23 - வெட்டிவேர்

23 — வெட்டிவேர்




ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் திருக்கோவிலின் சந்நிதியிலே எம்பெருமானுக்கு ஆழ்வார்களின் அமுதப் பாசுரங்களைச் சேவித்து, அந்தப் பகவத் அநுபவத்திலே திளைத்திருந்த ஈஸ்வரமுனிகள், உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன் உள்ளிட்ட சீடர்கள் குழுவினர் மெல்ல நாதமுனிகளின் திருமாளிகள் வாசலை வந்தடைந்தனர். ஆனால், அங்கே அவர்கள் கண்ட காட்சியும், கேட்ட செய்ததியும் அவர்களைப் பெருத்த அதிர்ச்சியிலும் தவிப்பிலும் ஆழ்த்தின!

சற்றுமுன்னர் நாதமுனிகளின் திருக்குமாரத்திகள் உரைத்த விபரங்களைக் கேட்டு, "ஐயோ! நம் ஆசாரியருக்கு என்ன நேர்ந்ததோ? இடியும் பெருமழையும் பாராது எங்கே சென்றாரோ?" என்று சீடர்களின் நெஞ்சம் பதறியது. எந்தத் திசையில் தேடி ஓடுவது என்று அறியாமல், ஆசாரியர் மீதிருந்த அளவற்ற பக்திப் பெருக்கினால் ஒவ்வொருவரும் ஒரு திசை நோக்கித் திகைத்து ஓடினார்கள்.

அன்று மதுரகவியாழ்வார் தென் திசை ஒளியைத் தேடி ஓடியதைப்போல, உய்யக்கொண்டார் காட்டின் மேலே தூரத்து ஆகாயத்தில் திருவடியான கருடன் ஒன்று வட்டமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். அதுவே தன் ஆசாரியரைக் கண்டடைவதற்கான திவ்வியமான வழிகாட்டி என்றுணர்ந்து, அந்தக் கருடனை நோக்கியே மின்னல் வேகத்தில் ஓடினார். அடர்ந்த ஆலமரத்தின் விழுதுகளும் வளைந்த புதர்களும் சூழ்ந்த (தற்பொது சொர்கப்பள்ளம் எனப்படும் ) அந்தப் பகுதியை அவர் அடைந்தபோது, அங்கே கண்ட காட்சி அவரது இதயத்தை அப்படியே நிலைகுலைய வைத்தது!

பரந்து விரிந்த அந்த ஆலமரத்தின் அடியிலே, நமது ஆசாரியரான நாதமுனிகள் அசைவற்று, தன் மெய்யுணர்வை இழந்து மயங்கிய நிலையில் கிடந்தார்.

உய்யக்கொண்டார் பதறி அழுதுகொண்டே ஓடிச்சென்று, ஆசாரியரின் திருமேனியைத் தன் மடியில் மெல்லத் தூக்கிச் சாய்த்துக்கொண்டார். அவர்தம் தாமரை போன்ற திருமுகத்தை நோக்கி, "தெளிந்த ஞானத்தின் உறைவிடமே! ஆழ்வார்கள் அருளிச்செய்த தமிழ் அமுதை வையகத்திற்கு வாரி வழங்கிய எங்கள் ஆசாரியப் பெருமானே! எழுந்திருங்கள்... எழுந்திருங்கள்!" என்று நெஞ்சுருகித் தவிப்புடன் எழுப்பினார். உய்யக்கொண்டாரின் திருக்கண்களிலிருந்து உதிர்ந்த வெதுவெதுப்பான கண்ணீர்த்துளிகள் நாதமுனிகளின் திருமேனியில் பட்டதும், அவர் மெதுவாகத் தன் கண்களைத் திறந்து பார்த்தார்.

