45 - சஞ்சீவினித் தென்றல்
45 - சஞ்சீவினித் தென்றல்
ஆளவந்தாரும் அவருடைய சீடர்களும், ஆழ்வார்திருநகரியிலிருந்து தென்மேற்கே வானமாமலை (நாங்குநேரி) தோதாத்ரிப் பெருமாளையும் சேவித்துவிட்டு, பொதிகை மலைச்சாரலில் அமைந்த திருக்குறுங்குடி நம்பிகோயிலை அடைந்தார்கள். திருமங்கையாழ்வார் பரமபதம் அடைந்த அந்தப் புனிதமான இடத்தில் நின்று நம்பிப் பெருமாளைத் தொழுதபோது, அவருடைய கண்முன்னே ஒரு பிரம்மாண்டமான இயற்கை அரண் எழுந்து நின்றது!
அதுதான் விண்ணை முட்டும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்!
விண்ணைத் தொட்டு நிற்கும் பொதிகை மலையும் மகேந்திரகிரியும் சுவர் போல எழுந்து, மலைநாட்டிற்குள் நுழைய விடாமல் வழியை அடைத்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அந்தச் செங்குத்தான பாறைச் சரிவுகளிலும் அடர்ந்த வனங்களிலும் ஏறி மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடப்பது என்பது இயலாத காரியம்.
அப்போது அங்கே ஆடு மேய்க்கும் உள்ளூர் ஆயர்களின் வழிகாட்டுதலால், ஆளவந்தார் தம் சீடர்களுடன் மலைகளைக் கடக்க முயலாமல், இயற்கையாகவே இரு பெரும் மலைகளுக்கு இடையே பிளந்து அமைந்திருந்த ஒரு சமவெளிப் பெருவழியை அடைந்தார். அதுவே ஆரல்வாய்மொழிப் பெருவழி!
மேற்கே மகேந்திரகிரியும், கிழக்கே மருந்துவாழ் மலையும் வானளாவ நிற்க, இரு மலைகளுக்கும் நடுவே இயற்கையன்னை திறந்து வைத்திருந்த கணவாய் அது. குறுகிய பாறை இடுக்குகளுக்கு இடையே புகுந்து வந்த பெருங்காற்று, ஆளவந்தாரின் காவி ஆடைகளையும் அடியார்களின் மேலாடைகளையும் படபடவெனப் பறக்கடித்தது. தாகத்திற்குப் பாறை இடுக்குகளிலிருந்து கசிந்து வழிந்த ஊற்றுநீரை அருந்தியவாறு, எதிர்த்து வீசிய சூறாவளிக் காற்றையும் பொருட்படுத்தாமல், செம்மண்ணும் பாறைகளும் நிறைந்த அந்தத் திறந்த சமவெளிப் பெருவழியில் தளர்வின்றி காலூன்றி நடந்து, இறுதியாக மலைநாட்டின் நெற்களஞ்சியமான நாஞ்சில் நாட்டை அடைந்தார்கள்.
பாண்டிய நாட்டின் வெப்பத்தை ஒரு நொடியில் துடைத்தெறிந்தது நாஞ்சில் நாட்டின் குளிர்மை! பச்சைப் பசேலென்ற வாழைக் காடுகளும், செழுமை மிக்க தென்னந்தோப்புகளும், பூத்துச் சொரிந்த தாமரைத் தடாகங்களும் அவர்களை மலைநாட்டின் எல்லையிலே வரவேற்றன.
அங்கே வளைந்து நெளிந்து ஓடிய பரளியாற்றின் கரையோரமாகச் சென்று, திருப்பதிசாரம் திருத்தலத்தை அடைந்தார்கள். நம்மாழ்வாரைத் தம் திருவயிற்றில் தாங்கிப் பெற்றெடுத்த உடையநங்கையாரின் அவதாரத் தலம் அது!
தம் திருமார்பில் பெரிய பிராட்டியை நித்தியமாகத் தாங்கி நின்ற 'திருவாழ்மார்பன்' எம்பெருமானை ஆழ்வார் விளித்துப் பாடிய அமுதப் பாசுரங்களை(1) நெஞ்சில் நிறுத்தி, ஆளவந்தார் கண்களில் நீர் மல்கச் சேவித்தார்.
அங்கிருந்து பரளியாற்றின் நீரோட்டத்தை ஒட்டியே காடுகளுக்குள் மேலும் சில காத தூரம் நடந்து சென்றார்கள். எங்கும் அடர்ந்த தேக்கு மரங்களும், மிளகுக் கொடிகள் படர்ந்த மரங்களும் சூழ்ந்த காடுகளின் வழியே சென்று, வட்ட வடிவமாக நதி சுழன்றோடும் தீவு போன்ற ஒரு நிலப்பரப்பை அடைந்தார்கள். அதுவே திருவட்டாறு!
