18 - நடைப்பயணம்

18 - நடைப்பயணம்



சோழ வளநாட்டின் வடபுறத்தே, எழில் கொஞ்சும் காவிரி நதி தன் கிளைகளாகப் பிரிந்து நாடெங்கும் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்த தருணம் அது. திருவரங்கத் திருத்தலத்திற்கு வடக்கே சுமார் இரண்டு காத தொலைவில், சுற்றியிருந்த பச்சைப்பசேல் என்ற நெல்வயல்களுக்கு நடுவே, ஒரு பிரம்மாண்டமான பனிப்பாறை(1) உறைந்து நிற்பதைப்போல வெண்மையான பாறைகளால் ஆன ஒரு சிறுகுன்றின் மீது எழில்மிகு திருக்கோவில் ஒன்று இருந்தது. 'ஸ்வேதகிரி' என்று வடமொழியிலும், 'திருவெள்ளறை' என்று தீந்தமிழிலும் போற்றப்படும் ஆதி திவ்யதேசம்!

அங்கே, கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில், தாமரை மலர்களைப் போன்ற அழகிய திருக்கண்களைக் கொண்ட 'செந்தாமரைக் கண்ணன்' என்னும் புண்டரீகாக்ஷன், தன் கரங்களில் சங்கு சக்கரங்களைத் தாங்கி, அடியவர்களுக்காக யுகம் யுகமாகக் காத்துக்கொண்டிருக்கிறான்.

இத்தலத்தின் மகிமையைக் கண்டு வியந்த நிலமகள், திருமகள், கதிரவன், சந்திரன் மற்றும் எம்பெருமானின் படுக்கையான ஆதிசேஷன் ஆகிய தேவர்கள் யாவரும், தங்களின் உன்னதமான தெய்வ வடிவங்களைத் துறந்து, எளிய மானிட வடிவங்களை ஏற்று, இத்திருக்கோவிலிலேயே தங்கிப் பெருமாளுக்குப் பலவாறான அந்தரங்கப் பணிவிடைகளைச் செய்துவந்தார்கள் என்பதை இன்றும் அத்தலத்தின் வரலாற்றுச் சிற்பங்கள் மெய்ப்பித்துக் காட்டுகின்றன.

ஆதிகாலத்தில் இப்பகுதி முழுவதும் அடர்ந்த காடுகளாகவும், மனிதர்கள் நுழைய அஞ்சும் முட்புதர்களாகவும் சூழ்ந்திருந்தது. அக்காலத்தில், அயோத்தியை ஆண்ட சூரிய குலத்துத் தோன்றலும், ஸ்ரீராமபிரானின் முன்னோனுமாகிய சிபிச் சக்கரவர்த்தி இப்பகுதிக்கு வந்தான். தன்னிடம் அடைக்கலம் புகுந்த ஒரு எளிய புறாவைக் காப்பதற்காகத் தன் உடலின் சதையையே அறுத்துத் தராசில் வைக்கத் துணிந்த அந்த உத்தம மன்னன், வெள்ளறை மலையின் மீது நின்றுகொண்டிருந்த பெருமாளின் திவ்யமங்கள ரூபத்தைக் கண்டு நெஞ்சம் உருகினான். அவனது நெஞ்சில் எம்பெருமானுக்கு நித்திய கைங்கரியம் புரிய வேண்டும் என்ற பேராவல் பிறந்தது.

உடனே அவன், கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட வளம் கொழிக்கும் அந்தர்வேதிப் பகுதியிலிருந்து மூவாயிரத்து எழுநூறு பூர்வசிகை வைணவப் பிராமணக் குடும்பங்களை இத்தலத்திற்கு அழைத்து வந்து, அவர்களை இங்கேயே குடி அமர்த்தினான். சோழ மன்னர்களுக்கு முன்னரே சோழ தேசத்திற்கு வந்த இக்குலத்தவர்களை 'சோழியர்கள்' என்றும், 'முன்குடுமிச் சோழிய' பிராமணர்கள் என்றும் பிற்கால வரலாற்று நூல்கள் வர்ணித்தன.

நமது திவ்யப் பிரபந்தங்களை அருளிச்செய்த ஆழ்வார்களுள் மதுரகவிகள், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார் ஆகிய மூவரும் இத்தகைய பூர்வசிகை வைணவ மரபில் வந்தவர்களே.