நாதமுனிகள் தழுதழுத்த குரலில், "உய்யக்கொண்டாரே! சக்கரவர்த்தித் திருமகனான என் இராமபிரான் அடியேனைத் தன் திருநாட்டிற்கு அழைக்கிறான். என் யாத்திரை இதோடு முடிகிறது, நான் புறப்படுகிறேன். ஆனால், அதற்கு முன்னால் அடியேன் என் நெஞ்சினுள்ளே உயிரினும் மேலாகப் பாதுகாத்து வந்த ஒப்பற்ற நிதியான பெரும் சொத்து ஒன்றை உம்மிடம் ஒப்படைக்க வேண்டும்!" என்றார்.

அதைக் கேட்டு வியந்த உய்யக்கொண்டார், "ஆசாரியரே! ஆழ்வார்களின் தமிழமுதம் என்னும் ஒப்பற்ற பிரபந்தச் சொத்தையும், யோக மார்க்கத்தின் உன்னதமான யோக சாஸ்திரம் என்னும் மற்றொரு ஆன்மீகச் சொத்தையும் ஏற்கெனவே அடியேங்களுக்கு அருளினீர்கள்! இவற்றைத் தவிர மூன்றாவதாகத் தங்களிடம் இருக்கும் அந்த உன்னதச் சொத்து என்ன இருக்கப் போகிறது?" என்று வினவினார்.

நாதமுனிகள் மெல்லிய புன்னகையுடன், "இருக்கிறது உய்யக்கொண்டாரே! நீர் சற்றும் தாமதிக்காமல் அடியேனின் இல்லத்துக்கு ஓடும். அங்கே நாம் திருவாராதனம் செய்யும் எம்பெருமானின் திருவடிகளுக்குக் கீழே ஒரு மரப்பெட்டி இருக்கிறது. அதை உடனே இங்குக் கொண்டுவாரும்! நீர் வரும் வரையில் அடியேன் என் ஆத்மாவிற்குள் ஆழ்வாரின் பாசுரங்களைத் தியானித்தவாறே என் பிராணனைத் தாங்கிக் கொண்டிருக்கிறேன்!" என்றார்.

உய்யக்கொண்டார் மறுவார்த்தை பேசாமல், அங்கே வீசும் புயல் கற்றைவிட வேகமாக ஓடிச் சென்று, ஆசாரியரின் திருமாளிகைக்குள் நுழைந்து, திருவாராதனப் பெருமாளின் திருவடிகளுக்குக் கீழிருந்த அந்தப் புனிதமான மரப்பெட்டியைத் தன் தலையிலே சுமந்துகொண்டு மீண்டும் ஓடிவந்தார்.

நாதமுனிகள் அவரைத் தன் அருகில் அன்புடன் அழைத்து, "இந்தப் பெட்டியைத் திறப்பீராக!" என்றார். உய்யக்கொண்டார் அதன்படியே பெட்டியைத் திறந்து, அதிலிருந்த பட்டுத் துணியை மெல்ல விலக்கினார். அங்கே, அந்தப் பட்டு வஸ்திரத்திற்கு நடுவே, இருளை நீக்கும் தெய்வீக விளக்கைப் போலப் பேரொளி வீசும், கற்பக மரம் போலக் கருணை பொழியும், செந்தாமரை போன்ற திருக்கண்களைக் கொண்ட ‘பவிஷ்யதாசாரிய’ திவ்யமங்கள விக்ரகம் எழில்கொஞ்சும் அழகுடன் காட்சியளித்தது!

நாதமுனிகள் அந்த விக்ரகத்தை வெளியே எடுத்தபோது, உன்னதமான அவர்தம் திருக்கரத்திலே ஏந்திய முக்கோலின் (திரிதண்டம்) அழகும், அஞ்சலி முத்திரை காட்டும் அவதார எழிலும் உய்யக்கொண்டாரின் இதயத்திற்குள் தேனாக பாய்ந்தது. அந்தத் தெய்வீக அழகில் ஆழங்காற்பட்டு, அவர் உடல் சிலிர்த்துத் தள்ளாடி நின்றார்.

