16 - ஆலமரத்துக் கூத்து

16 - ஆலமரத்துக் கூத்து



கங்கைகொண்ட சோழபுரத்து அரசவையில் விசித்திரமான வழக்கைப் பார்ப்பதற்கு முன், நாதமுனிகள் எவ்வாறு ஆழ்வார் பாசுரங்களுக்கு நாடகத் தமிழ் வடிவம் கொடுத்தார் என்பதை வாசகர்களுக்குக் கூறுவது நமது கடமையாகும்.

ஒரு நாள் இரவு, வீரநாராயணபுரம் கோவிலில் எம்பெருமானுக்குரிய பள்ளியறைச் சேவை செவ்வனே நிறைவுற்று, திருக்காப்பிடப்பட்ட பிறகு (கோயிலின் திருக்கதவுகள் சாத்தப்பட்ட பின்), நாதமுனிகள் தன் மருமக்களுடன் அமைதி சூழ்ந்த அந்தப் பொழுதில் தம் இல்லம் நோக்கி மெல்ல நடந்து வந்துகொண்டிருந்தார்.

அப்போது திருவீதியின் ஒரு கோடியில், விழுதுகள் பல பரப்பி ஆகாயத்தையே முட்டி நின்ற தொன்மையான ஆலமரத்தின் அடியில், பெருந்திரளான மக்கள் ஆவலோடு குழுமியிருப்பதைக் கண்டார். இருளைக் கிழித்துக்கொண்டு சுடர்விட்டு எரிந்த தீவட்டிகளின் செந்நிற ஒளியும், அங்கு எழுந்த சலங்கை ஓசையும் ஆரவாரமும் விண்ணைத் தொட, அவ்வாலமரத்தில் துயில்கொண்டிருந்த பறவைகள் யாவும் சேக்கையிலிருந்து (கூடுகளிலிருந்து) கலைந்து, அஞ்சிச் சிறகடித்து, அமைதியான வேறு மரங்களைத் தேடிப் பறந்தன.

"சோழ மன்னரின் நகர்வலம் ஏதேனும் நிகழ்கிறதோ?" என்று எண்ணிய நாதமுனிகள், தம் மருமக்களுடன் சற்று அருகே சென்று நோக்கினார். அங்கே அவர்கள் கண்ட காட்சி வியப்பைத் தந்தது! தீவட்டி ஒளியின் பின்னணியில் ஆலமரத்தடியில் இருந்த கல்மேடையில் கூத்து ஒன்று அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது.

ஆடலும், பாடலுமாக அந்த நடனக் கலைஞர்கள், தங்களின் முத்திரைகளாலும், வியக்கத்தக்க அங்க அசைவுகளாலும், முகத்தில் தோன்றி மறைந்த நவரச மெய்ப்பாடுகளாலும் புராதனக் கதையொன்றை அங்கே தத்ரூபமாக உயிர்ப்பித்துக்கொண்டிருந்தனர்.

கூடி நின்ற மக்கள் கூட்டம் மெய்மறந்து கைகொட்டி ஆவலோடு ரசித்துக்கொண்டிருந்தது. நாதமுனிகளும் அவர்தம் மருமக்களும் சிறிது நேரம் அந்த ஆடல் நயங்களை அநுபவித்துவிட்டுத் தங்கள் இல்லம் நோக்கி நடந்துசென்றார்கள்.

மறுநாள் அதிகாலைப் பொழுது புலர்ந்தது. காட்டுமன்னார் கோயில் பிரகாரத்தில் செங்கதிரோனின் இளவெயில் பொன்னிறமாகப் பரவிக்கொண்டிருந்தது.

அங்கே, எம்பெருமானின் திவ்யமங்கள விக்கிரகத்தின் முன்னே, நாதமுனிகள் இரு கரங்களையும் கூப்பி ஆழ்ந்த தியானத்தில் நின்றுகொண்டிருந்தார். ஆனால், அவரது அகக்கண்ணிலோ வேறொரு தெய்வீகக் காட்சி நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தது! முந்தைய இரவு வீதியோரத்தில் கண்ட அந்த எளிய கூத்தின் மெய்சிலிர்க்க வைத்த அசைவுகளும், சடகோபர் தமக்கு அருளிச்செய்த திவ்யப் பிரபந்தப் பாசுரங்களின் கம்பீரமான சந்தங்களும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து அவர்தம் உணர்வில் அலைமோதின.

நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை வெறும் இசையோடு மட்டும் பாடிட நாதமுனிகளின் உள்ளம் ஒப்பவில்லை. பாசுரங்களின் சொல்நயமும் (இயல்), பண்ணின் இன்னிசையும் (இசை), மெய்ப்பாடுகளின் அபிநயமும் (நாடகம்) ஒன்றாக இணையும்போதே ஆழ்வாரின் உன்னத அக நுகர்ச்சி முழுமையடையும் என்பதைத் தமது அகக்கண்ணால் கண்டு அவர் மெய்மறந்தார்.