இத்தகைய உன்னத பூர்வசிகை வைணவ நல்லார்கள் திருவெள்ளறையில் எம்பெருமானுக்குத் தங்களின் இதயபூர்வமான கைங்கரியங்களைச் செய்துவந்தனர். அக்குலத்தில், இவ்வுலகத்து அற்ப செல்வங்களையோ பலன்களையோ சிறிதும் விரும்பாமல், திருவெள்ளறை எம்பெருமானின் திருவடித் தொண்டே புகலிடமென வாழ்ந்துவந்த ஒரு தம்பதியருக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

அக்குழந்தையின் எழில் கொஞ்சும் திருமேனியையும், தாமரை மலரென விரிந்த திருக்கண்களையும் கண்ட பெற்றோர், அந்தப் புண்டரீகாக்ஷப் பெருமாளே தங்களின் இல்லத்தில் மகனாக அவதரித்துள்ளான் போலும் என்று நெகிழ்ந்தனர். அக்குழந்தைக்குப் 'புண்டரீகாக்ஷன்' என்றே திருநாமம் சூட்டி அன்போடு வளர்த்துவந்தனர்.

தன் பெற்றோரைப் போலவே எம்பெருமானின் திருக்குணங்களிலே தன் மனத்தை முழுமையாகப் பறிகொடுத்து, இளமையிலேயே கைங்கரியம் புரிந்துவந்தான் புண்டரீகாக்ஷன். அக்காலத்தில், வீரநாராயணபுரமான காட்டுமன்னார்குடியில் நாதமுனிகள் நிகழ்த்திய அசாத்தியமான அற்புதப் பிரபாவங்களையும், அவர் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை மீட்டெடுத்த உன்னதச் செய்தியையும் கேள்விப்பட்டான்.

"இவரே நமக்குத் தகுந்த சதாசாரியன்! இவரே அடியேனை நல்வழிப்படுத்த வல்ல உத்தமர்!" என்று தன் மனதுள் தீர்க்கமாக உறுதிபூண்டான். அவர்தம் திருவடிகளைத் தொழுது, மறைந்துபோன ஆழ்வார்களின் திவ்யப் பாசுரங்களையும் அவற்றின் ஆழமான உட்பொருளையும் உபதேசமாகப் பெற வேண்டும் என்று விரும்பினான். உடனடியாக திருவரங்கம் வழியாகக் காட்டுமன்னார் நோக்கித் தன் நெடிய பயணத்தைத் தொடங்கினான் புண்டரீகாக்ஷன்.

பாண்டியத் தேசத்தின் தாமிரபரணி நதியின் கரையோரம் அமைந்துள்ள நமது நேயர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான திருக்குருகூர் திவ்யதேசத்தில் ஒரு பாகவதர் வாழ்ந்துவந்தார். அவர் குருகைப்பிரானாகிய நம்மாழ்வாரை எப்போதும் தன் மனக்கோவிலில் பிரதிஷ்டை செய்து, அவர்தம் தியானத்திலேயே மூழ்கி, அக்குருகூர் கோவிலிலேயே வாசம் செய்துவந்தார். திருக்கோவிலைக் காக்கும் உத்தமக் காவலனைப் போல அவர் எப்போதும் அங்கேயே இருந்ததால், ஊர் மக்கள் அவரை அன்போடு ‘குருகைக் காவலப்பன்’ என்றே அழைத்தனர்.

நாதமுனிகள் நம்மாழ்வாரை யோக நெறியில் நேரில் தரிசித்து, அவரிடமிருந்து அஷ்டாங்க யோக இரகசியத்தைக் கற்றுக்கொண்டார் என்றும், நம்மாழ்வாரைப் போலவே யோக சமாதி நிலையில் ஆழ்ந்து எம்பெருமானை அநுபவிக்கிறார் என்றும் கேள்விப்பட்டார் குருகைக் காவலப்பன். தன் வாழ்நாள் முழுவதும் எம்பெருமானை அவ்வாறான தியான யோக சமாதியில் ஆழ்த்தி அநுபவிக்க வேண்டும் என்று அவர் பேராவல் கொண்டார். உடனே நாதமுனிகளின் திருவடிகளைத் தொழுது, அந்த உன்னத யோக இரகசியத்தை ஆசாரிய உபதேசமாகப் பெற விரும்பி, வீரநாராயணபுரம் நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கினார்.

