27 - தமிழ் விழாக்கள்
27 — தமிழ் விழாக்கள்
உய்யக்கொண்டார் சற்று நேர மௌனத்திற்குப் பின், தன் எதிரே பேரன்போடு நின்றுகொண்டிருந்த மணக்கால் நம்பியை நோக்கி, “மணக்கால் நம்பியே! கலியின் கொடுமைகளை ஒழித்து உலகினை உய்விக்கப் போகும் அந்த மஹாநுபாவரின் (வருங்கால ஜகதாசாரியரின்) திவ்யமான சம்பந்தம் உமக்குக் கிடைத்தால்... நிச்சயம் உமது ஆசை முழுமையாக ஈடேறும்!” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
இதைக் கேட்டு நெஞ்சம் குளிர்ந்த மணக்கால் நம்பி, “ஆசாரியரே! நம் ஆசாரியரான நாதமுனிகளுக்கு நம்மாழ்வாரின் திவ்ய சம்பந்தம் கிட்டியது; தங்களுக்கு எமது நாதமுனிகளின் சம்பந்தம் கிட்டியது; எளியோனான அடியேனுக்கோ தேவரீரின் உன்னத சம்பந்தம் வாய்த்துள்ளது! இத்தகைய ஆசாரியப் பரம்பரையின் எல்லையற்ற கருணையினால், வருங்காலத்தில் அவதரிக்கப் போகும் அந்த மஹாநுபாவரின் திவ்ய சம்பந்தம் அடியேனுக்கு நிச்சயம் சித்திக்கப் போகிறது என்று நான் முழுமையாக நம்புகிறேன்!” என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறி, உய்யக்கொண்டாரின் திருவடித் விழுந்து பணிந்தார்.
உய்யக்கொண்டார் அவரை அன்போடு தூக்கி அணைத்து, “மணக்கால் நம்பியே! நாதமுனிகளின் அரும்பெரும் முயற்சியால்தான் நமக்குத் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களும், அவற்றின் மூலமாகச் சகல ஆழ்வார்களின் உன்னத சம்பந்தமும் கிடைக்கப் பெற்றுள்ளன! அவரால்தான் மறைந்து போயிருந்த இந்தத் தமிழமுதம் மீண்டும் வையகத்தில் உயிர்பெற்றது. நம் ஆசாரியரான நாதமுனிகள் திருவரங்கப் பெருநகரிலே நிகழ்த்திய ஒப்பற்ற அரிய கைங்கரியங்களைப் பற்றி உமக்கு உரைக்கிறேன், கேட்பீராக!” என்று கூறத் தொடங்கினார்.
அங்கிருந்த சீடர்கள் அனைவரும் ஆசாரியரின் திருவாக்கிலிருந்து பிறக்கப்போகும் அந்த வரலாற்றுச் செய்தியைக் கேட்க ஆவலோடு ஆயத்தமானார்கள். சிஷ்யர்களோடு சிஷயர்களாக நம் நேயர்களையும் உய்யக்கொண்டார் கூறிவதை கேட்க அழைக்கிறோம்.
“சீடர்களே! பன்னிரு ஆழ்வார்களில் கடைக்குட்டியாக அவதரித்தவர் நம் திருமங்கை மன்னன் என்னும் கலியன் ஆவார். அவர் 'ஆடல்மா' என்னும் தன் பாய்ந்து செல்லும் குதிரையின் மீது ஏறி, திசை எங்கும் சென்று எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பதிகளில் பல கோலங்களில் வீற்றியிருக்கும் எம்பெருமான்களை யெல்லாம் மங்களாசாசனம் செய்து பாடினார்.
அவ்வாறு பாடிவந்தவர், இறுதியில் 'திருநெடுந்தாண்டகம்' என்னும் உன்னதப் பிரபந்தத்தைப் பாடத் தொடங்கினார். அதன் இறுதிப் பாசுரத்தின் முடிவில், ‘புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே’ என்று பாடியபோது... ‘ஆகா! என் அரங்கன் என்னை மீண்டும் தன் திருவரங்கத்திற்கே அழைக்கிறான்!’ என்று உணர்ந்து, உடனே அவர் திருவரங்கப் பெருநகரத்திற்குத் திரும்பி வந்து, அங்கேயே நித்தியவாசம் செய்யத் தொடங்கினார். திருக்கோவிலைச் சுற்றிப் பிரம்மாண்டமான திருமதில்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திவ்யமான திருப்பணிகளைச் செய்துகொண்டு, தன் சிந்தையாலும் செயலாலும் அரங்கனின் திருவடித் தாமரைகளே தஞ்சம் என்று வாழ்ந்து வந்தார்.
