36 - தூதுவளை

36 - தூதுவளை



கட்டுக்கடங்காமல் கொட்டித் தீர்த்த அந்த அடைமழையின் உக்கிரத்திற்கு அஞ்சி, தன் தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல், முதியவர் ஒருவர் மூச்சிரைக்க ஓடிவந்து வீரநாராயணப் பெருமாள் திருக்கோயிலின் முகப்பு மண்டபத்திற்குள் நுழைந்தார். அவர் அணிந்திருந்த உத்தரீயம் நனைந்து தோளோடு ஒட்டியிருந்தது. மழையின் வேகத்தால் நெற்றித் திருமண் சற்றே கலைந்துகன்னத்தில் வழிந்திருந்தது.

அவர் முகத்தில் ஏதோவொரு பிரளயமே நேர்ந்துவிட்டது போன்ற அவசரமும் பயமும் குடிகொண்டிருந்தன. தன் கையில் இருந்த பழைய ஓலைக்கூடையை அவசரமாகப் பலிபீடத்தின் அருகே வைத்துவிட்டு, 'மழை மெல்ல ஓய்ந்துவிட்டதா?' என்று கவலை தோய்ந்த விழிகளோடு வாசலை நோக்கியவாறே, மன்னார் சந்நிதி நோக்கிச் சென்று, தன் நடுங்கும் கரங்களைக் கூப்பினார். மழை சீக்கிரம் நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டது போல இருந்தது.

அர்ச்சகர் வழங்கிய திருத்துழாய் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்ட அந்த விநாடியில் மழை சற்றே ஓய்வது போலத் தோன்றியது. அவசரமாய்க் கையில் இருந்த திருத்துழாயை வாயில் போட்டுக்கொண்டு, அதே அவசரத்தில் பதற்றத்துடன் வாசலை நோக்கி போர் குதிரையைப் போல் வேகத்தில் ஓடினார்.

மண்டபத்தின் தூண் அருகே நின்றவாறு இதைக் கவனித்துக் கொண்டிருந்த மணக்கால் நம்பி, "நற்குணம் பொருந்திய பெரியவரே! சற்றே நில்லும்!" என்று கம்பீரமான குரலில் அழைத்தார்.

கோயில் பிரகாரத்தின் ஈரத் தரையில் வழுக்கி விழாதவாறு வேகமாகச் சென்று கொண்டிருந்த அப்பெரியவர் திடுக்கிட்டுத் திரும்பினார். "நீங்கள் ஏதோ அரசக் கட்டளைப் நிறைவேற்ற அவசரமாகச் செல்வது போல் அல்லவா இருக்கிறது!" என்றார் சிரித்துக்கொண்டு.
முதியவர் புரியாமல் விழிக்க, மணக்கால் நம்பி தொடர்ந்தார், "பெரியவரே! உமது ஓலைக் கூடையை இங்கேயே மறந்துவிட்டுப் போகிறீரே! உமது மதியை மயக்கியது மழையா ? மன்னாரா ?" என்று அந்தக் கூடையைக் கையில் எடுத்தார்.

அந்தக் கூடையைக் கண்டதும் முதியவரின் முகம் பிரகாசமானது. அவர் நம்பியிடம் ஓடிவந்து, அவர் திருவடிகளில் வீழ்வது போலக் கைகளைக் கூப்பிக் கும்பிட்டார். "ஆகா! உத்தமரே! இன்று என்னை ஒரு மாபெரும் ஆபத்திலிருந்து அல்லவா காப்பாற்றினீர்! நீங்கள் வேடிக்கயாக சொன்னாலும், இது அரசக் கட்டளை தான்! இந்த கூடையை இல்லையெனில் சோழ மாளிகையின் மடைப்பள்ளி அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகியிருப்பேன். இந்த ஏழை அடியேனுக்கு நீர் செய்த இந்த உதவியை என் ஆயுள் உள்ளவரை மறக்க மாட்டேன்!" என்றார் நெகிழ்ச்சியுடன்.

மணக்கால் நம்பி வியப்போடு அந்தக் கூடையினுள் நோக்கினார். "பெரியவரே! கூடையில் வெறும் பச்சிலைத் தழைகள் அல்லவா கிடக்கின்றன! இவற்றை எடுத்துச் செல்லாவிட்டால், இளவரசர் உம்மீது சினம்கொள்ளப் போகிறாரா? இந்த தழைகளுக்காகவா உமது உள்ளம் இப்படி அஞ்சி நடுங்குகிறது? அடியேனுக்கு ஒன்றும் விளங்கவில்லையே!" என்றார் நம்பி வியப்புடன்.