இதற்கிடையே, சோழ வளநாட்டின் திருக்குடந்தைக்கு (கும்பகோணம்) மிக அருகில், காவிரியின் உபநதியான மண்ணியாற்றின் கரையில் எழிலுற அமைந்திருந்தது 'திருக்கண்ணமங்கை' என்னும் திவ்யதேசம்! அது கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம் என்றும் போற்றப்பட்டது. அங்கே, வான்முட்டி நிற்கும் பிரம்மாண்டமான ராஜகோபுரத்தின் நிழலில், 'பக்தவத்சலப் பெருமாள்' உபய நாச்சியார்களுடன் நின்ற திருக்கோலத்தில் மிகப்பெரிய திவ்யமங்கள வடிவத்தோடு சேவை சாதித்துக்கொண்டிருந்தார்.

இப்பெருமாளின் அழகிலும் பக்திப் பிரவாகத்திலும் ஈர்க்கப்பட்ட தேவர்களும் முனிவர்களும், தங்களின் தவவலிமையைக் கொண்டு தேனீக்களாக உருவெடுத்து, எப்போதும் பெருமாளை வலம்வந்து ஆராதித்துக்கொண்டிருந்தனர். இன்றும் அத்தலத்தின் தாயாரான அபிஷேகவல்லி சந்நிதியில் ஒரு பெரும் தேன்கூடு இருப்பதை நாம் நேரில் காணலாம்.

இந்த திவ்யதேசத்தில், நாதமுனிகளின் சகோதரியின் புதல்வரான லக்ஷ்மிநாதாசாரியார்(2) என்பவர் வாழ்ந்துவந்தார். அவர் அளவிட முடியாத செல்வச் செழிப்புடன் அந்தக் கிராமத்தை ஆண்டு வந்த காரணத்தால், அக்கிராம மக்கள் அவரை ‘திருக்கண்ணமங்கை ஆண்டான்’ என்றே போற்றினர். தன் தந்தையாரால் முறைப்படி உபநயனம் செய்விக்கப் பெற்று, பிரம்மச்சரிய விரதத்தைக் கடைப்பிடித்து, சகல வேதங்களையும், சாஸ்திரங்களையும் கசடறக் கற்றிருந்தார் அவர்.

பக்தப் பிரகலாதனைப் போன்ற பக்தி மேலீட்டால், எம்பெருமானின் திவ்ய நாமங்களை எப்போதும் நாத்தழும்ப உச்சரித்துக்கொண்டிருந்தார். ஞானம், பக்தி, வைராக்கியம் போன்ற நற்குணங்களுக்கு உறைவிடமாக விளங்கிய அவர், தன் தாய்மாமனான நாதமுனிகளைத் தன் ஆசாரியராகக் கொண்டு, அவரிடம் ஆழ்வார் பாசுரங்களைக் கற்க வேண்டும் என்று பேராவல் கொண்டார். உடனே குடந்தை வழியாகக் காட்டுமன்னார்குடி நோக்கிப் புறப்பட்டார் திருக்கண்ணமங்கை ஆண்டான்.

திருவெள்ளறையிலிருந்து புறப்பட்ட புண்டரீகாக்ஷன், காவிரி நதியின் இரு கரைகளிலும் செழித்து வளர்ந்திருந்த தென்னை மரங்களின் நிழல் வழியே நடந்து, திருவரங்கப் பெருநகரை வந்தடைந்தார். காவிரியின் குளிர்ந்த புனலில் நீராடி, தன் நெற்றியில் அழகிய ஊர்த்வபுண்டரத்தைத் தரித்துக்கொண்டு, திருவரங்கநாதனின் சந்நிதியை நோக்கிச் சென்றார். அங்கே, அரங்கனின் அரவணைப் பள்ளிக் கோலத்தைக் கண்டு மெய்மறந்து சேவித்துக்கொண்டிருந்தபோது, அவர்தம் பார்வை அருகிலிருந்த ஒரு இளைஞரின் மீது விழுந்தது.

தன்னைவிட வயதில் இளையவரான அந்த இளைஞர், அரங்கனின் திருமுன்னே அவன் அழகில் மயங்கி தன் இரு கரங்களையும் கூப்பி, கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக உருகி நின்றுகொண்டிருந்தார்.

தீர்த்தப் பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு சந்நிதியை விட்டு வெளியே வந்த புண்டரீகாக்ஷன், அந்த இளைஞரை அணுகி, கைகூப்பி வணங்கி, “மெய்மறந்து அரங்கனைச் சேவிக்கும் ஐயனே! தாங்கள் எந்த திவ்யதேசத்திலிருந்து எழுந்தருளுகிறீர்கள்?” என்று அன்போடு வினவினார்.