அக்காலகட்டத்திலே, நம்மாழ்வாரின் உன்னதமான திருவாய்மொழிப் பாசுரங்களை அநுபவித்துக் கொண்டிருந்த திருமங்கை மன்னன் நம் சடகோபனின் திருவுள்ளத்தை நன்குணர்ந்தார். அவருக்குள் ஒரு திவ்யமான எண்ணம் உதித்தது. பரமபதத்தில் நித்தியசூரிகள் பாடும் சாமகானத்தைக் கேட்டு உகக்கும் எம்பெருமான், இந்தப் பூலோக வைகுண்டமான திருவரங்கத்திலும் சாம வேதத்தின் சாரமாக விளங்கும் திராவிட வேதமான 'திருவாய்மொழியின்' கானத்தைக் கேட்பதையே பெரிதும் உகப்பார் என்று திருமங்கை மன்னன் தன் நெஞ்சார உணர்ந்தார்.
ஒரு கார்த்திகை மாதத்துக் கார்த்திகைத் திருநாளின் நன்னாளில், திருவரங்கத்து நாயகனான அழகிய மணவாளன் தன் நாச்சிமார்களுடன் திருமஞ்சனம் கண்டருளி, எழிலுற எழுந்தருளியிருந்தார்.
அப்போது திருமங்கை மன்னன் எம்பெருமானின் திருமுன்னே நின்று, தான் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகம் உள்ளிட்ட ஆறு திவ்யப் பிரபந்தங்களையும் தேவகானத்தோடு கூடிய இன்னிசையிலும், நெஞ்சுருகும் அழகிய அபிநயத்தோடும் விண்ணப்பித்தார்.
நம் நம்பெருமாளோ இசை பித்தன். பக்தி வெள்ளமாய்ப் பெருகும் கலியனின் அபிநயத்தோடும் இன்னிசையோடும் கூடிய பாசுரங்களைக் கேட்டபின் எம்பெருமான் சும்மா இருப்பானோ? உருகிப்போன நம்பெருமாள், ‘உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம்பெறும் சம்மானம்’ என்று ஆண்டாள் நாச்சியார் உரைத்தது போல, திருமங்கை ஆழ்வாருக்குச் சகல அரசு மரியாதைகளையும், மாலை, பரிவட்டம் மற்றும் எண்ணற்ற திவ்யப் பிரசாதங்களையும் வாரி வழங்கி உகந்து அருளினார்.
பின்னர், தன் எழில்மிகு செந்தாமரைக் கண்களால் அவரைக் குளிரக் கடாட்சித்து, “ஆழ்வீர்! உமது தேவ கானத்திற்கும் நாம் மிகவும் உகந்தோம்! உமக்கு நாம் என்ன கைமாறு செய்ய வேண்டும்? உமது விருப்பம் யாது?” என்று வினவினார்.
அதற்குத் திருமங்கை மன்னன் கைகூப்பி, “எம்பிரானே! அடியேனுக்கு உமது பேரருளால் உலகில் எந்தவொரு குறையும் இல்லை. ஆகிலும், அடியேன் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான்! தேவரீர் பரமபதத்தில் சாமகானத்தைக் கேட்டருள்வது போல, இந்தப் பூலோக வைகுண்டமான திருவரங்கப் பெருநகரிலும்... ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வளர்பிறை ஏகாதசி (சுக்ல பக்ஷ ஏகாதசி) தினத்தை ஒட்டி நடைபெறும் 'அத்யயன உற்சவத்தின்' போது, நம் சடகோபர் அருளிச்செய்த சாமவேத சாரமான திருவாய்மொழிப் பாசுரங்களை வேதங்களுடன் சேர்த்து உகப்புடன் கேட்டருள வேண்டும்! வடமொழி வேதங்களுக்கு நிகரான உன்னதப் பெருமையைத் திராவிட வேதமான திருவாய்மொழிக்கும் தந்தருள வேண்டும்!” என்று பணிவுடன் விண்ணப்பித்தார்.
