35 - கோல் தேடி ஓடும் கொழுந்து
35 - கோல் தேடி ஓடும் கொழுந்து
கங்கைகொண்ட சோழபுரத்து வீதிகளில் பட்டத்து யானையின் மீது ஆளவந்தார் ராஜ மரியாதைகளுடன் வெண்கொற்றக் குடையும் சாமரங்களும் வீசப்படச் சென்ற மாபெரும் ஊர்வலத்தைக் கண்ட மாத்திரத்திலேயே, மணக்கால் நம்பி ஒரு தீர்க்கமான முடிவுடன் வீரநாராயணப் பெருமாள் திருக்கோயிலை வந்தடைந்தார். எம்பெருமானை ஆத்மார்த்தமாகச் சேவித்து நின்றவர், 'தன் ஆசாரியரின் உன்னதக் கட்டளையை நிறைவேற்ற இன்னும் காலம் கனியவில்லை; இவர் இன்னும் சில ஆண்டுகள் மனையற வாழ்வை முழுமையாக அனுபவிக்கட்டும்' என்று தமக்குள் கருதியவர், அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் தன் இருப்பிடமான திருவரங்கப் பெருநகரத்திற்குத் திரும்பினார்.
பாதிச் சோழ தேசத்தின் அரியணையில் அமர்ந்த ஆளவந்தாரை ராஜபோகங்களும் அந்தப்புறத்துச் செல்வச் செழிப்பும் பொன்னிறப் கதிரவனை மறைக்கும் பனித்திரை போலச் சூழ்ந்திருக்க, அரச வாழ்வெனும் தங்கச் சங்கிலியில் கட்டுண்டு, அவர் சம்சார வாழ்க்கையின் உலகியல் போகங்களில் முழுமையாகத் திளைத்திருந்தார்.
காலங்கள் மெல்லக் கடந்தன.
அந்தத் தம்பதியர் திருவரங்கப் பெருமாளரையர், தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையரசு நம்பி, சொட்டை நம்பி என்று நான்கு புதல்வர்களைப் பெற்றெடுத்தனர். ஆளவந்தாரும், நான்கு புத்திரர்களைப் பெற்றுப் பேரானந்தம் அடைந்த அயோத்தி தசரதச் சக்கரவர்த்தியைப் போல மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி, தன் இல்லத்தரசியுடனும் மக்களுடனும் இனிய இல்வாழ்வை நடத்தி வந்தார்.(1)
இவருடைய தந்தை ஈசுவரமுனிகள் தன் அந்திம காலத்தில், ‘எம் பாட்டனார் நாதமுனிகள் உய்யக்கொண்டார் வழியாக மணக்கால் நம்பிகளிடம் உமக்காகச் சில உன்னத நிதிகளை விட்டுச் சென்றிருக்கிறார்’ என்று சூசகமாகத் தெரிவித்திருந்ததை, இந்த ராஜ்ய பரிபாலன மயக்கத்திலும், அதிகாரப் பெருமையிலும் ஆளவந்தார் முற்றிலும் மறந்துபோனார்.
அங்கே, அரங்கனின் திருவடிகளைச் முத்தமிட்டுச் செல்லும் பொன்னி நதியின் குளிர்ந்த காற்று வீசும் திருவரங்கத்துத் திண்ணையிலே தங்கியிருந்தார் மணக்கால் நம்பி. அவர் தினமும் தன் ஆசாரியர் உய்யக்கொண்டாரின் நியமனத்தைத் தியானித்தபடியே காலத்தை அமைதியாகக் கழித்து வந்தார்.
