38 - முதல் யாத்திரை
38 - முதல் யாத்திரை
காட்டுமன்னாரின் சந்நிதியில் விடைபெற்றபோது, கிழக்கு வானில் விடிவெள்ளி மங்க, மெல்ல உதித்த இளங்கதிரவன் தன் பொன்னொளியை அடர்ந்த மரக்கிளைகளின் மீது படரவிட்டுக்கொண்டிருந்தான்.
வானத்து விடிவெள்ளி போல அரசபோகங்கள் மங்கிப்போக, ஆளவந்தாரின் நெஞ்சில் மெய்ஞ்ஞானத்தின் பேரொளி பரவியது. அரண்மனைப் பல்லக்குகளையும் சொகுசு வாழ்வையும் முற்றிலும் உதறிவிட்டு, ஆசாரியர் மணக்கால் நம்பியின் பின்னால் அடக்கத்துடன் நடக்கத் தொடங்கினார். பாட்டனார் நாதமுனிகள் விட்டுச்சென்ற பெருநிதியான அந்த அரங்கனைக் காணும் எல்லையற்ற ஆவலில், ஆளவந்தாரின் வெறுங்கால்கள் காவிரிக் கரையை நோக்கி விரைந்தன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழ வளநாட்டில், இன்றைய பெருவழிகளோ செப்பனிடப்பட்ட சாலைகளோ கிடையாது. காவிரியும் கொள்ளிடமும் தம்போக்கிற்குப் பாய்ந்து வளைந்தோடிய பெரும் மணல்திட்டுகளும் அடர்ந்த நாணல் காடுகளுமே அவர்களுக்குப் பாதையாக அமைந்தன. பேராற்றின் கரைகளைப் பிடித்து நடப்பதே, அவர்கள் பயணத்திலும் வாழ்விலும் கரையேறுவதற்கான வழியாக அமைந்தது. வழியில் நதிக்கரைகளில் அமைந்த திவ்யதேசங்களைச் சேவித்து, ஆழ்வார்களின் பாசுரங்களைப் பாடி எம்பெருமானின் மங்களாசாசனக் குணங்களை மனமுருகி அனுபவித்தவாறே அவர்களின் யாத்திரை தொடங்கியது.
அவர்களுடன் பயணிக்க நம் வாசகர்களையும் அன்புடன் அழைக்கிறோம். வாருங்கள்.(1)
வீரநாராயணப் பேரேரியின் மண்படிந்த மதகுகளைக் கடந்து, கொள்ளிடக் கரையின் ஒற்றையடிப் பாதையை ஒட்டி அவர்கள் தெற்கு நோக்கித் தங்களின் பயணத்தைத் தொடங்கினர். ஏரிக்கரையில் நாணல்களும் நெட்டி மரங்களும் அடர்ந்து நிற்க, நீர்க்காகங்களும் நாரைகளும் தங்களின் கூரிய அலகுகளால் நீரில் பாய்ந்து மீன் வேட்டையாடிக்கொண்டிருந்தன. உச்சி வெயில் தலைக்கு மேல் சுட்டெரித்த நண்பகல் வேளையில், கொள்ளிட நதியின் கடவூர் துறையை வந்தடைந்தனர். அங்கே அலைமோதிப் பாய்ந்த கொள்ளிடப் பேராற்றைக் கடக்க, ஒரு பரிசலில் ஏறி மெதுவாக அலைகளின் மேல் மிதந்து மறுகரைக்குச் சென்றனர்.
அதிகாலையில் தொடங்கிய பயணம் முதல் நாளின் அந்திப் பொழுதை எட்டியிருக்க, கரடுமுரடான காடுகளின் ஊடேயும் ஈரமண் நிறைந்த ஆற்றங்கரையின் வழியேயும் தொடர்ந்து நடந்த ஆசாரியனும் சீடரும் திருவெள்ளியங்குடி என்னும் திவ்யதேசத்தை வந்தடைந்தனர்.
