43 - அரையர் காட்டிய திசை

43 - அரையர் காட்டிய திசை 



திருவரங்க மாநகரில் அன்றைய அந்திப் பொழுதில், செவ்வானக் கதிர்கள் மெல்ல மறையத் தொடங்கின. காவிரித் தாயின் இரு கரைகளையும் தழுவி வந்த தென்றல் காற்றில் மல்லிகையின் நறுமணமும் சந்தனக் குழம்பின் வாசனையும் கலந்து வீசின. 

ஆளவந்தார் தம் ஆசிரமத்தில் ஆழ்ந்த யோகத் தியானத்திலிருந்து விழித்தெழுவது போலத் திடீரெனப் பரபரப்புடன் காணப்பட்டார். காரணம், அரங்கமாநகரின் அரசனான அழகியமணவாளன் புறப்பாட்டிற்கு நேரமாகிவிட்டதே!

“அடடா! பகவத் குணானுபவக் காலக்ஷேபத்தில் நேரம் போனதே தெரியவில்லையே! நமக்காக நம் அழகியமணவாளன் காத்துக்கொண்டிருக்க மாட்டானே!” என்றவாறே ஆளவந்தார் அவசரமாகக் கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினார்

வீதியில் எதிரே விரைந்து வந்த அடியார் ஒருவர் அவரைச் சேவித்துவிட்டு, “ஸ்வாமி! அழகியமணவாளன் திருவீதிப் புறப்பாட்டிற்கு எழுந்தருளிவிட்டார்!” என்று கூறவே, ஆளவந்தாரின் கம்பீரமான மிடுக்கு நடை அதிவேக ஓட்டமாக மாறியது!

“நம் அழகியமணவாளனின் சாத்துப்படிச் சேவையைக் காணக் கண்கோடி வேண்டும்!” என்று ஊர் மக்கள் இங்கும் அங்கும் பேரார்வத்துடன் தெருக்களில் திரண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.

மாடமாளிகைகள் நிறைந்த சித்திரை வீதிகளின் வாசல்களில் பெண்கள் அரிசி மாவில் கோலமிட்டு, அகல் விளக்குகளை ஏற்றி வைத்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் தத்தம் தந்தையரின் தோள்கள் மீது ஏறிக்கொண்டு நம்பெருமாளைத் தரிசிக்க ஆவலுடன் வழிமேல் விழிவைத்து நோக்கியிருந்தார்கள். முதியோர்கள் வீடுகளின் திண்ணைகளில் அமர்ந்திருந்தார்கள். எல்லோர் இல்லங்களிலும் வெள்ளித் தட்டுகளில் வெற்றிலை பாக்கு, நறுமணம் கமழும் மல்லிகைப் பூக்கள், திவ்யமான திருத்துழாய் மற்றும் தோட்டத்துப் பழங்களை நம்பெருமாளுக்குச் சமர்ப்பிப்பதற்காகக் கைகளில் ஏந்தியவாறு காத்திருந்தனர்.

இவற்றையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லாமல், கால்கள் தரையில் படாதபடி மிக வேகமாக விரைந்து சென்று கொண்டிருந்த ஆளவந்தாரைக் கண்ட நகர மக்கள், “சுவாமிகள் ஏன் இன்று இப்படி விரைந்து ஓடுகிறார்?” என்று திகைப்புடன் ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டார்கள்.

தொலைவில் நெய்ப்பந்தங்களின் சுடரிலிருந்து எழுந்த புகை மேல்நோக்கி வானில் பரவிக்கொண்டிருந்தது. மத்தளத்தின் மங்கள ஓசை மெலிதாகக் காதில் விழத் தொடங்கியது. எம்பெருமான் அடியார்களின்(1) சலங்கை ஒலியுடன், ஆழ்வார்களின் அருளிச்செயலான 'பல்லாண்டு' கோஷமும் மெல்லக் கேட்டது.

ஆளவந்தார், “நம் திருவரங்க ராஜா எந்த வீதியில் எழுந்தருளியிருக்கிறார்? ரங்கா... ரங்கா!” என்று பதிலுக்குக் கூடக் காத்திராமல், கேட்டவாறே விரைந்தார். அப்போது அடியார் ஒருவர், “பெருமாள் மேற்கு மூலைக்கு எழுந்தருளிவிட்டார் அடியேன்!” என்று கூறவே, ஆளவந்தார் அப்படியே பாகனின் அங்குசத்திற்குக் கட்டுப்பட்ட யானையைப் போல உறைந்து நின்றார்! கூட வந்த சீடர்கள் ஏதும் புரியாமல் திகைத்து விழித்தார்கள்.

“அடியேனைப் பொறுத்தருள வேண்டும் ஸ்வாமி! திடீரென்று ஏன் இப்படி நின்றுவிட்டீர்கள்?” என்று வினவினார் பெரிய திருமலை நம்பி.

