44 - ஆண்டானின் பிரேமை
44 - ஆண்டானின் பிரேமை
திருவரங்கத்தரையர் பாடிய 'கடுவினை களையலாகும்...' என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் வழியே, சாட்சாத் நம்மாழ்வாரே தமக்கு உத்தரவிட்டதாக உணர்ந்த ஆளவந்தார், ஒரு கணமும் தாமதிக்கவில்லை! கையில் திரிதண்டத்தையும், நெஞ்சில் அகலாத எம்பெருமான் சிந்தனையையும் ஏந்தியவாறு, தம்முடைய பிரிய சீடர்களான பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி உள்ளிட்ட அடியார்கள் கூட்டம் சூழத் தென்திசை நோக்கித் தம் யாத்திரையைத் தொடங்கினார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகம்! இன்றைக்கு நாம் காணும் தார்ச்சாலைகளோ, பாலங்களோ அன்று கிடையாது. அடர்ந்த காடுகளும், சலசலவென ஓடும் நதிப் பள்ளத்தாக்குகளும், வனவிலங்குகள் நிறைந்த புதர்களுக்கு நடுவே சென்ற ஒற்றையடிப் பாதைகளுமே வழிப்போக்கர்களின் வழிகளாக அமைந்திருந்தன. எனினும், ஸ்ரீவைஷ்ணவப் பேரமைப்பைப் பாதுகாக்கப் போகும் அந்தப் 'பவிஷ்யதாசாரியரைத்' தேடிக் கண்டடையும் ஏக லட்சியம், ஆளவந்தாரின் நடையில் சிம்மத்தின் மிடுக்கையும் அதிவேகத்தையும் கொடுத்திருந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் ஆளவந்தாருடன் பயணிக்க நம் வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்!
காவிரித் தாயின் தென்கரையைக் கடந்து, சோழ நாட்டின் எல்லையைத் தாண்டிப் பாண்டிய நாட்டின் வனப்பகுதிகளுக்குள் அவருடைய நடைப்பயணம் தொடர்ந்தது. வெள்ளாற்றுப் படுகையின் வழியே சென்றவர்கள், குன்றுகளின் இடையே குகைக் கோயிலாகக் குடையப்பட்டிருந்த திருமெய்யம் திவ்யதேசத்தை அடைந்தார்கள். அங்கே உய்யவந்த நாச்சியாரையும், சத்தியகிரிநாதப் பெருமாளையும் சேவித்து, அவர்தம் திருவருளைப் பெற்றனர்.
அங்கிருந்து தென்மேற்காக நகர்ந்து, மருத நிலத்து வயல்வெளிகள் சூழ்ந்த திருக்கோட்டியூர் திவ்யதேசத்தை அடைந்தார்கள்.
ஆளவந்தாரின் முதன்மைச் சீடர்களுள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பி, தம் சொந்த ஊரான அப்புனித மண்ணில் ஆசாரியரையும் உடன்வந்த சீடர்களையும் மிகுந்த பக்திச் சிரத்தையுடன் வரவேற்றார். எண்டிசையும் புகழும் அஷ்டாங்க விமானத்தின் மூன்று நிலைகளிலும் நின்றும், இருந்தும், கிடந்தும் சேவை சாதிக்கும் சௌமிய நாராயணப் பெருமாளைக் கண்டு நெஞ்சுருகத் தொழுதனர்.
சேவை முடிந்ததும், திருக்கோட்டியூர் நம்பி ஆளவந்தாரை அமைதி சூழ்ந்த ஒரு பழமையான திருமாளிகையின் முன்னே அழைத்துச் சென்று நிறுத்தி, கரம்கூப்பி நெகிழ்ச்சியுடன், “ஸ்வாமி! மதுரை அரியணையில் வீற்றிருந்த ஸ்ரீவல்லபதேவ பாண்டியனின் அவைக்குப் பெரியாழ்வாரை அழைத்துச் சென்று, 'ஸ்ரீமந் நாராயணனே பரதத்துவம்' என்று வேத சாஸ்திரப் பிரமாணங்களால் அறுதியிட்டு வெற்றி பெறச் செய்தாரே... பெரியாழ்வாரால் 'அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமான துங்கன் செல்வனைப் போல...’ என்று போற்றப்பட்டவரும், 'பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான்' என்று ஆழ்வாரை உலகறியச் செய்யக் காரணமாய் இருந்தவருமான செல்வ நம்பி எழுந்தருளியிருந்த திவ்யமான திருமாளிகை இதுதான்!” என்றார்.
ஆளவந்தார் அந்தத் திருமாளிகையையும், அங்கே செல்வ நம்பி ஆற்றிய வைணவத் தொண்டுகளையும் நினைவுகூர்ந்து, அப்புனித மண்ணைத் தன் சிரசால் தொட்டு வணங்கினார். பின், அடியார்கள் கூட்டத்தோடு இத்தென்திசை யாத்திரையில் தொடர்ந்து பயணித்தார்.
