25 - சேற்றுப் பாலம்

25 - சேற்றுப் பாலம்



ஆசாரியர் ஸ்ரீமந் நாதமுனிகள் எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்து, ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. சோழ தேசத்து வானில் எத்தனையோ கார்த்திகைப் பிறைகளும் சித்திரைப் பௌர்ணமிகளும் வந்து போயின. 

காவிரியானது தன் கரைகளைத் தொட்டுக் குளிர்ந்த நீரால் நனைத்து, வான் கதிரவனைத் தன் அலைகளில் ஆபரணமாக அணிந்துகொண்டு, வளைந்து நெளிந்து ஓடும் வாய்க்கால்கள் வழியாகத் தண்ணீரைப் பாய்ச்சி, சோழ நாட்டின் கழனிகளையெல்லாம் செந்நெல் விளையும் பொன் பூமியாகச் செழிக்கச் செய்கிறது. அந்தப் புண்ணிய நதியைப் போலவே, ஸ்ரீ உய்யக்கொண்டாரும் நம்மாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களின் ஈரத் தமிழ்ப் பாசுரங்களைச் சோழ வளநாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் பக்தி மரம் துளிர்விட்டு, வண்டுகள் தேனைத் தேடி வந்து உருஞ்சி திளைப்பது போல, வையகத்து மாந்தர்கள் பக்திப் பெருக்கில் ஒன்று கூடித் திளைத்தனர்.

மெல்லிய இளங்காற்று உடலையும் உள்ளத்தையும் குளிரச் செய்த ஒரு நன்னாள். பொன்னி நதியான காவிரியிலிருந்து கிளைத்துப் பிரியும் கொள்ளிட ஆற்றின் வடகரையில், அலைகள் ஒன்றோடு ஒன்று மோதி விளையாடிக் கொண்டிருந்தன. ஆற்றில் மீன் கூட்டங்கள் துள்ளிக்குதித்து ஓடிக் கொண்டிருந்த அந்த அமைதியான அந்திப் பொழுதில், திருவரங்கத்திற்கு அருகிலுள்ள அன்பில் என்னும் திவ்யதேசத் திருக்கோவிலுக்கு வெளியே, ஒரு பிரம்மாண்டமான ஆலமரத்தின் குளுமையான நிழலில் உய்யக்கொண்டார் அமர்ந்திருந்தார். 

அவரைச் சுற்றிப் பெருந்திரளான அடியார்கள் கூடியிருக்க, உய்யக்கொண்டார் சக்கரவர்த்தித் திருமகனான இராமபிரானின் கல்யாண குணங்களை உரைத்து உபந்நியாசம் சாதித்துக் கொண்டிருந்தார். 

“இராமபிரானுடைய திவ்யமான குணங்களை யாரால் பட்டியலிட முடியும்? குணம், அழகு, வீரம், எளியோரிடத்தில் காட்டும் பேரன்பு என அவனுடைய கல்யாண குணங்களுக்கு எல்லையே இல்லை! அதனால்தான் நம் குருகூர்ச் சடகோபர், 'கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?' என்று நெஞ்சுருகிக் கேட்கிறார். அந்த இராமனைத் தவிர வேறு யாரை நாம் துதிப்பது?” என்று உய்யக்கொண்டார் உணர்ச்சிப் பெருக்குடன் உரைத்தபோது, அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. 

அவர் அப்படியே சற்று நேரம் மௌனமாகத் தன் கண்களை மூடிக்கொண்டு அமைதியானார்.

பறவைகள் மாலை நேரத்தில் இரை தேடி வந்து மரக்கிளைகளில் அமைதியாக அமர்வதைப் போல, அடியார்கள் கூட்டத்தின் ஒரு கோடியில் வந்தமர்ந்த ஒரு பதினைந்து வயது பாலகனுக்கு, உய்யக்கொண்டார் ஏன் இராமனின் பெயரைக் கேட்டதும் கண்கலங்குகிறார் என்பது புரியவில்லை. அவனது நெஞ்சில் ராம பக்தியும் ஏன் கண்கலங்குகிறார் என்ற ஆர்வமும் ஒருங்கே எழுந்தன.

