47 - மண்ணுக்கு மண் இட்ட மாறனேர் நம்பி
47 - மண்ணுக்கு மண் இட்ட மாறனேர் நம்பி
திருவனந்தபுரத்து எம்பெருமானிடம் விடைபெற்றுக்கொண்டு, கைநழுவிப்போன யோக நெறியின் ஏக்கத்தோடும், விசிஷ்டாத்வைத தர்சனத்தை ஆளப்போகும் அந்தப் 'பவிஷ்யதாசாரியரை' இன்னும் கண்டடைய முடியவில்லையே என்ற உள்ளத் தவிப்போடும் ஆளவந்தார் தம் சீடர் குழாமுடன் திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார்.
தென்நாட்டு எல்லைகளைக் கடந்து, வழியிலிருந்த திவ்யதேசங்களை ஆழ்வார் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்தவாறே பாண்டி நாட்டைத் தாண்டி வந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் 'புராந்தகம்' (3) என்னும் அமைதியான கிராமத்தின் அருகே அவர்கள் வந்து சேர்ந்தத சமயம், நண்பகல் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது.
வழியோரத்தில் தழைத்து விரிந்திருந்த பிரம்மாண்டமான புளியமரம் ஒன்று, பயணக் களைப்பைப் போக்கும் பசுங்குடையாகக் குளிர்நிழல் பரப்பி நின்றது. திருக்குருகூரில் நம்மாழ்வார் பதினாறு ஆண்டுகள் யோகத்தில் வீற்றிருந்த 'திருப்புளி' மரத்தை நினைவூட்டுவது போல, அந்தப் புளியமரம் பச்சைப் பசேலென்ற இலைகளுடன் அகன்று விரிந்து காட்சியளித்தது.
அதைக் கண்ட ஆளவந்தார் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி அஞ்சலி செய்தார். இதைப் பார்த்த சில முதலிகள் காரணம் புரியாமல் விழித்தார்கள்.
அப்போது திருக்கோட்டியூர் நம்பி, "நம்மாழ்வாரின் திருவாய்மொழியில், 'மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது' என்று பாசுரத்தில் பராங்குச நாயகி, 'என் மகளானவள் பூமியை துழாவி இது வாமனனாய் உலகளந்த மண் என்றும் ஆகாசத்தை நோக்கி அஞ்சலி செய்து எம்பெருமான் இருக்கும் வைகுந்தம் என்றும் கை காட்டிப் பரவசப்படுகிறாள்(1). அதுபோல, நம் ஆசாரியர் இந்தப் புளியமரத்தைப் பார்க்கும்போது, நம்மாழ்வாருக்குக் குடை பிடித்த அந்தத் திருப்புளியாழ்வாராகவே இதைக் கருதி வணங்குகிறார்!" என்று ஆசாரியரின் மனவோட்டத்தைப் படம்பிடித்துக் காட்டினார்.
இதைப் புரிந்துக்கொண்ட முதலிகள் எல்லோரும் அந்த மரத்தை வணங்கினர்.
அதன் குளிர்ந்த நிழலில் சற்று இளைப்பாற எண்ணிய ஆளவந்தார், தம் திரிதண்டத்தைச் சார்த்திவிட்டு அதன் கீழே அமர்ந்தார். "முதலிகளே! இந்தப் புளியமரத்தின் நிழலில் சற்று இளைப்பாறிவிட்டு, நம் பயணத்தைத் தொடருவோம்!" என்று அவர் கூற, முதலிகள் அனைவரும் மரத்தடியில் தங்களது மூட்டைகளை இறக்கிவைத்து விட்டு ஆசாரியனைச் சூழ்ந்து அமர்ந்தார்கள்.
குளுமையான நிழலும், மெல்லிய காற்றும் ஆளவந்தாரின் திருமேனியைத் தீண்டின. ஆனாலும், அவருடைய முகத்தில் படர்ந்திருந்த மெல்லிய வாட்டம் அகலவில்லை. ஆசாரியரின் திருமுகத்தில் படர்ந்திருந்த மெல்லிய சோகத்தைக் கண்ட திருக்கோட்டியூர் நம்பி, அவர்தம் திருவுள்ளத்தை மகிழ்விக்கும் பொருட்டு பணிவுடன், "ஸ்வாமி! அடியேன் ஒரு விண்ணப்பம் செய்துகொள்ள விரும்புகிறேன். நம்மாழ்வார் பராங்குச நாயகியாக அருளிச்செய்த திருவாய்மொழியின் திவ்யமான பாசுரப் பொருள் ஒன்றினை இப்புளியமரத்தின் நிழலில் தேவரீர் அடியேங்களுக்கு உபதேசித்து அருள வேண்டும்!" என்று வேண்டினார்.