அழகிய மணவாளனும் அவர்தம் விண்ணப்பத்தைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். “கலியனே! நீர் கேட்ட இந்த உன்னதமான வரத்தைத் தந்தோம்! வேதங்களுக்கு நிகரான ஒப்பற்ற திருவாய்மொழிப் பாசுரங்களை, அத்யயன உற்சவத்தின் போது வடமொழி வேதங்களுடனே நாமும் கேட்டருளத் திருவுள்ளமானோம்! இக்கலியன் தேவகானத்தில் பாடியதைக் கேட்டு நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆதலால், நாம் சாத்தியிருக்கும் பவித்திரமான தைலக்காப்பை இப்போதே அவர்தம் திருமேனியில் தடவிச் சிறப்பியுங்கள்!” என்று தன் பரிசனங்களுக்கு ஆணையிட்டார்.
அதைத் தொடர்ந்து, எம்பெருமான் உடனே தன் அதிகாரியான 'தாழையிடுவான்' (1) என்பவரைத் தன்பால் அழைத்தார். அவரும் பணிவன்போடு ஓடிவந்து நம்பெருமாளின் திருமுன்னே கைகூப்பி வணங்கி நிற்க, “தாழையிடுவானே! நம் குருகூர்ச் சடகோபருக்கு நமது அரசு முத்திரையுடன் கூடிய 'திருமுகப் பட்டயத்தையும்'(2) கூடவே நமது மாலை, பரிவட்டம், சந்தனம் மற்றும் சுகந்தப் பிரசாதங்களையும் உடனடியாக அனுப்பி வையுங்கள்!” என்று கட்டளையிட்டார்.
திருவரங்கப் பெருமானிடமிருந்து திருமுகப் பட்டயமும், திவ்யப் பிரசாதங்களும் திருக்குருகூரை நோக்கி வரும் சுபச்செய்தியைக் கேட்டு, நம் சடகோபனும், அவர்தம் அணுக்கச் சீடரான மதுரகவியாழ்வாரும் அளவற்ற உவகை அடைந்தார்கள். அவர்கள் தாழையிடுவானை எதிர்கொண்டு சென்று வரவேற்று, எம்பெருமானின் மாலை மற்றும் பரிவட்டப் பிரசாதங்களைப் பெற்றுச் சூடிக்கொண்டார்கள். மேலும், நம்பெருமாள் அனுப்பிய அந்தப் புனிதமான திருமுகப் பட்டயத்தைத் தன் தலைமேல் வைத்துக் கொண்டாடி, தாழையிடுவானை உகந்து வணங்கி உபசரித்தார்கள்.
மறுநாள் விடிந்ததும், மதுரகவியாழ்வார் சடகோபனின் திவ்யமங்கள உற்சவ விக்ரகத்தை வர்ணிக்க இயலாத பேரழகுடன் அலங்கரித்தார். பின்னர், திருக்குருகூரிலிருந்து நம்மாழ்வாரைத் திருவரங்கத்திற்குப் பல்லக்கில் எழுந்தருளப்பண்ணிக் கொண்டு புறப்பட்டார்கள். மார்கழி மாதத்து வளர்பிறை தசமி (சுக்ல பக்ஷ தசமி) நன்னாளில் அவர்கள் திருவரங்கப் பெருநகரத்திற்குள் பிரவேசித்தார்கள்.(3)
இச்செய்தியைக் கேள்விப்பட்ட திருமங்கை மன்னன் எல்லையற்ற பக்திப் பரவசத்துடன் எதிர்கொண்டு ஓடிவந்து, சடகோபனின் திருவடிகளில் விழுந்து சேவித்து, அவரைப் பெரிய பெருமாளின் சந்நிதிக்கு மகா வைபவத்துடன் எழுந்தருளச் செய்தார்.