உய்யக்கொண்டார் இராமாயண உபந்நியாசத்தை நிறைவு செய்துவிட்டு, அடியார்களிடம் விடைபெற்றுக் கிளம்ப முற்பட்ட போது, அந்தக் கூட்டத்திலிருந்து மெல்ல நகர்ந்து வந்த அந்தப் பாலகன், அவரது திருவடிகளில் பணிவுடன் வீழ்ந்து வணங்கினான். 

“ஐயனே! மன்னித்துக் கொள்ளுங்கள். இராமபிரானைப் பற்றிக் கூறும்போது தங்களின் கண்கள் கலங்கி, நீர் சொரிந்ததைக் கண்டேன். அதற்கான காரணத்தை அடியேன் அறிந்துகொள்ளப் பேராவலாக உள்ளேன்!” என்று வினயத்துடன் கேட்டான்.

உய்யக்கொண்டார் அந்தப் பாலகனின் களங்கமற்ற முகத்தையும், அவனது கண்களில் தெரிந்த பக்தி ஒளியையும் அன்போடு நோக்கி, “அப்பா! இராமபிரானின் குணங்களை உரைத்தபோது... என் ஆசாரியரான ஸ்ரீமந் நாதமுனிகளின் நினைவு என் நெஞ்சில் நிழலாடியது. அதனால்தான் அடியேனின் கண்கள் கலங்கின” என்று உரைத்து, தன் ஆசாரியர் எவ்வாறு எம்பெருமான் இராமனைத் தேடிக் கானகத்திலே ஓடி, பரமபதம் அடைந்தார் என்ற முழுச் சரித்திரத்தையும் உருகிய குரலில் விவரித்தார். 

அந்த நெஞ்சை உலுக்கும் வரலாற்றைக் கேட்ட அந்தச் சிறுவனின் கண்களிலிருந்தும் அருவியாகக் கண்ணீர் வழிந்தோடியது.

பாலகனின் பக்தி நிலைகண்டு நெகிழ்ந்த உய்யக்கொண்டார், “குழந்தாய்! உனக்கு எந்த ஊர்? உனது திருநாமம் என்ன?” என்று பரிவோடு வினவினார்.

“ஐயனே! இப்படியே வட திருக்காவேரி எனப்படும் கொள்ளிட ஆற்றின் வழியே சென்றால், ஒரு யோசனை தூரத்தில் (சுமார் பத்து மைல் தொலைவில்) எழில் கொஞ்சும் ஒரு சிறிய கிராமம் இருக்கிறது. அதில் உள்ள அக்கிரகாரத்தில் வசிக்கிறேன். என்னை ‘ராமமிச்ரர்’ என்று அழைப்பார்கள்” என்று பணிவுடன் கூறினான்.

“ஆகா! அந்த இராமனின் பெருமைகளைக் கூறி முடித்த மாத்திரத்தில், அந்த இராமபிரானே உமது வடிவில் அடியேனைத் தேடி வந்தது போலல்லவா இருக்கிறது!” என்று வியந்து, அவனைக் கைகூப்பினார் உய்யக்கொண்டார்.

உடனே அச்சிறுவன், மீண்டும் அவரது திருவடிகளில் விழுந்து, “ஐயனே! தங்களுக்கு நிழல் போலத் தொடரும் எளிய கைங்கரியங்களைச் செய்துகொண்டும், தங்களின் தெய்வீக அறிவுரைகளைக் கேட்டுணரவும் அடியேன் ஆசைப்படுகிறேன். என்னை உங்களது அணுக்கச் சீடனாக ஏற்றுக்கொண்டு அருள் புரிய வேண்டும்!” என்று வேண்டினான். 

உய்யக்கொண்டார் மட்டற்ற மகிழ்ச்சியுடன் அந்தப் பாலகனை வாரி அணைத்து, தன் சீடனாக உகந்து ஏற்றுக்கொண்டார்.

அன்று முதல் ராமமிச்ரர் தன் ஆசாரியரான உய்யக்கொண்டாருடன் புறப்பட்டு, அவருக்குத் தேவையான சகல பணிவிடைகளையும் செய்துகொண்டு, அவரிடமிருந்து வேத, வேதாந்தார்த்தங்களையும் திவ்யப் பிரபந்த உட்பொருள்களையும் மிக ஆழமாகக் கற்றுக்கொண்டிருந்தார்.