முதியவர் தன் குரலைத் தாழ்த்தி, இரகசியம் பேசுவது போல, "சுவாமி! தங்களுக்குத் தெரியாது. நான் நமது புதிய மன்னரான ஆளவந்தாரின் அரண்மனைத் திருமடைப்பள்ளியில் தளிகை செய்யும் எளிய பணியாளன். இந்தக் கூடையில் இருக்கும் பச்சைத் தழைகள் சாதாரண இலைகள் அல்ல; இது ஓர் உன்னதமான 'வேளைக்' கீரை! ஆகும். (1)
ஒரு நாள் நம் அரசர் இருமலுடன் கூடிய காய்ச்சலால் அவதிப்பட்டார். அப்போது, இக்கீரையைக் கொண்டு கறியமுது செய்து மன்னருக்குப் பரிமாறினேன். அதைப் பருகிய மாத்திரத்தில் மன்னர் ஆளவந்தாருக்கு அதன் சுவையும், அது தரும் ஆரோக்கியமும் அலாதியாகப் பிடித்துப் போய்விட்டது! அதன் பிறகு, இக்கீரைக்கு நிகராக அவர் வேறு எந்த அமுதையும் விரும்புவதே இல்லை! இதனால், தினமும் இந்தக் கீரையைக் கறியமுது செய்து அவருக்குப் பரிமாற வேண்டும் என்பது மடைப்பள்ளி உத்தரவு.
இதற்காகவே, காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து இக்கீரையைப் பறித்து வருகிறேன். ஆனால் சுவாமி! இப்போதெல்லாம் இக்கீரை எங்கும் எளிதில் கிடைப்பதில்லை! அப்படியே ஓரிடத்தில் கண்டாலும், அதைப் பறிப்பது அத்தனை சுலபமில்லை; முட்கள் நிறைந்த அடர்ந்த புதர்களிலும், செங்குத்தான மேடுகளிலும் ஏறிப் பறிக்க வேண்டும். இதன் இலைகளின் அடியில் ஈட்டி முனையைப் போலக் கூர்மையான முட்கள் வேறு பரவியிருக்கும்..." என்று கூறியவாறே, கூடையிலிருந்து ஒரு தூதுவளைப் பச்சிலையை எடுத்து நம்பியிடம் காண்பித்தார்.

"அப்படியா!" என்று வியந்த மணக்கால் நம்பி, அந்த முள் நிறைந்த பச்சிலையை வாங்கி உன்னிப்பாகப் பார்த்தார்.

"உமது உதவிக்கு மிக்க நன்றி சுவாமி! எனக்கு அரண்மனை மடைப்பள்ளியில் தளிகை செய்ய நேரமாகிவிட்டது, நான் புறப்படுகிறேன்!" என்று கூறிவிட்டு அந்த முதியவர் அவசரமாகப் பிரகாரப் படியில் இறங்கினார்.

அச்சமயம், இத்திருக்கோயிலின் பின்புறத்து நந்தவனத்து வேலிகளிலும், கவனிப்பாரற்றுப் படர்ந்திருக்கும் காட்டுப் புதர்களிலும் இதே கீரை அடர்த்தியாகப் படர்ந்து வளர்ந்திருப்பது மணக்கால் நம்பியின் நினைவுக்கு வந்தது! மழையினால் காற்றில் ஏற்பட்ட குளுமையைக் காட்டிலும், எல்லையற்றதொரு அக மகிழ்ச்சியினால் நம்பியின் நெஞ்சிலிருந்த கவலைகள் அனைத்தும் கணப்பொழுதில் மறைந்தன. அவர் தீர்மானமாக, "பெரியவரே! சற்று நில்லும். இந்தத் தழைகளைத் தினமும் அடியேனே பக்குவமாகப் பறித்து உமக்குக் கொண்டு வந்து கொடுக்கட்டுமா?" என்று அன்போடு வினவினார்.

வேகமாகச் சென்று கொண்டிருந்த அந்த முதியவரின் செவிகளில் இவ்வார்த்தைகள் காய்ந்த நிலத்தில் விழுந்த முதல் மழைத்துளிகளாய்க் குளிர்ந்தன. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மெய்சிலிர்க்க அப்படியே உறைந்து நின்றார். "கருணை மிகுந்தவரே! அவசரத்தில் உங்களது திருநாமத்தைக் கூடக் கேட்கத் தவறிவிட்டேன்! ஆனால் நீங்களோ, எனக்காகத் தினமும் இந்த முள் நிறைந்த கீரையைப் பறித்துத் தர முன்வருகிறீர்களே! நீங்கள் யார் சுவாமி?" என்றார் வியப்புடன்.

