21 - வாய்க்கால்
21 - வாய்க்கால்
மழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்த அந்த அடர்ந்த காட்டின் வழியே, மின்னல் கீற்றுகள் மட்டுமே நாதமுனிகளுக்கு பாதையைக் காட்டின. நொடிப்பொழுதில் ஆசாரியரின் இத்தகைய செய்கையைப் பார்த்துத் திடுக்கிட்ட சீடர்கள், செய்வதறியாது பதறிக்கொண்டு அவர்பின்னே ஓடினார்கள்...
பலத்த காற்றுடன் இடியும் மின்னலும் கூடிய பெருமழையினூடே நாதமுனிகள் அவர்களின் பார்வைக்கு அப்பால் மறைந்தார்.
புண்டரீகாக்ஷரும், ஈஸ்வரமுனிகளும் அதிவேகமாக ஓட, அவர்களுக்குப் பின்னால் ஆண்டானும் காவலப்பனும் ஓடினார்கள். காடும் மழையும் சூழ்ந்த பாதையில் சுற்றும் முற்றும் தேடிக்கொண்டு சென்றபோது, அங்கே ஒரு மரத்தடியில் அவர்கள் நெஞ்சைப் பிளக்கும் அந்தக் காட்சியைக் கண்டார்கள்.
நாதமுனிகள் அங்கே சுயநினைவற்று மயங்கிக் கிடந்தார்!
சீடர்கள் ஓடிவந்து, “ஐயோ! அரிய வேதங்களுக்கெல்லாம் தலைவரான எங்கள் ஆசாரியரே! எதற்காக இடியும் மழையும் பாராது அந்த மன்னனைத் துரத்திக்கொண்டு ஓடிவந்தீர்?” என்று நாதமுனிகளைத் தூக்கி உட்கார வைத்து, ஈஸ்வரமுனிகள் கண்ணீர் மல்கக் கேட்டார்.
நாதமுனிகள் மெதுவாகத் தன் கண்களைத் திறந்து, பக்திப் பரவசத்தால் உடல் முழுவதும் உரோம கால்கள் குத்திட்டு நிற்க, ஒசிந்து உருகிய குரலில் பேசத் தொடங்கினார்.
“அப்பனே! இருண்ட இந்த மேகங்கள், கோவர்த்தனக் கிரியைக் குடையாகப் பிடித்த நீலமேக வண்ணனாகிய கண்ணபிரானின் பெருங்கருணையாக எனக்குத் தெரிந்தது! அந்தச் சமயத்தில், சோழ மன்னன் தன் அரசிகளுடன் குதிரையில் சென்ற காட்சி... நம் கண்ணன் கோபியர்களுடன் பிருந்தாவனத்திலே உகந்து சென்ற காட்சியாக அல்லவா என் ஊனக் கண்களுக்குத் தெரிந்தது! அதனால்தான் ஓடிவந்தேன்...” என்றார் மெய்மறந்த நிலையில். அவர்தம் நெஞ்சில் ‘கிருஷ்ண த்ருஷ்ணா’ என்னும் கிருஷ்ணக் காதல் வெள்ளமாய் ஓடிக்கொண்டிருந்தது.
இதைக் கேட்டு உருகிய காவலப்பன், “ஆசாரியரே! நம் சடகோபர் எப்படி பகவத் பிரேமையிலே ஆழ்ந்து ஆறு திங்கள் உலகியல் நினைவின்றித் திகைத்தாரோ, அதே உன்னதப் பிரேமை நிலையில்தான் உங்களையும் காண்கிறோம்!” என்றார் நெகிழ்ச்சியுடன்.
ஆண்டானும், “ ‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே’ என்னும் நம்மாழ்வாரின் பாசுரத்திலே, தாய் தன் மகளின் பக்தி நிலையைப் பாடியது போல, உலகளந்த அழகிய மன்னர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே தங்களுக்கு எம்பெருமான் கண்ணபிரானின் திவ்யரூபம் அல்லவா தெரிந்துள்ளது!” என்று வியந்து போற்றினார்.
புண்டரீகாக்ஷர் அவர்தம் கைகளைப் பற்றிக்கொண்டு, “எங்கள் குலவிளக்கே! என்ன காரியம் செய்தீர்? உங்களைப் பிரிந்து நாங்கள் ஒரு கணப்பொழுது துடிதுடித்துப் போய்விட்டோம்! இதோ பெருமழை நின்றுவிட்டது; வாருங்கள், நாம் வீரநாராயண சதுர்வேதிமங்கலத்துத் திருமாளிகைக்கு எழுந்தருளலாம்” என்று கூற, அனைவரும் மெல்ல நடக்கத் தொடங்கினர்.
அப்படி நடந்து செல்லும்போது நாதமுனிகள், “சீடர்களே! உங்களிடம் பாசுரங்களுக்கான தனியன்களைக் கேட்டேன். புண்டரீகாக்ஷரே! உமது நெஞ்சில் என்ன தனியன் இந்த மழையில் பூத்துக் குலுங்குகிறது?” என்று வினவினார்.
