15 - இசைகாரர்
15 - இசைகாரர்
நாதமுனிகள் தன் மருமக்களான வரதாசாரியாரையும் கிருஷ்ணமாசாரியாரையும் அன்புடன் நோக்கி, "மருமக்களே! அடியேன் திருக்குருகூரில் நடந்த விசேஷ நிகழ்வுகளை இப்போது உங்களுக்குக் கூறுகிறேன்" என்று தாம் ஆழ்வார் பாசுரங்களைத் தேடிப் புறப்பட்டதிலிருந்து, பராங்குசதாசரைக் கண்டு கண்ணிநுண் சிறுத்தாம்பு பன்னீராயிரம் தடவை உருச்சொன்னதை அடுத்து, சடகோபர் திருவாக்கில் ஆழ்வார் வைபவங்களுடன் அவர்கள் அருளிய பாசுரங்கள், திருவாய்மொழி முதலியவை கிடைத்த விவரங்கள், 'பொலிக பொலிக' என்ற பாசுரத்தின் அர்த்த விசேஷங்களைக் கூறி, கலியின் கொட்டத்தை அடக்க ஓர் ஆசாரியர் அவதரிக்கப் போகிறார் என்று ஆழ்வார் கனவில் காட்சி கொடுத்தது குறித்தான விருத்தாந்தங்களைக் கூறினார்.
இந்தப் பிள்ளைகள் இருவருமே பிற்காலத்தில் வைணவ உலகம் போற்றும் மேலையகத்தாழ்வான் என்றும் கீழையகத்தாழ்வான் என்றும் திருநாமம் பெற்றுத் திகழப்போகிறவர்கள் என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறோம்.
எல்லாவற்றையும் கூறிய நாதமுனிகள், தமக்கு ஆழ்வார் பிரசாதித்த பவிஷ்யதாசாரியர் விக்கிரகத்தைப் பற்றியும், அது தம்மிடம் இருப்பதையும் அவர்களிடம் கூறாமல் இரகசியமாக வைத்துக்கொண்டார்.
மிகுந்த ஆச்சரியத்துடன் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்த மருமக்கள் கண்ணீருடன், "உத்தமோத்தமரே! மகானுபாவரான உங்களுடைய சம்பந்தம் கிடைக்கப் பெற நாங்கள் செய்தற்கரிய பெரும் புண்ணியம் என்ன செய்தோம் என்று அறியவில்லை! உங்கள் திருவடிகளைப் பற்றிய எங்களுக்கு நம்மாழ்வார் திருவடி சம்பந்தமே கிடைத்ததே!" என்று பரவசத்துடன் நாதமுனிகளை வணங்கினர்.
நாதமுனிகள் மகிழ்ச்சியுடன் அவர்களைத் தழுவிக்கொண்டு, "வாருங்கள் ஆழ்வார் பாசுரங்களுக்குப் பண்கள் அமைக்கலாம்" என்று தம் மருமக்களுடன் சேர்ந்து இசைகூட்டி, சங்க காலத்தின் தமிழிசை மரபு அடிப்படையில் பண் அமைக்கத் தொடங்கினர்.
நாம் அவர்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல், சற்று நேரம் அவர்கள் எப்படிப் பண் அமைக்கிறார்கள் என்று கவனிக்க வாசகர்களை அன்போடு அழைக்கிறோம்.
நாதமுனிகள் ஆழ்ந்த சிந்தனையில் இருக்க, மேலையகத்தாழ்வானும் கீழையகத்தாழ்வானும் அவர்தம் முகத்தையே மிகுந்த ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
சற்று நேரம் கழித்துக் கண்களை மலர விழித்த நாதமுனிகள், "மருமக்களே! எந்த ஒரு நற்காரியத்தையும் மங்களகரமாகத் தொடங்குவதே முறை. அதனால், எம்பெருமானுக்கே பல்லாண்டு பாடிய பட்டர் பிரானான பெரியாழ்வாரின் பல்லாண்டுப் பாசுரங்களைக் கொண்டே நமது இசைப்பணியை ஆரம்பிக்கலாம்!" என்றார்.
மேலையகத்தாழ்வான் மெல்லக் குனிந்து, "ஆசாரியரே! பல்லாண்டுப் பாசுரங்களுக்கு எந்தப் பண் சரியாகப் பொருந்தும்?" என்று வினவினார்.