நாதமுனிகள் உய்யக்கொண்டாரைப் பார்த்து, "உய்யக்கொண்டாரே! காலம் கனிந்து வரும் வரையில் ஒருவருக்கும் இத்திவ்ய ரகசியத்தை வெளியிடாதீர்!" என்று உன்னதச் சூளுறவு பூணச் செய்து, நம்மாழ்வார் தமக்கு இந்தப் பவிஷ்யதாசாரிய திவ்யமங்கள விக்ரகத்தை எவ்வாறு பிரசாதித்தருளினார் என்ற முழுக் கதையையும் விரிவாகக் கூறினார். "இனி இத்தெய்வீக நிதி உமது பொறுப்பு. இதுவே உமது சொத்து! இதனை, ஈஸ்வரமுனிகளின் திருக்குமாரனாக அவதரிக்கப்போகும் என் பேரனான யமுனைத்துறைவனிடம் ஒப்படைக்க வேண்டும். இது அவனது பாட்டனான நாதமுனிகள் விரும்பிய உன்னத விஷயம் என்று கூறி, அவனுக்குத் தஞ்சமாக இதனை ஆசாரிய முத்திரையோடு காட்டிக் கொடுப்பீராக!" என்று நியமித்தார்.

பின்னர், நாதமுனிகள் தன் கண்களை மெதுவாக மூடிக்கொண்டு, அழகு கொஞ்சும் அந்த விக்ரகத்தைத் தன் மனக்கோவிலில் தியானித்து, அதன் திவ்யமான திருவடிகளைத் தன் திருக்கரங்களால் பற்றிக்கொண்டார். "ஆழ்வார் திருவடிகளே சரணம்!" என்று உரைத்த மாத்திரத்தில், அவர்தம் திவ்ய ஆத்மா திருமேனியை நீங்கியது. அப்போது மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்த பெரிய திருவடியான கருடன், நாதமுனிகளின் திவ்ய ஆத்மாவைத் தன் திருத்தோள்களிலே எழுந்தருளப்பண்ணிக் கொண்டு, பரந்த அழகிய அண்ட சராசரங்களைக் கடந்து, அந்தமில்லாத பேரின்பத்து அடியார்களோடு ஒரு கோவையாக இணையும்படி, இலங்கைபுரி எரித்தபிரானான ஸ்ரீராமபிரானின் நித்தியமான திருவடி நிழலை அடையக் கொண்டு சென்றது.

உய்யக்கொண்டாரின் கைகளிலே இப்போது பவிஷ்யதாசாரிய விக்ரகம் தெய்வீகப் பேரொளியோடு பிரகாசித்தது. எம்பெருமானின் திவ்யாயுதங்களும் நித்தியசூரிகளும் ஒவ்வொரு ஆழ்வார்களாக இப்புவியில் அவதரித்ததை அவர் எண்ணிப் பார்த்தார். இப்போது அவர்தம் கைகளில் விளங்கும் இந்த விக்கிரகம், எம்பெருமானின் சகல ஆயுதங்களும் கல்யாண குணங்களும் ஒன்றாகச் சேர்ந்து வடிவெடுத்த உன்னத அவதாரமோ என்று வியந்து நின்றார்.(1) ஆழ்வார்கள் அவதரித்த நாட்களைக் காட்டிலும், கலியுகத்து ஆன்மாக்கள் யாவும் பிறவிப் பெருங்கடலைக் கடந்து கரையேறும்படியாக இப்புவியில் இக்கோலத்தோடு இந்த ஜகதாசாரியர் அவதரிக்கப் போகும் அந்த உன்னதத் திருநாளை நாம் உயிருடன் இருந்து பார்க்க முடியாதே என்று ஏங்கித் தவித்தார்(2). பின்னர், அந்த விக்ரகத்தைப் பத்திரமாகப் பட்டுத் துணியால் சுற்றி, மரப்பெட்டிக்குள் வைத்து மூடினார்.