மணக்கால் நம்பி புன்னகையுடன், "பெரியவரே! இங்கே வீரநாராயணபுரத்திலே வீற்றிருக்கும் காட்டுமன்னாருக்குத் தினமும் திருவாராதனம் செய்து, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உலகிற்குத் தந்த ஸ்ரீமந் நாதமுனிகளின் நேரடிச் சீடரான உய்யக்கொண்டாரே அடியேனின் ஆசாரியன் ஆவார். என் குருநாதர் அன்போடு அடியேனை 'மணக்கால் நம்பி' என்று அழைப்பார்" என்றார் விநயத்துடன்.

முதியவர் மணக்கால் நம்பியை நோக்கி மீண்டும் தன் கரங்களைக் கூப்பி வணங்கி புன்னைகையுடன், "நம்பியே! உமக்கு மணக்கால் போல் எனக்கு மடப்பள்ளி என்னை 'மடப்பள்ளி நம்பி'(4) என்பர்! இந்தத் திருக்கோயிலில் எளியோர்க்கு எளியவனாய் எழுந்தருளியிருக்கும் அந்தக் காட்டுமன்னார்தான் என் ஏழை நெஞ்சின் தவிப்பை உணர்ந்து, என் வேண்டுதலை நிறைவேற்றி, உங்களை இன்று அடியேனுக்கு காட்டிக் கொடுத்துள்ளார்! உமது குலம் தழைக்கட்டும் சுவாமி!" என்று எல்லையற்ற மகிழ்ச்சி பொங்க விடைபெற்றுக்கொண்டு அவசரமாகப் புறப்பட்டார்.

மணக்கால் நம்பி மந்தகாசப் புன்னகை தவழ, காட்டுமன்னார் சந்நிதியை நோக்கித் தன் விழிகளைத் திருப்பினார். "ஆகா! 'கோல் தேடி ஓடும் கொழுந்ததே' என்று பூதத்தாழ்வார் திருவரங்கத்திலிருந்து இந்தக் வேளைக் கொடியைத் தான் காண்பித்துக் கொடுத்தார் போலும்! 'ஆகாயத்தை விழுங்கிக் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களே!' என்று ஆண்டாள் மேகத்தைத் தூதுவிடுவதை நினைத்தேன்;(3) மழையே தூதுவனாக வந்து இந்தப் பெரியவரைக் காண்பித்துக் கொடுத்தது! எம்பெருமானே! ஆளவந்தாரிடம் தூது செல்ல அடியேனுக்கு நீர் இந்த எளிய 'வேளை' பச்சிலையை 'தூதுவளையாக' அல்லவோ காட்டிக் கொடுத்தாய்!
அன்று நம்மாழ்வாரின் பிரேம தவிப்பைக் கண்டு, பறவைகளும் தாமே தேடிவந்து அவருக்காகத் தூது சென்ற அந்த நற்குணம் போல... (2)இன்று இந்த நற்குணம் பொருந்திய தூதுவளையை எமக்காகத் தூது அனுப்பும் வழியைக் காட்டிய உன்னை என்னென்று போற்றுவேன்!" என்று கைகூப்பி நெஞ்சுருக வணங்கினார்.

அன்று முதல் நாளும் தவறாமல், விடிவதற்கு முன்னரே எழுந்து, வீரநாராயணபுரத்துக் கோயிலின் பின்புறத்தில் அடர்ந்து படர்ந்திருக்கும் வேலிகளில் இருந்து, முட்கள் நிறைந்த பச்சைப் பசேலென்ற தூதுவளைக் கீரையை மணக்கால் நம்பி பக்குவமாகப் பறித்து வந்து, அரண்மனையின் பின்புறம் இருக்கும் அந்த முதியவரிடம் தினமும் கொடுத்து வந்தார். அவரும் அதனைப் பிரியமுடன் பெற்றுக்கொண்டு, அரண்மனைத் திருமடைப்பள்ளியில் நேர்த்தியாகவும் சுவையாகவும் சமைத்து, நாளும் இளவரசருக்குக் கறியமுது செய்து பரிமாறி வந்தார்.

ஆனால், ஒரு நாள்கூட ஆளவந்தார் இந்தக் கீரையைத் தினமும் யார் கொண்டு வந்து கொடுக்கிறார்கள் என்று கேட்கவே இல்லை; அதனைச் சமைத்த அந்தத் திருமடைப்பள்ளிக்காரரும் எவ்விதப் பிரதிபலனும் எதிர்பாராத நம் நம்பியை குறித்தும் வாய்திறந்து எதையும் சொல்லவில்லை.