அச்சமயம், இயற்கையின் சூழலால் உய்யக்கொண்டாரின் தர்மபத்தினியான ஆண்டாள் திருநாடலங்கரித்தார் (மறைந்தார்). அதுமுதல், தன் ஆசாரியரின் இல்லத்தில் தளிகை கைங்கரியத்தையும் (சமையல் கைங்கரியத்தையும்) பிற வீட்டுப் பணிகளையும் ராமமிச்ரரே முன்னின்று பக்திப் பூர்வமாகச் செய்யத் தொடங்கினார்.

உய்யக்கொண்டாருக்கு செண்பகவல்லி, பங்கயச்செல்வி(6) என்ற இரு திருக்குமாரத்திகள் இருந்தனர். பெற்ற தாயை இழந்த அந்தப் பிஞ்சு குழந்தைகள், இல்லத்தில் எப்போதும் ராமமிச்ரரை ‘ராம அண்ணா! ராம அண்ணா!’ என்று சுற்றிச் சுற்றி வந்து, தங்களுக்கு வேண்டியவற்றை அன்போடு கேட்டுப் பெற்றுக் கொள்வார்கள். 

ராமமிச்ரரும் தன் ஆசாரியனிடம் வைத்திருந்த அதே ஆசாரியப் பக்தியை அந்தச் சிறு குழந்தைகளிடமும் காட்டினார். அவர்களுக்கு ஒரு தாயைப் போலக் கூந்தலுக்கு நறுமண எண்ணெய் தேய்த்து, வாரி முடித்து, நன்னீராட்டி, மலர்களைச் சூட்டி மகிழ்ந்தார். சுவையான பலகாரங்களையும் இனிப்புப் பிரசாதங்களையும் செய்து தருவார். அவர்களோடு குழந்தையாக மாறி விளையாடுவார். இரவில் அவர்கள் உறங்கும் வரை பக்திப் பூர்வமான குட்டிக் கதைகளைக் கூறித் தூங்க வைப்பார்.

இப்படியிருக்க, ஒரு நாள் அந்த அக்கிரகாரத்துச் சிறுவர்கள் யாவரும் ஒன்று கூடி, காவேரிக்குச் சென்று நீராடி, வீடுகளிலிருந்து கட்டி எடுத்துச் சென்ற கட்டுச் சோற்றை (கட்டுச்சாதம்) ஆற்றங்கரையில் அமர்ந்து உண்டு, விளையாடி மகிழத் திட்டமிட்டார்கள். உய்யக்கொண்டாரின் இரண்டு பெண் குழந்தைகளும் மற்ற பிள்ளைகளுடன் காவேரிக்குச் செல்ல ஆசைப்பட்டார்கள்.

உய்யக்கொண்டார் ராமமிச்ரரை அழைத்து, “ராமமிச்ரரே! நமது குழந்தைகளும் ஆற்றங்கரைக்குச் செல்ல ஆசைப்படுகிறார்கள். அவர்களுக்குத் துணையாகவும் பாதுகாப்பாகவும் நீரே உடன் சென்று வருவீராக!” என்று நியமித்தார்.

ராமமிச்ரரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் குழந்தைகளைக் காவேரி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். 

அங்கே குழந்தைகள் அனைவரும் காவேரியின் குளிர்ந்த புனலில் நீராடி மகிழ்ந்தனர். ஆற்றங்கரையின் மணல் பரப்பில் அமர்ந்து தங்களின் கட்டுச் சோற்றைப் பகிர்ந்துண்டு விளையாடினார்கள். அந்திப் பொழுது சாயும் வேளையில், அவரவர் தங்களின் இல்லங்களை நோக்கித் திரும்பத் தொடங்கினர். 

திரும்பி வரும் வழியில், உய்யக்கொண்டாரின் குமாரத்திகள் இருவரும் மற்ற குழந்தைகளைப் பின்தொடர முடியாமல் வழிதவறினார்கள். அவர்கள் நடந்து வந்த பாதையின் குறுக்கே ஒரு சிறிய நீர்ப்பாசன வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. சமீபத்திய மழையினாலும் நீர்வரத்தினாலும் அந்த வாய்க்கால் முழுவதும் வழுக்கும் சேறும் சகதியுமாகக் காட்சியளித்தது. 