“நம்பியே! அதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது. பெருமாள் மேற்கு மூலையைக் கடந்து முன்செல்லட்டும்; (1) அதற்குப் பிறகு நாம் திருவோலக்கத்தில் (திவ்யச் சபையில்) சேர்ந்துகொள்ளலாம். இனி சற்று மெதுவாகவே செல்லலாம்!” என்றார் ஆளவந்தார்.

”அடியேனின் சிற்றறிவுக்கு ஒன்றும் விளங்கவில்லையே ஸ்வாமி!” என்றார் திருக்கோட்டியூர் நம்பி.

ஆளவந்தார் நிதானமாக நடந்துகொண்டே, “பாரதப் போரில் தனக்குப் படையுதவி செய்ய வேண்டுமென்று கண்ணபிரானிடம் துரியோதனன் வந்தான். அப்போது கண்ணபிரான் சயனித்துக் கொண்டிருந்தபடியால், அவனருகே சற்று நேரம் அமர்ந்து கண்ணன் விழித்தெழும் வரை காத்திருக்க எண்ணினான். ஆனால், கண்ணனுடைய திருவடிகளின் அருகே அமர்வது தன் தகுதிக்கும் மதிப்புக்கும் இழுக்கு என்று எண்ணி, அகங்காரத்துடன் கண்ணபிரானின் திருமுடிப் பக்கமிருந்த ஆசனத்தில் போய் அமர்ந்தான்!

அதேபோலக் கண்ணனிடம் உதவி கேட்க வந்த அர்ஜுனனோ, பணிவுடன் கண்ணபிரானின் திருவடிகள் பக்கமிருந்த ஆசனத்தில் அமர்ந்தான். துஷ்டனான துரியோதனன் அமர்ந்த இடம் திருமுடிப் பக்கமாதலால், பெரிய பெருமாள் தன் திருமுடியை வைத்தருளியிருக்கின்ற மேற்குத் திசையானது 'துரியோதன ஸ்தானம்' அல்லவா? (2) அங்கே நமக்கு என்ன வேலை? அதனால் நாம் கிழக்கு நோக்கிச் சென்று, பெருமாளின் திருவடித் தாமரைகளைச் சேவிக்கலாம்!” என்றார்.

”ஸ்வாமி! தங்கள் திருமாளிகை, பெரிய பெருமாள் தன் திவ்ய திருவடிகளை நீட்டிப் பள்ளிகொண்டிருக்கும் கிழக்குத் திசையில் அமைந்திருப்பதற்கு இதுதான் காரணமோ?” என்று வியப்புடன் வினவினார் பெரிய நம்பி.(4)

ஆளவந்தார் புன்னகையுடன் கிழக்குத் திசையை நோக்கி நடக்க, அவர்தம் சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.

எப்போதுமே எம்பெருமானிடம் தனக்கென எதையும் வேண்டிக்கொள்ளாத ஆளவந்தார், அன்று மட்டும் நெஞ்சம் உருகி, ”'நாட்டில் உள்ளவர்களை உய்யச் செய்து வழிநடத்துபவரைத் தேடு' என்று அடியேனின் பாட்டனார் தேடச் சொன்ன அந்த அவதார புருஷரை அடியேனுக்குக் காட்டிக் கொடுத்தருள்!” என்று அழகியமணவாளனின் திருவடிகளில் உருகி வேண்டிக்கொண்டார்.

நாட்கள் பல கடந்தன; மாதங்கள் பல உருண்டோடின. திருவரங்கத்திற்கு வெளியூர்களிலிருந்து வரும் வைணவ அடியார்கள் ஆளவந்தாரைச் சேவிப்பதற்காக வந்தவண்ணம் இருந்தனர். ஆளவந்தாரும் அவர்களுக்குப் பல நல் உபதேசங்களை அருளிச்செய்து, “உங்கள் திவ்யதேசங்களில் உற்சவங்கள் எல்லாம் எவ்வாறு நடைபெறுகின்றன?” என்று விசாரிப்பார்.

அதன்பின்னர் தவறாமல் கேட்கும் கேள்வி: “உங்கள் ஊரில் யாரேனும் நற்குணங்களிலும், வேதாந்த சாஸ்திர அறிவிலும் மிகச் சிறந்து விளங்குகிறார்களா?” என்பதுதான்!

ஆனால், வந்து தரிசித்தவர்களும், “அப்படிப்பட்டவர்கள் எவரும் எங்களுக்குத் தெரியவில்லையே ஸ்வாமி!” என்றே பதிலாகக் கூறிவந்தனர்.