புண்டரீகாக்ஷர் தன் ஆசாரியரான நாதமுனிகளை வணங்கி, திருப்பாவை பிரபந்தத்திற்கான தனியன்களைத் தன் மதுரமான குரலில் பாடத் தொடங்கினார்:
அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை; பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
பாடியருள வல்ல பல்வளையாய்! – நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி”யென்ற இம்மாற்றமும்
நாங்கடவா வண்ணமே நல்கு..
என்று நெஞ்சுருகிப் பாடினார்.
நாதமுனிகள் நெகிழ்ந்து, “அன்பரே! அற்புதம்! பூமாலை சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான கோதை நாச்சியார், தென்னரங்கனுக்குப் பாடிய திருப்பாவையைத் திவ்யமான இன்னிசையோடு பாடும் அடியவர்கள் யாவருக்கும் அருளவல்ல ஆண்டாள் நாச்சியாரின் பெருமைகளைப் போற்றும் இந்த உன்னதமான தனியன் பாசுரங்களை இல்லத்தை அடைந்ததும் ஓலைப்படுத்தி, திருப்பாவை பிரபந்தத்திற்கு முன்னால் சாற்றிவிடுங்கள்!” என்று கூறிவிட்டு, “புண்டரீகாக்ஷரே! உமது நெஞ்சக் குமுறலிலும், இவ்வினிய கானத்திலும் தெரியும் உமது மேலான விருப்பம் யாது?” என்று வினவினார்.
புண்டரீகாக்ஷர் தன் ஆசாரியரை வணங்கி, உணர்ச்சிப் பெருக்கோடு பேசத் தொடங்கினார்:
“ஆசாரியரே! இதோ நம்மைச் சுற்றிலும் செழுமையாக வளர்ந்து பசுமையுடன் அலைபாயும் இந்தச் செந்நெல் வயல்களைப் பாருங்கள்! இப்பயிர்கள் யாவும் கதிர்விட்டுச் செழித்து நிற்பதற்குக் காரணம், நம் வீரநாராயணபுரத்து ஏரியிலே (வீராணம் ஏரி) தேங்கியிருக்கும் அமுதப் புனல் அல்லவா? ஆனால், அந்த ஏரிநீர் ஒரே இடத்தில் தேங்கி நின்றால், அதனைச் சுற்றியுள்ள சில வயல்களுக்கு மட்டுமே பயன்படும். மாறாக, அதே ஏரிநீர் அகன்ற வாய்க்கால்களின் வழியே பொங்கிப் பாய்ந்து சென்றால், வழியிலுள்ள ஒவ்வொரு வயலையும் உய்வித்து, வறண்ட பாலை நிலங்களையும் வளம் கொழிக்கும் பூமியாக மாற்றிவிடுகிறது!
பக்திப் புனல் இல்லாத நிலங்களைப் போல, பகவத் பக்தி இல்லாமல் இந்தப் பூவுலகமே பாலை நிலமாக மாறி, மக்கள் நற்கதியடையாமல் பிணங்களைப் போல் உழன்று மடிகிறார்கள். நம்மாழ்வார் என்ற பெருங்கருணை மேகத்திலிருந்து பொழிந்த பக்தி மழையானது, நாதமுனிகள் என்னும் பிரம்மாண்டமான ஏரியிலே நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களாகத் தேங்கி நிற்கிறது. அந்த அமுதப் பாசுரங்களை, அடியேன் ஒருவன் மட்டுமே அநுபவித்துக் கொண்டு திருப்தியடைவது தகுமோ?
ஆசாரியரே! நீங்கள் எங்களுக்குக் அருளிய இந்த உன்னதப் பாசுரங்களின் அநுபவத்தை, ஆண்டாள் நாச்சியார் மற்றவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பியது போல, வையகத்து மக்கள் யாவரையும் அறியாமைத் தூக்கத்திலிருந்து எழுப்பி உய்யக் கொள்ள வேண்டும்! தூரத்து ஏரிநீரைக் கொண்டுவந்து தாகத்தால் தவிக்கும் வயலை விளைவிக்கும் 'வாய்க்கால்' போல, அடியேனும் இந்த நாலாயிர திவ்யப் பிரபந்த அமுதத்தை உலகத்தவர் அனைவருக்கும் உபதேசித்து உய்யக் கொள்ள வேண்டும்! அத்தகைய கைங்கரியத்தைச் செய்ய அடியேனுக்குத் தாங்கள் ஆசிகளையும் அனுக்கிரகத்தையும் பிரசாதிக்க வேண்டும்!” என்று கூறி, நாதமுனிகளின் திருவடிகளில் விழுந்தார் புண்டரீகாக்ஷர்.
இதைக் கேட்டு நெஞ்சம் குளிர்ந்த நாதமுனிகள், கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக, அவரைத் தன் மார்போடு வாரி அணைத்துக் கொண்டார்.