அதைக் கடக்க முடியாமல் திகைத்து நின்ற சிறுமிகள் இருவரும், பயத்துடன், “ராம அண்ணா! இந்தச் சேறும் சகதியுமாக இருக்கும் வாய்க்கால் மிகவும் வழுக்குகிறது. இதைக் கடந்து செல்ல எங்களுக்குப் பயமாக இருக்கிறது. ஒரு மரப்பாலமோ அல்லது கடக்க உதவும் மரத்துண்டோ இருந்தால் எவ்வளவு சுலபமாகக் கடந்துவிடலாம்!” என்று ஏங்கி நின்றார்கள்.

“அதற்கென்ன? பாலம் அமைத்துவிட்டால் போகிறது! நீங்கள் சிறிதும் பயப்படாதீர்கள்!” என்று புன்னகையுடன் கூறிய ராமமிச்ரர், சற்றும் யோசிக்காமல் உடனே அந்த வழுக்கும் சேற்று வாய்க்காலின் குறுக்கே குப்புறப் படுத்துக்கொண்டார். “அடியேனின் முதுகு பாலத்தின் மீது நடந்து அக்கரையை அடையுங்கள்!” என்றார்.

அக்குழந்தைகளின் முகத்தில் பயம் நீங்கி, மழலைக்கே உரிய புன்னகையும் மகிழ்ச்சியும் குடிகொண்டன. அவை சற்றும் தயங்காமல், ராமமிச்ரரின் முதுகின் மீது தங்களின் பிஞ்சுப் பாதங்களை வைத்து மெல்ல நடந்து கால்வாயைக் கடந்தன. அன்று சக்கரவர்த்தித் திருமகன் இராமபிரான் சேது பாலம் கட்டியபோது, தன் கரங்களால் அன்போடு தடவிக் கொடுத்த அணிலின் முதுகில் பதிந்த சுவடுகளைப் போலவே, ராமமிச்ரரின் முதுகில் அவருடைய ஆசாரியரான உய்யக்கொண்டாரின் பிஞ்சுக் குழந்தைகளின் காலடிச் சுவடுகள் அழியாத பக்தி முத்திரைகளாகப் பதிந்தன!

இல்லத்திற்குத் திரும்பிய குழந்தைகள் இருவரும் மகிழ்ச்சி பொங்க ஓடிச் சென்று, தங்களின் தந்தையான உய்யக்கொண்டாரின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். “தந்தையே! நாங்கள் வரும் வழியில் வாய்க்கால் முழுவதும் சேறும் சகதியுமாக வழுக்கியது. எங்களால் அதைக் கடக்கவே முடியவில்லை. அப்போது நம்ம ராம அண்ணா என்ன செய்தார் தெரியுமா? அந்த வாய்க்காலுக்குக் குறுக்கே பாலம் போலப் படுத்துக் கொண்டு, தன் முதுகையே பாலமாக அமைத்துக் கொடுத்தார்! நாங்கள் ராம அண்ணாவின் முதுகின் மேல் மெல்ல நடந்து வழுக்காமல் வாய்க்காலைக் கடந்து வந்தோம்!” என்று மழலை மாறாமல் கூறினார்கள்.

இதைக் கேட்ட உய்யக்கொண்டாரின் நெஞ்சம் உருகியது. ராமமிச்ரரின் உடை முழுவதும் ஈரமும் சகதியுமாக இருப்பதைக் கண்டு, கண்களில் நீர் மல்க, “ராமா! இப்படிச் சேற்றிலே படியாகக் கிடந்து, உமது முதுகிலே பிஞ்சுக் குழந்தைகள் மிதிக்கும்படிச் செய்யலாமா?” என்று பிரியத்தோடு வினவினார்.

அதற்கு ராமமிச்ரர் தன் கரங்களைக் கூப்பி வணங்கி, “ஆசாரியரே! ‘அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை’ என்று பரகாலநாயகியாக நம் திருமங்கையாழ்வார் எம்பெருமானிடத்தில் தூது சென்ற வண்டைப் பார்த்து மகிழ்ந்தது போல, இன்று அடியேன் மட்டற்ற பேரானந்தம் அடைந்தேன்!” என்றார்.