“வந்தனங்கள் ஐயனே! பாண்டிய தேசத்துத் தாமிரபரணி கரையில் இருக்கும் திருக்குருகூர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் அந்தப் பழைமையான திருப்புளியாழ்வாரின் (புளியமரம்) நிழலே என் பூர்வீகம். அக்கோவிலிலேயே எப்போதும் வாசம் செய்வதால் என்னை எல்லோரும் ‘குருகைக் காவலப்பன்’ என்றே அழைக்கிறார்கள். இதனால் என் இயற்பெயரே எனக்கு மறந்துபோய்விட்டது!” என்றார் அவர் மந்தஹாசப் புன்னகையுடன்.

அவர் கூறியதைக் கேட்டு வியந்த புண்டரீகாக்ஷன், “ஆகா! நம்மாழ்வார் பதினாறு ஆண்டுகள் யோகத்தில் வீற்றிருந்த அந்தத் திருப்புளியாழ்வாரின் நிழலிலே வாசம் செய்வதற்குத் தாங்கள் முற்பிறவியில் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்!” என்று நெகிழ்ந்து போற்றினார்.

அப்போது குருகைக் காவலப்பன் புண்டரீகாக்ஷரின் தோற்றத்தைக் கண்டு, “நெற்றியில் தரிக்கும் ஊர்த்வபுண்டரமானது மேல்நோக்கிச் செல்வது போல, சிகை உயர நோக்கிச் செல்லும் பூர்வசிகை வைணவக் குலத்தில் பிறந்த தங்களின் திருமுகத்தில் ஞான ஒளி, காவிரியின் பொங்கி வழியும் நீரைப் போலப் பிரகாசிக்கிறது. திருவரங்கம் தங்களது பூர்வீகமோ?” என்று பணிவோடு கேட்டார்.

“திருவரங்கத்திற்கு வடக்கே இரண்டு காத தொலைவில் இருக்கும் ஆதி திருவெள்ளறைதான் எங்கள் திவ்யதேசம். அங்கேதான் எங்கள் குலத்தவர்கள் புண்டரீகாக்ஷப் பெருமாளுக்கு நித்தியக் கைங்கரியம் செய்துவருகிறார்கள். அந்தப் பெருமாளின் திருநாமமே அடியேனுக்கும் அமைந்தது. திருவரங்கனை வணங்கிவிட்டு, குடந்தை வழியாக வீரநாராயணபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். மறைந்துபோன ஆழ்வார்களின் திவ்யப் பாசுரங்களை மீட்டெடுத்த நாதமுனிகள் என்ற உத்தமோத்தமரை ஆசாரியராகக் கொண்டு, அவரிடம் பாசுரங்களை உபதேசம் பெற அரங்கன் அருள்வேண்டி இங்கு வந்தேன்” என்றார் புண்டரீகாக்ஷன்.

“ஐயனே! அடியேனும் அந்தத் தத்துவஞானியான நாதமுனிகளைத் தேடிக்கொண்டுதான் சென்றுகொண்டிருக்கிறேன்! அரங்கனின் திருவுள்ளத்தால் உங்களைப் போன்ற பாகவதரின் திருவடி தொழும் பேறு பெற்றேன். இனி நான் தங்களின் நிழலாகத் தங்களைப் பின்தொடர்ந்து வருகிறேன்!” என்றார் குருகைக் காவலப்பன் மகிழ்ச்சியுடன்.

“திருவரங்கன் நமது நடைப்பயணம் சோர்வில்லாமல், அவனது கல்யாண குணங்களைப் பேசிக்கொண்டே செல்ல வேண்டும் என்று திருவுள்ளம் பற்றியுள்ளான் போலும்!” என்று கூறி இருவரும் குடந்தை நோக்கிப் புறப்பட்டார்கள். திருக்குடந்தையில் இன்னொரு ஆச்சரியம் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தது!

--------
(1) - ஸ்தல வரலாறு
(2) - லக்ஷ்மிநாதாச்சாரியார் - சில புத்தகங்களில் இது போல இருக்கிறது.
படம் : மூவரும் நடைப் பயணம் செய்யும் பாதை (கற்பனை)

Comments

Popular posts from this blog

1 - வீரநாராயணபுரம்

24 - காலச் சுழற்சி

23 - வெட்டிவேர்