நம்மாழ்வார் உருகி மங்களாசாசனம் செய்த திருத்தலமான திருவட்டாற்றில்(2) எழுந்தருளிய ஆதிகேசவப் பெருமாளை ஆளவந்தார் சேவித்தார். அங்கே, பதினாறாயிரத்துக்கும் மேற்பட்ட திவ்ய சாளக்கிராமங்களால் கடுசர்க்கரா யோகத்தில் வார்க்கப்பட்டு, ஆதிசேஷன் மேல் புஜங்க சயனத்தில் பள்ளிகொண்டிருந்த எம்பெருமானின் மாபெரும் திருமேனியைக் கண்டு நிலைகுலைந்து நின்றார்கள்! நின்றவாறு முழு உருவத்தையும் ஒருசேரக் காண முடியாத அவ்வளவு பிரம்மாண்டமான திருமேனி! கருவறை வாசலின் முன்னே நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து கிடந்த ஆளவந்தாரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.
திருவட்டாறில் தீர்த்தம், சந்தனப் பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு, வளைந்து ஓடிய நெய்யாற்றின் கரையைத் தொட்டு, அடர்ந்த மருத நிலங்களும் மலைச்சரிவுகளும் கலந்த பாதையின் வழியே திருஅனந்தபுரத்தை (திருவனந்தபுரம்) நோக்கி நகர்ந்தார்கள்.
இறுதியாக, பனைமரங்களும், மல்லிகைப் பந்தல்களும், நெடிதுயர்ந்த தென்னஞ்சோலைகளும் சூழ, அனந்தன்காடு அடர்ந்திருந்த அந்தப் புண்ணியத் திருநகரத்தை வந்தடைந்தார்கள்.
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே
— திருவாய்மொழி 10.2.1
என்று தம் பாட்டனார் நாதமுனிகள் மீட்டெடுத்துத் தந்த திருவாய்மொழியின் பத்தாம் பத்துத் தொடக்கப் பாசுரத்தை ஆளவந்தார் குரல் தழுதழுக்கப் பாடத் தொடங்கினார்.(3) வண்டுகள் ரீங்காரமிடும் தடாகங்களும் கழனிகளும் சூழ்ந்த அனந்தபுரத்துத் திருக்கோயிலின் முன் நின்றார்கள். அங்கே ஐந்து தலைப் பணாமகுடங்களை(4) விரித்துக் குடைபிடிக்கும் ஆதிசேஷன் மீது, ஒரு கையைத் தொங்கவிட்டு அனந்தசயனத்தில் பள்ளி கொண்டிருந்த ஸ்ரீபத்மநாபஸ்வாமியின் திவ்ய வடிவழகைக் கண்டார்கள்.
அத்திருக்கோயிலின் மரபுப்படி அமைந்த மூன்று திருவாசல்களின் வழியே ஆளவந்தார் பேராவலுடன் சேவிக்கத் தொடங்கினார். முதல் வாசல் வழியே, ஐந்து தலைப் பணாமகுடங்கள்(4) சிரம் தாங்க, மெல்லிய புன்னகை தவழும் அந்த திவ்யத் திருமுக மண்டலத்தைக் கண்டார். அடுத்த திருவாசல் வழியே, பொன்னொளிரும் திருமார்பில் பிராட்டியாரும், அகிலத்தையே படைத்தளித்த நான்முகனை ஈன்ற திருநாபி மலரும் அவர் கண்களுக்குக் காட்சி தந்தன. இறுதியாக, மூன்றாம் வாசல் வழியே வையகம் முழுவதையும் அளந்த அந்தப் பரமபவித்திரமான திவ்யத் திருவடிகளைக் கண்டபோது, ஆளவந்தார் தம்மையே மறந்து ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்தார்.
மூன்று வாசல்களின் வழியேயும் பரம்பொருளைக் கண்குளிரக் கண்டு பருகிய ஆளவந்தார், அங்கே சுற்றுமுற்றும் பார்த்தார். பிறகு "துடைத்த கோவிந்தனாரே..." என்ற பாசுர வரிகளை நெஞ்சில் ஏந்தி, அனந்தபுரத்துக் கோயில் வாசல் படியைத் தன் திருக்கரங்களால் தொட்டு வணங்கி, தன் இடுப்பில் இருந்த துண்டை எடுத்து படிகளைத் துடைத்து, பேரானந்தப் பெருக்கில் மூழ்கினார்.