உய்யக்கொண்டார் ஆச்சரியத்துடன் நோக்க, ராமமிச்ரர் தொடர்ந்தார், “எம்பெருமானிடம் தூது செல்லும் வண்டுக்கு அதன் சிறகுகள் தான் பறப்பதற்குச் சாதனம்; அதன் கால்கள் அல்ல. அப்படியிருக்க, நம் ஆழ்வார் ஏன் அதன் ஆறு கால்களையும் தொழுகிறார்? எம்பெருமானிடம் தன் தூதை உகப்புடன் கொண்டு சேர்த்துவிட்டுத் திரும்பும் அந்த வண்டிற்குத் தம்மால் என்ன கைமாறு செய்ய முடியும் என்று எண்ணிய ஆழ்வார், 'உன் ஆறு கால்களையும் என் தலை நிறைய வைத்துத் தொழுகிறேன்! என் தலையல்லால் கைம்மாறிலேன்! இதைத் தவிர வேறு என்ன கைமாறு செய்ய?' என்று கூத்தாடிக் குதூகலித்தார் அல்லவா? 

அதைப்போலவே, அடியேனுக்கும் இன்று ஆறு உன்னத கால்களின் சம்பந்தம் கிட்டியது! இரண்டு கால்கள் தேவரீராகிய என் ஆசாரியரின் திருவடிகள்; மேலும் இரண்டு கால்கள், ஆசாரிய பத்தினியான  ஆண்டாள் அம்மையாரின் திருவடிகள்; இன்னும் இரண்டு, இதோ தங்களின் திருக்குமாரத்திகளான அக்குழந்தைகளின் பிஞ்சுத் திருவடிகள்! 

ஒரு மாபெரும் தங்கக் கட்டியிலிருந்து எடுக்கப்படும் இரண்டு சிறிய குண்டுமணிகளும் அதே தங்கம் தானே ஆசாரியரே? அதைப்போலவே, செண்பகவல்லியும் பங்கயச்செல்வியும் தங்களின் திருக்குமாரத்திகள் என்பதால், அடியேனுக்கு அவர்களும் சாட்சாத் ஆசாரிய வடிவமான தங்கமே!” என்றார்.

இதைக் கேட்ட உய்யக்கொண்டார் பக்திப் பேரானந்தத்தின் எல்லைக்கே சென்றார். கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக, தன் அணுக்கச் சீடனான ராமமிச்ரரைத் தன் மார்போடு இறுக்கமாக வாரி அணைத்துக் கொண்டார். 

“ராமா! இதுவரை அடியேனுக்குப் பரசுராமன், தசரதராமன், பலராமன் என்று மூன்று இராமர்களைத் தான் தெரியும். ஆனால் இன்று நீ எனக்கு 'நான்காவது இராமராக' அல்லவா காட்சியளிக்கிறாய்! பரசுராமனுக்குப் பொறுமை இல்லை; சக்கரவர்த்தித் திருமகனான இராமனோ தன் கரங்களினால் ஆயுதம் ஏந்தி அரக்கர்களைச் சாய்த்துச் செங்குருதி படியச் செய்தான்; பலராமனோ சோமபானம் பருகினான். ஆனால், அந்தக் குறைகள் எதுவும் சற்றும் அணுவளவும் இல்லாத குணக் குன்றாகிய தூய நான்காவது இராமராக நீ இப்புவியில் சிறந்து விளங்குவாய்! (2)

முற்பிறவியிலே செய்த பெரும் புண்ணியத்தின் பயனாக, உம் போன்ற ஒரு உன்னதச் சீடனைப் பெற நான் பெற்ற பேறு இப்பூவுலகில் எவருக்கும் வாய்க்காது! வைணவச் சம்பிரதாயத்திலேயே தலைசிறந்த நெறி என்பது, எம்பெருமான் வழிபாட்டை விட ஆசாரியத் தொண்டையே உயிராகப் பற்றி நிற்கும் 'சரம உபாய நெறி' அல்லவா!

தன் தனிப்பட்ட பெயரைக் காட்டிலும், கைங்கரியத்தை அடையாளமாகக் கொண்டு போற்றப்படுவதே இச்சம்பிரதாயத்தின் தனிப்பெரும் பெருமை! வைகுந்தத்து வாசலில் நிற்கும் காவலர்களுக்கு ஜெயன், விஜயன் என்று அசல் பெயர்கள் இருந்தாலும், நம் கோதை நாச்சியார் திருப்பாவையில் அவர்களை 'கோயில் காப்பான்', 'வாசல் காப்பான்' என்று அவர்தம் கைங்கரியப் பெயராலேயே சிறப்பிக்கிறாள் அல்லவா? 