அடுத்து, பயணப் பாதை வைகைப் பெருநதியை நோக்கி நீண்டது. முதலில், வடக்கே பசுமை அடர்ந்த சோலைமலையின் அடிவாரத்திலுள்ள திருமாலிருஞ்சோலை (அழகர் கோவில்) திவ்யதேசத்தை அடைந்தார்கள். சிலம்பாற்றின் குளிர் தீர்த்தத்தில் நீராடி, சுந்தரபாகுப் பெருமாளின் திவ்ய வடிவழகில் திளைத்து நிற்கையில், ஆளவந்தாரின் கண்கள் அடியார்கள் கூட்டத்தில் யாரேனும் மாபெரும் ஞான உருவம் தென்படுகிறதா என்று தேடிக்கொண்டே இருந்தன. அங்கிருந்து தெற்கே நகர்ந்து, மதுரை மாநகரில் கூடல் அழகப் பெருமாளைக் கண்குளிரச் சேவித்தார்கள்.
அங்கிருந்து தென்மேற்கே அர்ஜுன நதிக்கரையைக் கடந்து, திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாளைச் சேவித்துவிட்டு, வடபெருங்கோயிலுடையான் வீற்றிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யதேசத்தை வந்தடைந்தார்கள்.
பெரியாழ்வாரும் கோதை ஆண்டாளும் அவதரித்த அந்தப் புனித மண்ணைத் தன் சிரசால் வணங்கிய ஆளவந்தார், ஆலிலை மேல் பள்ளிகொண்டிருக்கும் வடபத்திரசாயி எம்பெருமானின் எழிலார்ந்த வடபெருங்கோயிலையும், நறுமணம் கமழும் ஆண்டாளின் திருநந்தவனத்தையும் கண்டு மெய்சிலிர்த்தார்!
ஆண்டாளின் சந்நிதிக்கு முன்னே சென்று சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கிய ஆளவந்தார், கோதை நாச்சியாரின் திவ்ய மங்கள வடிவத்தைக் கண்டு பரவசமடைந்து, நாச்சியார் திருமொழிக்குத் தம் பாட்டனார் நாதமுனிகளின் முதன்மைச் சீடரான திருக்கண்ணமங்கை ஆண்டான் அருளிச்செய்த உன்னதமான தனியனை நெஞ்சுருகச் சேவித்தார்:
அல்லிநாள் தாமரைமேல் ஆரணங்கின் இன்துணைவி
மல்லிநாடு ஆண்ட மடமயில் - மெல்லியலாள்
ஆயர்குல வேந்தன் ஆகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.
ஆசாரியன் சேவித்த அந்தத் தனியனின் ஆழமான சுவையில் திளைத்த பெரிய திருமலை நம்பி, “ஸ்வாமி! ஸ்ரீஆண்டாளின் திருவடிகளில் உருகி இந்தத் தனியனைத் தொடுத்தருளிய, நம் திருக்கண்ணமங்கை ஆண்டானைக் குறித்துச் சில வார்த்தைகள் அருளிச்செய்ய வேண்டும்!” என்று பணிவுடன் வேண்டினார்.
ஆளவந்தார் கனிந்த புன்னகையுடன் தம் சீடர்களை நோக்கி, திருக்கண்ணமங்கை ஆண்டானின் அற்புத வரலாற்றைக் கூறத் தொடங்கினார்:
“நம்பிகளே! திருக்கண்ணமங்கை ஆண்டான் ஆரம்ப காலத்தில் உலகியல் செல்வாக்கும் அதிகாரமும் மிக்கவராகத் திகழ்ந்தார். ஒருமுறை அவர் பல்லக்கில் வீதி வழியே பவனி வந்துகொண்டிருந்தபோது, அங்கே ஒரு பெரும் சலசலப்பைக் கண்டார்.
வீதியில் இரு நாய்கள் மிகக் கொடூரமாக ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அதில் ஒரு நாய் இறந்தவுடன், அதன் எஜமானன் ஆத்திரம் கொண்டு மற்றொரு நாயை அடிக்க, அதுவும் மடிந்தது. வளர்ப்பு நாய்களின் மீதிருந்த அளவுகடந்த பாசத்தால், இரு எஜமானர்களும் தம் இடைக் கத்திகளை உருவிக்கொண்டு ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு அங்கேயே மாண்டுபோயினர்!