நாதமுனிகள் புன்னகைத்து, "பண் என்பது வெறும் இராகம் மட்டுமல்ல மருமகனே! அது பாடலின் உணர்வோடும் பாடியோரின் பின்னணியோடும் பொருந்தியிருக்க வேண்டும். பெரியாழ்வார் அன்று மதுரையில் பாண்டியன் அவையில் பொற்கிழியை வென்றபோது, அரசன் அவரை யானை மீது அமரச் செய்து ஊர்வலமாக வந்தான். அப்போது எம்பெருமான் கருடனின் மேலே பிராட்டியுடன் காட்சி கொடுக்க, அந்தப் பேரழகைக் கண்டு மயங்கி, அவனுக்கு ஏதும் கண்ணெச்சில் பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், தாம் அமர்ந்திருந்த அரண்மனை யானைகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகளின் கம்பீரமான ஒலியையே தாளமாகக் கொண்டு பல்லாண்டு பாடினார். எனவே, கம்பீரமான 'நட்டபாடை' (நாட்டை) பண்ணிலேயே இதனை நாம் இசைக்க வேண்டும்" என்றார்.
உடனே அருகில் இருந்த கீழையகத்தாழ்வான் பரவசத்துடன், "ஆம் ஆசாரியரே! நட்டபாடைப் பண் மிகவும் கம்பீரமானது, எந்நேரத்திலும் இசைக்கக்கூடியது, அதே சமயம் கேட்கும் நெஞ்சை உருக்கும் இனிமையும் கொண்டது!" என்றான்.
உடனே மேலையகத்தாழ்வான் இனிய குரலில் நட்டபாடைப் பண்ணில் பல்லாண்டைப் பாட, அதை நாதமுனிகள் மெய்மறந்து கேட்டார்.
நாதமுனிகள், "ஆகா! பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டுப் பாசுரத்தின் அமைப்பிலேயே அற்புதமான தாளக்கட்டு அமைந்திருக்கிறது! இப்பாடல்கள் பாடலமைப்புக்கும் இசையமைப்புக்கும் மிகச் சரியான இலக்கணக் கூறுகளைக் கொண்டு விளங்குகின்றன!" என்றார்.
இதைக் கேட்ட கீழையகத்தாழ்வான் ஆனந்தத்துடன், "முதல் பிரபந்தமே இசையமைப்பில் இத்தகைய தனித்துவச் சிறப்புடையதாக அமைந்துள்ளது!" என்று பூரிப்படைந்தார்.
நாதமுனிகள் தன் மருமக்களை நோக்கி, "இசை அமைப்பதோடு மட்டுமல்லாமல், இந்தப் பாசுரத் தொகுப்புகளுக்கு முறையான திருநாமங்களையும் நாம் சூட்ட வேண்டும். பெரியாழ்வார் அருளிச் செய்த இந்த ஆரம்பப் பாசுரங்களுக்கு 'திருப்பல்லாண்டு' என்றே பெயரிட்டுவிடலாம்! அதே போல், 'அமலனாதிபிரான்', 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' போன்ற பிரபந்தங்களுக்கும் அவற்றின் பாடல் முதல் குறிப்பைக் கொண்டே (தொடக்கச் சொல்லால்) பெயர் சூட்டிவிடலாம்" என்றார்.
மேலையகத்தாழ்வான் வியப்புடன், "ஆசாரியரே! அப்படியென்றால் அந்தாதித் தொடையால் அமைந்த பாசுரங்களை நாம் எப்படி அழைப்பது?" என்று கேட்டார்.
"அவற்றை யாப்பு முறைப்படி முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, நான்முகன் திருவந்தாதி என்று அந்தாதித் தொடையைக் கொண்டே பெயரிடலாம்" என்றார் நாதமுனிகள்.
உடனே கீழையகத்தாழ்வான் குறுக்கிட்டு, "மாமா, பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார் பாசுரங்களுக்கு எப்படி பெயர் வைக்கலாம் ?" என வினவினார்.