அச்சமயம், அடர்ந்த காட்டின் வழியே ‘ஆசாரியரே! எங்கு இருக்கிறீர்?’ என்று ஈஸ்வரமுனிகள் மற்றும் சீடர்கள் கதறிக்கொண்டு ஓடிவரும் தவிப்பான குரல்கள் தூரத்தில் கேட்டன. திடுக்கிட்ட உய்யக்கொண்டார், ‘யாருக்கும் வெளியிடாதீர்’ என்ற நாதமுனிகளின் கட்டளையை நினைவுகூர்ந்தார்.

சற்றும் தாமதிக்காமல், தான் அமர்ந்திருந்த அந்தப் பிரம்மாண்டமான ஆலமரத்தின் விழுதுகளுக்கு நடுவே, அடர்ந்த இலைகளாலும் வேர்களாலும் மறைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய மரப்பொந்திற்குள் அந்தப் பெட்டியைப் பத்திரமாகத் தள்ளி, உலர்ந்த இலைகளால் எவருக்கும் தெரியாதவாறு மூடி மறைத்தார்.

அடுத்த சில நொடிகளில் ஈஸ்வரமுனிகள், குருகைக் காவலப்பன் உள்ளிட்ட சீடர்கள் அழுதுகொண்டே அங்கே வந்து சேர்ந்தார்கள். அப்போது உய்யக்கொண்டார் ஆசாரியரின் திருமேனியைத் தழுவி அழுதுகொண்டிருந்தார்..

அங்கே நடந்தவற்றை உய்யக்கொண்டார் மூலம் அவர்கள் அறிந்தபோது, அவர்களின் உலகம் அப்படியே இருண்டது போலானது. நாதமுனிகளின் விமல சரமத் திருமேனியைச் சேவித்து, தங்களின் கண்களிலும் நெஞ்சிலும் அளவில்லாச் சோகத்தைத் தேக்கிக்கொண்டு கதறினர். வையகம் உய்யச் சொல்வதற்கரிய அரும்பெரும் காரியங்களைச் செய்த உன்னதத் திருமேனி, இன்று சேறும் சகதியும் நிறைந்த காட்டு மண்ணிலே கிடப்பதைக் கண்டு நெஞ்சுருகி அழுதனர்.

பின்னர், ஒருவாறு தங்களைத் தேற்றிக்கொண்டு, திருக்குமாரரான ஈஸ்வரமுனிகளின் திருக்கரங்களால் வேதவிதிப்படிச் செய்ய வேண்டிய சரமக் கைங்கரியங்களை மிக நேர்த்தியாகச் செய்வித்தனர்(3). பெருந்திரளான வைணவ அடியார்கள் சூழ, நாதமுனிகளின் திவ்யத் திருமேனியை (தற்போது சொர்கப்பள்ளம் எனப்படும் ) அந்த இடத்திலேயே முறைப்படிப் பள்ளிபடுத்தினர்.(4) அவர்தம் பள்ளிபடுத்தப்பட்ட இடத்தின் அருகே, ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் விக்ரகங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

ஆசாரியரான நாதமுனிகள் தமக்கு இட்ட 'ஒருவருக்கும் வெளியிடாதீர்' என்ற உன்னதக் கட்டளைக்கு இணங்க, உய்யக்கொண்டார் அந்தப் பவிஷ்யதாசாரியர் விக்ரகம் தன்னிடம் இருக்கும் திவ்ய ரகசியத்தை யாரிடமும் கூறாமல் தன் நெஞ்சிற்குள்ளேயே பூட்டி வைத்தார்!

தன் ஆசாரியரான நாதமுனிகளைப் பிரிய சற்றும் மனமில்லாமல், அவர்தம் பள்ளிபடுத்தப்பட்ட திருவரசுக்கு அருகிலேயே தங்கிவிட்டார் குருகைக் காவலப்பன். பிற்காலத்தில் நாதமுனிகளின் பேரனான யமுனைத்துறைவன் அங்கே வரும்போது அவனுக்கு யோகக் கலைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று தன் ஆசாரியன் தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்காகவே அங்கேயே அமர்ந்தார். குருகைக் காவலப்பன் தர்பைப் புற்களைக் கீழே பரப்பி, யோக வலிமைக்கு மேல் வலிமை தரக்கூடியதான மான் தோலை அதன் மீது விரித்து, அதன் மேல் பத்மாசனமிட்டு வீற்றிருந்தார். தன் மனத்தை எம்பெருமானிடத்தில் நிலைநிறுத்தி, அங்கேயே ஆழ்ந்த யோக சமாதியில் மூழ்கினார்.