அங்கே, மகரந்தங்கள் உதிர்ந்து நறுமணம் கமழும் அழகிய சோலைகள் சூழ்ந்த அந்தத் திருக்கோவிலுக்குள் அவர்கள் நுழைந்தபோது, அடர்ந்த மரக்கிளைகளில் அமர்ந்திருந்த குயில்கள் 'அரி... அரி...' என்று எம்பெருமானின் திருநாமத்தை ஓயாது கூவிக்கொண்டிருந்தன. அந்தத் தெய்விகச் சோலையின் எழிலில் யமுனைத்துறைவர் மெய்மறந்து நின்றார்.(2)
ஸ்ரீமரகதவல்லித் தாயாரையும், கிழக்கு நோக்கிப் பாம்பணைமேல் புஜங்க சயனத்தில் பள்ளிகொண்டு சேவை சாதிக்கும் எம்பெருமான் ஸ்ரீ கோலவில்லி ராமரையும் கைகூப்பிச் சேவித்தனர்.
கருவறையை உற்று நோக்கியபோது, யமுனைத்துறைவரின் கூரிய கண்களில் ஒரு விசித்திரமான வியப்பு அரும்பியது. பொதுவாக எம்பெருமானின் திவ்யத் திருக்கரங்களை அலங்கரிக்க வேண்டிய சங்கு, சக்கரங்கள், அங்கே சந்நிதிக்கு எதிரே நின்ற கருடாழ்வாரின் திருக்கரங்களில் மிளிர்வதைக் கண்டார்.
வியப்புடன் தன் ஆசாரியரை நோக்கிய யமுனைத்துறைவரிடம், மணக்கால் நம்பி புன்னகையுடன், "யமுனைத்துறைவா! தேவத் தச்சன் விஸ்வகர்மாவை மிஞ்ச எண்ணிய அசுரத் தச்சன் மயன் இங்குத் தவம் புரிந்தான். காட்சி தந்த எம்பெருமானைச் சித்திரகூடத்து இராமபிரானாக, வில்லேந்திய திருக்கோலத்தில் தரிசிக்க விரும்பினான். அவனுக்காகப் பெருமாள் தன் சங்கு சக்கரங்களைக் கருடாழ்வாரிடம் தந்துவிட்டு, வில்லேந்தி 'கோலவில்லி ராமனாகப்' பள்ளிகொண்டான். அதனால்தான் இங்குப் பெருமாளுக்குப் பதிலாகக் கருடாழ்வார் ஆயுதங்களைத் தாங்கி நிற்கிறார்!" என்றார்.
பிரகாரத்தை வலம் வந்தபோது நம்பி, "அதுமட்டுமன்றி, வாமன அவதாரத்தின் போது மகாபலி சக்கரவர்த்தியின் கமண்டலத் துவாரத்தை வண்டாக உருவெடுத்துத் தடுத்த சுக்ராச்சாரியார், பெருமாளின் தர்ப்பைப் புல்லால் ஒரு கண் பார்வையை இழந்தார் அல்லவா? அவர் தன் தவறை உணர்ந்து இங்கு வந்து கடுந்தவம் இயற்றி, எம்பெருமானின் திருவருளால் மீண்டும் இழந்த பார்வையைப் பெற்றார். 'வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்தான்' என்று திருமங்கையாழ்வார் இத்தலத்து நாயகனைப் போற்றுகிறார். திருவரங்கத்தை மட்டுமே 'கோயில்' என்று கொண்டாடுவது வழக்கம்; ஆனால், திருமங்கையாழ்வார் இந்தத் திருவெள்ளியங்குடியையும் 'கோயில்' என்றே மங்களாசாசனம் செய்துள்ளார் என்றால் இதன் பெருமை எத்தகையது!" என்று நடந்துகொண்டே விளக்கினார்.
நெய்விளக்குகளின் சுடரொளியில், வில்லேந்திய கோலவில்லி ராமபிரானின் பேரழகைக் கண்ட ஆளவந்தாரின் நெஞ்சம் உருகியது; அரச வாழ்வின் எஞ்சியிருந்த களைப்பெல்லாம் அந்தத் தரிசனத்தில் கரைந்துபோயிற்று. அன்றைய இரவை, அத்திருக்கோவிலின் தலவிருட்சமான வாழை மரங்கள் செறிந்த நந்தவனத்தை ஒட்டிய வசந்த மண்டபத்தின் குளிர்ந்த கல்தரையில், விண்மீன்கள் நிறைந்த வானின் கீழ் இருவரும் அமைதியாகக் கழித்தனர்.