அன்று ஒரு விசேஷமான திருநாள்! திருவாத்தியாயன உற்சவம் (அத்யயன உற்சவம்). அரையர் சேவை. அழகியமணவாளன் திருமணிமண்டபத்தில் (திருவோலக்கத்தில்) அடியார்கள் கூட்டம் புடைசூழ எழுந்தருளியிருக்க, பெருமைமிக்க திருவரங்கத்து அரையர், நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்களை உள்ளம் உருகி அபிநயித்துப் பாடிக்கொண்டிருந்தார்.

குழுமியிருந்த அடியார்கள் கூட்டம் அரையர் சேவையைக் கண்டும் கேட்டும் மெய்ம்மறந்து, 'ஆஹா! ஆஹா!' என்று அனுபவித்துக்கொண்டிருந்தது. அடுத்து எந்தப் பாசுரத்திற்கு அரையர் அபிநயம் பிடிக்கப்போகிறாரோ என்ற ஆவலுடன் அனைவரும் எதிர்நோக்கியிருந்தனர்.

’கிளிங்... கிளிங்...’ என்று கைத்தாளத்தை இசைத்த திருவரங்கத்து அரையர், உள்ளம் உருகி, சாட்சாத் நம்மாழ்வாரே நேரில் தோன்றிப் பேசுவது போல, 'கடுவினை...' (3) என்ற திருவாய்மொழிப் பாசுரத்திற்குப் பொருள் உரைத்து அபிநயத்தார்:

“நம் அடியார்களே! நாம் உங்களுக்குத் தெளிவாகக் கூறுகிறோம்! உடனே புறப்படுங்கள்! உங்கள் தீவினைகளும் துன்பங்களும் நீங்கும்! பேரானந்தமும் முக்தியும் ஒருமிக்க விளங்கும் மோட்ச உலகிற்கு நிகரான அத்தகைய திவ்யமான திருஅனந்தபுர நகரைச் சென்று அடைவீர்களாக!” என்று ஆளவந்தாரைக் கூர்ந்து நோக்கி, அவரையோ சுட்டிக்காட்டுவது போல அபிநயத்துடன் பாடி முடித்தார்.

அங்கிருந்த அடியார்கள் கூட்டம் அடுத்த பாசுரத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் அரையர், அதே பாசுரத்தை ஆளவந்தாரைக் கூர்ந்து நோக்கியவாறே மீண்டும் ஒருமுறை மிக அழுத்தமாக அபிநயம் பிடித்துப் பாடித் தொடர்ந்தார்!

ஆளவந்தார் திகைப்புடன் அரையரை நோக்கினார்! அப்போது அவர்தம் அகக்கண்ணில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அரையர் அணிந்திருந்த அழகியமணவாளனின் திருமாலை, சாட்சாத் நம்மாழ்வார் சூடியிருக்கும் நறுமணம் கமழும் மகிழம்பூ மாலையாகக் காட்சியளித்தது! திருவரங்கத்து அரையரே, திருக்குருகூர்ச் சடகோப ஆழ்வாராகவே அவர்தம் கண்களுக்குச் சேவை சாதித்தார்!

’பொலிக பொலிக பொலிக!’ என்று எதிர்காலத்தில் அவதரிக்கப்போகும் மாமுனிவரைக் கோடிட்டுக் காட்டிய நம்மாழ்வாரே, 'நாட்டில் உள்ளவர்களை உய்யச் செய்து வழிநடத்தப்போகும் அந்த அவதார புருஷரைத் திருஅனந்தபுர நகரத்திலே தேடுங்கள்!' என்று தமக்குக் கட்டளையிடுவதாகவே ஆளவந்தாருக்குத் தோன்றியது. அது சாட்சாத் நம்மாழ்வாரின் திவ்ய நியமனமே என்று மனத்தினுள் அறுதியிட்டுத் தீர்மானித்த ஆளவந்தார், அந்தத் திருவோலக்கத்திலிருந்து மெல்ல எழுந்தார்.

நம்மாழ்வாராகவே காட்சி தந்த அரையரை நெஞ்சம் உருகி வணங்கினார். இவை அனைத்தையும் புன்னகையுடன் அமைதியாகக் கண்டு ரசித்துக்கொண்டிருந்த அழகியமணவாளனின் திவ்ய திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, அவனருளையும் பெற்று, “இப்போதே திருஅனந்தபுரத்திற்குப் புறப்படலாம்!” என்று அருளிச்செய்து, தம் திரிதண்டத்தை ஏந்தியவாறே அங்கிருந்து உடனே புறப்பட்டார்!

./சுஜாதா தேசிகன்

பயணம் தொடரும்… 

அடிக்குறிப்புகள்:

(1) எம்பெருமான் அடியார்கள் - தேவதாசிகள்

(2) ஐதீகம்

(3)நம்மாழ்வார் பாசுரம்

கடுவினை களையலாகும், காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்தபுரம்
படம் உடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ, நமர்கள் உள்ளீர்!-நாம் உமக்கு அறியச் சொன்னோம்.

(4) இது அடியேனின் யூகம்

Comments