30 - தாமரை

30 - தாமரை



“அடியேனுக்குப் பரமபதத்தின் திவ்யமான படிக்கட்டுகள் மிகத் தெளிவாகத் தெரிகின்றன!” என்று ஆசாரியர் ஸ்ரீ உய்யக்கொண்டார் உரைத்ததைக் கேட்ட மணக்கால் நம்பி, எல்லையற்ற துயரத்தால் நெஞ்சுருகி நின்றார். தன் ஆசாரியனைப் பிரிந்து வாடப் போகும் அந்தத் தவிப்பில், என்ன செய்வதென்று அறியாமல் கைபிசைந்து திகைத்தார். மற்ற சீடர்களும் சோகக் கடலில் மூழ்கி அழுதுகொண்டிருந்தனர்.


அச்சமயம் மணக்கால் நம்பி, கண்களில் நீர் மல்க, “எந்தையே! தேவரீர் திருநாட்டுக்கு (பரமபதத்திற்கு) எழுந்தருளிவிட்டால், அதற்குப் பின்பு எமது உன்னதமான வைணவ சம்பிரதாயத்தை நெஞ்சுரத்தோடும் ஆசாரிய பக்தியோடும் வழிநடத்திச் செல்லப் போகும் தகுதி படைத்தவர்கள் யார்? இந்த ஏழைகளைத் தவிக்கவிட்டு எங்கு செல்கிறீர்கள் ஆசாரியரே?” என்று தன் வேதனை நெஞ்சினைச் சுட, விம்மி விம்மி அழுதுகொண்டே கேட்டார்.


உய்யக்கொண்டார் தன் கருணை பொழியும் கண்களால் மணக்கால் நம்பியை நோக்கினார். அவர்தம் வலக்கரத்தை மெல்ல உயர்த்தி, அன்போடு நம்பியைத் தன்பால் அழைத்து உரைக்கத் தொடங்கினார்:


“மணக்கால் நம்பியே! நம் முன்னோர்கள் ‘பருத்தி பட்ட பன்னிரண்டு படல்’(1) என்பார்கள். பருத்திக்கொட்டையை வாங்கி, அதனைப் பயிரிட்டு, பருத்தியைச் சேகரித்து, பன்னி, வில்லடித்து, சுருட்டி, நூலாக நூற்று, பாவோடி, தறியில் நெய்து, மடித்து, விலைக்கு விற்று, தோய்த்து உலர்த்தி, பின்னர் ஆடையாய் உடுத்தி, அது கிழிந்து போகும் வரை மனிதருக்குப் பயன்படச் செய்வார்கள். அத்தனை கடினமான பாதைகளைக் கடந்துதான் ஒரு பருத்தியானது மனிதரின் மானம் காக்கும் ஆடையாக மாறுகிறது!


அந்தப் பருத்தியின் கடினமான பயணத்தைப் போல, நீரும் அடியேனுக்குப் பன்னிரண்டு ஆண்டுகள் இடைவிடாது, பசியும் தூக்கமும் பாராது, சகலவிதமான ஆசாரிய கைங்கரியங்களையும் பக்திப் பூர்வமாகச் செய்துள்ளீர்! இல்லத்துத் தளிகை கைங்கரியம் முதல் என் பிஞ்சுக் குழந்தைகளின் தாயில்லாக் குறையைத் தீர்த்தது வரை நீர் பட்ட பாடுகள் அத்தனையையும் அடியேன் அறிவேன். எனவே, உமது உன்னத கைங்கரியத்தின் பயனாக, இன்றிலிருந்து நீரே நமது வைணவச் சம்பிரதாயத்திற்குத் தலைமை தாங்கி, இந்த ஆசாரிய பீடத்தை அலங்கரிக்கக் கடவீர்! நம்மிடம் வந்து சேர்ந்த சீடர்கள் எல்லோரையும் ஒற்றுமையுடன் விளங்கச் செய்து, அவர்களை நல்வழியில் நடத்தக்கூடிய நம் ஆசாரியர்களின் ஆசீகள் உமக்கு என்றும் உண்டு நம்பியே!” என்று அருளிச்செய்தார்.