மறுநாள் அதிகாலைப் பொழுதில் திருவெள்ளியங்குடியிலிருந்து அவர்கள் தங்களின் யாத்திரையைத் தொடர்ந்தனர். பொன்னியின் படுகையை நோக்கி, மருத நிலத்தின் பசுமையான வரப்புகளின் வழியே அவர்களின் வெறுங்கால் பயணம் நீடித்தது. வரப்புகளில் வயல் நண்டுகள் வளை தோண்ட, ஈரச் சேற்றில் உழவர்கள் ஏர்பூட்டிப் பாடிய உழத்திப் பாட்டின் இனிய நாதம் காற்றில் மிதந்துவந்து அவர்களின் செவிகளைத் தழுவியது.
பொன்னி நதி பல கிளைகளாகப் பிரிந்து பாய்ந்து வளம் கொழிக்கும் குடந்தைப் பகுதியை அவர்கள் அடைந்தபோது, அந்தி சாயும் மாலை வேளை எட்டியிருந்தது. காவிரி, அரசலாறு, முடிகொண்டான் ஆகிய நதிகளின் குளிர்ந்த நீர்வளத்தால் எப்போதும் பசுமையோடும் குளிர்ச்சியோடும் திகழும் திருக்குடந்தை மாநகரத்திற்குள் நுழைந்தனர். பிரளய காலத்தில் பிரம்மன் படைப்பு விதைகளை இட்டு வைத்திருந்த அமுதக்குடம் மிதந்து வந்து தங்கி, அதன் மூக்கு உடைந்து அமுதம் பெருகி வழிந்த தலம் என்பதால் 'குடமூக்கு' என்றும் போற்றப்படும் அந்தத் தெய்விகப் பதியில், மாட மாளிகைகளும் சோலைகளும் சூழ்ந்த சாரங்கபாணிப் பெருமாளின் திருக்கோவிலை வந்தடைந்தனர்.
கருவறையில், திருமழிசை ஆழ்வாரின் பாசுரத்திற்காகப் படுக்கையிலிருந்து சற்றே எழ முயலும் 'உத்தான சயனக்' கோலத்தில் சேவை சாதிக்கும் எம்பெருமானை, தெவிட்டாத 'ஆராவமுதனாய்' நெஞ்சில் தேக்கி இருவரும் உள்ளம் உருகச் சேவித்தனர்.
ஆராவமுதனைச் சேவித்த அந்த விநாடியில், யமுனைத்துறைவரின் நெஞ்சில் தன் பாட்டனார் நாதமுனிகளின் நினைவு அலைமோதியது. காட்டுமன்னார் கோவிலில் நாதமுனிகள் ஓர் அடியவர் பாடிய 'ஆராவமுதே' என்ற திருவாய்மொழிப் பாசுரத்தைக் கேட்டு, அதன் ஈர்ப்பால் தூண்டப்பட்டு மறைந்துபோயிருந்த நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை மீட்கப் புறப்பட்ட அந்த வரலாற்றுத் திருப்புமுனை நினைவுக்கு வர, யமுனைத்துறைவரின் மேனி சிலிர்த்தது. தம் பாட்டனாரின் பெருந்தேடலுக்கு வித்திட்ட அதே ஆராவமுதனைத் தம் கண்களால் தரிசித்த பேரானந்தத்தோடு, அன்றிரவு அத்திருக்கோவிலின் அருகே அமைந்திருந்த திருமடத்துத் திண்ணையில் இருவரும் அமைதியாக இளைப்பாறினர்.
அவர்களது யாத்திரையின் மூன்றாம் நாள் பொழுது புலர்ந்தது. அன்று காவிரியின் வடகரையை ஒட்டியே பயணம் தொடர்ந்தது. ஆற்றின் இரு மருங்கிலும் தென்னை, பாக்கு, மாந்தோப்புகள் விண்ணை மறைக்கும் அளவுக்குச் செறிந்திருந்தன. வானம்பாடிகளும் குயில்களும் காட்டின் அமைதியைக் கலைத்துக் கூவ, ஆற்றோர நாணல் புதர்களில் நீர் அருந்திய காட்டுப்பன்றிகளும் மான்களும் இவர்களின் காலடி ஓசை கேட்டுச் சட்டென்று மரங்களுக்குள் மறைந்தன.