இவ்வாறாக, ஆறு மாத காலத்திற்கு மேலாக வசந்த காலமும் மாரிக் காலமும் கடந்து சென்றன.

ஒரு நாள் நண்பகலில் மணக்கால் நம்பி, 'நாம் தூதுவளைக் கீரையைத் தினமும் கொண்டு வந்து தருவதன் பின்னணியையும், அதற்குப் பின்னால் இருக்கும் ஆசாரியக் கட்டளையையும்... தூது சென்ற இந்தக் கீரை ஆளாவந்தாரிடம் தூது உரைத்ததா? அதனை அறிந்தவர்கள் யாரும் இல்லையே!' என்று எண்ணிய மணக்கால் நம்பி, அன்று கீரையைக் கொண்டு போய்க் கொடுக்காமல், கோயிலிலேயே தங்கிவிட்டார்.

அன்று மதிய உணவு நேரத்தில், ஆளவந்தாரின் உணவு இலையில் மற்ற சகல ஆடம்பர உணவுகளும் பரிமாறப்பட்டிருந்தன. ஆனால், தினமும் இலையின் ஓரத்தில் பச்சையாக வீற்றிருக்கும் தூதுவளைக் கீரையைக் காணவில்லை! அதை உற்று நோக்கிய ஆளவந்தாருக்கு அன்றைய அமுது கசப்பது போலிருந்தது. "மடைப்பள்ளிக்காரரே! இன்று எதனால் கறியமுதில் இக்கீரை பரிமாறப்படவில்லை? என்ன நேர்ந்தது?" என்று சற்றே ஏமாற்றமும் கோபமும் கலந்த குரலில் வினவினார். கோபத்தில் அன்றைய தினம் அவர் வேறு எதையும் உண்ணாமல் அப்படியே எழுந்துவிட்டார்!

அரசரின் கோபத்தைக் கண்டு பதறிப்போன மடைப்பள்ளிக்காரர், நடுக்கத்துடன், “அரசே! பொறுத்தருள வேண்டும்! நாளும் தங்களுக்கு எவ்விதக் கைம்மாறும் எதிர்பாராமல் இக்கீரையைக் கொண்டு வந்து தரும் அந்த உன்னத அந்தணர்... இன்று ஏனோ வரவில்லை! அவர் வராததால்தான் இன்று கறியமுதில் இக்கீரை இல்லாமல் போயிற்று!” என்றார் பதற்றத்துடன்.

மிகுந்த சாஸ்திர ஞானமும் மதிநுட்பமும் உடைய ஆளவந்தாருக்கு அந்த விநாடியில் ஒரு பொறி தட்டியது. தமக்குத் தினந்தோறும் பரிமாறப்பட்ட அந்தக் கீரை வெறும் உணவல்ல, அது ஏதோவொரு விஷயத்துக்காக அனுப்பப்பட்ட தூதே என்று சட்டென்று புரிந்தது! “மடைப்பள்ளிக்காரரே! யார் அந்த உத்தம அந்தணர்? நாளும் இக்கீரையைக் கொண்டு வந்து தரும் அவருக்கு நீங்கள் என்ன கைம்மாறு தருகிறீர்கள்? விவரமாக எமக்கு இப்போதே உரைப்பீராக!” என்று ஆர்வம் பொங்க வினவினார்.

திருமடைப்பள்ளிக்காரர் பயத்துடனும் தன் கரங்களைக் கூப்பி, “மன்னா! சகல வேதங்களின் முதலும் முடிவுமான உன்னத மெய்ஞ்ஞானத்தை அறிந்தவர் போன்ற தோற்றம்கொண்ட அவரை, காட்டுமன்னார் திருக்கோயிலில் மழைக்காக ஒதுங்கியபோது அடியேன் யதேச்சையாகச் சந்தித்தேன். உங்களது பாட்டனாரான ஸ்ரீமந் நாதமுனிகளின் வழிவந்த சீடரைத் தன் ஆசாரியராகக் கொண்டவராம் அவர்! நான் அவரிடம் எதையும் கேட்காமலேயே, தினந்தோறும் இக்கீரையைத் தானே பறித்துக் கொண்டு வந்து தருவதாக அன்போடு கூறினார். அதன்படியே, கடந்த ஆறு மாத காலமாக நாள்தோறும் தவறாமல் கொண்டு வந்து கொடுத்தார். அவருக்கு அடியேன் ஏதேனும் பொன்னோ, பொருளோ கைம்மாறாகக் கொடுத்தாலும் அதனை வாங்க மறுத்துவிடுகிறார்!" என்றார்

ஆளாவந்தார் தன் முத்து மாலையை கழற்றி, "இதை நாளை அவர் வந்தால் கொடுத்துவிடும்!" என்றார்.
"மன்னா! அவரோ பற்றற்ற துறவி; அவருக்குத் தாங்கள் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தையே, ஏன் இந்த உலகையே தானமாகத் தந்தாலும், அதனை அவர் திரும்பிப் பார்க்க மாட்டார்!” மடைப்பள்ளிக்காரர் நெகிழ்ச்சியுடன்.