எம்பெருமானின் திருப்பாதங்களைச் சேவித்து முடித்து வெளியே பிரகாரத்திற்கு வந்த ஆளவந்தாரின் கண்கள், மீண்டும் தம் நீண்ட தேடலைத் தொடங்கின. அங்கே குழுமியிருந்த மலையாளத்து வைணவர்களையும், சாஸ்திர வாதங்களில் திளைத்திருந்த வேத பண்டிதர்களையும் அவர் கூர்ந்து நோக்கினார்.
'ஆழ்வார் முன்னறிவித்த அந்த அவதார புருஷன், கலி தோஷம் போக்க வல்ல அந்தப் பவிஷ்யதாசாரியர், இந்த அனந்தபுரத்து மண்ணிலாவது தென்படுவாரா?' என்று அவருடைய அகக்கண்கள் கூட்டத்தில் அலைபாய்ந்தன. ஆனால் அங்கே... ஆசார அனுஷ்டானங்களும் சடங்குகளும் நிறைந்திருந்தனவே தவிர, உலக மக்கள் அனைவரையும் ரட்சிக்கும் விசிஷ்டாத்வைதப் பேரொளியைத் தாங்கி நிற்கும் ஒரு நாயகன் புலப்படவில்லை.
அந்த மௌனமான ஏமாற்றத்தோடு ஒரு பெருమూச்சு விட்ட ஆளவந்தார், தம் சீடர்களைத் திரும்பிப் பார்த்து மெல்லிய குரலில், “முதலிகளே!... இந்த அனந்தபத்மனாபனைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே! இங்கே இன்னும் சில நாட்கள் அனந்தபத்மநாபனின் திருவடி நிழலில் தங்குவோம். பிறகு, எம்பெருமான் நமக்குக் காட்டும் வழியில், மீண்டும் திருவரங்கம் நோக்கிச் செல்லலாம்!” என்றார்.
அனந்தன்காட்டின் தென்றலில், ஆளவந்தாரின் மனதிலிருந்த அந்தப் பவிஷ்யதாசாரியத் தேடல் மனதிற்குள்ளேயே அணையாத நெருப்பாகத் தகித்துக் கொண்டிருந்தது.
ஆளவந்தாரை நாம் அனந்தபுரத்து எம்பெருமானின் சந்நிதியிலேயே சற்று நேரம் விட்டுவிட்டு, அவருடைய நினைவிலேயே உருகிக்கொண்டிருக்கும் தெய்வவாரியாண்டானின் பக்கம் நம் கவனத்தைத் திருப்புவோம்!
திருவரங்கத்தை விட்டு ஆசாரியர் புறப்பட்ட கணமே, நீரை விட்டுப் பிரிந்த மீனாய் துடிதுடித்து, ஆசாரியப் பிரிவுத் துயரால் வற்றி உலர்ந்து, உணவும் நீருமின்றி மூர்ச்சையுற்றுக் கிடந்தவர் அவர். வைத்தியர்கள் கைவிரித்து, ‘ஆசாரியரின் ஸ்பரிசமும் தரிசனமும் மட்டுமே இவரைக் காக்கவல்ல சஞ்சீவினி’ என்று உரைத்ததால், அவரை ஒரு கட்டிலில் கிடத்திச் சிவிகையாகச் சுமந்துகொண்டு அடியார்கள் தென்திசை நோக்கி விரையலாயினர். ஆரல்வாய்மொழிப் பெருவழியை அடைந்த திருவரங்கத்து அடியார்களால் சுமந்து வரப்பட்ட தெய்வவாரியாண்டானின் திருமேனியில் ஒரு புதிய உயிர்ப்பு துளிர்க்கத் தொடங்கியது!
அன்று இலங்கைப் போர்க்களத்தில் லட்சுமணனும் வானரப் படைகளும் மூர்ச்சித்துக் கிடந்தபோது, அனுமன் சுமந்துவந்த சஞ்சீவி மலையைத் தீண்டிவந்த காற்று பட்ட மாத்திரத்திலேயே அத்தனை பேரும் உயிர்பெற்று எழுந்ததுபோல, இங்கும் ஒரு அதிசயம் அரங்கேறியது!
அந்த ஆரல்வாய்மொழிக் கணவாயின் பெருங்காற்று ஆண்டானின் மேனியைத் தீண்டியபோது, சஞ்சீவி பர்வதத்தைத் தழுவிவந்த காற்றைவிடப் புனிதமான காற்று அது! தன் ஆசாரியன் நடந்து சென்ற அதே மணற்பரப்பில்... அவர் திருமேனியைத் தொட்டுத் தழுவி வந்த அதே தென்றல்!
தென்திசையை நோக்கி ஆளவந்தாரின் அடிச்சுவடுகளை நெருங்க நெருங்க, தெய்வவாரியாண்டானின் உடலில் நாளுக்கு நாள் வாட்டம் தீரத் தொடங்கியது. சருகென உலர்ந்திருந்த முகத்தில் குருதியின் மெல்லிய செம்மை பரவியது; மூடியிருந்த இமைகளுக்குள் உயிர்த்துடிப்பு மீண்டது.