நண்பகல் வேளையில் அவர்கள் கபிஸ்தலம் என்னும் திவ்யதேசத்தை அடைந்தனர். அங்கே, பாம்பணைமேல் புஜங்க சயனக் கோலத்தில் 'கஜேந்திர வரதனாகச்' சேவை சாதிக்கும் எம்பெருமானை வணங்கி நின்றனர். இந்திரத்யும்னன் என்ற மன்னன் அகத்தியரின் சாபத்தால் யானையாகப் பிறந்து, தன் காலை முதலை கவ்வியபோது 'ஆதிமூலமே!' என்று அலறி அழைக்க, எம்பெருமான் கருடன்மீது விரைந்து வந்து சக்கரத்தை ஏவி முதலையை அழித்து, யானைக்கு மோட்சம் அளித்த உன்னதத் தலம் என்பதை நம்பி விவரித்தார்.
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன், கடல் கிடக்கும் மாயன்' என்று திருமழிசை ஆழ்வார் நெஞ்சுருகிப் பாடியது இதே கபிஸ்தலத்து எம்பெருமானைத்தான்!" என்று மணக்கால் நம்பி கூற, யமுனைத்துறைவர் பக்திப் பரவசத்தில் திளைத்து நின்றார். இருவரும் சேர்ந்து அந்த நான்முகன் திருவந்தாதிப் பாசுரத்தை உளமுருகச் சேவித்தனர்:
"கூற்றமும் சாரா; கொடுவினையும் சாரா; தீ
மாற்றமும் சாரா வகைஅறிந்தேன் - ஆற்றங்
கரைக்கிடக்கும் கண்ணன், கடல்கிடக்கும் மாயன்
உரைக்கிடக்கும் உள்ளத்து எனக்கு"(3)
"பாற்கடலில் பள்ளிகொண்ட மாயன், இங்கே காவிரிக் கரையில் கபிஸ்தலத்தில் திருக்கண் வளர்ந்தருளுகிறான். இந்தக் கண்ணன் அருளிச்செய்த கீதையின் சரமச் சுலோகமே என் நெஞ்சில் குடிகொண்டுள்ளது; ஆதலால் எனக்கு யம பயமில்லை, பாவங்களும் எனைத் தீண்டா என்கிறார் ஆழ்வார்!" என்று நம்பி எடுத்துரைத்தார்.
அதனைக் கேட்டதும் ஆளவந்தாருக்கு, மணக்கால் நம்பி கீதையின் அந்தச் சரமச் சுலோகத்தை உபதேசித்துத் தம் உள்ளத்தில் பதிய வைத்த தருணம் மனக்கண்ணில் நிழலாடியது. 'ஆழ்வாரைப் போலவே, சரமச் சுலோகத்தை நெஞ்சில் தாங்கி நிற்கும் பாக்கியம் அடியேனுக்கும் வாய்த்ததே!' என்று எண்ணியவாறு, தமக்கு இந்த நல்வழியை அருளிய ஆசாரியரின் பாதங்களை நெக்குருக நோக்கி நின்றார்.
கபிஸ்தலத்து எம்பெருமானின் திருவடிகளில் சிரம் தாழ்த்தி விடைபெற்று, மாலையின் பொன்னிறக் கதிர்கள் காவிரியின் அலைகளில் தங்கமாய் மிதந்த வேளையில், தேவர்களும் நந்தக முனிவர் முதலான தவமுனிவர்களும் ஒன்றுகூடி வழிபட்டதால் 'திருக்கூடலூர்' என்று போற்றப்படும் திவ்யதேசத்தை வந்தடைந்தனர். அங்கே, திருக்கரத்தில் பிரயோகச் சக்கரத்தோடு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் வையம் காத்த பெருமாளான ஜெகத்ரக்ஷகனையும், கையில் செங்கோல் ஏந்திய உற்சவ மூர்த்தியையும் கைகூப்பித் தொழுதனர். அம்பரீஷ மன்னன் எம்பெருமானைத் தொழுது அருள்பெற்ற வரலாற்றை நம்பி விவரிக்க, இருவரும் அந்தத் தெய்விக அமைதியில் திளைத்தனர்.