இதனைக் கேட்ட மணக்கால் நம்பி, ஆசாரியரின் பேரன்பில் நெகிழ்ந்து, அவர்தம் திருவடிகளிலே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். உய்யக்கொண்டார் தன் சோர்வுற்ற திருக்கரங்களால் அவரை வாரி அணைத்துக்கொண்டு, “நம்பியே! அடியேன் உரைக்கும் இந்த ரகசியத்திற்குச் சற்று செவி சாய்ப்பீராக!” என்று மெதுவாக அவர்தம் காதருகே ஒரு செய்தியைக் கூறினார்.


ஆசாரியன் கூறிய அந்த ரகசிய வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் மணக்கால் நம்பியின் முகம் வியப்பால் மலர்ந்தது. ஆசாரியர் தன்னிடம் ஏதோ உன்னதமான இரகசியத்தைப் பகிர விரும்புவதை உணர்ந்த நம்பி, அங்கு சோகத்தில் ஆழ்ந்து அழுதுகொண்டிருந்த மற்ற சீடர்களை நோக்கினார். மணக்கால் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்துகொண்ட மற்ற சீடர்கள் அனைவரும் அந்த அறையை விட்டு வெளியேறினார்கள். மணக்கால் நம்பி அந்த அந்தரங்க அறையின் கதவுகளைத் தாழிட்டுவிட்டு, மீண்டும் ஓடிவந்து உய்யக்கொண்டாரின் திருவடிக்கு அருகில் பவ்யமாக அமர்ந்தார்.


உய்யக்கொண்டார் தன் தழுதழுத்த குரலில் தொடர்ந்தார்:


“நம்பியே! நமது ஒப்பற்ற சொட்டைக் குலத்திலே அவதரித்த நம் ஆசாரியரான நாதமுனிகளுக்கு மகனாக அவதரித்தவர் ஞான ஒளிமிக்க ஈஸ்வர முனிகள் ஆவார். அந்த ஈஸ்வர முனிகளுக்கு, வீரநாராயணபுரத்து மன்னனான வீரநாராயணப் பெருமாளின் பேரருளால் ஒரு ஞானக் குழந்தை பிறக்கப் போகிறது. தன் பேரனாக அவதரிக்கப் போகும் அந்தக் குழந்தைக்குத் ‘யமுனைத் துறைவன்’ என்றே திருநாமம் சூட்ட வேண்டும் என்பது நம் ஆசாரியர் நாதமுனிகளின் பெருவிருப்பம்!


அந்த யமுனைத்துறைவனுக்கு நமது சம்பிரதாயத்திலுள்ள சகல ரகசியப் பொருள்களையும், திவ்யப் பிரபந்த உட்பொருள்களையும் ஒன்று விடாமல் உபதேசிக்க வேண்டும் என்று, நாதமுனிகள் அவர்தம் அந்திம காலத்தில் அடியேனுக்குக் கட்டளையிட்டிருந்தார். ஆனால், அந்தக் கட்டளையை என் வாழ்நாளுக்குள் நிறைவேற்றும் பாக்கியம் அடியேனுக்கு வாய்க்கவில்லை. ஏனெனில், அடியேன் வாழும் காலத்தில் அந்த யமுனைத்துறைவன் அவதரிக்கவில்லை. ஆனால், அந்த மகா பாக்கியம் இதோ உமக்குக் கிட்டியுள்ளது நம்பியே!” என்று கண்களை மூடித் தன் ஆசாரியர் நாதமுனிகளைத் தியானித்தார்.


பின்னர், மெல்லக் கண்களைத் திறந்து, “நம்பியே! நம் திருவாராதனப் பெருமாளின் திருமுன்னே, கீழ் வரிசையில் இருக்கும் அந்தப் பழமையான மரப் பெட்டியை உடனடியாக இங்குக் கொண்டு வாரும்!” என்று பணித்தார்.