பல்லக்கிலிருந்து இந்தக் காட்சியைக் கூர்ந்து கவனித்த திருக்கண்ணமங்கை ஆண்டானின் உள்ளத்தில் ஒரு பேரொளி படர்ந்தது! அவர் தன்னுள் தீர்க்கமாகச் சிந்திக்கலானார்:
'ஆகா! ஒரு சாதாரண மனிதன், தன்னை மட்டுமே நம்பியிருக்கும் அற்ப வளர்ப்பு நாயைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரையே கொடுக்கும் அளவுக்குப் பரிவு காட்டுகிறான் என்றால்... அகில சராசரங்களையும் காக்கும் எம்பெருமான் பக்தவத்ஸலன், தன்னை மட்டுமே தஞ்சமாகப் பற்றி, அவனையே நம்பியிருக்கும் ஒரு ஜீவாத்மாவை எப்படிக் கைவிடுவான்? எம்பெருமானை அடைவதற்கு நமது உலகியல் அந்தஸ்தோ, சுயமுயற்சியோ சாதனமாகாது! ஒரு நாய் தன் எஜமானனைச் சார்ந்திருப்பது போல, அவனது அளப்பரிய கருணையையே பற்றிக்கிடப்பதே உத்தம சரணாகதி!'
அந்தக் கணமே தம் பல்லக்கையும், செல்வாக்கையும், சுயமுயற்சி என்னும் கர்வத்தையும் முற்றிலுமாகத் துறந்தார்! நம் பாட்டனார் நாதமுனிகளிடம் சரணடைந்து பஞ்ச சமஸ்காரமும், மும்மந்திர உபதேசங்களையும் பெற்றார். பின்னர் திருக்கண்ணமங்கை திவ்யதேசத்தை அடைந்து, தன்னை ரட்சித்துக்கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல், தன் இரண்டு கைகளையும் கால்களாக்கிக்கொண்டு நாலுகால் பிராணியான நாய் போலே சஞ்சரித்து, பக்தவத்ஸலப் பெருமாளின் நிழலில் ஒதுங்கினார்.
திருக்கோயில் பிரகாரங்களை அலகிட்டுத் தூய்மை செய்யும் எளிய கைங்கரியத்திலேயே தம் வாழ்நாளைக் கழித்தார். 'இப்படித் தரையை விளக்குவதால் உமக்கு என்ன பயன்?' என்று ஊரார் கேட்டபோது, 'சுத்தம் செய்த இடத்துக்கும் செய்யாத இடத்துக்கும் வித்தியாசம் தெரிகிறதல்லவா, அதுவே பயன்; கைங்கரியம் செய்வதே பயன், அதில் எதையும் எதிர்பார்ப்பதே கூடாது' என்று அவர்களுக்குப் புகட்டினார்.
இறுதியில், எம்பெருமான் உவந்தளித்த மோட்சப் பேற்றை ஏற்று, பக்தவத்ஸலனின் திருவடிகளிலேயே ஒரு மின்னல் கீற்று போல ஐக்கியமாகிப் பரமபதம் எய்தினார்!”
ஆளவந்தார் உரைத்த அந்தத் தூய கைங்கரிய - சரணாகதித் தத்துவத்தின் ஆழத்தைக் கேட்ட சீடர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து, ஸ்ரீஆண்டாளின் திருவடிகளையும், திருக்கண்ணமங்கை ஆண்டானின் ஒப்புயர்வற்ற சரணாகதி நெறியையும் மனதாரத் தொழுதார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து தெற்கு நோக்கிச் சென்ற பாதை, தண்பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி நதிப் படுகையை அடைந்தது. தாமிரபரணிக் கரையோரம் வரிசையாக அமைந்திருந்த நவதிருப்பதி திவ்யதேசங்களான ஸ்ரீவைகுண்டம் (கள்ளபிரான்), திருப்புளிங்குடி, பெருங்குளம், இரட்டைத் திருப்பதி, தென்திருப்பேரை, திருக்கோளூர், வரகுணமங்கை ஆகிய திவ்யத் தலங்களில் எம்பெருமானைச் சேவித்துக்கொண்டு, இறுதியாகத் திருக்குருகூர் என்று அழைக்கப்படும் ஆழ்வார்திருநகரியை அடைந்தார்கள்.
நம்மாழ்வார் பதினாறு ஆண்டுகள் யோகத்தில் அமர்ந்திருந்த 'திருப்புளி ஆழ்வார்' என்னும் ஆதித் திருப்புளிய மரத்தின் அடியில் நின்று, ஆதிநாதப் பெருமாளையும், மதுரகவிகளால் வார்த்தெடுக்கப்பட்டு எழுந்தருளிய நம்மாழ்வாரின் தானுகந்த திவ்ய மங்களத் திருமேனியையும் சேவித்துப் பரவசமடைந்தார்.