ஒரு நாள் நண்பகலில், ‘இந்த ஆளவந்தாரை எப்படிக் கைகொள்வது? எங்ஙனம் அவரை லௌகிகச் சேற்றிலிருந்து மீட்டெடுப்பது?’ என்ற சிந்தனையோடு இரண்டாம் திருவந்தாதியைச் சேவித்துக்கொண்டிருந்தார். அப்போது, சந்திர மண்டலத்தையும் தாண்டி, அண்டங்களுக்கு அப்பால் உள்ள பரமபத நாதனை நாடி விரையும் என் உள்ளம் பற்றுவதற்கு ஒரு நல்ல கொம்பைத் தேடி ஓடும் இளங்கொடியைப் போன்றது என்ற பூதத்தாழ்வாரின் பாசுரப் பகுதியைச் சேவித்தபோது—‘ஆழ்வாருக்கே பரமபத நாதனைப் பற்றுவதற்கு ஒரு நல்ல கொம்பு தேவைப்பட்டது; அப்படியிருக்க, உலகப் பற்றிலும் மோக வலையிலும் உழலும் ஆளவந்தாருக்கு நாமே பற்றுக்கோலாக (கொம்பாக) இருக்க வேண்டும்’ என்று அவர்தம் நெஞ்சில் ஒரு பொறி தட்டியது. உடனே திருவரங்க நாதனிடம் விடைபெற்றுக்கொண்டு, ‘ஆளவந்தாருக்கு இப்போது சரியான பக்குவமும் காலமும் வந்திருக்கும்’ என்று தீர்மானித்து, ஆசாரிய கட்டளையை நிறைவேற்றும் மாபெரும் லட்சியத்தோடு மணக்கால் நம்பி மீண்டும் வீரநாராயணபுரம் நோக்கிக் கிளம்பினார்.
மீண்டும் வீர நாராயணப் பெருமாள் கோயிலுக்கு வந்த மணக்கால் நம்பி, எம்பெருமான் திருமுன்னே நின்ற போது, அன்று கங்கைகொண்ட சோழபுரத்து வீதிகளில் ஆளவந்தார் பட்டத்து யானையின் மீது கம்பீரமாகச் சென்ற காட்சி அவருடைய மனக்கண்ணில் ஓடியது. நடுக்காட்டிலே ஒருவனுக்குக் கண்ணைக் கட்டிவிட்டு, அவனிடம் இருக்கும் பெருஞ்செல்வத்தைத் திருடர்கள் வந்து பறித்துச் செல்ல... முள்ளும் கல்லும் நிறைந்த பாதையிலே, எங்கும் காட்டு விலங்குகள் சூழ்ந்திருக்க, ‘ஐயோ! எனக்கு நல்வழியைக் காட்டுபவர் யாரும் இல்லையா?’ என்று தவிப்பவனைப் போலல்லவோ ஆளவந்தார் இப்போது இருக்கிறார்!
முள்ளும் கல்லும் நிறைந்த ‘சம்சாரம்’ என்னும் கொடிய காட்டில், ‘மோகம்’ என்னும் கள்வர்கள் ‘மெய்ஞ்ஞானம்’ என்னும் அழியாத செல்வத்தை அபகரித்துச் செல்ல... பாதை தெரியாமல் திகைத்தபடி ஆளவந்தார் யானையின் மீது வீற்றிருக்கிறார். அவ்வாறு தவிப்பவனுக்குக் கண்கட்டைத் திறந்துவிட்டு, நல்வழியைக் காட்டும் பரம கருணையாளன் தானே குரு!
ஆனால், இனி ஆளவந்தாரை எப்படி நேரில் சந்திக்க முடியும்?
சோழ மன்னனது ராஜ்யத்தில் பாதியினை ஆண்டுகொண்டிருக்கும் அரசனான யாமுனரிடத்தில், என் போன்ற எளிய சாதுவான அந்தணன் நேரில் சென்றால், அரண்மனை வாயில் காப்பவன் என்னை உள்ளே நுழைய விடுவானா? 'ஆசாரியன் இல்லாமல் மெய்ஞ்ஞானம் வாய்க்காதே!' என்று குழம்பிய மனதுடன் பெருமாளைச் சேவித்துவிட்டு, அரண்மனை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கினார் மணக்கால் நம்பி.
அவர் எண்ணியபடியே, அரண்மனை வாயில் காப்பவர்கள் புதிய இளவரசரைக் காண்பதற்கு அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். பல நாட்கள் தொடர்ந்து முயன்றும் அவருக்கு பலன் கிடைக்கவில்லை. ஒன்றும் செய்வதறியாது திகைத்த நம்பி, மீண்டும் வீர நாராயணப் பெருமாள் சந்நிதானத்தின் திருமுன்னே வந்து நின்றார்.