மணக்கால் நம்பியும் பதற்றத்துடனும் பக்தியுடனும் ஓடிச் சென்று, அந்தப் பட்டுத் துணியால் மூடப்பட்ட மரப் பெட்டியினை எடுத்து வந்து உய்யக்கொண்டாரின் திருக்கரங்களில் சமர்ப்பித்தார். உய்யக்கொண்டார் மகா பக்தியுடன் அந்தப் பெட்டியைத் திறந்து, அதனுள்ளே பட்டுத் துணியால் சுற்றப்பட்டுப் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த ‘பவிஷ்யதாசாரியர்’ (வருங்கால ஜகதாசாரியரான ஸ்ரீ இராமானுஜர்) விக்ரகத்தை வெளியே எடுத்தார். அதனை மணக்கால் நம்பியின் கரங்களில் ஆசாரியப் பிரசாதமாக வழங்கினார்.


“நம்பியே! அடியேனுடைய காலத்தில் நாதமுனிகளின் பேரனான யமுனைத்துறைவன் அவதரிக்கவில்லை. ஆனால், நீர் அவனை உமது கண்களால் நேரில் காணப் போகிறீர்! அவனுக்குச் சரியான பருவம் வந்த பிறகு, எப்படியாவது அவனை உமது சீடராக ஏற்றுக்கொண்டு, நம் வைணவத்தின் சகல ரகசியங்களையும் உபதேசிப்பீராக! பின்னர், அவரிடம் இந்தத் திவ்யமங்கள விக்ரகத்தை ஒப்படைத்து, ‘உமது பாட்டனாரான நாதமுனிகள் தன் யோக சமாதியிலே உகந்து ஆராதித்த பவிஷ்யதாசாரிய திருமேனி இதுவே!’ என்ற ரகசியத்தையும், நாதமுனிகள் தன் கனவில் கண்ட அதே தெய்வீக வடிவம் இதுதான் என்பதையும் அவரிடம் வெளிப்படுத்துவீராக!” என்று கட்டளையிட்டார்.


மணக்கால் நம்பி தன் கைகளில் வாங்கிய அந்தப் பவிஷ்யதாசாரியரின் திவ்யமங்கள திருமேனியைக் கண்ட மாத்திரத்தில் மெய்சிலிர்த்து நின்றார். அன்று, நம்மாழ்வாரின் பாசுர விளக்க காலக்ஷேபத்தின் போது, “வருங்கால ஜகதாசாரியரான பவிஷ்யதாசாரியருக்கு ஒரு விக்ரகம் மட்டும் இப்புவியில் இருந்தால், இந்த வையகமே உய்ய வழி பிறக்குமே!” என்று தான் ஏக்கத்துடன் கூறியபோது, தன் ஆசாரியர் உய்யக்கொண்டார் ஏன் மௌனமாகப் புன்னகைத்தார் என்பதற்கான விடை இன்று அவர்தம் கரங்களிலேயே பிரசாதமாகக் கிடைத்ததைக் கண்டு உளம் பூரித்தார்! அதே சமயம், தன் ஆசாரியன் தன்னைத் தனித்து விட்டுப் பரமபதம் ஏகப் போகிறாரே என்ற தவிப்பும் அவர்தம் நெஞ்சில் பிரளயமாக வெடித்தது.


உய்யக்கொண்டார் அவர்தம் தவிப்பைப் புரிந்து கொண்டு, கனிவோடு புன்னகைத்தார்:


“நம்பியே! தண்ணீரில் மிதக்கும் தாமரை மலரை, வான் சூரியன் தன் கதிர்களால் மலரச் செய்கிறது. ஆனால், அந்தத் தாமரை மலர்வதற்கு ஆசாரியன் என்ற குளிர்ந்த நீரும், ஒளி பொருந்திய சூரியன் என்ற எம்பெருமானும் ஒருசேரத் தேவைப்படுகிறார்கள். ஒரு குளத்திலே ஒரு தாமரை மலர்ந்து தன் ஆயுள் முடிந்து வாடும் போது, அதற்கு அருகிலேயே மற்றொரு புதிய தாமரை மொட்டு மலர்வது இயற்கை நியதி அல்லவா?


