24 - காலச் சுழற்சி
24 - காலச் சுழற்சி
1200 ஆண்டுகளைத் தன்னுள் விழுங்கிவிட்ட காலப் பெருவெளியில், எத்தனையோ அரசரகள் தோன்றி மறைந்தார்கள். மழை, புயல், வரட்சி என்று எத்தனையோ சரித்திரங்கள் மண்ணோடு மண்ணாயின. அந்த நெடும் கால ஓட்டத்தின் பின்னணியில், சோழ வளநாட்டின் காட்டுமன்னார்கோவிலில் நிகழ்ந்த இந்த உன்னத ஆசாரியப் பரம்பரையின் திவ்வியமான சுவடுகள் குறித்துச் சில வியப்பான வரலாற்றுச் செய்திகளை நாம் வாசகர்களுக்கு சொல்லுவது நம் கடைமையாகும்.
இந்தக் கொடிய காலச் சுழற்சியிலே, ஆசாரியர் ஸ்ரீமந் நாதமுனிகளின் திவ்வியமான திருவரசும் தன் அடையாளங்களை முற்றிலுமாகத் தொலைத்து, அடர்ந்த புதர்களாலும் மண்ணாலும் மூடப்பட்டுப் புதையுண்டு போனது. கால ஓட்டத்தின் கரங்கள் அதன் உன்னத சரித்திரத்தை மூடி மறைத்தன. ஆயினும், நம் பாரம்பரியத்தின் மீது மாறாப் பற்று கொண்ட சில வைணவ அடியார்கள் மட்டும் விசேஷமான திருநாட்களில் அந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்று, வழிபாடுகளைத் தொடர்ந்து செய்து வந்தார்கள். ஆனால், அங்கே ஒரு திருக்கோவிலோ அல்லது அதுதான் நாதமுனிகளின் திருவரசு என்பதற்கான எவ்வித அடையாளமோ இல்லாமல் அந்த இடம் பாழடைந்து கிடந்தது பெரும் துயரமே!
ஆனால், மறையத் தொடங்கினாலும் அழியாததுதான் நமது வைணவச் சம்பிரதாயம்! திருக்கோவிலூர் மடத்தின் ஜீயர் சுவாமியான ஸ்ரீ திருவேங்கட ராமானுஜசாரியார் சுவாமிகள், "இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில்தான் நமது முன்னோர்கள் காலங்காலமாக நாதமுனிகளின் திருவரசை வழிபட்டு வந்தனர்" என்று குறிப்பிட்டபோது, அந்தப் புண்ணியத் தலம் மீண்டும் 1993ஆம் ஆண்டில் உலகத்தாரின் கவனத்தைப் பெற்று முக்கியத்துவம் அடைந்தது.
அதன் பின்னர், புலவர் ஹரிதாஸ் என்பவர் அந்தத் தரிசு நிலமான காட்டுப் பகுதியை வாங்கி, அங்கே ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு ஒரு கம்பீரமான திருவரசை அமைக்க வேண்டும் என்று அரும்பாடுபட்டு முயற்சியில் இறங்கினார். அப்போது அங்கே ஒரு பேரதிசயம் காத்துக்கொண்டிருந்தது!
அந்த தரிசு நிலத்தின் மண்ணைத் தோண்டியபோது, அங்கே ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராக ஆள் உயர எழிலுடைய ஸ்ரீநிவாசப் பெருமாளின் திவ்யமங்கள விக்ரகம் பாதியளவுக்கு மண்ணுக்குள் புதையுண்டு கிடப்பதைக் கண்டு புலவர் ஹரிதாஸ் நெஞ்சுருகி நின்றார்! ஆம், அன்று ஈஸ்வரமுனிகள் தன் தந்தையின் பள்ளிபடுத்தப்பட்ட திருவிடத்தின் அருகில் நிறுவிய அதே ஸ்ரீநிவாசப் பெருமாள் விக்ரகம்தான் அது! 1200 ஆண்டுகளுக்குப் பின் எம்பெருமான் மீண்டும் தன் அடியார்களுக்குக் காட்சி கொடுத்தார். அதன் பிறகு பல நல்ல உள்ளங்களின் பேராதரவோடும் உதவியோடும், ஈஸ்வரமுனிகள் அன்று அமைத்த அந்த உன்னதத் திருவரசு மீண்டும் கம்பீரமாக உயிர்பெற்று எழுந்தது!
நாதமுனிகளின் திருவரசுக்கு அருகிலேயே, குருகைக் காவலப்பன் அன்று மான் தோலின் மீது பத்மாசனமிட்டு யோக நிஷ்டையிலே அமர்ந்த அதே திவ்யமான இடத்தில், இன்று 'ஸ்ரீ குருகைக் காவலப்பன் திருக்கோவில்' எழிலுற அமைந்திருக்கிறது. 1976ஆம் வருடத்திற்குப் பிறகு, 2014ஆம் ஆண்டில் இத்திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றது. வியப்பிலும் வியப்பாக, இத்திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானும் வீரநாராயணப் பெருமாளே ஆவார்!
ஆசாரியர்கள் மறைந்தாலும் அவர்தம் பக்திப் பேரொளி இன்றும் வையகத்தை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தத் திருத்தலங்கள் இன்றும் வாழும் சாட்சிகளாய் விளங்குகின்றன.
./சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்...
அடிக்குறிப்புகள்:
படங்கள்:
![]() |
| புதையுண்ட பெருமாள் |
![]() |
வெளியே வந்த பெருமாள் !








Comments
Post a Comment