இதனைக் கேட்டு வியப்பும் பரவசமும் அடைந்த ஆளவந்தார், “ஆகா! மண்ணாளும் மன்னனை விடவும் ஒப்பற்ற ஞானத்தினாலும் பற்றற்ற தன்மையினாலும் சிறந்த அந்த உத்தம அந்தணர்... இனிமேல் எப்போது இக்கீரையைக் கொண்டு வந்தாலும், அவரைச் சற்றும் தாமதிக்காமல், எவ்விதத் தடையுமின்றி உடனடியாக என் முன்னிலையில் அழைத்து வாருங்கள்!” என்று தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டார்.

மணக்கால் நம்பியும் ஒரு நாள் கீரை தராமல் இடைவெளி விட்ட பிறகு, மறுநாள் காலையிலேயே புதிய கீரையைப் பறித்துக் கொண்டு, அரண்மனைத் திருமடைப்பள்ளியை நோக்கித் தீர்க்கமானதொரு முடிவுடன் சென்றார்.

அவருக்காகவே வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருந்த திருமடைப்பள்ளிக்காரர், “வாருங்கள் நம்பியே!” என்று அன்போடு வரவேற்று, அவரை நேரே ஆளவந்தாரின் திருமுன்னே அழைத்துச் சென்று நிறுத்தினார். அவரது கைகளில் இருந்த ஓலைக் கூடையைக் காட்டி, “மன்னா! இவர்தான் நாள்தோறும் உங்களுக்காகக் கீரையைக் கொண்டு வந்து கொடுத்தவர். இன்றும் உங்களுக்காகக் கீரையைக் கொண்டு வந்திருக்கிறார்!” என்று அறிமுகப்படுத்தினார்.

./சுஜாதா தேசிகன்
30.8.2026
பயணம் தொடரும்...

அடிக்குறிப்புகள்:
1. ‘வேளை’ என்பது தாவர வகை. தூது சென்றதால் தூதுவேளை என்பது தூதுவளை என்று ஆனது என்பது என் அனுமானம்.

2. திருவாய்மொழி பாசுரம் (6.8.1 ) ஈடு வியாக்கியானத்தில்
பொன்-உலகு ஆளீரோ,* புவனி முழுது ஆளீரோ*
நல் நலப் புள்ளினங்காள்!* வினையாட்டியேன் நான் இரந்தேன்**
முன் உலகங்கள் எல்லாம் படைத்த* முகில் வண்ணன் கண்ணன்*
என் நலம் கொண்ட பிரான் தனக்கு* என் நிலைமை உரைத்தே
என்று ‘நல் நலப் புள்ளினங்காள்’ என்று நற்குணம் உடைய பறவையை மணக்கால் நம்பிக்கு உதாரணம் என்பது ஐதீகம்.

(3)நாச்சியார் திருமொழியில் ஆண்டாள்
வான் கொண்டு கிளர்ந்து எழுந்த* மாமுகில்காள்!* வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர் சிதறத்* திரண்டு ஏறிப் பொழிவீர்காள்!**
ஊன் கொண்ட வள்-உகிரால்* இரணியனை உடல் இடந்தான்*
தான் கொண்ட சரி-வளைகள்* தருமாகில் சாற்றுமினே
என்று ஆகாயத்தை விழுங்கிக் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களே! திருமலையிலே உள்ள, தேன் நிறைந்துள்ள மலர்கள் சிதறும்படி, திரளாக மழை பொழியும் மேகங்களே! கூர்மையான நகங்களாலே இரணியன் உயிர் கொண்ட நரசிம்மன், என்னிடம் இருந்து எடுத்துச் சென்ற என் கைவளைகளை திருப்பித் தருவதாக இருக்கிறானா என்று நான் கேட்டதாகச் சொல்லுங்கள்' என்று தூதுவிடுகிறாள்.

(4) 'மடப்பள்ளி நம்பி' - கற்பனைப் பெயர்.

Comments

Popular posts from this blog

1 - வீரநாராயணபுரம்

24 - காலச் சுழற்சி

23 - வெட்டிவேர்