கோயிலில் கிடைத்த பிரசாதத்தையும் பழங்களையும் ஏற்றுக்கொண்டு, அன்றைய அந்திப் பொழுதில் காவிரியின் குளிர்ச்சியான சோலைகளின் நடுவே அமைந்திருந்த திருக்கூடலூரின் நதிக்கரை மண்டபத்தில் இளைப்பாறினர். அங்கே படித்துறையின் கருங்கல் இடுக்கிலிருந்து சிறு ஊற்றெனத் தூய நீர் இடைவிடாது கசிந்து வழிவதைக் கண்ட ஆளவந்தாருக்கு, எம்பெருமானின் அளவற்ற 'நீர்மை' குணமே நினைவுக்கு வந்தது. எவ்வளவு கடினமான பாறையாயினும் அதையும் நெகிழச் செய்து கசியும் தண்ணீரைப் போல, எத்தகைய வன்நெஞ்சத்தையும் தன் எல்லையற்ற எளிய கருணையால் கரைத்துவிடும் நாரணனின் நீர்மையை எண்ணி வியந்தார். வழிநெடுகிலும் மணக்கால் நம்பி ஆழ்வார்களின் பாசுரங்களின் உட்பொருள்களை எடுத்துரைத்துக்கொண்டே வர, ஆளவந்தாரின் மனமோ மெய்ஞ்ஞானத் தாகத்துடன் திருவரங்கத்தை நோக்கி விரையத் தொடங்கியது.
அன்றிரவு, ஆளவந்தார் உறக்கமின்றி விழித்திருப்பதை அறிந்து கொண்ட நம்பி, “யமுனைத்துறைவரே! நேற்று வரை அரண்மனைப் பட்டு மெத்தையிலும் தங்கக் கட்டிலிலும் துயின்ற உமக்கு, இன்று காவிரிக் கரையின் புழுதி மெத்தையும் இந்த மேடு பள்ளமான கல்தரையும் சுகமாக உறக்கத்தைத் தரவில்லையோ?” என்றார்.
ஆளவந்தார் புன்னகைத்து, “ஆசாரியரே! நாம் இன்று சேவித்த திருமழிசைப் பிரான் பாசுரத்தை அனுபவித்து, என் பாட்டனாரின் நிதியை எப்போது பெறப் போகிறோம் என்ற எண்ணத்தால் உறக்கம் வரவில்லை!” என்றார்.
“எனக்கும்கூட வரவில்லை! சில வருடங்களுக்கு முன் திருவரங்கத் திருவைக் காப்பாற்றிய கதையை உமக்குக் கூறுகிறேன், கேளும்!” என்று நம்பி ஒட்டர் கலகம் பற்றிக் கூறத் தொடங்கினார்.
மணக்கால் நம்பி ஆளவந்தாருக்குக் கூறியதன் சுருக்கத்தை நம் நேயர்களுக்கு இங்கே தருகிறோம்:
நாதமுனிகளின் காலத்துக்குப் பிறகு உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பியும் ஆசாரியப் பொறுப்பை ஏற்று வைணவ நெறியை வளர்த்து வந்த சமயம், கலிங்க தேசத்து மன்னன் ஒருவன் திருவரங்கத்தின் மீது படையெடுத்து வந்தான். இதை முன்கூட்டியே அறிந்த கோயில் நிர்வாகிகள், அழகிய மணவாளனைத் திருவரங்கத்திலிருந்து திருமாலிருஞ்சோலை அழகர் சந்நிதிக்கு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு சென்றார்கள். அங்கே அழகிய மணவாளனை ஓராண்டு காலம் பாதுகாத்து ஆராதித்து வந்தபின், கலகம் அடங்கியதும் மீண்டும் திருவரங்கத்திற்கே எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்தனர்.
ஆனால், முன்பு பாஞ்சராத்ர முறைப்படி எம்பெருமானுக்குக் கைங்கரியம் செய்துவந்தவர்கள் அரச தண்டனைக்குப் பயந்து திருவரங்கத்தை விட்டு வெளியேறியிருந்ததால், அவர்களில் ஒருவரும் அங்கு எஞ்சியிருக்கவில்லை. வேறு வழியின்றி, மதுரைப் பயணத்தின்போது பெருமாளுக்குப் பணிவிடை செய்துவந்த வைகானச நம்பிமார்களே திருவரங்கத்திலும் தங்கள் வழக்கப்படி ஆராதனங்களைத் தொடரத் தொடங்கினர். இந்தக் கலகத்திற்குப் பிறகு, பிற சமயங்களைச் சார்ந்த பலரும் திருவரங்கத்திலேயே இல்லம் அமைத்துக் குடியேறி வாழ்ந்து வந்தனர்.
