44 - ஆண்டானின் பிரேமை
44 - ஆண்டானின் பிரேமை திருவரங்கத்தரையர் பாடிய 'கடுவினை களையலாகும்...' என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் வழியே, சாட்சாத் நம்மாழ்வாரே தமக்கு உத்தரவிட்டதாக உணர்ந்த ஆளவந்தார், ஒரு கணமும் தாமதிக்கவில்லை! கையில் திரிதண்டத்தையும், நெஞ்சில் அகலாத எம்பெருமான் சிந்தனையையும் ஏந்தியவாறு, தம்முடைய பிரிய சீடர்களான பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி உள்ளிட்ட அடியார்கள் கூட்டம் சூழத் தென்திசை நோக்கித் தம் யாத்திரையைத் தொடங்கினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகம்! இன்றைக்கு நாம் காணும் தார்ச்சாலைகளோ, பாலங்களோ அன்று கிடையாது. அடர்ந்த காடுகளும், சலசலவென ஓடும் நதிப் பள்ளத்தாக்குகளும், வனவிலங்குகள் நிறைந்த புதர்களுக்கு நடுவே சென்ற ஒற்றையடிப் பாதைகளுமே வழிப்போக்கர்களின் வழிகளாக அமைந்திருந்தன. எனினும், ஸ்ரீவைஷ்ணவப் பேரமைப்பைப் பாதுகாக்கப் போகும் அந்தப் 'பவிஷ்யதாசாரியரைத்' தேடிக் கண்டடையும் ஏக லட்சியம், ஆளவந்தாரின் நடையில் சிம்மத்தின் மிடுக்கையும் அதிவேகத்தையும் கொடுத்திருந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தில் ஆளவந்தாருடன் பயணிக்க நம் வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம்! காவிரித் தாயின் தென...