பெரிய நம்பியும் தெய்வவாரியாண்டானும் அக்கோரிக்கையை ஆமோதித்துக் கரம்கூப்பி நிற்க, ஆளவந்தாரின் திருமுகத்தில் புன்னகை அரும்பியது.
ஆளவந்தார், "நம்பிகளே! நீர் கேட்டது மிக நன்று. ஆழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்களைச் சிந்தனை செய்வதை விடவும் இவ்வுலகில் வேறு ஆத்ம களிப்பு ஏது?" என்று, திருவாய்மொழியின் உன்னதமான ஆறாம் பத்தில் ஏழாம் திருவாய்மொழியான 'உண்ணும் சோறு' பதிகத்தைத் தொடங்கினார்.
'உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி..' என்று பாசுர அடிகளை மெல்லிசையுடன் ஆளவந்தார் சேவிக்கத் தொடங்கியபோதே, அவருடைய குரலில் பக்திப் பெருக்கால் நாவே தழுதழுத்தது. அந்த நம்மாழ்வாரே திருப்புளியாழ்வாரின் மரத்தடியில் மதுரகவியாழ்வாருக்கு உபதேசித்தது போல அங்கிருந்தவர்கள் உணர்ந்தார்கள்.(2)
பாசுரத்தின் பொருளை விளக்கும் முன் அவர் சீடர்களைப் பார்த்து, "முதலிகளே! இரவில் தன்னோடு படுத்து உறங்கிக் கிடந்த பராங்குச நாயகியைத் (நம்மாழ்வாரை) தன் அருகில் காணாமையால் வருந்துகிறாள் அவளது திருத்தாயார். நள்ளிரவில் தனியாகப் புறப்பட்டுச் சென்ற தன் மகள், 'திண்ணம் என் இளமான் புகுமூர் திருக்கோளூரே!' என்று நிச்சயமாகத் திருக்கோளூர் திவ்யதேசத்திற்கே சென்றிருப்பாள் என்று தாய் புலம்புவதாக அமைந்தது இப்பதிகம்!" என்று கூறிவிட்டு, "என்ன திருக்கோட்டியூர் நம்பிகளே, ஆரம்பிப்பதற்குள் உமது முகத்தில் ஏதோ சந்தேகம் தெரிகிறதே!" என்றார் சிரித்துக்கொண்டே.
அப்போது, கோஷ்டியிலிருந்த திருக்கோட்டியூர் நம்பி எழுந்து நின்று, பணிவுடன், "ஸ்வாமி! அடியேனுக்கு ஓர் ஐயம். திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியிலும் 'கள்வன்கொல்? யான் அறியேன்' பதிகத்தில், இரவில் பரகால நாயகியை எம்பெருமான் அழைத்துச் சென்றதாக அவளது திருத்தாயார் 'அணி ஆலி புகுவர்கொலோ?' (திருவாலிக்குச் சென்றிருப்பாரோ?) என்று புலம்புகிறாளே! இவ்விரு பதிகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், எந்தத் தாயாரின் நிலை அதிக அச்சத்திற்கும் கவலைக்கும் உரியது?" என்று வினவினார். (2)
ஆளவந்தார் புன்னகையுடன் அடியார்களை நோக்கி, "முதலிகளே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தனியாகப் புறப்பட்டுத் திருக்கோளூர் சென்ற பராங்குச நாயகியின் திருத்தாயார் அதிகம் அஞ்ச வேண்டுமா? அல்லது எம்பெருமானோடு சேர்ந்தே திருவாலிக்குச் சென்ற பரகால நாயகியின் திருத்தாயார் அதிகம் அஞ்ச வேண்டுமா?" என்று கேட்டார்.