கோயில் நிர்வாகமும் ஆராதன முறைகளும் நிலைதடுமாறியிருந்த இத்தகைய சூழலில்தான், மணக்கால் நம்பி தம் ஆசாரியனின் கட்டளையை நிறைவேற்றி, தகுதியான தலைவரை அரியணையில் அமர்த்தும் பொருட்டு யமுனைத்துறைவரை ஆட்கொள்ளப் புறப்பட்டார். இதோ, வெற்றியுடன் திரும்பிக்கொண்டும் இருக்கிறார்.
நாமும் அந்தப் பயணத்தில் மீண்டும் இணைந்துகொள்வோம்.
நள்ளிரவு கடந்த வேளையில் ஆளவந்தாரும் மணக்கால் நம்பியும் சற்று கண்ணயர்ந்தனர்.
அவர்களது யாத்திரையின் நான்காம் நாள் பொழுது புலர்ந்தது. அன்று, ஐந்து நதிகள் பாயும் புண்ணியத் தலமான திருவையாற்றுப் பகுதியை வந்தடைந்தனர். குடமுருட்டியின் மணற்பரப்பில் கால் புதையக் கடந்து, பழுத்துக் குலுங்கிய நாவல் மரங்களும் மருத மரங்களும் நிழல் தந்த வழியே கண்டியூரை அடைந்தனர். காற்றில் மிதந்து வந்த தாழம்பூவின் வாசனை ஆற்றுப்படுகையை நிறைத்திருந்தது.
அங்கே நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரசாப விமோசனப் பெருமாளின் சந்நிதியை அடைந்து கைகூப்பினர். பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்ததால் ஏற்பட்ட சாபத்தால் சிவபெருமானின் கையில் கபாலம் ஒட்டிக்கொள்ள, எம்பெருமான் நாரணன் இங்குதான் பிட்சாடனாராக வந்த சிவபெருமானின் கபாலத்தில் தன் தேவியின் திருக்கரங்களால் பிச்சையிடச் செய்து அவரது சாபத்தைத் தீர்த்தருளினார் என்ற அரிய தல வரலாற்றை நம்பி கூறினார். எம்பெருமானின் திருவருளால் குறைகள் நீங்கப் பெற்ற புண்ணிய பூமி இது என்பதை உணர்ந்து அப்பெருமானைத் தரிசித்த யமுனைத்துறைவர் பரவசத்தில் திளைத்தார்.
தரிசனம் முடிந்தபின், கண்டியூரின் சோழர் காலத்து அக்ரஹாரத் திண்ணைகளில் அமர்ந்து பெருமாளின் பிரசாதத்தைத் தங்கள் ஒருவேளை உணவாக அமுது செய்தனர். மாலை மயங்கும் வேளையில் அங்கே அமைந்திருந்த சத்திரத்தில் தங்கி, மறுநாள் பயணத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டனர்.
ஐந்தாம் நாள் பொழுது புலர்ந்ததும், காவிரியின் தென்கரை வழியே அவர்கள் யாத்திரையைத் தொடர்ந்தனர். ஒருபுறம் சீறிப் பாயும் கொள்ளிடமும், மறுபுறம் நிதானமாகத் தவழ்ந்து செல்லும் காவிரியும் ஓட, நடுவே அமைந்த இயற்கை நிலப்பரப்பு அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. தூரத்தில் கரிகால் வளவன் கட்டிய பெருங்கல்லணை கருங்கல் அரணாய் எழுந்து நின்ற காட்சியைக் கண்டனர்; பெருவெள்ளத்தைத் தடுத்துத் திசைதிருப்பிய சோழனின் அந்த வரலாற்றுச் சாதனையை ஆளவந்தார் வியப்புடன் நோக்கினார்.