ஆளவந்தாரின் இருப்பிடம் இன்னும் சில காத தூரமே உள்ளது என்பதை உணர்ந்த அந்த ஆசாரியப் பிரேமை, ஆண்டானின் உடலுக்குள் ஒரு புது ரத்தப் பாய்ச்சலையே ஏற்படுத்தியது. சிவிகையின் மூங்கில்களைப் பற்றியபடி மெல்லத் தலைதூக்கிப் பார்த்தவர், அடுத்த கணம், கூடவந்த அடியார்களின் தடுப்பையும் மீறிப் பல்லக்கை விட்டுத் துள்ளித் தரையில் குதித்தார்!
./சுஜாதா தேசிகன்
7.10.2026
(பயணம் தொடரும்...)
அடிக்குறிப்புகள்
(1)
வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என்
திருவாழ் மார்வற்கு என் திறம் சொல்லார் செய்வது என்?
உரு ஆர் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு
ஒருபாடு உழல்வான் ஓர் அடியானும் உளன் என்றே.
— திருவாய்மொழி 8.3.7
(பொருள்: என்னை ஆட்கொள்ளும் பொருட்டுத் திருமகளைத் தன் மார்பில் ஏந்தி திருவண்பரிசாரத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானிடம், வந்து செல்பவர்கள் அடியேனின் நிலையைக் குறித்து ஒரு வார்த்தையேனும் கூறுவதில்லையே! ‘வடிவழகால் பொருந்திய திருச்சங்கு, திருச்சக்கரங்களைச் சுமந்து கொண்டு, உன்னுடனேயே ஒரு பக்கத்தில் உடனிருந்து கைங்கரியம் செய்து திரிய ஓர் அடியவனும் இங்கே உள்ளான்’ என்று அவனிடம் சொல்ல ஒருவரும் இல்லாது போனால், இதற்கு அடியேன் செய்வதுதான் என்னே!)
(2)
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்நின்ற புள் ஊர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே.
— திருவாய்மொழி 10.6.9
(பொருள்: இயற்கையாகத் திகழும் திருமார்பில் திருமகளுடன் கூட திகழ்கின்ற எம்பெருமான் இருக்குமிடம் குளிர்ந்த திருவாட்டாறு. நிலைத்த புகழுடைய கருடனை வாகனமாக உடையவன்; போர் புரிய முயன்ற அரக்கர்கள் குலத்தை அழித்தான். அவன் அடியேனுடைய நெஞ்சத்திலே வெறுப்பின்றியே ஒரு போதும் பிரியாமல் இருக்கிறான்.)
(3)
கெடும் இடர் ஆய எல்லாம் கேசவா என்ன நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடம் உடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே.
— திருவாய்மொழி 10.2.1 (பாசுரம்: 3794)
(பொருள்: ‘கேசவா!’ என்று எம்பெருமானின் திருநாமத்தை நாள்தோறும் சொல்லத் துன்பங்கள் யாவும் அடியோடு அழியும்; கொடிய பாபங்களைச் செய்வித்துப் பிடிக்கும் எமனின் தூதர்களும் அணுக அஞ்சுவர். அத்தகைய நஞ்சுடைய ஆதிசேஷன் மேல் கண்வளர விரும்பிய எம்பெருமான் எழுந்தருளியிருக்கும், வண்டுகள் ரீங்காரமிடும் தடாகங்களும் வயல்களும் சூழ்ந்த அனந்தபுர நகருக்கு இன்றே நாம் சென்று சேர்வோம்.)
(4) பணா + மகுடங்கள் ; பணா-பாம்பின் படம் (விரித்த தலைப் பகுதி); மகுடம்-கிரீடம் / மணிமுடி.
(5)
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும்
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பு அணைப் பள்ளி கொண்டான்
மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே
— திருவாய்மொழி 10.2.7
(பொருள்: உலகிலுள்ள உயிரினங்களையும் தேவர்களையும் மற்றுமுள்ள அனைத்துப் பொருள்களையும் ஸம்ஹரித்த படைத்த எம் பரமமூர்த்தியே எம்பெருமானாவார் நீர் நிலங்களிலே வாளை மீன்கள் பாயும் வயல்களை அலங்காரமாகவுடைய திருவனந்தபுரத்திலே ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் பெருமானின் திருவனந்தபுரத்து வாசலைப் பெருக்கி மெழுகிக் கோலமிடுதல் போன்ற கைங்கர்யங்களைச்செய்தால் நம் கொடிய வினைகள் தொலையும்.)

Comments
Post a Comment