அதைப்போலவே, நீரும் உமது ஆசாரிய புத்திரிகளின் மணற்கால் பட்ட  திருமேனியைத் தாங்கி, பரிபூரணமான நற்குணங்களின் இருப்பிடமாகத் திகழ்வதால்... இன்று முதல் உன்னை 'மணக்கால் நம்பி' என்றே அழைக்கப்போகிறேன்! உமது கைங்கரிய மகிமையால் நீரும், உமது ஊரும் வையகம் உள்ளவரை புகழோடு விளங்குவீர்களாக!” என்று பேரன்போடு உரைத்து ஆசீர்வதித்தார். (7)

பின்னர், “ராமா! உமது ஒப்பற்ற தொண்டிற்கு அடியேன் என்ன பிரதி உபகாரம் செய்ய வேண்டும்?” என்று வினவினார் உய்யக்கொண்டார்.

அதற்கு மணக்கால் நம்பி நெஞ்சுருகி, “ஆசாரியரே! 'உற்றேன் உகந்து பணிசெய்து உன்பாதம் பெற்றேன், ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்!' என்று நம்மாழ்வார் உரைப்பது போல... தேவரீரின் திவ்யமான திருவடித் தாமரைகளுக்கு எப்போதும் உகப்புடன் கைங்கரியம் செய்யும் இந்த உன்னதச் சேவையைத் தவிர, அடியேன் வேறொன்றையும் விரும்பவில்லை!” என்று பணிந்து நின்றார்.

உய்யக்கொண்டார் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து, அந்த உகப்பின் மிகுதியால்,  தன்  திருவடிகளை மணக்கால் நம்பியின் திருமுடியில் வைத்து ஆசீர்வதித்து, இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் மனம் ஏங்கியது. அவரைத் தன் அருகில் அழைத்து மணக்கால் நம்பியின் வலது காதிலே, “நாதமுனிகள் அடியேனுக்குத் தனிப் பெரும் சொத்தாக உபதேசித்த பெருமைமிக்க 'த்வய மஹா மந்திரத்தை' உமக்கு உபதேசிக்கிறேன், கேட்பாயாக!” என்று கூறி, த்வய மந்திரத்தையும் அதன் ஆழமான இரகசியப் பொருள்களையும் ஓதினார். அதுமட்டுமின்றி, தன் ஆசாரியரான நாதமுனிகள் தமக்கு உபதேசித்திருந்த வேத, வேதாந்த அர்த்தங்கள் மற்றும் பிரபந்த ரகசியங்கள் அனைத்தையும் தன் மனமுவந்து மணக்கால் நம்பிக்கு முழுமையாக உபதேசித்து அருளினார்.

அதன் பின்னர், சில காலம் கழித்து, உய்யக்கொண்டார் தன் சீடர்களுக்குத் திருவாய்மொழி காலக்ஷேபம் சாதிக்கும் போது, 

“திருக்குருகூர் அதனுள் நின்ற ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே”(3)

என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தின் ஆழமான உட்பொருளைத் தன் மதுரமான குரலில் விரிவாக விளக்கி அருளினார்.

மண்ணுலகில் மாந்தர் யாவரும் நற்கதியடைவதற்காக நம்மாழ்வார் அருளிய அந்தப் பாசுரத்தின் பொருளை மணக்கால் நம்பி நயம்பட உரைக்கத் தொடங்கினார்:

“நான்முகனான பிரமனையும், மற்ற தேவதைகளையும், இந்தப் பிரபஞ்சத்தையும், சகல ஜீவராசிகளையும் முழுமுதற் பரம்பொருளான எம்பெருமானே சிருஷ்டித்தார். அந்தப் பரம்பொருளே திருக்குருகூரிலே ஆதிப்பிரானாக எளியோருக்கும் எளியனாய் எழுந்தருளி நிற்கிறான்! அப்படியிருக்க, நீங்கள் அவனையன்றி வேறு தெய்வங்களை எதற்காக நாடுகிறீர்கள்? என்று நம்மாழ்வார் உவப்புடன் உபதேசித்த பாசுரத்தைக் கேட்ட மாத்திரத்தில், அங்கே குழுமியிருந்த மக்கள் யாவரும் தங்களின் அறியாமை நீங்கித் திருந்தினார்கள். 