அன்று மாலை, கல்லணைக்கு அருகில் உள்ள திருப்பேர்நகர் என்னும் கோவிலடித் தலத்தை அவர்கள் அடைந்தனர். அதுவே 'அப்பால ரங்கநாதர்' எழுந்தருளியிருக்கும் தலம் என்றும், திருவரங்கத்திற்கு முன்பாகவே எம்பெருமான் இங்குத் தங்கி அருள்செய்தான் என்றும் நம்பி எடுத்துரைத்தார். அங்கே சிறு குன்றின் மீது பாம்பணையில் பள்ளிகொண்டு, தன் வலக்கையால் மார்க்கண்டேய முனிவரின் தலைமீது கைவைத்து ஆசீர்வதித்தவாறும், இடக்கையில் அப்பக்குடத்தைத் தாங்கியவாறும் சேவை சாதிக்கும் 'அப்பக்குடத்தான்' எம்பெருமானைக் கண்டு யமுனைத்துறைவர் உள்ளம் உருகிச் சேவித்தார். உபரிசரவசு மன்னன் தன் சாபம் நீங்குவதற்காகச் சமர்ப்பித்து உய்வடைந்த அந்தத் திவ்ய அப்பப் பிரசாதத்தை இருவரும் பக்திப் பெருக்குடன் பெற்று அமுது செய்தனர்.
அன்றிரவு, அத்திருக்கோவிலின் பிரகாரத்தில் தங்கி, எம்பெருமானின் திருநாமங்களைத் தியானித்தவாறே அமைதியாகத் துயின்றனர்.
./சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்..
அடிக்குறிப்புகள்:
(1) காவிரியின் இரு கரைகளையும் தழுவி அமைந்த மணற்பாங்கான சோலை வழிகளிலும் ஆற்றங்கரை மணல், சேறு, கரடுமுரடான வழித்தடங்கள், ஆறுகள், திவ்யதேச வழிபாடுகள், ஆசாரிய உபதேசங்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஆளவந்தாரின் யாத்திரைப் பாதையை (காட்டுமன்னார் கோவில் -> திருவெள்ளியங்குடி -> குடந்தை -> கபிஸ்தலம் -> திருக்கூடலூர் -> கண்டியூர் -> கோவிலடி -> திருவரங்கம்) என்று ஆறு நாளாக அமைத்திருக்கிறோம்.
காட்டுமன்னார் கோவில் முதல் திருவரங்கம் வரையிலான திவ்யதேச யாத்திரைப் பாதை வரைபடம்
(குறிப்பு : ஏன் அன்பிலுக்கு செல்லவில்லை ? ஐந்தாம் நாள் இரவில் கோவிலடியில் ஒட்டர் கலக வரலாற்றைக் கேட்டு முடித்தவுடன், மணக்கால் நம்பியின் முதன்மை நோக்கம் ஆளவந்தாரைத் தாமதமின்றித் திருவரங்கத்தில் பெரியபெருமாள் திருமுன்பு கொண்டு சேர்ப்பதுதான். திருவரங்கத்தை இத்தனை நெருங்கிய பின், வடகரைக்கு விலகிச் செல்லாமல் திருவரங்கத்தை நோக்கி நேராக விரைவதே கதையின் தீவிரத்திற்கும் உணர்ச்சிப் பெருக்கிற்கும் கூடுதல் வலு சேர்க்கும். கோவிலடியிலிருந்து அன்பில் செல்ல வேண்டுமென்றால், கல்லணையைத் தாண்டி வடகரையை அடைந்து அன்பில் சென்றுவிட்டு, மீண்டும் திருவரங்கம் செல்லக் கொள்ளிடத்தைக் கடக்க வேண்டும். அதனால் திருஅன்பிலை சேர்க்கவில்லை. வாசகர்களும் சுந்தரராஜப் பெருமாளும் மன்னிப்பார்கள் என்று நம்புகிறோம்.
(2) திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழியின் (4.10.7) திருவெள்ளியங்குடி பாசுர வர்ணனை: "அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப" - தாதுகளையுடைய அழகிய சோலைகளிலே இருந்துகொண்டு வாழும் குயில்கள் அரி அரி என்று எம்பெருமானின் திருநாமத்தை ஓயாது பாடுவதாக அமைந்த இயற்கை வர்ணனை.
(3) நான்முகன் திருவந்தாதி - பாசுரம் 50.
(4) திவ்ய தேசத்து வர்ணனைகள், கதைகள் - ஸ்தல வரலாறு.
Comments
Post a Comment