46 - கால தேவனின் கணக்கு
46 - கால தேவனின் கணக்கு
திருவரங்கத்தில் மடத்தையும் அரங்கனையும் கவனித்துக்கொள்ளுமாறு தெய்வவாரியாண்டானை நியமித்துவிட்டு ஆளவந்தார் திருவனந்தபுரம் நோக்கிப் புறப்பட்டார். ஆனால் ஆண்டானுக்கோ ஆளவந்தாரைக் காணாமல் இருப்பே கொள்ளவில்லை. அவர் ஏங்கி, நோய்வாய்ப்பட்டுக் கிடக்க, மடத்து முதலிகள் அவரை ஒரு கட்டணத்தில் வைத்துத் திருவனந்தபுரம் நோக்கிப் புறப்பட்டார்கள். திருவனந்தபுரம் நெருங்க நெருங்க ஆண்டான் புத்துணர்ச்சி பெற்று…
எழுந்திருக்கவே முடியாத நிலையில் இருந்த ஆண்டான் சட்டென்று கட்டிலிலிருந்து கீழே குதித்து வேகமாக நடக்கத் தொடங்கியதும், சுமந்துவந்த முதலிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
"ஆண்டானே! நில்லுங்கள்! நில்லுங்கள்!" என்று அவர்கள் கூவியபடி பின்னால் ஓடிவர, தெய்வவாரியாண்டானின் கவனமோ எதிலும் பதியவில்லை. தன் உயிரையே தன்னிடம் மீட்டுத் தந்த ஆசாரியரின் திருவடிகளை நோக்கி, உடலின் எல்லைகளையெல்லாம் கடந்த ஒரு பேராற்றல் அவரை உந்தித் தள்ளிக்கொண்டிருந்தது.
ஆரல்வாய்மொழிக் கணவாயைக் கடந்து, திருப்பதிசாரத்தின் பசுஞ்சோலைகளையும் தாண்டி, மணற்பாதைகளில் ஓட்டமும் நடையுமாக அனந்தபுரத்துத் திசையை நோக்கி விரைந்தார். வழியில் பசியோ தாகமோ கால்களில் முட்களின் குத்தலோ எதுவும் அவருக்கு உறைக்கவில்லை. நெஞ்சமெல்லாம் "ஆளவந்தார்! ஆளவந்தார்! என் குலதெய்வம் ஆளவந்தார்!" என்ற திருநாமமே மூச்சாய் ஓடிக்கொண்டிருந்தது.
ஆண்டான் ஓடிக்கொண்டிருந்த அதே சமயம்… அங்கே, திருவனந்தபுரத்தின் அனந்தன்காட்டில்....
தினமும் பத்மநாபப் பெருமாளைச் சேவித்து வந்தாலும், வெளிப் பிரகாரத்து மண்டபத்தின் தூணில் சாய்ந்தபடி நின்ற ஆளவந்தாரின் திருவுள்ளம் அமைதியிழந்து தவித்தது. ஆசார அனுஷ்டானங்களும் சடங்குகளும் அங்கே நிறைந்திருந்தனவே தவிர, உலக மக்கள் அனைவரையும் உய்விக்க வல்ல அந்த விசிஷ்டாத்வைதப் பேரொளியை, அந்தப் பவிஷ்யதாசாரியரை அவரால் எங்குமே காண முடியவில்லை.
மௌனமான அந்த ஏமாற்றத்தோடு ஒரு பெருமூச்சு விட்ட ஆளவந்தார், அன்று ஓர் உறுதியான தீர்மானத்துடன் தம் சீடர்களைத் திரும்பிப் பார்த்து, "முதலிகளே!... நாம் மீண்டும் திருவரங்கம் நோக்கிப் புறப்படுவோம்!" என்றார்.
திருஅனந்தபுரத்து எம்பெருமானிடம் விடைபெற்றுக்கொண்டு, ஆளவந்தாரும் அவரது பரிவாரங்களும் திருவரங்கம் நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். திருக்கோயிலைக் கடந்து அரைக் காத தூரம் வந்ததும், சலசலத்து ஓடிய கரமனையாற்றின் கரையை அடைந்தார்கள். அப்போது சூரியன் உச்சி வானில் சுள்ளெனத் தன் கதிர்களை வீசிக்கொண்டிருந்தது. நடுப்பகல் வேளையாகிவிட்டதால், எல்லோரும் ஆற்றங்கரையில் இறங்கித் தங்களது மாத்யான்ஹிக அனுஷ்டானங்களைச் செய்யத் தொடங்கினார்கள்.