மனமுருகி ஆழ்வாருக்குத் தங்களின் நன்றிகளைச் சமர்ப்பித்து, அவர்தம் திருவடிகளில் விழுந்து பணிவதற்காக அவர் முன்னால் வந்து திரண்டார்கள். அப்படித் திரண்டவர்களில் திருக்குருகூர் வாழ் மக்கள் மட்டுமன்றி, எம்பெருமானின் நித்தியவாச ஸ்தலமான ஸ்வேதத்தீபத்து (திருப்பாற்கடல்) வாசிகளும் மானுட வடிவிலே அங்கே குழுமியிருந்தார்கள்! அவர்தம் மெய்ஞ்ஞானப் பொலிவைக் கண்டு பேரானந்தம் அடைந்த நம்மாழ்வார், ‘பொலிக பொலிக பொலிக’ என்று அவர்களை மட்டற்ற மகிழ்ச்சியுடன் வாழ்த்திப் பாடினார்.

அப்போது அங்கே குழுமியிருந்த முமுக்ஷுக்கள் (முக்தி பெற விரும்புவோர்) ஆழ்வாரை வணங்கி, 'ஆழ்வாரே! தங்களின் திவ்யமான பாசுரத்தைக் கேட்டு நாங்கள் மெய்ஞ்ஞானம் பெற்றுத் திருந்தினோம். ஆனால், தங்களுக்குப் பிறகு இப்புவிக்கு என்ன நிகழும்? நாம் இப்போது கலியுகத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்து கலியுகத்தின் கொடுமைகள் முற்றிப்போகும் காலத்தில், எங்களின் வருங்காலச் சந்ததியினர் நற்கதியடையாமல் எவ்வாறு உய்யப் போகிறார்கள்?' என்று தவிப்புடன் வினவினார்கள். 

அதற்கு நம்மாழ்வார் புன்னகையும் கருணையும் ததும்பும் முகத்துடன், 'அன்பர்களே! நீங்கள் அணுவளவும் அஞ்ச வேண்டாம்! ’பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம் கலியுங் கெடும் கண்டு கொண்மின்’ (5) என்று கலியின் கொட்டத்தை முற்றிலுமாக அடக்கி, வையகத்து உயிர்கள் யாவரையும் உய்விக்கப்போகும் மாபெரும் ஜகதாசாரியர் ஒருவர் விரைவில் இப்புவியில் அவதரிக்கப் போகிறார்! கண்டு மகிழுங்கள்!' என்று தீர்க்கதரிசனத்தோடு விடையளித்தார்” என்று மணக்கால் நம்பி விளக்கி முடித்தார்.

அப்போது உய்யக்கொண்டார் மணக்கால் நம்பியைப் பார்த்து, 'நம்பியே! நம்மாழ்வார் உரைத்த அந்த வருங்கால ஜகதாசாரியரான எழில்கோலத்தைத்தான், நம் எம்பெருமானார் நம்மாழ்வார் என் ஆசாரியரான நாதமுனிகளின் சொப்பனத்திலே சாக்ஷாத்தாகக் காட்டியருளினார்!' என்று உரைத்தார்.

இதைக் கேட்ட மணக்கால் நம்பி பக்திப் பரவசத்துடன், 'ஆசாரியரே! என் நெஞ்சம் பேராவல் கொள்கிறது. அந்தப் பவிஷ்யதாசாரியரின் திருமேனிப் பொலிவையும், அவர்தம் வடிவழகையும் அடியேனுக்கு மேலும் விவரித்து உரைக்க வேண்டும்!' என்று வேண்டினார்.