மறுபுறம், பிறவியாகிய பெருநோயைத் தீர்க்கும் நம்மாழ்வார் அருளிச்செய்த திராவிட வேதமாகிய திருவாய்மொழியைக் கொண்டு, உலகிலே திருந்தாத மனிதர்களையும் நன்கு திருத்தி நன்னெறியில் செலுத்தவும், வைணவச் சம்பிரதாயத்தின் மேன்மைகளை உலகெங்கும் விளக்கிக் கூறவும் உய்யக்கொண்டாரும் மற்ற சீடர்களும் புறப்பட்டார்கள்.

ஆழ்வார்களின் பெருமையையும் திவ்யப் பாசுரங்களின் ஆழ்ந்த உட்பொருளையும் உலகம் அறியும் பொருட்டு, ஆசாரியர் நாதமுனிகள் கற்பித்த உன்னத பக்திப் புனலை, தாகத்தால் தவிக்கும் வையகத்து மாந்தர் அனைவருக்கும் பாய்ச்சி அவர்களைக் கரையேற்ற, உய்யக்கொண்டாரும் பிற சீடர்களும் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள்.

./சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்..

---

அடிக்குறிப்புகள்:
(1) ஸ்ரீ தேசிகன் அருளிய யதிராஜஸப்ததி
(2) ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலை
ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாள்களிலும்
வாழ்வான நாள் நமக்கு மண்ணுலகீர் – ஏழ் பாரும்
உய்ய எதிராசர் உதித்தருளும் சித்திரையில்
செய்ய திருவாதிரை

(3) உபதேசரத்னமாலை
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மையறிவாரார்
அருளிச்செயலை அறிவாரார் அருள்பெற்ற
நாதமுனிமுதலாம் நந்தேசிகரையல்லால்
பேதைமனமே உண்டோபேசு

(4) "வேர் சூடுமவர்கள் மண் பற்றுக் கழற்றார்போலே ஞானியை விக்ரஹத்தோடே ஆதரிக்கும்" என்பது ஸ்ரீவசனபூஷண வாக்கியம்; "வேர் சூடுவார் மண்பற்றுப் போலே" என்பது ஆசார்ய ஹ்ருதய வாக்கியம்.

அதாவது, நறுமணமிக்க வெட்டிவேரை விரும்பிச் சூடுவோர், அதிலுள்ள மண்பற்றைக் கழுவி நீக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வது போல, எம்பெருமான் ஞானிகளின் ஆன்மாவை மட்டுமல்லாது, பலாப்பழத்தில் ஈ மொய்ப்பது போல ஞானப் பரிமளம் கமழும் அவர்களின் திருமேனியையும் (தேகத்தையும்) உகந்து காக்கிறான்.

இத்தகைய பெருமைமிக்க ஆழ்வார்கள் மற்றும் ஆசாரியர்களின் திருமேனிகளைப் பள்ளிபடுத்தி, அவர்களின் அருளாசி என்றும் நிலைத்து அரசாட்சி செய்யும் இடமாக விளங்குவதாலேயே அவ்விடங்கள் ’திருவரசு’ என்று போற்றப்படுகின்றன.

நாதமுனிகள் வைணவ சம்பிரதாயத்தின் ஆணிவேர்; அந்த வேரின் மகிமையினால்தான் இன்று வைணவம் விழுதுகள் பரப்பிப் பெரும் விருட்சமாகத் தழைத்தோங்கி நிற்கிறது

Comments

Popular posts from this blog

1 - வீரநாராயணபுரம்

24 - காலச் சுழற்சி