அங்கிருந்த பெரிய நம்பி, "ஸ்வாமி! இதில் என்ன சந்தேகம்? எம்பெருமானோடு இருவராய்ச் சென்ற பரகால நாயகியைக் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லையே! உலகளந்த பெருமாள் கூடவே இருக்கும்போது அவளுக்கு என்ன குறை வந்துவிடப் போகிறது? ஆனால், இந்த நடுநிசி இருட்டில், துணைக்கு யாருமின்றித் தனியொருத்தியாகக் காட்டு வழியே சென்றாளே பராங்குச நாயகி... அவளுக்கு என்ன ஆபத்து நேருமோ என்று அவளை எண்ணித்தானே அவளது திருத்தாயார் அதிகம் அஞ்சியிருக்க வேண்டும்! அவளுக்காகத்தானே நெஞ்சம் பதைபதைத்திருக்க வேண்டும்!" என்றார்.(2)
இதைக் கேட்டு ஆளவந்தார் மெலிதாகச் சிரித்தார். பிறகு, "நீங்கள் நினைப்பது போல் அல்ல விஷயம்! இருவராய்ப் போனவர்களுக்காகவே நாம் அஞ்ச வேண்டும்; தனியே போனவளுக்கு நாம் ஒருபோதும் அஞ்ச வேண்டியதில்லை!" என்றார்.
சீடர்கள் அனைவரும் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள்.
பெரிய நம்பி புருவங்களை உயர்த்தி, "ஸ்வாமி! இது என்ன விந்தை! துணைக்குப் பெருமாளே இருக்கும்போது அஞ்ச வேண்டும் என்கிறீர்களே... துணை ஏதுமின்றித் தனியாகப் போனவளுக்கு அஞ்ச வேண்டாம் என்பது எப்படிப் பொருந்தும்?" என்று பணிவுடன் வினவினார்.
ஆளவந்தார் நயம்பட விளக்கத் தொடங்கினார்.
"பெரிய நம்பிகளே! பரகால நாயகி எம்பெருமானுடன் சேர்ந்தன்றோ போயிருக்கிறாள்? இப்படி ஆணும் பெண்ணுமாய் இருவராய்ச் செல்பவர்கள் ஒருவர் மீது ஒருவர் மையல் கொண்டு, காதலில் திளைத்துத் தங்களையே மறந்து போவார்கள்! ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்ணிமைக்காமல் மயங்கிக் கிடக்கும்போது, வழியில் எதிரே கொடிய ஆபத்துகள் வந்தாலும் அவர்களது கண்களுக்குத் தெரியாது; ஆபத்து வந்த பின்னரே விழிப்பார்கள்! சக்கரவர்த்தித் திருமகனான இராமபிரானும் சீதைப்பிராட்டியும் கூட இப்படி இருவராய்க் கானகத்திற்குச் சென்றபோதுதானே, இடையில் மாரீசன், இராவணன் என்று அடுத்தடுத்து ஆபத்துகள் தோன்றிப் பிரிவு ஏற்பட்டது? அதனால்தான், 'அணி ஆலி புகுவர்கொலோ?' திருவாலி போய்ச் சேர்வார்களோ, மாட்டார்களோ என்று பரகால நாயகியின் தாய் ஐயத்தோடும் அச்சத்தோடும் புலம்புகிறாள்!" என்றார்.
"அப்படியானால் தனியாகப் போனவளுக்கு ஆபத்து நேராதா ஸ்வாமி?" என்று கேட்டார் தெய்வவாரியாண்டான்.
"தனியாகப் புறப்பட்டுச் சென்ற பராங்குச நாயகிக்கு ஒரு பயமும் இல்லை ஆண்டானே! ஏனெனில் பராங்குச நாயகி எம்பெருமான் இருக்குமிடத்திற்குத் தான் போய்ச் சேர்ந்தாலொழிய ஒரு கணமும் தரித்திருக்க மாட்டாள்; உயிரே தரிக்காது! அவளது கவனமெல்லாம் வழியின் மீதோ, காட்டின் மீதோ இல்லை... தன் உயிரான கண்ணனை அடைவதிலேயே குவிந்திருக்கிறது. எம்பெருமானைத் தவிர அவளுக்கு வேறு நினைவே இல்லை என்பதால், எந்த இடையூறு வந்தாலும் அதைத் தகர்த்து எப்படியும் அவனிடம் போய்ச் சேர்ந்துவிடுவாள்! அதனால்தான் அவளுடைய தாய் கொஞ்சமும் சந்தேகப்படாமல், 'திண்ணம் என் இளமான் புகுமூர் திருக்கோளூரே!'—என் மகள் நிச்சயம் போய்ச் சேர்ந்துவிடுவாள் என்று அடித்துச் சொல்கிறாள்! எனவே, உலகத்தில் இருவராய்ச் செல்பவர்களுக்கே பயம்; கண்ணனை மட்டுமே குறியாகக் கொண்டு தனியே புறப்பட்டவளுக்கு ஒரு பயமும் இல்லை!" என்றார்.