"அவற்றைப் பாடிய ஆழ்வார்களின் பெயராலேயே சிறப்பிக்கலாம்! பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி என்று வழங்கலாம். அதேபோல, அளவால் பெரியதாக இருக்கும் திருமங்கை மன்னனின் தொகுப்பினை 'பெரிய திருமொழி' என்றும், ஏழு நிலைகளைக் கொண்ட சித்திரக் கவி வடிவிலான பாசுரத்தை அதன் எண்ணலங்காரச் சிறப்பால் 'திருவெழுகூற்றிருக்கை' என்றும் அழைக்கலாம்" என்றார் நாதமுனிகள்.
"பாவாலும் யாப்பாலும் பெயர் பெற்ற பாசுரங்களும் உண்டல்லவா?" என்று மேலையகத்தாழ்வான் கேட்க,
"நிச்சயமாக! பாவாலும் யாப்பாலும் பெயர் பெற்றவற்றைத் 'திருவாசிரியம்', 'திருச்சந்த விருத்தம்', 'திருக்குறுந்தாண்டகம்', 'திருநெடுந்தாண்டகம்' என்று வகைப்படுத்தலாம். அதேபோல, மார்கழி நோன்பு நோற்ற செயலால் கோதையின் பாசுரங்களுக்குத் 'திருப்பாவை' என்றும், எம்பெருமானைத் துயிலெழுப்பும் செயலால் தொண்டரடிப்பொடியாழ்வாரின் பாசுரங்களுக்குத் 'திருப்பள்ளியெழுச்சி' என்றும் பெயர் சூட்டலாம். மேலும், அவற்றின் தனித்துவமான தன்மைகளைக் கொண்டு திருவிருத்தம், சிறிய திருமடல், பெரிய திருமடல், திருமாலை என்றும் பிரிக்கலாம். அதே போல, நூலின் பொருள் சிறப்பால் 'பெரிய திருவந்தாதி' என்றும் அழைக்கலாம்" என்று விளக்கினார் நாதமுனிகள்.
இரு மருமக்களும் மெய்சிலிர்த்து நிற்க, நாதமுனிகள் கண்களில் நீர் மல்க, "மருமக்களே! இவையனைத்திற்கும் மேலாக, நம் சடகோபர் வேதம் தமிழ் செய்தாரே, அந்த ஒப்பற்ற நூலுக்கு அதன் சிறப்பால் 'திருவாய்மொழி' என்றே திருநாமம் சூட்டுவோம்!" என்று மேலும் விளக்கினார்.
அப்போது இருவரும் கைக்கூப்பியபடி இருக்க, மேலையகத்தாழ்வான், "திருமங்கை ஆழ்வார் திருக்கோவலூரில் 'வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்' என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால் ஆழ்வார்கள் இசை ஏழும் நன்கறிந்தவர்கள் அன்றோ!" என்று கூற, உடனே கீழையகத்தாழ்வான், "காழிச்சீராம விண்ணகரில் 'அருமறைகள் திறன் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவையாறும் இசை ஏழும்' என்று அங்கேயும் கூறியிருக்கிறார்" என்று கூற, நாதமுனிகள், "ஆம்! நீங்கள் கூறுவது மிகவும் சரி, இதைத் தவிர திருநாங்கூர் மணிமாடக் கோயில் பாசுரத்தில் 'முத்தீயர், நால்வேதர், ஐவேள்வி ஆறங்கம், ஏழினிசையோர்' என்றும் வைகுந்த விண்ணகர்ப் பாசுரத்திலும் ஏழிசை பற்றிக் கூறியுள்ளார்" என்றார்.
மேலையகத்தாழ்வான், "‘ஏழிசையின் சுவைதானே' என்று நம்மாழ்வாரும் ஏழிசையின் சுவையே திருமால்தான் என்கிறார்!" என்றார்.
கீழையகத்தாழ்வான், "அதுமட்டுமல்ல, ஆழ்வார்கள் தங்களின் பாசுரங்களில் இசைக்கருவிகள் பற்றியும் பாடியுள்ளார்கள். குலசேகராழ்வார் 'இணை இல்லா இன்னிசை யாழ் கெழுமி' என்றும், பெரியாழ்வார் கண்ணனின் குழலோசையை வர்ணிக்கும்போது புல்லாங்குழல், தும்புரு, வீணை, கின்னரம் ஆகிய பண்ணிசைக் கருவிகளைக் கூறுகிறார். இதைத் தவிர தண்ணுமை, எக்கம், மத்தளி, முழவம், பறை, மத்தளம், சங்கு, துடி, முரசு என்று நீண்ட இசைக்கருவிப் பட்டியலே இருக்கிறது!" என்றார்.