அப்போது, தூரத்தில் ஒரு தூசுப் படலம் எழும்ப, வியர்வையும் கண்ணீரும் வழிய, உடலெல்லாம் புழுதி படிய ஓர் உருவம் புயலென ஓடிவந்தது! அவருக்குப் பின்னால் மேலும் சிலர் ஒரு கட்டிலைச் சுமந்தபடி, மூச்சிரைக்கத் திணறியவாறே ஓடிவந்தார்கள். ஆற்றங்கரையில் நின்றுகொண்டிருந்த ஆளவந்தாருக்கும் சீடர்களுக்கும் 'இது என்ன விசித்திரமான காட்சி!' என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
திருக்கோட்டியூர் நம்பி புருவங்களை உயர்த்தி, "எதற்கு இப்படி ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு வருகிறார்களோ?" என்றார் வியப்புடன்.
கண்களைக் குவித்து உற்றுப் பார்த்த பெரிய நம்பி திடுக்கிட்டு, "திருக்கோட்டியூர் நம்பிகளே! முன்னே புழுதி பறக்க ஓடிவருபவர் வேறு யாரும் இல்லை... நம் தெய்வவாரியாண்டான்தான்!" என்றார் குரலில் திகைப்பு மேலிட.
அதனைக் கேட்டு ஆளவந்தாரின் திருமுகம் சற்றே வெளிறியது; "இவர் ஓடிவரும் வேகத்தைப் பார்த்தால்... அரங்கநகருக்கு ஏதேனும் ஆபத்தோ? எம்பெருமானுக்கு அனர்த்தம் ஒன்றும் இல்லையே?" என்றார் ஆழ்ந்த கவலையுடன்.
பெரிய நம்பியோ திகைப்பிலிருந்து மீளாமல், "அரங்கனுக்கு ஆபத்து என்றால், ஒரு வெற்றுக் கட்டிலை எதற்கு இவர்கள் சுமந்துகொண்டு அவர் பின்னால் ஓடிவர வேண்டும்? புதிராகவன்றோ இருக்கிறது!" என்றார்.
"ஆண்டான் இங்கு வந்து சேர்ந்தால்தான் உண்மை விளங்கும்!" என்றார் திருக்கோட்டியூர் நம்பி.
அதற்குள் தூரத்தைக் கடந்துவிட்ட தெய்வவாரியாண்டான், கரமனையாற்றங்கரையின் மருதமர நிழலில் ஆளவந்தார் திரித்தண்டத்துடன் நின்றுகொண்டிருக்கும் திவ்யக் காட்சியைக் கண்ட மாத்திரத்தில் அவரது கால்கள் தளர்ந்தன; நாவிலிருந்து சொல் எழாமல் உணர்ச்சிப் பெருக்கால் விம்மியவாறு ஆசாரியரின் பொற்பாதங்களில் சட்டென்று வீழ்ந்தார்!
'குரு எழுந்துகொள் என்று உத்தரவிடும் வரை எழலாகாது' என்ற மரபு நெறியோடு, அவர் திருவடிகளிலேயே முகத்தைப் புதைத்துக்கொண்டு, நிலத்தோடு நிலமாய் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்தார்.
'மடத்துப் பொறுப்புகளையும், கண்மணியான பெரிய பெருமாளையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு வந்தேனே... இவரோ அந்த நியமனத்தை மீறி இங்கே இப்படி ஓடிவந்துவிட்டாரே!' என்று ஆளவந்தார் துணுக்குற்றார். 'ஒருவேளை திருவரங்கனுக்கு ஏதேனும் ஆபத்தோ? கோயில் கைங்கரியங்களுக்குத்தான் ஏதேனும் இடையூறோ?' என்ற கவலை நெஞ்சை அடைக்க, அவரது திருமுகத்தில் சட்டென்று கோப ரேகைகள் படர்ந்தன.
உயிருக்குயிரான ஒன்றின் மீது தீராத பற்றுதல் இருக்கும்போது, அதற்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்ற பதைபதைப்பும் அச்சமும் எழும் வேளையில், அந்தப் பதற்றமே சீற்றமாக உருவெடுப்பது இயற்கைதானே?
அரங்கன் மீதிருந்த அந்த எல்லைகடந்த பரிவினால், ஆளவந்தார் சற்றுக் கோபத்துடன், "ஆண்டானே! எம்பெருமான் ஸ்ரீராமர் சொன்ன சொல்லைத் தட்டாமல், அவர் அமரவைத்த சித்திரகூடத்திலேயே நின்று பரதாழ்வான் ஆட்சி நடத்தினான். ஆனால் நீரோ, அடியேன் இட்ட பணியை மதிக்காமல் என் பின்னாடியே இப்படி ஓடிவந்துவிட்டீர்! நான் என்ன ராமபிரானைப் போலத் தன்னிச்சையாக ஆணை பிறப்பிக்கும் ஈஸ்வரனா, இல்லை அவரைப் போல சூரனா? இரண்டும் இல்லையே! அல்லது நீர்தான் பரதனைப் போலப் பரிபூரணமாய்க் கீழ்படியும் தொண்டனா? அதுவும் இல்லையே!" என்று கடிந்துகொண்டார்.
