உய்யக்கொண்டார் மற்றும் மணக்கால் நம்பி வழியாக ஆளவந்தார் கரங்களை வந்து அடைவதற்கு ஏறத்தாழ 88 ஆண்டுகள் பயணித்து வந்துள்ளது. இதற்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்தே ஸ்ரீஇராமானுஜரின் அவதாரம் நிகழ்கிறது!

அடுத்த பகுதிகளில், இந்த 11 ஆண்டுகளில் என்ன நடந்தது எனும் விறுவிறுப்பான வரலாற்றுப் பயணத்திற்குக் காத்திருங்கள்!

./சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்..



Comments