33 - வாதப் போர்

33 - வாதப் போர்



சோழ ராஜ சபையின் வாயிலை அடைந்த யமுனைத்துறைவர், பல்லக்கிலிருந்து கீழே இறங்காமல், தன் கைப்பட எழுதிய மற்றொரு புதிய ஓலைச் சீட்டை அங்கே இருந்த சேவர்கள் மூலம் அரசவைக்குள் கொடுத்தனுப்பினார்.

அரசவையில் இருந்த ஆக்கியாழ்வான் அந்த ஓலையை வாங்கிப் படித்து, கோபாவேசத்தால் அவனது உடல் நடுங்கத் தொடங்கியது. கண்கள் சிவக்க, "இப்படியொரு ஆணவ வரிகளா! இப்படி எழுதி அனுப்பிய அந்தப் பாலகனை இன்று வாதப் போரில் வென்று, அவனது தலை மீது ஏறி மிதித்துக் கிழித்தெறியப் போகறேன்!" என்று கத்தியவாறு, அந்த ஓலைச் சீட்டை மன்னனிடம் கொடுத்தான்.

அரசன் அந்த ஓலையைத் தன் கைகளில் வாங்கி, சபையிலிருந்த அனைவரும் கேட்கும்படியாக உரத்த குரலில் வாசித்தான்...

“மின்னல் போன்ற பேரொளி வீசும் இமயமலைச் சாரலிலே, மலையரசனின் மகளான அன்னை பார்வதி தேவியின் தளிரடிகள் பட்டுச் சிறந்து விளங்கும் இமயம் முதல்... அன்னப் பறவையின் மென்னடை கொண்ட சீதாபிராட்டி கொடிய அரக்கனால் அபகரிக்கப்பட்ட பின், அவர்தம் திருமுகம் மீண்டும் மலர்வதற்குக் காரணமாக விளங்கிய உன்னத சேதுக்கரை வரையிலும்... மற்றும், சந்திரனும் சூரியனும் தங்களின் தலை அணிகலனாகக் கொண்டு விளங்கும் கிழக்கு உதயகிரிக்கும் மேற்கு அஸ்தகிரிக்கும் இடைப்பட்ட இந்த அகண்ட பூமியிலே... எந்தவொரு சாஸ்திர வாதத்திலும் என்னை வெல்லக் கூடியவரோ அல்லது எனக்கு இணையானவரோ ஒருவரை உங்களால் தேட முடியுமோ? வையகமெங்கும் அலைந்து தேடினாலும் அப்படிப்பட்டவர் எவரும் கிடைக்கப் போவதில்லை!”

என்று படித்து முடித்த அரசன், பல்லக்கை நோக்கி, "யமுனைத்துறைவரே! உமது இணையற்ற கவித்திறனை மிகவும் மெச்சுகிறோம்! இப்போது பல்லக்கை விட்டு இறங்கி வாரும். ராஜகுருவும் புரோகிதருமான ஆக்கியாழ்வானோடு வாதம் புரிந்து உங்கள் மேதமையை நிலைநாட்டுவீராக!" என்று அழைத்தான்.

அதே சமயம், யாமுனரின் அந்த உன்னதமான சமஸ்கிருத ஸ்லோகத்தைக் கேட்ட ஆக்கியாழ்வானோ, உள்ளூர பெரும் நடுக்கமுற்றான். 'யார் இந்தப் பாலகன்? இப்புவியிலே இத்தகையதொரு சாஸ்திர ஞானமும், இணையற்ற கவித்துவமும் மிக்க புலவன் ஒருவன் இருக்கிறானா?' என்று அவனது நெஞ்சில் ஆழமானதொரு தவிப்பும் கவலையும் ஏற்பட்டது. எனினும், தன் மனக் கலக்கத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், 'இவருடனே தர்க்க வாதம் புரிய தயார்!' என்று அரசனிடம் கூறினான்.

அப்போது முத்துப் பல்லக்கின் பட்டுத் திரையை விலக்கி வெளியே குதித்த அந்தப் பன்னிரண்டு வயதுப் பாலகனான யமுனைத்துறைவர், சிங்கக் குட்டியின் கம்பீரப் பார்வையோடு சபையை நோக்கி, "மன்னரே! இந்த வாதப் போரின் வெற்றி தோல்விகளையும், சாஸ்திரங்களின் ஆழத்தையும் நடுநிலைமையோடு ஆராய்ந்து முறையான தீர்ப்பளிக்கக்கூடிய வல்லமை படைத்த சான்றோர்களையும் பண்டிதர்களையும் நடுவர்களாக முதலில் இந்தச் சபைக்கு அழைத்து அமர்த்துவீராக!" என்றார்.