தரையில் கிடந்தபடியே ஆசாரியனின் இந்தச் சுடுசொற்களைக் கேட்ட ஆண்டானுக்கு உள்ளம் வெம்பிப்போனது. 'குருநாதரின் பிரிவாற்றாமையால் ஓடிவந்தேன்; ஆனால் ஆசாரியனின் நியமனத்தையே மீறிவிட்டேனே! அவர் சீற்றத்திற்கு ஆளாகி, அந்தோ! சீடனாய் இருக்கும் தகுதியையே இன்று இழந்துவிட்டேனே!' என்று தவித்து கதறினார். எங்கே இப்போது எழுந்தால் குருவின் சினம் கூடுமோ என்று அஞ்சி, மேலும் நடுங்கியபடி குலைந்து, மண்ணில் புதையுண்டு கிடந்தார்.
அவர் பயந்து நடுங்கிக் கிடப்பதைக் கண்ட ஆளவந்தார், குரலில் இளகிய வாஞ்சையுடன், "என்ன ஆண்டானே! என்னை எதற்கும் கட்டுப்படாத பெருமாளாகவும், நினைத்ததை முடிக்கும் சூரனாகவும் ஆக்கினால்தான் எழுந்திருப்பேன் என்று பிடிவாதம் பிடித்துக் கிடக்கிறீரோ? எழுந்திரும்!" என்றார்.
'ஆசாரியன் எழுந்திருக்கச் சொன்ன பிறகும் தாமதிப்பது அதைவிடப் பெரும் அபச்சாரம் அல்லவா!' என்று பதறிய தெய்வவாரியாண்டான், செய்வதறியாது பரபரப்புடன் துள்ளி எழுந்து, கைகட்டி வாய் பொத்தி நின்றார்.
அப்போது, பின்னால் மூச்சிரைக்க ஓடிவந்த திருவரங்கத்து முதலிகள் ஆளவந்தாரைத் தண்டனிட்டு, "ஸ்வாமி! இவரைத் தவறாக எண்ணலாகாது. தாங்கள் திருவரங்கம் புறப்பட்ட கணமே, பிரிவாற்றாமையால் உணவும் நீருமின்றி இவர் படுக்கையிலேயே சாய்ந்துவிட்டார். வைத்தியர்கள் கைவிரித்து, 'ஆசாரியரின் திருவடி தரிசனம் தவிர இவருக்கு வேறு சஞ்சீவினி இல்லை' என்று கைவிரித்துவிட்டார்கள். இவரை உயிர்பிக்கவே கட்டிலில் சுமந்து வந்தோம்; திருவனந்தபுரம் நெருங்க நெருங்க, தங்கள் திருவடிப் புழுதியைத் தீண்டிவந்த தென்றல் பட்டதுமே, இவர் கட்டிலை விட்டு இறங்கி இப்படி ஓடிவந்துவிட்டார்!" என்று கைகூப்பி விண்ணப்பித்தார்கள்.
சீடனின் ஈடு இணையற்ற குருபக்தியைக் கண்ட ஆளவந்தாருக்கு உள்ளம் உருகியது. நீரைப் பிரிந்த மீனைப்போலத் துடித்த அவரது நிலையை எண்ணி, 'ஆசாரிய பிரேமையில் என்ன ஒரு விசேஷமான ஈடுபாடு!' என்று கண்கள் பனிக்க அவரை நோக்கி, "ஆண்டானே... உடலை இத்தனை இளைக்க வைத்துவிட்டீரே!" என்று வாஞ்சையோடு தம் திருக்கரங்களால் அவரது முதுகைத் தடவிக் கொடுத்து, ஆரத் தழுவிக்கொண்டார்.
பின்னர் ஆளவந்தார் திருக்கோயில் திசையைச் சுட்டிக்காட்டி, "ஆண்டானே! அதோ திருஅனந்தபுரத்துத் திருக்கோபுரமும் மாடங்களும் தெரிகின்றன பாருங்கள்! நீர் அங்கே சென்று, ஆயிரம்பைந்தலை ஆதிசேஷன் மேல் பள்ளிகொண்டிருக்கும் பத்மநாபப் பெருமாளைக் கண்குளிரச் சேவித்துவிட்டு வாரும்!" என்றார்.
ஆனால் தெய்வவாரியாண்டான் கால்களை நகர்த்தவில்லை. கைகளைக் கூப்பியவாறு, ஆளவந்தாரின் திருமேனியையே கண்ணிமைக்காமல் பார்த்தார்.