சட்டென்று தியானம் கலைந்து, தாமரை மலரெனக் கண்களை விழித்தார் நாதமுனிகள். அவர்தம் திருமுகத்தில் முன்னெப்போதும் கண்டிராத ஒரு தெய்வீகப் பேரொளியும் பரவசமும் ததும்பின; நெஞ்சில் பொங்கிய ஆனந்தப் பெருக்கினால் அவர்தம் விழியோரங்களில் கண்ணீர் துளிர்த்தது.

"ஆகா! சடகோபர் எம்பெருமானை உகந்து 'கூத்தா!' என்று திருவாய்மொழியில் விளித்தபோதெல்லாம், அதன் உன்னதமான உட்பொருளும், ஆழ்வார் கண்ணன் கூத்தாடுவதைக் கண்டு ரசித்த ரகசியமும் அடியேன் நெஞ்சுக்கு இத்தனை காலம் புலப்படாமல் போயிற்றே!" என்று வியப்பு மேலிட நெகிழ்ந்தார்.

பின்னர், தன் முன்னே திகைப்புடன் நின்றுகொண்டிருந்த மேலையகத்தாழ்வானையும் கீழையகத்தாழ்வானையும் வாத்சல்யம் ததும்ப நோக்கி, "அன்பான மருமக்களே! நேற்று வீதியோர ஆலமரத்தடியில் நிகழ்ந்த கூத்தில், மக்கள் கூட்டம் எப்படி ஒன்றிப்போய் ரசித்தது என்பதை நீங்கள் பார்த்தீர்களல்லவா? நம் தமிழரின் தொன்மையான நாட்டுப்புறக் கூத்து மரபை நாம் ஆழ்வாரின் திவ்யப் பாசுரங்களுடன் இணைக்க வேண்டும்.

நம் ஆழ்வார்கள் அருளிச்செய்த இத்தமிழ்ப் பாசுரங்கள் வெறும் இயற்றமிழின் எழுத்துகளோடு மட்டும் சுருங்கிவிடுபவை அல்ல; வெறும் பண்ணிசையோடு மட்டும் நின்றுவிடுபவையும் அல்ல. எம்பெருமானின் இந்தத் திவ்ய அநுபவத்தின் முழுமையான எல்லையை நாம் மக்களுக்குப் புரியும் வண்ணம் நாடகத் தமிழில் எடுத்துரைக்க வேண்டும்!" என்றார் தீர்மானமாக.

இதைக் கேட்ட மருமக்களிடம் விவரிக்க இயலாததொரு குதூகலமும் ஆச்சரியமும் இழையோடின. இது அவர்களின் அகன்ற விழிகளில் வியப்புடன் ததும்பி நிற்பதைப் பார்த்த நாதமுனிகளின் முகத்தில் மந்தஹாசப் புன்னகை ஒன்று அரும்பியது. அப்புன்னகையில் ஒரு புதிய கலையுலகைப் படைக்கப் போகும் தீர்க்கமும், பேரானந்தமும் ஒளிர்ந்தன.

"ஆம், மருமகனே! பாசுரங்களை வெறும் பண்ணிசையோடு பாடி அநுபவிப்பது ஒரு நிலை என்றால், அதன் உச்சகட்ட எல்லையாக விளங்குவது நாடகத் தமிழின் மெய்ப்பாடுகளாகிய அபிநயம்மும் முகபாவமுமே ஆகும்! எவ்வித செயற்கையான வேடப் புனைவுகளோ, வண்ண ஒப்பனைகளோ இன்றி, தன் உடலையும் ஆன்மாவையும் மட்டுமே கொண்டு, தன்னை எம்பெருமானாகவும், அவனைக் காதலிக்கும் நாயகியாகவும் பாவித்து, பாசுரங்களின் ஒவ்வொரு சொல்லுக்கும் மெய்ப்பாடுகளைக் காட்டுவதே கூத்தியல் இலக்கணம்! இதனைத்தான் நாம் அரங்கனின் திருமுன்பே 'அரையர் சேவை' என்னும் உன்னத திவ்யக் கலையாக அமுது செய்யப் போகிறோம்!" என்று உணர்ச்சிப் பெருக்குடன் உரைத்தார்.

அடுத்த நொடி, நாதமுனிகள் தம்மை மறந்தார். சுற்றிலும் இருந்த உலகை மறந்தார். ஒரு பாவையைப் போல் நாதமுனிகளின் திருமேனி தெய்வீக அசைவுகளுடன் அசையத் தொடங்கியது. அவர்தம் கைகள் தாமரை மலர் விரியும் மென்மையுடன் ஹஸ்த முத்திரைகளாக மலர்ந்தன. அவர்தம் விழிகள் சந்நிதியின் தீப ஒளியில் சுழன்றாடி, நவரச மெய்ப்பாடுகளை வாரி இறைத்தன.

சந்நிதியின் அந்தராளத்தில் எழுந்த அந்த ஆடல் நயத்தையும், மெய்சிலிர்க்க வைக்கும் நவரச மெய்ப்பாடுகளையும் கண்ட மருமக்கள் இருவரும் சொல்லொணா வியப்பில் மெய்மறந்து நின்றனர்.