மன்னனும், "நல்லது, அப்படியே ஆகட்டும்!" என்று கூறி, சோழ தேசம் முழுவதிலும் உள்ள தலைசிறந்த புலவர்களுக்கும் பண்டிதர்களுக்கும் உடனடியாக அழைப்பு விடுத்தான். அவ்வாறு சபையைக் கூட்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலே... சோழ நாட்டின் மதிநுட்பம் மிக்க பட்டத்து அரசியார், அந்தப்புரத்துச் சாளர வழியே வெளியே நோக்கினார். அங்கே பல்லக்கின் அருகே நின்ற யாமுனரின் முகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் மெய்சிலிர்த்து போனார்! உடனடியாகத் தன் தூதுவரை அனுப்பி, அரசரை அந்தப்புரத்திற்குள் அழைத்துவரச் சொன்னாள்.

அரசன் அந்தபுரத்துக்குள் நுழைந்தவுடன், அரசியார் பதற்றத்துடன், "அரசே! அந்தச் சிறுவனைச் சாதாரணப் பாலகன் என்று எண்ணி அலட்சியப்படுத்திவிடாதீர்கள்! நான் சாளர வழியாய் அவனுடைய முகத்தைப் பார்த்தபோது, என் உள்ளத்தில் பரிசுத்த வடிவான சாட்சாத் பரம்பொருளின் அம்சமாகவே காட்சியளித்தார். ஆகையால், நீர் ஆக்கியாழ்வானுக்காகப் பரிந்து பேசி, அந்த உன்னதப் பாலகனுக்கு எந்தவொரு அபசாரமும் செய்துவிடாதீர்கள்!" என்று எச்சரித்தாள்.

வியப்புற்ற மன்னன், "பெண்ணே! இன்னும் சில நாழிகைக்குள் நம்முடைய சபா மண்டபத்தில் வித்துவான்கள் மத்தியில் ஆக்கியாழ்வான் எதிரே அவனது திறமை நிரூபணமானால், நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன்!" என்றான். பிறகு அரசன் ஏளனச் சிரிப்புடன், ”ஒருவேளை ஆக்கியாழ்வான் தோல்வியடைவானாகில், நான் என்னுடைய சோழ ராஜ்யத்தின் சரிபாதியையே அந்த யமுனைத்துறைவருக்கு இன்றே பரிசாகத் தந்துவிடுகிறேன்!" என்றான். உடனே அரசியார், "அரசே! ஒருவேளை அந்தப் பாலகன் வாதத்தில் வெற்றி பெறாமல் தோற்றுப் போவானாகில், அந்த நொடியே நான் உமது மக்களுக்கு எளிய தொண்டுகளையும் பணிவிடைகளையும் செய்யும் பணிப்பெண்ணாவேன்!" என்று தன் பங்கிற்கு சபதம் செய்தாள்.

மேலும் அரசியார், "மன்னரே! நம்முடைய இந்தப் பந்தயத்தை சபையிலே பகிரங்கமாக அறிவிக்காமல், நீர் நடுநிலைமையோடு தர்க்கத்தை நடத்த வேண்டும்; அதே சமயம் வாதப் போட்டியின் போது என்னையும் உமது அருகிலேயே பட்டுத் திரைக்குப் பின்னால் அமர்ந்து நியாயமான வாதம் நடைபெறுகிறதா என்று நான் வாதத்தைக் கண்காணிக்க அனுமதியளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். அரசனும் அதன்படியே சம்மதித்து, சிம்மாசனத்தின் ஒரு பக்கத்தில் பட்டுத் திரையிடுவித்து, அரசியாரை அருகில் அமரச் செய்து, சபையில் வீற்றிருந்தான்.

அந்த அரசவை, முன்னெப்போதும் இல்லாத பேரமைதியோடும் பெரும் எதிர்பார்ப்போடும் கூடியிருந்தது. "வாதப் போர் தொடங்கட்டும்!" என்று சோழ மன்னன் தன் செங்கோலை அசைத்துச் சைகை காட்டி ஆணையிட்டான்.