ஆளவந்தாரின் இந்த ஈடு இணையற்ற விளக்கத்தைக் கேட்டு, மரத்தடியில் அமர்ந்திருந்த முதலிகள் அனைவரும் சொல்மறந்து, கைகூப்பி, ஆசாரியனின் ஞானப் பெருவெள்ளத்தில் மூழ்கித் திளைத்தார்கள்.
அப்போது ஆளவந்தார் மீண்டும் அந்தப் பாசுரத்தைத் தன் இனிய குரலில் பாடத் தொடங்கினார்: "உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்..." என்று பாசுரம் பாதியில் நின்றது!
ஆளவந்தாரின் கண்கள் அந்த மரத்தடியைத் தாண்டி, அப்பால் பரந்து விரிந்திருந்த நன்செய் வயல்வெளியில் நின்ற ஒர் உழவன் மேல் நிலைத்து நின்றன! அவருடைய முகத்தில் பேரதிர்ச்சியும், அளப்பரிய வியப்பும் ஒருசேரப் படர்ந்தன. கண்களை இமைக்காமல் நெடுநேரம் உற்று நோக்கினார்.
ஆசாரியரின் திடீர் மௌனத்தைக் கண்டு திடுக்கிட்ட சீடர்கள், 'அவர் எதை இப்படிப் பார்க்கிறார்?' என்று அவருடைய பார்வை சென்ற திசையை நோக்கினார்கள்.
அங்கே, சுட்டெரிக்கும் வெயிலில் சேற்று வயலில் ஓர் உழவன் நின்றுகொண்டிருந்தான். கைகளில் ஏர்க்கலப்பை சாய்ந்திருக்க, களைப்போடும் பசியோடும் காணப்பட்ட அவன், சேற்றுக் கழனியிலிருந்து ஒரு பிடி ஈர மண்ணை அள்ளி எடுத்து, ஓடும் வாய்க்கால் நீரில் சற்றே அலசி, அப்படியே வாயில் போட்டு விழுங்கிக்கொண்டிருந்தான்! மீண்டும் ஒரு பிடி... மீண்டும் ஒரு முறை நீரில் அலசி வாயில் விழுங்கிய இக்காட்சியைக் கண்ட சீடர்களின் முகங்களும் அதிர்ச்சியில் உறைந்தன.
உடனே தம் அருகிலிருந்த முதலிகளை நோக்கி, "முதலிகளே! உண்ணும் சோறு, பருகும் நீர்... என்று ஆழ்வார் பாடுகிறார். ஆனால் இவரோ பருகும் நீரை மண்ணுடன் கலந்து உண்ணும் சோறாக உண்டுகொண்டிருக்கிறாரே! எவரும் செய்யாத ஒரு வினோதச் செயலாக அல்லவா இருக்கிறது! சேற்றில் நின்றுகொண்டு சேற்றையே அள்ளி உண்கிறாரே... என்னவென்று கேட்டு வாருங்கள்! இருங்கள், நல்ல பசியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நம்மிடம் இருக்கும் பிரசாத மூட்டையிலிருந்து அவருக்குக் கொஞ்சம் கொடுத்துவிட்டு வாருங்கள்!" என்று பணித்தார்.
ஆளவந்தாரின் ஆணைப்படி சீடர்கள் சிலர் வயல்வரப்பை நோக்கி விரைந்தார்கள்.
அந்த உழவரின் அருகே சென்று, "ஐயா! நீங்கள் செய்வது எங்களுக்குப் புரியவில்லையே! உச்சி வெயிலில் சேற்றில் நின்றுகொண்டு, அந்தச் சேற்றையே அள்ளித் தின்றுகொண்டிருக்கிறீர்களே! என்ன விபரீதம் இது? இந்தாருங்கள், இந்தப் பிரசாதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்!" என்றனர்.
ஏர்க்கலப்பையைப் பிடித்திருந்த அந்த எளிய மனிதர் நிமிர்ந்து பார்த்தார். அவர்கள் நெற்றியில் சுடர்ந்த திருமண்காப்பைக் கண்டதும், உடனே நிலத்தில் விழுந்து அவர்களைத் தண்டனிட்டார். அவரது முகத்தில் எந்தக் குழப்பமும் இல்லை; மாறாக, அமைதியான தெளிவு ஒன்று பிரகாசித்தது.