அங்கே நின்ற ஆளவந்தாரின் உள்ளத்தில், தம் பாட்டனார் ஸ்ரீமந் நாதமுனிகளின் திவ்ய சரித்திரம் மின்னி மறைந்தது. நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் வழக்கொழிந்து போயிருந்த காலத்தில், இதே திருப்புளிய மரத்தின் நிழலில்தானே கண்ணிநுண் சிறுத்தாம்பைப் பன்னீராயிர முறை உருப்போட்டு நம்மாழ்வாரை நேரே பிரத்யக்ஷமாகக் கண்டு, மறைந்த பிரபந்தப் பொக்கிஷத்தை நாதமுனிகள் மீட்டெடுத்தார்!
அத்தகு புனிதத் தலத்தில் நின்ற ஆளவந்தாரின் கண்கள், அங்கு கூடியிருந்த பண்டிதர்கள், முதியவர்கள், இளைஞர்கள் அனைவரிடமும் அலைபாய்ந்தன. ‘பொலிக பொலிக பொலிக’ என்று ஆழ்வார் பாடியருளியபடி, கலி தோஷத்தைப் போக்க வல்ல பவிஷ்யதாசாரியர் இத்திருமண்ணில் எங்காவது தென்படுகிறாரா என்று பேராவலுடன் தேடினார். ஆனால், அவருடைய எதிர்பார்ப்பிற்குரிய அந்தப் பேரொளி உருவம் அங்கும் கண்களுக்குப் புலப்படவில்லை. அந்தப் பெருவெற்றிடமும் ஏக்கமும் ஆளவந்தாரின் நெஞ்சில் ஒரு பெருமூச்சாக வெளிப்பட்டது.
ஆழ்வார்திருநகரியிலிருந்து தென்மேற்கே வானமாமலை (நாங்குநேரி) தோதாத்ரிப் பெருமாளையும் சேவித்துவிட்டு, பொதிகை மலைச்சாரலில் அமைந்த திருக்குறுங்குடி நம்பி கோயிலை அடைந்தார்கள். திருமங்கையாழ்வார் பரமபதம் அடைந்த அந்தப் புனிதமான இடத்தில் நின்று நம்பிப் பெருமாளைத் தொழுதபோது, அவருடைய கண்முன்னே ஒரு பிரம்மாண்டமான இயற்கை அரண் எழுந்து நின்றது!
அதுதான் விண்ணை முட்டும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்!
இதே சமயத்தில், திருவரங்கத்தில் தெய்வவாரியாண்டான், ஆளவந்தாரின் பிரிவுத் துயர் தாளாமல் அவரது திருமேனி இளைத்து, உதடுகள் வெளுத்து, உடல் நலிவுற்று, நோவுசாத்திக்கொண்டு, வேரற்ற மரம் போலப் படுக்கையில் சாய்ந்தார்!
அவரைச் சூழ்ந்திருந்த முதலிகள் செய்வதறியாது திகைத்து, கிழக்குச் சித்திரை வீதியில் இருந்த கைதேர்ந்த வைத்தியர்களை விரைந்து அழைத்து வந்தார்கள். ஆண்டானின் நாடியைப் பிடித்துப் பார்த்த வைத்தியர்கள், “உடம்பிற்கு யாதொரு பிணியும் இல்லை; ஆனால், இவருடைய உள்மனம் ஏதோ ஒன்றைத் தீவிரமாகப் பற்றிக்கொண்டு தவிக்கிறது!” என்று கூறினர்.
பின்னர் ஆண்டானைத் தேற்றி விசாரித்தபோது, அவர் கண்கள் நீரால் நிறைய, “அடியேனுடைய ஆசாரியரான ஆளவந்தாரைத் தவிர என் மனதிற்கு வேறொன்றும் உண்டோ?” என்று ஆசாரியப் பிரேமையோடு உருகினார்!
அதைக் கேட்ட வைத்தியர்கள், “இந்த ஆசாரியப் பிரிவு நோய்க்கு மூலிகை மருந்து எதுவும் இல்லை! இவருடைய மன ஆதங்கத்தைப் போக்க, இவரை உடனே அவருடைய குருநாதரிடம் அழைத்துச் செல்வதே சிறந்த மருந்தாகும்!” என்று அறிவுறுத்தினர்.
வைத்தியர்கள் கூறிய அறிவுரையின்படி, திருவரங்கத்து வைணவ அடியார்கள் தெய்வவாரியாண்டானை கட்டணத்தில் அமர்த்தி, ஆளவந்தார் யாத்திரை சென்ற தென்திசை நோக்கி அரைகுலையத் தலைகுலையத் தம் அதிவேகப் பயணத்தைத் தொடங்கினார்கள்!
./சுஜாதா தேசிகன்
26.9.2026
பயணம் தொடரும்..
அடிக்குறிப்புகள்:
திருவோலக்கம் - சபை
நோவுசாத்திக்கொண்டது - நோய்வாய்ப்பட்டு
கட்டணத்தில் - பல்லக்கில்
அரைகுலையத் தலைகுலய - விரைந்தோடி
Comments
Post a Comment