திருவரங்கத்துப் பெரிய பெருமாள், தன் சந்நிதிக்கு எழுந்தருளிய ஆழ்வாரைத் தன் கருணை பொழியும் கண்களால் குளிரக் கடாட்சித்து, அவருக்கு ‘நம்மாழ்வார்’ என்ற உன்னதத் திருநாமத்தை அங்கீகரித்துச் சூட்டி அருளினார்! மேலும், தன் திருமேனியிலிருந்த மாலை, பரிவட்டம் முதலிய பிரசாதங்களை அவருக்குச் சாற்றி கௌரவித்தார். அதன் பின்னர், திருக்கோவிலின் தென்மேற்கே அமைந்திருந்த ‘திருக்குறளப்பன்’ (வாமன மூர்த்தி) சந்நிதியை நம்மாழ்வார் தங்குவதற்கான விடுதியாக (சந்தியா மடம்) நியமித்து அருளினார்.
அதன்படியே, திருமங்கை மன்னனும் நம்மாழ்வாரைத் திருக்குறளப்பன் சந்நிதியில் மரியாதையுடன் எழுந்தருளச் செய்து, அத்யயன உற்சவத்தின் தொடக்கத்திற்கு ஆவன செய்தார்.”
மறுநாள் விடியற்காலைப் பொழுது புலர்ந்தது. திருவரங்கப் பெருநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அத்யயன உற்சவம் மகா வைபவத்துடன் தொடங்க, எங்கும் வடமொழி வேதங்கள் முழங்கத் தொடங்கின. அன்றிரவு, அழகிய மணவாளன் மண்டபத்தில் நம்மாழ்வார் அர்ச்சை வடிவத்தில் (விக்ரகமாக) எழுந்தருளச் செய்யப்பட்டார். அப்போது பெரிய பெருமாளின் திருமுன்னே, நம்மாழ்வாரின் ஸ்தானத்திலே மதுரகவியாழ்வாரே நேராக நின்று, திருவரங்கனின் எழில்மிகு முகத்தைப் பார்த்தவாறே, 'உயர்வற உயர்நலம்!' என்று தொடங்கும் திருவாய்மொழியின் முதல் பாசுரத்தை தேவகான இசையில், மெய்ம்மறந்து 'பாவின் இன்னிசை பாடித் திரிவனே’ என்ற சொல்லுக்கு ஏற்றாற்போல் அபிநயத்துடன் பாடிக் காட்டினார். இவ்வாறு தொடர்ந்து பத்து நாட்கள் இரவிலும் பாசுரங்களை விண்ணப்பித்துப் பத்தாம் நாள் இரவிலே முழுமையாகப் பூர்த்தி செய்தார்.
மதுரகவியாழ்வாரின் தெய்வீக இசையிலும் நெஞ்சை உருக்கும் அபிநயத்திலும் உள்ளம் பூரித்துப் போன நம்பெருமாள், அவருக்கு ‘திருவாய்மொழி விண்ணப்பஞ் செய்வார்’ என்ற மிக உயரிய கௌரவ விருதுகளையும் சிறப்புகளையும் வாரி வழங்கினார். தொடர்ந்து, நம்மாழ்வார் அழகிய மணவாளனின் மலரடித் தாமரைகளைச் சென்றடைந்து முக்தி பெற்ற அந்த உன்னத முக்தி நிலையை அடியவர்கள் யாவரும் காணும்படி அங்கே அனுகரித்துக் காட்டினர். இதனாலேயே இந்தத் திவ்யமான திருவிழாவுக்கு 'மோக்ஷோத்ஸவம்' (மோட்சத் திருநாள்)(6) என்று பெயர் சூட்டி பக்திப் பெருக்குடன் கொண்டாடினார்கள்.
அதன் பின்னர், அன்பே உருவான அழகிய மணவாளன், நம்மாழ்வாரை எழிலார்ந்த தன் ‘ஏக ஆசனத்தில்’ (ஒரே சிம்மாசனத்தில்) தன்னுடனேயே அமரச் செய்து பேரருள் புரிந்தார். எம்பெருமானின் திருமேனியில் சாத்தப்பட்டிருந்த திவ்யமான மாலைப் பிரசாதங்களையும், நறுமணம் கமழும் கஸ்தூரித் திருமண்காப்பு முதலியவற்றையும் அவருக்குச் சாற்றிச் சிறப்பித்தார். பின்னர், ஆழ்வார் மீண்டும் தன் அவதாரத் தலமான ஆழ்வார்திருநகரிக்கு (திருக்குருகூருக்கு) எழுந்தருளும் பொருட்டு மகா மரியாதைகளுடன் விடை தந்து அனுப்பினார்.