மேலையகத்தாழ்வானின் கண்கள் கசிந்து உருகின. "‘குன்றெடுத்து ஆநிரை மேய்த்து அவை காத்த எங்கூத்தாவோ!’ என்று நம் சடகோபர் பாடி நெகிழ்ந்தாரே... அந்தப் பரம்பொருளின் ஆடல் கோலத்தை இன்று அடியேன் உங்கள் மூலம் நேரில் கண்டேன்!" என்று நெஞ்சுருகிக் கூறினான்.

ஆயினும், அவனது நெஞ்சில் எழுந்த ஒரு சிறு ஐயத்தினால், தன் அகன்ற விழிகளில் வியப்பு பொங்கித் ததும்ப, "ஆசாரியரே! எம்பெருமானின் இந்த எளிய லீலையைக் காட்டியது போல், அவர்தம் பிற உன்னத லீலைகளையும் அவதாரப் பெருமைகளையும் கூடவா இந்த எளிய நாடகக் கூத்து வடிவிலே நம்மால் காட்டிவிட முடியும்?" என்று வினவினான்.

நாதமுனிகள் புன்னகைத்தார். அவர்தம் திருக்கரங்கள் சட்டென்று வான்வெளியில் ஒரு தெய்வீக முத்திரையைத் தாங்கி நின்றன.

"ஏன் முடியாது வரதா?" என்று வினவிய நாதமுனிகள், திருமால் திரிவிக்கிரமனாக ஓங்கி உலகளந்த சரித்திரத்தைத் தன் நெஞ்சில் தியானித்தார். "'முடிபாதமெழ' என்று ஆழ்வார் உருகிப் பாடுகிறார் அல்லவா?" என்று கூறியவாறே, நாட்டிய சாஸ்திரத்தின் நிருத்த லட்சண முறைப்படி, திருமுடி வரையிலும் திருவடிகள் கிளர, கேசத்திற்கு மேலே பாதம் எழும்பும்படி தன் திருமேனியை வளைத்து, அந்தப் பிரம்மாண்டமான திருக்கோலத்தை அபிநயத்தோடு செய்து காட்டினார்.(1)

ஒரு மனிதன் தன் உடம்பாலும் முகத்தாலும் இத்தனை உணர்வுகளையும், பிரம்மாண்டமான அவதாரங்களையும் காட்டிவிட முடியுமா என்று மருமக்கள் இருவரும் திகைத்து, சித்திரப் பாவைகள் போலப் பேசாமல் நின்றனர்.

கீழையகத்தாழ்வான் மெல்லக் குனிந்து, "ஆசாரியரே! எந்தவொரு மாற்று வேடமும் இல்லாமல், ஒருவரே பல கதாபாத்திரங்களை ஒரே தருணத்தில் சபையினருக்கு எப்படிக் காட்டுவது?" என்று வியப்புடன் கேட்டான்.

நாதமுனிகள் புன்னகைத்து, "வேடப் புனைவு ஏதுமின்றி, ஒருவரே தாயாகவும், மகளாகவும், குறத்தியாகவும் மாறி மாறி அபிநயம் செய்ய வேண்டும். மகள் நிலையிலிருந்து கூடல் இழைக்க வேண்டும்; அடுத்த நொடி, குரல் மாற்றத்தாலும் உடலசைவாலும் தாயாக மாற வேண்டும்; பின்னர் குறத்தியாகப் பேச வேண்டும். இவ்வாறாக நாடகத் தமிழின் அத்தனை உணர்வுகளையும், காட்சி மாற்றங்களையும் நாம் ஒரே இடத்தில் அரங்கேற்ற முடியும்!" என்றார்(2)

நாதமுனிகள் முத்தமிழின் இந்த உன்னத இணைப்பை விளக்கி முடித்தபோது, மேலையகத்தாழ்வானும் கீழையகத்தாழ்வானும் விவரிக்க இயலாத பரவசத்துடன் அவர்தம் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.

சில காலம் கழித்தபின், கங்கைகொண்ட சோழபுரத்து அரசவையில் விசித்திரமான வழக்கு ஒன்று வந்தது...

-சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்...

அடிக்குறிப்புகள்:

1) நம்பிள்ளை 'திருமுடியளவும் திருவடிகள் கிளர' என்று தன் உரையில் காட்டுகிறார்.

(2) நாதமுனிகள் அன்று வகுத்த இக்கோட்பாட்டைத்தான் இன்று அரையர் சேவையின் 'முத்துக்குறி' நிகழ்ச்சியில், அரையர் ஒருவரே வேடப் புனைவு ஏதுமின்றி தாயாகவும், மகளாகவும், குறத்தியாகவும் மாறி மாறி அபிநயம் செய்து காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

1 - வீரநாராயணபுரம்

24 - காலச் சுழற்சி

23 - வெட்டிவேர்