அதைக் கேட்டு ஆக்கியாழ்வான் யாமுனரைப் பார்த்து ஆணவத்தோடு பேசத் தொடங்கினான்: "யமுனைத்துறைவரே! நீர் மிகவும் சிறுபிள்ளை! 'இளங்கன்று பயமறியாது' என்பதைப் போல இங்கே வந்திருக்கிறீர்! உமது முகத்தைப் பார்த்தால் இன்னும் பால்மணம் மாறவில்லை! அரிச்சுவடி படிக்கும் உமக்கு சாஸ்திர வாதம் செய்யும் தகுதி இருக்கிறது என்று இங்கிருக்கும் எவராலும் நம்ப முடியாது! எனவே, நாம் லௌகிகமாக, உலக விஷயங்களைக் குறித்து வாதம் செய்வோம். அதுவே உமக்குச் சுலபமாக இருக்கும்! நான் சில வாக்கியங்களை உரைப்பேன். அவற்றில் நான் ‘ஆம்’ என்று கூறுவதை நீர் ‘இல்லை’ என்று மறுக்க வேண்டும்; நான் ‘இல்லை’ என்று கூறுவதை நீர் ‘ஆம்’ என்று சாதிக்க வேண்டும்! அவ்வளவுதான்! வாதப் போரின் முடிவில் வென்றவர் தோற்றவர் தலையிலே தன் காலால் தாடநம் செய்ய வேண்டும் (தலையில் உதைக்க வேண்டும்) என்பதே நமது பந்தயம்! உமது பிஞ்சுத் தலையிலே என் காலை வைத்து உம்மை வதைப்பதற்குள், இப்போதே என் காலடிகளில் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டுப் பிழைத்து ஓடிவிடு!” என்றான்.

யாமுனரோ அவனது கர்வத்தைக் கண்டு மெல்லப் புன்னகைத்து, “ராஜகுருவே! உமது பேச்சைக் கேட்டால், ஏதேது... நீர் என் மீது மிகுந்த பரிவும் பாசமும் கொண்டவர் போலத் தோன்றுகிறது! ஆனால், 'ஆடு நனைகிறதென்று ஓநாய் குந்தி அழுததாம்' என்ற பழமொழியைப் போல உள்ள உமது வார்த்தைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் செருக்கினை இந்தச் சபை அறியாதா? ஓர் அருகம்புல் நுனியில் இருக்கும் கடுகளவு பனித்துளி, எதிரே இருக்கும் நீண்ட பனைமரத்தைத் தன்னுள் காட்டவில்லையா? அதனால் வீண் ஜாலப் பேச்சுகளை விடுத்து, உமது விருப்பப்படியே வாதத்தைத் தொடங்குவோம்! நாம் அதிகமாகப் பேச வேண்டியதில்லை. தருக்க நெறிப்படி அடியேன் முன்வைக்கும் மூன்று எளிய வாக்கியங்களை நீர் வாக்கு வன்மையால் மறுத்துக் காட்டிவிட்டால், நீர் வெற்றி பெற்றதாக இந்தச் சபையின் முன்னிலையில் அடியேன் உடனே ஒப்புக்கொள்கிறேன்! உமக்கும் இந்த மன்னருக்கும் இதில் சம்மதமா?” என்று சிம்மக் குரலில் முழங்கினார்.

யாமுனரின் இந்த அசாத்திய துணிச்சலைக் கண்டு வியந்த அரசவை வித்துவானும் சோழ மன்னனும், “சரிதான்! உமது பந்தயத்திற்கு நாங்களும் உடன்படுகிறோம்!” என்று சம்மதித்தனர்.

வாதப் போரின் முதல் கேள்வியை முன்வைத்தார் யாமுனர்.

“அரச புரோகிதரே! முதலாவது வாக்கியம்: உம்மைப் புதல்வனாகப் பெற்றெடுத்த உமது உன்னதத் தாய் மலடி அல்லள்! நீர் உமது வாக்கு வன்மையால் இதனை 'ஆம்' என்று மறுத்துப் பேசுங்கள் பார்ப்போம்!" என்றார் புன்னகையுடன்.

இந்த வாக்கியத்தைக் கேட்டவுடன் சபை முழுவதும் வியப்பில் ஆழ்ந்தது. ஆக்கியாழ்வான் திடுக்கிட்டு, சட்டென்று யோசிக்கத் தொடங்கினான். அவனது நெஞ்சில் குழப்பமும் கலக்கமும் எழுந்தது. அந்த வாக்கியத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்து இதை எப்படி மறுப்பது என்று திகைத்தான். 'என் தாய் புத்திரவதி அல்லள் என்று நான் வாதிட வேண்டுமானால், என் பெற்ற தாய் மலடி என்று நானே என் வாயால் உரைக்க வேண்டுமே! இந்தச் சபை என்னை எள்ளி நகையாடாதா? முதற்கோணல் முற்றிலும் கோணலாய் முடிவது போல, இறங்கும் துறையிலேயே நீச்சல் தெரியாமல் தவிக்கின்றேனே!' என்று உள்ளூர நடுங்கி வாய்மூடி நின்றான்.