அதைப்போல, இதோ புதிய மொட்டாக இருந்த நீர்... ஆசாரியத் தாமரையாக மலரும் நல்வேளை வந்துவிட்டது நம்பியே! அன்று கானகம் சென்ற இராமபிரான் விட்டுச் சென்ற பாதுகைச் செல்வத்தைப் பெற்றுக்கொண்ட பரதன், அதனை ஒன்பது மடங்கு பெருக்கி அயோத்தியை வழிநடத்தினான் அல்லவா? அதைப்போல, நீர் பெற்றுக்கொண்ட இந்தச் சம்பிரதாயச் செல்வங்களைக் கொண்டு, இந்த வைணவக் குளத்தை எண்ணற்ற ஆசாரிய தாமரைகள் பூத்துக் குலுங்கும் ஒரு மாபெரும் பக்திப் பொய்கையாக மாற்றி அமைக்கப் போகிறீர்!” என்று அருளிச்செய்து, மணக்கால் நம்பியை நெஞ்சார ஆசீர்வதித்தார்.


இதனைக் கேட்டுப் பேரானந்தம் அடைந்த மணக்கால் நம்பி, தன் கைகளில் வீற்றிருந்த அந்தப் பவிஷ்யதாசாரியரின் திவ்யமங்களத் திருமேனியை தரிசித்தவாறே, திருமங்கை ஆழ்வாரின் உன்னதமான பாசுரமொன்றைப் பக்திப் பெருக்குடன் பாடத் தொடங்கினார்:


பிணி அவிழ் தாமரை மொட்டு அலர்த்தும் பேர் அருளாளர்-கொல் யான் அறியேன்

பணியும் என் நெஞ்சம் இது என்-கொல் தோழீ பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்

அணி கெழு தாமரை அன்ன கண்ணும் அம் கையும் பங்கயம் மேனி வானத்து

அணி கெழு மா முகிலேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகியவா!


கண்களில் கண்ணீர் மல்க, ”நம்பியே! என்ன அழகான ஆழ்வார் பாசுரத்தை எடுத்து உரைத்தீர்! ஆகா! கூம்பியிருக்கும் தாமரை மொட்டினைத் தன் கதிர்களால் மெல்ல அலரச் செய்யும் செங்கதிரோனைப் போல... இந்தத் திவ்யமங்கள மூர்த்தியும் எல்லையற்ற பேரருள் கொண்டவராக விளங்குகிறார்! இவரைக் கண்ட மாத்திரத்திலேயே அடியேனின் நெஞ்சம் தாமரை மலரைப் போல விரிந்து மலர்கிறது; அவர்தம் திருவடிகளில் தானாகவே விழுந்து வணங்குகிறது. இவரைப் போன்ற பேரழகு வாய்ந்த ஒருவரை அடியேன் இதற்கு முன் எங்கும் கண்டதே இல்லை! அவர்தம் திருக்கண்கள் அழகு பொழியும் தாமரை இதழ்களைப் போலக் காட்சியளிக்கின்றன; அவர்தம் திருக்கரங்களும் செந்தாமரை மலரைப் போலவே மென்மையாக விளங்குகின்றன; அவர்தம் திருமேனியோ கார்த்திகை வானில் அழகுறப் பொலியும் நீல மேகத்தைப் போன்று குளிர்ந்து ஒளிர்கிறது! ஐயோ! அவர்தம் திவ்யத் திருமேனியின் அழகுதான் என்னே!” என்றவர்

தொடர்ந்தார்.