உய்யக்கொண்டார் தன் கண்களை மூடி அந்த வடிவழகைத் தியானித்து உரைக்கத் தொடங்கினார்: 'நம்பியே! அவர் நிகரற்ற பொலிவும் எல்லையற்ற கருணையும் கொண்டவராகத் திகழ்வார். காரிருள் வானில் உதிக்கும் முழுமதியைக் கண்டு கடல் அலைகள் ஆர்ப்பரித்துப் பொங்குவது போல, இப்புவிக்கு அவதரிக்கப் போகும் அந்த ஜகதாசாரியரின் திருமுக தரிசனத்தைக் கண்டு வைணவ அடியார்கள் யாவரும் தங்களின் நெஞ்சங்களில் மகிழ்ச்சிப் பிரவாகத்தில் திளைத்துப் பொங்குவார்கள்! அவர்தம் அசாத்தியமான நற்குணங்களாலும், பேரொளி வீசும் திருமேனியின் திவ்யமான காந்தியினாலும் உலகத்து மாந்தர்கள் அனைவரின் உள்ளங்களையும் எம்பெருமானிடத்திலே ஈடுபடச் செய்யப் போகிறார்! (4) அந்தப் பவிஷ்யதாசாரியர் நினைத்தே பார்க்க முடியாத தெய்வீகப் பொலிவோடு திகழ்வார் என்றும், அவர்தம் வடிவழகை வர்ணிக்க இவ்வுலகத்து மொழிகளில் வார்த்தைகளே இல்லை என்றும் என் ஆசாரியரான நாதமுனிகள் அடிக்கடி நெஞ்சுருகிக் கூறுவார்!' என்றார்.

அதைக் கேட்ட மணக்கால் நம்பி பெருமூச்சுடன், 'ஆகா! நம் நாதமுனிகள் பெற்ற அந்த மகா பாக்கியத்தை வையகத்தில் வேறு யார்தான் பெறப்போகிறார்கள்? அவர் தன்நம சொப்பனத்திலும் கண்டு அநுபவித்த அந்தப் பவிஷ்யதாசாரியரின் திவ்ய தரிசனத்தை... எளியோர்களான நம்மால் கண்டு அநுபவிக்க இயலாதே! எம்பெருமானை நாம் நேரில் கண்டு அநுபவித்து உய்யும்படி, அவன் திருக்கோவில்களில் பேரழகுடன் 'அர்ச்சாரூபமாக' (விக்ரகமாக) எழுந்தருளியிருப்பது போல... இந்த வருங்கால ஜகதாசாரியரான பவிஷ்யதாசாரியருக்கும் ஒரு திவ்யமங்கள விக்ரகம் மட்டும் இப்புவியில் இருக்குமேயானால், இந்த வையகமே அவர்தம் திருவடிகளில் விழுந்து சரணடைந்து உய்ய வழி பிறக்குமே!' என்று ஏக்கத்துடன் உரைத்தார்.

இதைக் கேட்ட உய்யக்கொண்டார் உளம் கனிந்தார். தன் திருமாளிகையின் படுக்கைக்கு அடியில் உத்தரியத்தில் மறைத்து வைத்திருக்கும் அந்தப் பொன்னான மரப்பெட்டியையும், அதனுள்ளே உன்னதப் பேரொளியோடு துயில்கொள்ளும் பவிஷ்யதாசாரிய திவ்யமங்கள விக்ரகத்தையும் தன் மனக்கண்ணால் நினைத்துக்கொண்டார். 'ஆசாரியர் எனக்கு இட்ட கட்டளையை மணக்கால் நம்பியிடம் உரைக்கும் காலம் இன்னும் கனியவில்லை' என்றுணர்ந்த உய்யக்கொண்டார், தன் இதழ்களில் கனிவான புன்னகையைத் தாங்கி, அவரிடம் எதுவும் கூறாமல் அமைதியாக மௌனம் காத்தார்!

./சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்... 

அடிக்குறிப்புகள்:

(2) (4)  ஸ்வாமி தேசிகனின் யதிராஜஸப்ததி.

(3) ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதும் இல்லா
அன்று, நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர் படைத்தான்,
குன்றம்போல் மணி மாட நீடு திருக்குருகூர் அதனுள்
நின்ற ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே.

(5) பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.

(6) கற்பனை பெயர்கள் - திருவெள்ளறை தாயார் பெயர்கள். 

(7) மணக்கால் என்ற ஊர் இன்றும் லால்குடிக்கு அருகில் இருக்கிறது. இந்த ஊரின் பழைய பெயர் என்ன தெரியவில்லை. 

Comments

Popular posts from this blog

1 - வீரநாராயணபுரம்

24 - காலச் சுழற்சி

23 - வெட்டிவேர்