சபையில் உள்ளவர்கள் சிலர் ஒருவருக்கொருவர் முகங்களைப் பார்த்து, கிசுகிசுத்தார்கள்: "இதோ இந்தச் சபையின் நடுவே குட்டிச்சுவர் போல நட்டநடுவில் நின்றுகொண்டு, தன் தாயை மலடி என்று வாய்கூசாமல் விதண்டாவாதம் செய்தால்... அதற்குப் பிராயச்சித்தமே கிடையாது!" என்றார் ஒருவர். இன்னொருவர், "ஈன்றவள் மலடியென்றால் அவளது கர்ப்பத்திலிருந்து கொழுக்கட்டைப் போலவா பிறந்து விழுந்திருக்கிறான் ஆக்கியாழ்வான்!" என்று சிரித்தான்.

சபை முழுவதும் ஆக்கியாழ்வான் எப்படி சமாளிக்கப் போகிறான் என்று திகைத்திருக்க, ஆக்கியாழ்வானின் முகத்திலோ, கருடனைக் கண்ட பாம்பு போன்ற பெரும் திகைப்பு குடிகொண்டிருந்தது.

அவன் திகைப்பதைக் கண்ட யாமுனர், இதழ்களில் புன்னகை மாறாமல் இரண்டாவது வினாவைத் தொடுத்தார்.

“ஆஸ்தான பண்டிதரே! இரண்டாவது வாக்கியம்: ‘அறநெறி வழுவாமல் இந்தச் சோழ நாட்டை ஆளும் நம் சக்கரவர்த்தி தர்மவான்’ என்கிறோம்! இதனை நீர் 'இல்லை' என்று மறுத்துக் காட்டுங்கள்!” என்றார்.

சபையோர் அரசன் கோபித்துக்கொள்ளப் போகிறாரே என்று பயந்து நடுங்கினார்கள். ஆக்கியாழ்வானின் பாடோ நாம் சொல்ல வேண்டியதில்லை. தன் அறிவைக் கொண்டு இக்கேள்வியை மறுக்க வழி தேடினான். ஆனால், அவனது நெஞ்சில் மரண பயம் குடிகொண்டது. 'ஐயோ! அரசன் தர்மவான் அல்லன் என்று நான் வாதிட்டால்... அனவரதமும் செல்வத்தை அள்ளிக் கொடுத்து, சகல மரியாதைகளையும் கொடுத்து வாழவைத்துக் கொண்டிருக்கும் ‘நமது அரசன் தார்மிகன் இல்லை; அவன் நீதி வழுவிய அக்கிரமக்காரன்’ என்று வாதிடுகிறாயா, துரோகி! என்று மன்னன் தன் உடைவாளை உருவி ஒரே வீச்சாக வீசி என் தலையைத் துண்டித்து விடுவானே! இதற்கு எவ்வாறு மறுமொழி கூறுவது?' என்று பயந்து நடுங்கினான்.

சபையோர் மென்குரலில், "முதல் கேள்வியை விட இது பேரிடியாகவல்லவா இருக்கிறது!" என்றார் ஒருவர். இன்னொருவர், "இத்தனை காலம் பெரும் பண்டிதர்களையெல்லாம், அவர்கள் தலைக்குச் சொன்னால் இவர் காலுக்கும், காலுக்குச் சொன்னால் தலைக்குமாய் மாற்றிப் பேசி, நிலைகுலைய வைத்து மிரட்டியே வென்று வந்தார்! ஆனால் இன்று ஒரு சிறு பையன் அவர் மருந்தை அவருக்கே தந்துள்ளானே! தன் வினை தன்னைச் சுடும் என்று சும்மாவா சொன்னார்கள்!" என்றார்.

சபை முழுவதும் ஆக்கியாழ்வானைப் பார்த்துக்கொண்டிருக்க, ஆக்கியாழ்வானோ, "இனி எனக்கு என்ன பெருமை? பண்டிதன் என்னும் பட்டமும் பறந்துபோகுமே!" என்று தன் தோல்வியை உணர்ந்து, தலைகுனிந்து யமனைக் கண்ட உயிர் போல நடுங்கினான்.