“‘இனிவரும் காலங்களில், நம் கலியனின் திருநட்சத்திரமான கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நன்னாளில் நாம் மகா வைபவத்துடன் புறப்பட்டு வந்து, அழகிய மணவாளன் திருமண்டபத்தில் சேரபாண்டியன் சிம்மாசனத்தில், சந்திர பாண்டியன் முத்துப்பந்தலின் கீழ், ஹரிஹரராயன் திருப்பள்ளிக்கட்டில் வீற்றிருப்போம்! அப்போது நம் கலியன் பாடுவதைக் கேட்டு மகிழ்ந்து நிற்போம். அவ்வேளையில் கோவணர், கொடவர், கொருவாள் எடுப்பார், பாடுவார், தாழையிடுவார் உள்ளிட்ட திருக்கோவில் அடியார்கள் அனைவரும் திரண்டு வந்து, நம் சடகோபனுக்குச் சகல மரியாதைகளையும் தடையின்றித் தந்தருள வேண்டும்!’ என்று திருவரங்கத்து ராஜனான நம்பெருமாள் திருவாணை பிறப்பித்தார்.
திருமங்கை மன்னனின் இந்த அற்புதத் தமிழ் வழிபாட்டு முறையையும், அத்யயன உற்சவ கைங்கரியத்தையும் மதுரகவியாழ்வாரும் அவர்தம் பரம்பரை வழிவந்தோரும் தொடர்ந்து பல தலைமுறைகளாக மிக நேர்த்தியாகச் செய்து வந்தனர். இப்பத்து நாட்கள் நடைபெறும் உன்னத விழாவே ‘திருவாய்மொழித் திருநாள்’ (4) என்று போற்றப்பட்டது.
ஆனால், கால ஓட்டத்தின் கொடிய சுழற்சியால், திருமங்கை ஆழ்வாரின் காலத்திற்குப் பிறகு, ஆழ்வார்களின் அருளிச்செயல்களான பாசுரங்களைப் பயில்வாரும், அதனைக் கேட்பாரும் இல்லாமல் போனதால், அந்தத் தமிழமுதம் மெல்ல மறைந்துபோனது. அதனால், மார்கழி மாதத்தில் நடைபெற்ற அந்தத் திருவாய்மொழித் திருநாளும் முற்றிலுமாகத் தடைப்பட்டு நின்றது. அதன் காரணமாக, நம்மாழ்வாரும் திருக்குருகூரிலிருந்து திருவரங்கத்திற்கு எழுந்தருள முடியாத ஒரு வேதனையான சூழ்நிலை உருவானது” என்று ஆசாரியர் உய்யக்கொண்டார் பெருமூச்சுடன் கூறி முடித்தார்.
ஆசாரியரின் திருவாக்குகளை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த மணக்கால் நம்பியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் சொரிந்தது. 'ஐயோ! எத்தகைய உன்னதமான தமிழ் விழாக்கள் கால ஓட்டத்தில் தடைப்பட்டுப் போயின!' என்று நெக்குருகியவர், தன் கரங்களைக் கூப்பி, “ஆசாரியரே! அன்று மறைந்து கிடந்த வேதங்களை உலகத்தவர் உய்யும்படி மீண்டும் தொகுத்து நிலைநாட்டிய 'வேதவியாசரைப்' போல, நம் ஆசாரியரான நாதமுனிகள் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்களைத் தேடித் தேடிச் சென்றார் அல்லவா? மதுரகவியாழ்வார் அருளிய 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' பாசுரத்தின் உன்னத மகிமையாலும், அவர்தம் யோக பலத்தினாலும், நம்மாழ்வாரை நேரில் தரிசித்து நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள் அனைத்தையும் மீண்டும் உபதேசமாகப் பெற்றார். அவற்றை முறையாக அடைவு செய்து, பண்ணிசையும் தாளமும் அமைத்து, பிறருக்கும் ஓதுவித்து... இன்று நாம் அந்தத் தமிழமுதத்தை அநுபவிக்கக் காரணமாக இருந்தாரே! அந்த மகாத்மாவை நினைக்கும் போதே அடியேனின் உள்ளமும் உடலும் சிலிர்க்கிறது!” என்று பக்திப் பெருக்குடன் உரைத்தார் மணக்கால் நம்பி.