நாதமுனிகள் மகிழ்ந்து, "உங்களைப் போன்றவர்களை என் மருமக்களாகப் பெற்றது என் பாக்கியம்!" என்று அவர்களை வாழ்த்தினார்.
மேலையகத்தாழ்வான், "ஆழ்வார் பாசுரங்களை மீட்டெடுத்து, அதற்குப் பண்ணமைத்து, எம்பெருமானை 'இன்னிசையானவனே' என்று நீங்கள் தேவகானம் கொண்டு உணரவைத்தீர்கள்! நம்மாழ்வார் தன்னை ‘தமிழர் இசைகாரர்' என்றும் பாசுரங்களில் உகந்து குறிப்பிட்டுக் கொள்கிறார். எங்களுக்கு நீங்களே இசைகாரர்!" என்றார்.
அதைக் கேட்டு நாதமுனிகள் நெகிழ்ந்து தன் மருமக்களை நோக்கி, "நீங்கள் இருவரும் 'குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித்திரிவனே' என்று மதுரகவியாழ்வார் கூறுவது போல, ஒப்பற்ற நீங்கள் இருவரும் சேர்ந்து, செப்புதற்கரிய ஆழ்வார் அருளிய தமிழ்ப் பாடல்கள் அனைத்தையும் முறைப்படி தேவகானத்தில் பாகவதர்கள் அனைவருக்கும் ஓதுவிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை! பாசுரங்கள் வெறும் இயற்பாவான இயற்றமிழோடு நின்றுவிடாமல், தாளத்தோடு கூடிய இசைத்தமிழாகவும், பின்னர் அரங்கன் சந்நிதியில் முத்திரைகள், ஜதிகள், முகபாவங்கள் கொண்டு அபிநயித்து ஆடும் நாடகத்தமிழாகவும் திகழ வேண்டும்" என்றார்.
இருவரையும் நெகிழ்ச்சியோடு அணைத்துக்கொண்ட நாதமுனிகள், “ஸ்ரீராமபிரானின் அவையிலே குசலவர்கள் (லவ-குசர்கள்) இராமாயணத்தை இன்னிசையோடு பாடி அரங்கேற்றியது போல, நீங்கள் இருவரும் இந்தத் திராவிட வேதத்தை நாவினால் நவிற்று உலகெங்கும் தேவகானமாக இசைத்து இன்பத்தைப் பரப்ப வேண்டும்! உங்களுடைய இந்த இன்னிசை முழக்கம், வரும் தலைமுறைகளுக்குப் பெரும் வழிகாட்டியாக அமைந்து, நம் வைணவ நெறியைத் தூக்கி நிறுத்தப்போகிறது!" என்று ஆசீர்வதித்தார்.
இந்த முத்தமிழ் வடிவமே பிற்காலத்தில் ‘அரையர் சேவை' என்னும் திவ்யமான மரபாக மலரப் போகிறது என்பதை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறோம்!
அதன் பிறகு, கணக்கல்லாத பாகவதர்கள் கற்றுக்கொள்ள, ஆழ்வார் பாசுரங்கள் இசையுடன் தேவகானமாகப் பல இடங்களுக்குப் பரவிச் சென்றன. சில காலம் கழித்தபின், கங்கைகொண்ட சோழபுரத்து அரசவையில் விசித்திரமான வழக்கு ஒன்று வந்தது…
-சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்...
அடிக்குறிப்புகள்:
(1) இசைகாரர் - நாதமுனிகள் பண்ணிசையிலும் தமிழிசையிலும் வல்லவராக விளங்கினார். ‘பாலேய் தமிழர் இசைகாரர்' என்ற திருவாய்மொழி பாசுர ஈட்டு உரையில் இசைகாரர் - இயலுக்கு இசையிட வல்லவர்கள். ஸ்ரீமதுரகவிகளையும், நாதமுனிகளையும் போல இருக்குமவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(2) ஒற்றுங்கள் - போடுங்கள்
(3) நாதமுனிகள் அமைத்த பண்கள், பிரபந்தங்களுக்கு பெயரிட்டது, இசைக் கருவிகள் - நாதமுனிகள் வைபவப் பிரகாசிகை என்ற நூலைத் தழுவி எழுதியது.
Comments
Post a Comment