அவர் சீடர்களைப் பார்த்துக் கைகூப்பி, "சாமி... அடியேனுக்குக் கடுமையான பசி. பசித்த இந்த உடம்பும் மண்ணால் ஆனது; இந்த வயலில் கிடக்கும் சேறும் மண்ணால் ஆனது. அடியேன் மண்ணுக்கு மண்ணை இடுகிறேன்! இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? எனக்கு பிரசாதம் வேண்டாம்!" என்றார் அமைதியாக.
மண்ணால் உருவான உடலுக்கு மண்ணையே உணவாக இடுகிறேன் என்ற அந்த எளிய உழவனின் அரிய தத்துவ மொழியைக் கேட்ட சீடர்கள் புரியாமல் திகைத்தார்கள். உடனே ஆளவந்தாரிடம் திரும்பி ஓடிவந்து, அந்த உழவர் கூறிய சொற்களை அப்படியே விண்ணப்பித்தார்கள்.
"மண்ணுக்கு மண்ணை இடுகிறாரா!"
அந்த வார்த்தைகளைக் கேட்ட அடுத்த கணம், ஆளவந்தாருக்கு மெய்சிலிர்த்தது. உள்ளம் உருகியது.
"அடடா! என்னவொரு ஞான நிலை இது! சாஸ்திரங்களை அக்குவேறு ஆணிவேறாகக் கற்று உணர்ந்த ஞானிகளாலும் சுலபத்தில் எட்ட முடியாத சரீர-ஆத்ம தத்துவத்தை, இந்த எளிய மனிதர் என்ன அனாயாசமாக உணர்ந்திருக்கிறார்! நம் சடகோபருக்கு—மாறன் குருகூர் நம்பிக்கு அல்லவா இவர் நேராக நிற்கிறார்! மாறனுக்கு நேரான நம்பி அன்றோ இவர்!" என்று வியந்தவாறே, ஆளவந்தார் விறுவிறுவென்று வயல்வெளியை நோக்கி ஓடினார்.
ஆசாரியரின் பின்னாலேயே முதலிகளும் விரைந்தார்கள்.
வயல்வரப்பில் வந்து நின்ற ஆளவந்தாரைக் கண்டதும், அந்த உழவன் திடுக்கிட்டு ஏர்க்கலப்பையைத் தவறவிட்டார். எதிரே கதிரவன் போன்ற தேஜஸோடு, காவியாடையும், துளசி மாலையும், திருமண் காப்பும் தரித்து நிற்கும் அந்த மகானைக் கண்ட மாத்திரத்தில், நிலத்தில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து தண்டனிட்டார்.
"அப்பனே! எழுந்திரும்!" என்று வாஞ்சையோடு அருளிய ஆளவந்தார், "பிறப்பால் வரும் அகங்காரங்களையும் மாயைகளையும் கடந்து, சாட்சாத் நம்மாழ்வாரான மாறனின் ஞான நெறியிலேயே நீர் நிற்பதால், நீர் மாறனுக்கு நேரான நம்பி! நம் மாறனேர் நம்பி! உலக மாயைகளில் உழலாமல் தேக தத்துவத்தின் உண்மைப் பொருளை உள்ளங்கை நெல்லிக்கனியென உணர்ந்த ஞானி நீர். எம்மோடு வாரும்... திருவரங்கத்திற்குப் புறப்படுவோம்!" என்று திருக்கரம் நீட்டி அழைத்தார்.
அதைக் கேட்டு அந்த உழவன் நடுநடுங்கிப் போனார். கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட, "சாமி! அடியேன் ஊருக்குப் புறம்பே வாழும் தாழ்ந்த குலத்தவன்; ஒரு எளிய சண்டாளன்! உங்களைப் போன்ற உயர்ந்த மகான்களின் நிழல் படுவதற்கே தகுதியற்ற அற்பன். அடியேன் எப்படித் தங்களோடு வர இயலும்?" என்று பணிவுடன் கைகட்டி அஞ்சி சற்று தள்ளி நின்றார்.
ஆளவந்தாரின் விழிகளில் கருணை பெருக்கெடுத்தது.