“புண்டரீகாக்ஷரே! உமது மேலான எண்ணமே உன்னதமானது! நீர் உமது பரந்த கருணையினால் வையகத்தையும், வையகத்தை உடையவனான எம்பெருமானையும், அவனைப் போற்றும் ஆழ்வார்களின் அருளிச்செயல்களையும், அவற்றைப் பெற்றுத் தந்த எளியோனான அடியேனையும் உய்யக்கொண்டீர்! எல்லாவற்றையும் பொன்னாக மாற்றவல்ல ஒப்பற்ற ரசகுளிகையைப் போல, ஆழ்வார்களின் பாசுர அநுபவம் உமது நாவிலிருந்து எங்கு பாய்ந்தாலும் அது மற்றவர்களின் நெஞ்சைப் பக்தியாக மாற்றிவிடும்!
அரும்பாடுபட்டுப் பெற்ற இந்தத் திவ்யப் பிரபந்த அமுதை, உலகமெங்கும் 'எதிர்பொங்கி மீதளிப்ப' வாரி வழங்கிப் பரவச் செய்யப் போகிறீர்! உம்மால் வையகத்து மக்களின் பிறவித் துயரங்கள் யாவும் நீங்கி உய்யப் போகிறார்கள்! இன்று முதல் நீர் இப்புவி மண்டலத்திலே 'ஸ்ரீ உய்யக்கொண்டார்' என்று பிரசித்தி பெற்று விளங்குவீராக! அதுமட்டுமல்ல, அடியேனின் பேரனான யமுனைத்துறைவனுக்கும் நீரே இந்த உன்னதமான நன்னெறியை ஓதுவித்து, வழிநடத்த வேண்டும்!” என்று நெஞ்சார ஆசீர்வதித்தார் நாதமுனிகள்.
நாதமுனிகளின் திருவடித் தாமரைகளில் விழுந்து உய்யக்கொண்டார் வணங்கி எழுந்தார். பெருமழை முழுமையாக ஓய்ந்து, மேகக் கூட்டங்கள் விலகிச் சென்றன.
அனைவரும் வீரநாராயண சதுர்வேதிமங்கலத்தை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கினர். அவர்கள் நடந்து சென்ற அந்தப் பசுமையான வயல்வெளிகளுக்கு நடுவே வளைந்து நெளிந்து ஓடிய நீர்ப்பாசன வாய்க்கால்களும், தூரத்து நீல வானத்திலே எழிலுறத் தோன்றிய வண்ணமயமான வானவில்லும், வீரநாராயணப் பெருமாள் திருக்கோவிலின் கம்பீரமான ராஜகோபுரமும் அவர்களுக்குப் பேரழகுடன் காட்சியளித்தன!
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை உலகிற்குக் காட்டிக்கொடுத்து, அதனை நாதமுனிகளின் மூலமாகப் பெற்றுத் தந்து, பிற்காலத் தலைமுறையினரை உய்யக் கொள்வதற்காகத் தன் ஒப்பற்ற கருணையினால் வாய்க்காலாக விளங்கும் 'உய்யக்கொண்டாரைக்' காட்டிக்கொடுத்த அந்த எம்பெருமான் ஸ்ரீவீரநாராயணப் பெருமாளைச் சேவிக்க, மழையிலே நனைந்த திருமேனிகளுடன் திருக்கோவிலின் சந்நிதிக்குள் நுழைந்தார்கள்.
அங்கே, தன் எழில்மிகு செந்தாமரைக் கண்களுடன், தன் அடியவர்கள் யாவரையும் கைங்கரியப் பக்தியில் நனைய வைப்பதற்காக, புன்னகை தவழும் திருமுகத்துடன் சேவை சாதித்துக் காத்துக்கொண்டிருந்தார் காட்டுமன்னாரான எம்பெருமான்!
./சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்…
அடிக்குறிப்புகள்:
(1) "அன்ன வயற்புதுவை.." - உய்யக்கொண்டார் (புண்டரீகாக்ஷர்) ஆண்டாளின் திருப்பாவை பிரபந்தத்திற்கு அருளிசெய்த உலகப் புகழ்பெற்ற இரண்டு தனியன் பாசுரங்கள் இவையாகும்.
(2) ஸ்ரீமத் நாதமுனிகள் யோக சாஸ்திரத்திலும் விற்பன்னர். யோகத்தில் பகவானை உணரும் ஆற்றல் பெற்றவர். நாதமுனிகள் குருகைகாவலப்பனுக்கு அஷ்டாங்கயோகம் கற்பித்து உய்யக்கொண்டாருக்கும் கற்றுக் கொடுக்கப் பிரியப்பட்டபோது உய்யக்கொண்டார் “பிணம் கிடக்க மணம் புணரலாமோ?” என்றார். இதை சற்று மாற்றி எழுதியிருக்கிறேன்.
Comments
Post a Comment