அந்த மகா சபையே அமைதியாக இருக்க, யாமுனர் கணீர் குரலில் தன் மூன்றாவது வாக்கியத்தைத் தொடுத்தார்.

“மகா வித்துவானே! மூன்றாவது வாக்கியம்: ‘நமது பட்டத்து அரசியார் பதிவிரதை (கற்புடைய பெண்மணி)’ என்கிறோம்! இதனை உமது தருக்கத்தினால் 'இல்லை' என்று மறுத்துப் பேசுங்கள்!” என்றார்.

இதைக் கேட்ட சபை முழுவதும் வெலவெலத்துப் போனது. அரசனின் கண்கள் கோபத்தால் சிவந்தது. அதைப் பார்த்த ஆக்கியாழ்வான் அடிவயிற்றில் பேரிடி விழுந்தது போலானது! அவனது உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. "ஆகா! இவரை நீறுபூத்த நெருப்பு என்று அறியாமல், வெறும் சிறுபையன் என்று நினைத்து கைவைத்துவிட்டேனே!" என்று திகைத்து விழித்தான்.

சபையோர் காதோடு காதாய், "தற்போது அவருக்குக் கிரகசாரம் சரியில்லை போலிருக்கிறது!" என்றார் ஒருவர். இன்னொருவர், "கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக திணறவைப்பதாகவல்லவா இருக்கிறது!" என்றார் வியப்புடன்.

எப்படித் தலைகீழாக யோசித்தாலும் அந்த மூன்று வாக்கியங்களையும் ஆக்கியாழ்வானால் மறுக்கவே இயலவில்லை! தீயில் பட்ட மெழுகு போல அவன் உருகுவதைக் கண்ட நடுவர்களும் சான்றோர்களும் அவனுடைய மௌனத்தைக் கண்டு, யமுனைத்துறைவரே வாதப் போரில் மாபெரும் வெற்றி பெற்றார் என்று ஏகமனதாகப் பிரகடனம் செய்தார்கள்!

ஆக்கியாழ்வான் செய்வதறியாது திகைத்து, முகம் வெளிறி, வாய் மூடி, மௌனமாக, தன் கர்வமெல்லாம் அடங்கி அப்படியே இருக்கையிலே சரிந்தான்.
அப்போது சோழ மன்னன் எழுந்து நின்று, “யமுனைத்துறைவரே! உமது மூன்று கேள்விகளுக்கும் மறுப்புரைக்க இயலாமல் ஆக்கியாழ்வான் வாய்மூடி மௌனமானான். உமது அசாத்தியமான அறிவுக்கூர்மையைக் கண்டு இங்கு எல்லோரும் மெய்சிலிர்த்து நிற்கிறோம்! ஆனால், நீர் முன்வைத்த அந்த மூன்று வாக்கியங்களில் ஏதாவது ஒன்றையாவது உம்மால் மறுத்துப் பேச இயலுமா?” என்று ஆர்வமும் கட்டளையும் கலந்த தொனிக்கக் கேட்டான்.
யாமுனர் புன்னகையுடன், “ஒன்று மட்டுமல்ல, மூன்றையுமே மறுக்க முடியும் மன்னா!” என்றார்.

./சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்...

அடிக்குறிப்புகள்:
ஆளவந்தாரின் வரலாறு இருவேறு வடிவங்களில் கிடைக்கிறது. குருபரம்பரா பிரபாவம், திவ்யசூரி சரிதம் ஆகிய நூல்களில் அரசன் 'சோழ மன்னன்' என்றும், பண்டிதன் 'ஆக்கியாழ்வான்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வித்துவான் அட்டாவதானம் வீராசாமி செட்டியார் அவர்கள் எழுதிய 'விநோத ரச மஞ்சரி' (1958) என்னும் நூலில் மன்னன் 'பாண்டியன்' என்றும், பண்டிதரின் பெயர் 'வித்வஜ்ஜன கோலாகலன்' என்றும் காணப்படுகிறது. இவற்றில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குருபரம்பரை நூலின் வழியையே அடியேன் பிரதானமாக எடுத்துக்கொண்டேன். ஆயினும், 'விநோத ரச மஞ்சரி' நூலிலுள்ள சில சுவையான/ரசமான பகுதிகளையும் இதில் இணைத்துக்கொண்டுள்ளேன்.

Comments

Popular posts from this blog

1 - வீரநாராயணபுரம்

24 - காலச் சுழற்சி

23 - வெட்டிவேர்