"ஸ்வாமி! அடியேனுடைய திருஅனந்தபுரத்துத் திருக்கோபுரமும், அடியேனின் பத்மநாபப் பெருமாளும் இதோ என் கண் முன்னே நின்றுகொண்டிருக்க, நான் எதற்காக அங்கே போக வேண்டும்? ஆசாரியரான தேவரீரின் இந்தத் திருவடிகளையும் திருமேனியையும் தவிர, அடியேனுக்கு வேறு புகலிடமும் திவ்யதேசமும் ஏது?" என்றார் குரல் தழுதழுக்க.
ஆண்டானின் இந்த அசைக்க முடியாத ஆசாரிய பக்தியைக் கண்டு, சூழ்ந்திருந்த முதலிகள் அனைவரும் மெய்சிலிர்த்து நின்றனர்.
ஆளவந்தாரின் திருவுள்ளமும் எல்லையற்ற கனிவடைந்தது. "வாரும் ஆண்டானே! நாம் இருவரும் சேர்ந்தே சென்று அந்தப் பத்மநாபனைச் சேவித்து வரலாம்!" என்று கூறி, ஆண்டானின் திருக்கரங்களைத் தம் கைகளோடு பற்றிக்கொண்டு, மீண்டும் திருக்கோயிலை நோக்கி நடந்தார்.
கருவறையின் மூன்று திருவாசல்கள் வழியே எம்பெருமானை ஆளவந்தார் சேவித்துவிட்டு நிமிர்ந்து எழும்போது, அவருடைய மடியிலிருந்த ஓலை நறுக்கு ஒன்று சட்டென்று நழுவித் தரையில் விழுந்தது!
அதனைக் கண்ட தெய்வவாரியாண்டான் குனிந்து எடுத்து ஆளவந்தாரின் திருக்கரங்களில் சமர்ப்பிக்க, 'இது என்ன ஓலை?' என்று ஆளவந்தார் அதனைப் பிரித்துப் பார்த்தார்.
வாசித்த அடுத்த கணம்... ஆளவந்தாரின் முகத்தில் பேரதிர்ச்சி படர்ந்தது! நெஞ்சம் பதைபதைத்தது!
அடடா! தம் பாட்டனார் நாதமுனிகளின் சீடரான குருகைக் காவலப்பன், தமக்கு அஷ்டாங்க யோக ரகசியங்களை உபதேசிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நாளையும் நாழிகையையும் குறித்துக் கொடுத்திருந்த ஓலை அது!
அதில் குறித்திருந்த அந்த மாதமும்... அந்தத் திதியும் நன்னாளுமான அது... இன்றைய தினமே!
"சோழ நாட்டு மண்ணில் இந்நேரம் குருகைக் காவலப்பன் யோக நிஷ்டையிலிருந்து விழித்து, விண்நோக்கித் தம் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பாரே! ஆனால் நாமோ, சேர நாட்டின் கடைக்கோடி எல்லையான திருவனந்தபுரத்தில் நின்றுகொண்டிருக்கிறோம்! காடுகளையும் மலைகளையும் கடந்து செல்லப் பல நாள்கள் ஆகுமே! இன்றைய தினமே அங்கே போய்ச் சேர்வது மானிட உடலால் எப்படி இயலும்?"
'நாதமுனிகள் காலத்து அரிய யோகப் பொக்கிஷத்தைக் கால தேவன் கவர்ந்து செல்கிறானே!' என்ற பெருந்துயர் ஆளவந்தாரின் நெஞ்சை ஈட்டியாகத் தைத்தது.
அவர் பெருமூச்சு விட்டு, "அந்தோ! நாம் வீரநாராயணபுரம் பறந்து இக்கணமே சேர்வதற்கு ஒரு புஷ்பக விமானம் நம்மிடம் இல்லையே!" என்றார் சோகம் கலந்த குரலில்.
மண்டபத்தில் கூடியிருந்த முதலிகளும் சீடர்களும் ஆசாரியனின் இந்தத் தாளாத வேதனையைக் கண்டு, அடுத்து என்ன சொல்வதென்று அறியாது அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள்.
நாதமுனிகளின் யோக மரபு தமக்குக் கிட்டாமல் போன துயரமும், அதே சமயம் விசிஷ்டாத்வைத தர்சனத்தை வழிநடத்தப்போகும் அந்தப் 'பவிஷ்யதாசாரியரை' இன்னும் கண்டடைய முடியவில்லையே என்ற ஏக்கமும் ஒருங்கே சூழ, ஆளவந்தார் சொல்லொணா மௌனத்தில் மூழ்கியபடி திருவரங்கம் நோக்கிப் புறப்படலானார்…
./சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்..

Comments
Post a Comment