உய்யக்கொண்டார் அவர்தம் பக்தியைக் கண்டு கனிவோடு நோக்கி, “ஆம், மணக்கால் நம்பியே! இன்று ஆழ்வார்கள் திருவாய்மலர்ந்தருளிய திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைச் சேவிக்கும் அடியவர்கள் அனைவரும் நம் ஆசாரியரான நாதமுனிகளின் பெருங்கருணைக்குப் பாத்திரமானவர்களே ஆவார்கள்! அவர் மறைந்துபோன பாசுரங்களை மீட்டெடுத்ததோடு மட்டுமல்லாமல், நின்றிருந்த அந்தத் 'திருவாய்மொழித் திருநாளையும்' மீண்டும் முன்னின்று மீட்டெடுத்தார்.
திருமங்கை ஆழ்வாரைப் போலவே, நம் ஆசாரியர் நாதமுனிகளும் ஒரு திருக்கார்த்திகைத் திருநாளில், திருவரங்கத்துப் பெரிய பெருமாளின் திருமுன்னே நின்று, 'திருநெடுந்தாண்டகத்தை' தேவகான இசையில் உருகும் அபிநயத்துடன் பாடி மகிழ்வித்தார். அரங்கன் மகிழ்ந்து நின்று 'உமது விருப்பம் என்ன?' என்று கேட்க, நாதமுனிகள் எம்பெருமானை நோக்கி வரம் வேண்டி நின்றார்.
‘அரங்கமா நகர் அப்பனே! நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு வேதங்களுக்கு நிகரான பெருமையைத் தந்தது போல, மற்ற ஆழ்வார்களின் திவ்யப் பாசுரங்களுக்கும் அதே உன்னதப் பெருமையைத் தந்தருள வேண்டும்! திருவாய்மொழித் திருநாளுக்கு முன்னதாகப் பத்து நாட்கள், ஏனைய ஆழ்வார்களின் பாசுரங்களையும் தேவரீர் மகா உற்சவமாகக் கேட்டருள வேண்டும்!’ என்று விண்ணப்பம் செய்தார். அரங்கனும் மிகவும் உகந்து ‘தந்தோம்!’ என்று அருளினார். அதன்படியே, நாதமுனிகள் மார்கழித் திருநாளுக்கு முன்னதாகப் பத்து நாட்கள் நடைபெறும் உன்னத விழாவாக ‘திருமொழித் திருநாள்’(5) என்ற மாபெரும் விழாவையும் தோற்றுவித்தார்.
பின்னர், நாதமுனிகள் தன்னுடைய மருமக்களான 'மேலையகத்தாழ்வான்', 'கீழையகத்தாழ்வான்' என்ற இருவருக்குமே திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள் அனைத்தையும் தேவகானப் பண்ணோடும் தாளத்தோடும் பாடுவதற்கு முறையாகக் கற்பித்தார். அவர்கள் இருவரும் திருவரங்கத்தில் அழகியமணவாளனின் திருமுன்னே நின்று, பாசுரங்களை இசையுடன் கூடிப் பாடியதைக் கேட்டு எம்பெருமான் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.