அவர் பேரன்போடு, "அப்பனே! பிறப்பினால் ஒருவன் உயர்ந்துவிடுவதோ தாழ்ந்துவிடுவதோ இல்லை! எம்பெருமானின் பக்தியிலும் ஞானத்திலும் குலமும் பிறப்பும் ஒருபோதும் குறுக்கே நிற்பதில்லை! திருப்பாணாழ்வார், நம்பாடுவான் கதைகள் கட்டுக்கதை இல்லையே! பகவத் குணங்களில் திளைக்கும் மெய்யடியார்களுக்குக் குலபேதம் ஏது? நீர் எம்மோடு வாரும்! இனி நீர் எமது பிரிய சீடர்!" என்று கூறி, எவ்விதத் தயக்கமுமின்றி அவரைத் தம் திருக்கரங்களால் பற்றி தன் மார்புறத் தழுவிக்கொண்டார்.
ஆசாரியனின் இந்த எல்லைகடந்த கருணையிலும் அணைப்பிலும் உறைந்துபோன மாறனேரி நம்பியின் நெஞ்சம் கரைந்து விம்மியழுதது. ஆசாரியனின் அளப்பரிய கருணையையும், மாறனேரி நம்பியின் இணையற்ற ஞானத்தையும் கண்ட திருக்கோட்டியூர் நம்பி, பெரிய நம்பி, தெய்வவாரியாண்டான் உள்ளிட்ட சீடர்கள் அனைவரும் 'ஆஹா! ஆஹா!' என்று வியந்து மெய்சிலிர்த்தார்கள்.
மறு கணம், தான் இதுவரை உழுதுகொண்டிருந்த நிலத்தையும், பிடித்திருந்த ஏர்க்கலப்பையையும், கட்டியிருந்த உழவு மாடுகளையும், ஊரையும் உற்றார் உறவினர்களையும் அங்கேயே ஒரு புல்லென உதறித் தள்ளினார்.
ஆளவந்தார் அவரை அன்போடு அழைத்துக்கொண்டு, அந்தப் புளியமரத்து நிழலுக்கு வந்தார். வைகுண்டத்தின் வாசலைத் திறந்துவைக்கும் பெருங்கருணையோடு, அந்த மரத்தடியிலேயே மாறனேரி நம்பிக்கு முறைப்படி பஞ்சசமஸ்காரம் செய்வித்து, அவரைத் தம் அந்தரங்கச் சீடராக ஏற்றுக்கொண்டார்.
மண்ணோடு கிடந்த ஒரு மாணிக்கத்தை ஆசாரியனின் திருக்கரம் தொட்டுத் தூக்கி ஆட்கொண்ட அந்தப் புனிதத் தருணத்தைக் கண்டு, முதலிகள் அனைவரும் மெய்சிலிர்த்து நின்றனர்.
புராந்தகத்து அந்தத் திருப்புளியாழ்வாரைத் தொழுதுவிட்டு, ஆளவந்தார், பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, தெய்வவாரியாண்டான் மற்றும் புதுப்பிறவி பெற்ற மாறனேரி நம்பி உள்ளிட்ட அடியவர் திருக்கூட்டம், காவிரியாற்றின் தென்கரையை நோக்கியும், அரங்கநகரின் கோபுரங்களை நோக்கியும் தங்கள் பயணத்தை உவகையோடு தொடர்ந்தது.....
./சுஜாதா தேசிகன்
23.10.2026
(பயணம் தொடரும்…)
அடிக்குறிப்புகள்
(1) திருவாய்மொழி 4.4.1
மண்ணை இருந்து துழாவி
வாமனன் மண் இது என்னும்
விண்ணைத் தொழுது அவன் மேவு
வைகுந்தம் என்று கை காட்டும்
கண்ணை உள்நீர் மல்க நின்று
கடல்வண்ணன் என்னும் அன்னே என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு
என் செய்கேன் பெய் வளையீரே?
(2) திருவாய்மொழி 6.7.1 ஆளாவந்தார் கூறிய ஐதீகம் ; உரைநடை பாணியில் எழுதியிருக்கிறேன்.
திருவாய்மொழி பாசுரம் : 6.7.1
உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி
திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே!
பெரிய திருமொழி பாசுரம் 3.7.1
கள்வன்கொல்? யான் அறியேன் கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என் தன் மட மானினைப் போத என்று
வெள்ளி வளைக் கை பற்றப் பெற்ற தாயரை விட்டு அகன்று
அள்ளல் அம் பூங் கழனி அணி ஆலி புகுவர்கொலோ?
(3) குருபரம்பரையில் இந்த ஊர் பாண்டிய தேசம் என்று குறிப்பு உள்ளது. சமீபத்தில் அது சிவகாசி அருகில் மாறனேரி என்ற ஊர் என்று தெரிந்துக்கொண்டேன்.

Comments
Post a Comment