பரம காருண்ய மூர்த்தியான நாதமுனிகளும், என் குருநாதர் உய்யக்கொண்டாரும் அடியேனுக்கு நியமித்த அந்த திவ்யமான கட்டளை... எப்படியாவது ஆளவந்தாருக்கு நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஜீவநாடியான உன்னத உட்பொருள்களை உபதேசித்து, அவரை லௌகிகச் சேற்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமே! ஆனால், இரும்புக்கோட்டை போன்ற அந்தச் சோழ மாளிகையின் வாயிற்காவலர்கள் என் போன்ற ஏழை எளிய சாதுவை உள்ளே நுழையவும் அனுமதியாதபடி தடுக்கிறார்களே! அடியேன் செய்த முயற்சிகள் யாவும் வெறும் தோல்வியிலும் தவிப்பிலுமல்லவா முடிகிறது?
நம் ஆழ்வார்களைப் போலக் கிளி, குயில், வண்டுகளையா என்னால் தூது அனுப்ப முடியும்? ஏனெனில், அந்தப் பாசுரங்களில் பக்திப் பெருக்குடன் தூது சென்ற அவை மீண்டும் திரும்பி வந்து எம்பெருமான் கூறிய செய்தியைச் சொன்னதாக ஆழ்வார்களின் திருவாக்குகளில் எங்கும் குறிப்புகள் இல்லையே! அவை வெறும் தவிப்பாக மட்டுமே அவை எஞ்சி நின்றனவே!
அன்றி, கோதை நாச்சியாரான ஆண்டாள் தன் நெஞ்சக் குமுறலைத் தாங்கமாட்டாமல், விண்ணில் திரண்டு பொழியும் கார்மேகங்களைத் திருமலை நம்பியான வேங்கடவனுக்கே தூது அனுப்பினாள். அவளைப் போலப் பக்திப் பிரவாகத்தினால் மேகங்களை ஏவும் தெய்வீக ஆற்றல் இந்த எளிய அடியேனுக்கு ஏது?’ என்று தவித்தபடி, காட்டுமன்னார் திருமுன்னே நின்ற மணக்கால் நம்பியின் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் அருவியாகப் பெருகின. தன் ஆசாரியனின் கட்டளையை எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்று எண்ணி அவர்தம் நெஞ்சம் துடித்தது.
தன் ஆசாரியரான உய்யக்கொண்டாரையும், அவர்தம் ஆசாரியரான நாதமுனிகளையும் தன் நெஞ்சில் தியானித்து, “எங்களுக்கு நல்வழி காட்டும் காட்டுமன்னாரே! அன்று எம் நாதமுனிகளுக்கு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை நீயே முன்னின்று காட்டிக் கொடுத்தது போல, இந்த ஏழை அடியேனுக்கும் ஆளவந்தாரை ஆட்கொள்ளும் ஒரு நல்வழியை நீதான் காட்டிக் கொடுக்க வேண்டும்!” என்று உருகிப் பிரார்த்தித்தார்.
நம்பியின் நெஞ்சில் எழுந்த அந்தப் பக்திப் புயலுக்குச் சாட்சியாக, திருக்கோவிலுக்கு வெளியிலும் ஒரு பெரும் பிரளயக் காற்று வீசத் தொடங்கியது! அதுவரை அமைதியாக இருந்த வானில் கார்மேகங்கள் சட்டென்று ஒன்று கூடிப் போர்க்களத்து யானைகளைப் போலத் திரண்டன. பகல் பொழுது மறைந்து காரிருள் எங்கும் பரவியது. மின்கீற்றுகள் வானைப் பிளக்க, இடியொலியின் அதிரலோடு பெருமழை கொட்டத் தொடங்கியது….
./சுஜாதா தேசிகன்
29.8.2026
பயணம் தொடரும்...
அடிக்குறிப்புகள்:
1. முதலாம் ராஜேந்திரசோழனுடைய மைந்தன் காலத்துக் (S.I.I.Vol.5, 647ஆவது) கல்வெட்டு, அவன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1021-64) சோழமண்டலத்தை ஆண்டுவந்த உறவினர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது, அதில் ஆளவந்தானைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ".....ஓதலர் தருங்கால் கங்கைகொண்ட சோழனையும், ஆங்கவந் றிருமகநான இருநிலங்காவலந் ஆளவந்த பெருமானையும் வென்றிகொள்…."); தகவல் ஆளவந்தார் வைபவம், டாக்டர் AV.அரங்காசாரி, திருச்சித்திரக்கூடம். இதைப் பற்றிய மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகிறது.
2. (இரண்டாம் திருவந்தாதி - 27)
3. தூது செல்லும் உவமை - கற்பனை.
Comments
Post a Comment