உருகிப்போன அரங்கன், மேலையகத்தாழ்வானுக்கு ‘மதியாத தெய்வங்கள் மணவாளப் பெருமாள் அரையர்’ என்றும், கீழையகத்தாழ்வானுக்கு ‘நாதவிநோத அரையர்’ என்றும் மிகவும் சிறப்பு வாய்ந்த திவ்யத் திருநாமங்களைச் சூட்டி மகிழ்ந்தார். அன்று முதல், எம்பெருமான் திருமுன்னே பாசுரங்களை இன்னிசையோடு அபிநயம் செய்து விண்ணப்பம் செய்பவர்களை ‘அரையர்கள்’ என்று போற்றினர். 'அரையர்' என்றால் இசையின் மன்னர்கள் என்று பொருளாகும். அதன் அடையாளமாகத் தங்களின் திருமுடியில் அணிந்துகொள்ள அரசர்க்குரிய அழகிய மகுடத்தையும், தொங்கலோடு கூடிய பரிவட்டத்தையும் அரங்கநகர் அப்பனே தன் திருக்கரங்களால் வழங்கி அருளினான்!"
இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகைத் திருநாளின் நன்னாளில், முன்பு திருமங்கை மன்னன் ஏற்பாடு செய்திருந்த அந்தத் 'திருவாய்மொழித் திருநாளுக்காக' மீண்டும் நம்மாழ்வாரைத் திருவரங்கத்திற்கு எழுந்தருளச் செய்து, உன்னதமான அந்த அத்யயன உற்சவம் தங்குதடையின்றி நடைபெறுமாறு சகல ஏற்பாடுகளையும் நாதமுனிகள் முன்னின்று செய்தார். அதுமட்டுமன்றி, மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களையும் நம்பெருமாள் திருச்செவி சாத்தியருளும் பொருட்டு, அதன் முன்னதாகப் பத்து நாட்கள் 'திருமொழித் திருநாளை'யும் எழிலுறத் தோற்றுவித்தார்.
இதனைக் கேட்ட மணக்கால் நம்பி பேரானந்தத்துடன் மெய்சிலிர்த்து நின்று, “ஆகா! கால ஓட்டத்தில் மறைந்துபோன ஆழ்வார்களின் தமிழ் வேதப் பாசுரங்களை மீட்டெடுத்ததுடன், அவற்றைக் கொண்டாடும் பொருட்டுத் திருவரங்கத்திலே இத்தகைய உன்னதமான தமிழ் விழாக்களைத் தோற்றுவித்து நாதமுனிகள் நிலைநாட்டிய அந்தத் தெய்வீகத் தொண்டுதான் என்னே!” என்று வியப்புடன் போற்றிப் புகழ்ந்தார்.
ஆசாரியரான ஸ்ரீ உய்யக்கொண்டார் தன் அணுக்கச் சீடனின் பக்தி நெகிழ்ச்சியைக் கண்டு கனிவோடு புன்னகைத்தார். பின்னர், “ஆம் மணக்கால் நம்பியே! அதுமட்டுமல்ல, நம் ஆசாரியரான நாதமுனிகள் திருவரங்கத்திலே நிகழ்த்திய அற்புதங்கள் இன்னும் பல உள்ளன! குறிப்பாக, திருவரங்கத்துத் திருமுற்றத்திலே கவிச்சக்கரவர்த்தி கம்பரின் 'கம்ப ராமாயண அரங்கேற்றம்' நிகழ்ந்தபோது, அதற்கும் நமது நாதமுனிகளே பிரதானக் காரணமாக விளங்கினார். கம்ப ராமாயண அரங்கேற்றத்தின் அந்த அற்புதச் சரித்திரத்தை நாளை உங்களுக்கு கூறுகிறேன்!” என்று அன்றைய பொழுதை நிறைவு செய்தார்.
./சுஜாதா தேசிகன்
பயணம் தொடரும்...
(1) திருப்பணிச் செய்பவர்
(2) கடிதம், அழைப்பிதழ்
(3) தற்சமயம் இந்த வழக்கம் இல்லை. நம்மாழ்வார் ஸ்ரீரங்கம் வருவதில் பல சிக்கல்களும், சவால்களும் உள்ளதால் ஸ்ரீரங்கத்திலேயே ஒரு நம்மாழ்வார் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார்கள்.
(4) இராபத்து உற்சவம் என்று தற்போது வழங்கப்படுகிறது
(5) பகல் பத்து உற்சவமாக இது நடைபெறுகிறது.
(6) நம்மாழ்வார் திருவடி தொழல் உற்சவம்
Comments
Post a Comment