“நம்பியே ! சிற்ப சாஸ்திர விதிகளின்படி, ஒரு மாபெரும் சக்கரவர்த்தி தனக்கான உன்னத நகரத்தை அமைக்கும்போது, அதனைத் தாமரை மலரின் வடிவிலேயே அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு சிறிய கிராமத்திலே வாழும் எளிய மக்கள், சகல நற்பண்புகளும் நிறைந்த பேரரசர் ஆளுகின்ற அந்தப் பெருநகரத்திற்குள் பிரவேசிக்கும்போது, அங்குள்ள பேரறிஞர்களோடு பழகித் தங்களின் அறிவை வளர்த்துக் கொள்வார்கள். அதைப்போலவே, வருங்கால ஜகதாசாரியரான இந்தப் பவிஷ்யதாசாரியர், துறவு நெறியைப் பூண்ட உன்னதத் துறவியாக இருந்தாலும், ஆன்மீக உலகிற்கு முடிசூடாச் சக்கரவர்த்தியாகத் திகழப் போகிறார்! அவர்தம் திருவடித்தாமரைகளே பேரறிஞர்கள் வாழும் மிக உயர்ந்த பெருநகரமாகும். அவர்தம் திருவடித் தடங்களை அடியவர்கள் சரணடைந்துவிட்டால், எம்பெருமானைப் பற்றிய விசேஷமான உன்னத மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, தங்களின் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள் என்பது திண்ணம்!” என்று உரைத்தார்.


இந்த உன்னத தத்துவக் கருத்துக்களைக் கேட்டு மணக்கால் நம்பி கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நனைந்தன.

உய்யக்கொண்டாட் பத்மாசன நிலையில் அமர்ந்தவாறே, மணக்கால் நம்பியின் கைகளில் இருந்த பவிஷ்யதாசாரியரின் திவ்யமங்களத் திருவடிகளைத் தன் திருக்கரங்களால் பற்றி, தன் ஆசாரியரான நாதமுனிகளின் திருவடித்தாமரைகளைத் தன் நெஞ்சில் ஆழமாகத் தியானித்த வண்ணம், அமைதியாகப் பரமபதம் எய்தினார்!


தன் உயிருக்குயிரான ஆசாரியன் தன் கண்முன்னே பரமபதம் அடைந்ததைக் கண்ட மணக்கால் நம்பி, எல்லையற்ற துக்கக் கடலில் மூழ்கி அலறி அழுதார். அவர்தம் அலறல் சத்தம் கேட்டு, மடத்தின் வெளியே திரண்டிருந்த மற்ற சீடர்கள் அனைவரும் பதற்றத்துடன் அறையின் கதவைத் திறக்க முயன்றார்கள். அப்போது, ‘பவிஷ்யதாசாரியரின் இந்தத் திவ்யமங்களத் திருமேனி யமுனைத்துறைவருக்கு மட்டுமே உரிய பொக்கிஷம்; இதனை வேறு யாரும் இப்போதே கண்டுவிடக் கூடாது’ என்று தன் ஆசாரியர் உய்யக்கொண்டார் தமக்கு இட்ட கட்டளை அவருக்கு நினைவுக்கு வந்தது. உடனே அவர் பதைபதைப்புடன், தன் கைகளில் இருந்த விக்ரகத்தை மீண்டும் பட்டுத் துணியால் பத்திரமாகச் சுற்றி, எவரும் அறியாதவண்ணம் அந்த மரப்பெட்டிக்குள் மீண்டும் சேர்த்தார்.


அதன் பிறகே கதவு திறக்கப்பட, உள்ளே நுழைந்த மற்ற சீடர்கள் அனைவரும் ஆசாரியரின் பிரிவைத் தாங்க முடியாமல் கதறி அழுதனர். சோகத்தில் மூழ்கியிருந்த அவர்தம் சீடர்களைத் தேற்றிய ஒப்பற்ற மணக்கால் நம்பி, ‘புண்டரீகாக்ஷர்’ என்று போற்றப்படும் செந்தாமரைக் கண்ணரான தன் ஆசாரியர் உய்யக்கொண்டாரது திருமேனியை, வைணவ உத்தமர்களின் சாஸ்திர முறைப்படி திருப்பள்ளிப்படுத்திச் (இறுதிச் சடங்குகளை நிறைவேற்றுதல்) செய்ய வேண்டிய சகல வேத நெறிமுறைகளையும் கொண்டு மிக நேர்த்தியாகச் செய்து முடித்தார்.


./சுஜாதா தேசிகன்
24.8.2026

அடிக்குறிப்புகள்:
(1) பெரிய திருமொழி உரையில் வரும் வார்த்தை.





Comments

Popular posts from this blog

1 - வீரநாராயணபுரம்

24 - காலச் சுழற்சி

23 - வெட்டிவேர்